Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சர்வதேச எழுத்தாளர் மாநாடும், பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையும்.

சர்வதேச எழுத்தாளர் மாநாடும், பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையும்.

  • PDF

புலியும், தமிழ் தேசிய குட்டைக்குள் புலி அரசியல் செய்யும் “இடதுசாரி” போலிகளும், தமிழ் நாட்டு புலி தமிழ் தேசிய கூட்டமும், மாநாட்டை பேரினவாத அரசே நடத்துவதாக கூறியுள்ளது. அதே நேரம் துரோக முத்திரை குத்தி எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. கலை கலைக்காக என்ற மாநாட்டுக்காரர் இதை மறுத்து தம் கருத்துக்களையும், அறிக்கையையும் விடுகின்றனர்.

இப்படி இருக்க, இந்த மாநாடு பற்றிய கருத்துகளுக்கு மத்தியில் எம் நிலை என்பது மிகத் தெளிவானது. நாம் கலை கலைக்கான எந்த மாநாடுகளையும் அரசியல் ரீதியாக எற்றுக்கொள்வது கிடையாது. அதே நேரம் இந்த மாநாட்டை புலியும் புலியைச் சேர்ந்தவர்களும், இதை அரசு நடத்துவதாக முத்திரை குத்தி எதிர்ப்பதையும் நாம் எற்றுக்கொள்வது கிடையாது.

எமது அரசியல் நிலை என்பது, எந்தக் கருத்தும் செயலும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். இந்த நிலையில் போலி “இடதுசாரிய” கூட்டறிக்கை “அரசியலற்ற” மாநாடாக, அதாவது இலங்கை அரச பாசிசத்தை எதிர்ப்பதையே இங்கு அவர்கள் அரசியலாக கருதுகின்றனர். அதாவது தங்களைப் போல் புலியைச் சார்ந்து நின்று, அரசை எதிர்க்கக் கோருகின்றனர். நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக முற்றிலும் வேறுபட்டவர்கள்.  அரசு,  புலி இரண்டையும் எதிர்ப்பதையே, குறிப்பாக இதில் உள்ள அரசியலாக கருதுபவர்கள். ஆம் மக்களைச் சார்ந்து நின்று இரண்டையும் எதிர்த்தலை, இங்கு அரசியலாக நாம் கருதுகின்றோம்.

இந்த நிலையில் இந்த மாநாட்டை பாசிசத்துக்கு எதிரான மாநாடாக மாற்றுவது எப்படி?

இலங்கையில் உள்ள பாசிசத்துக்கு எதிரான சக்திகளின் கையில், இவை தங்கியுள்ளது. ஆம் இதை முதலில் கொள்கை அளவில் புரிந்து கொண்டு, எதிர்வினையாற்றுவதில் இருந்து இதைத் தொடங்க முடியும். அதற்கான அரசியல் சாத்தியப்பாடு நடைமுறை சார்ந்து நிறையவே உண்டு.

முதலில் இது

1. கலை கலைக்காக என்ற உள்ளடகத்தில் இது நடத்தப்படுகின்றது என்பதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வது அவசியம்.

2. இது இலங்கையில் நடப்பதாலும், புலி தரப்பு எதிர்ப்பதாலும், இலங்கை அரசுக்கு இயல்பாக சாதகமாக உள்ளது.

3. புலியெதிர்ப்பு அரசியல் கொண்ட அரசு தரப்பு எழுத்தாளர்கள் இதை தமக்கு சார்பாக பயன்படுத்தும் சூழலும் இங்கு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இவை அனைத்தையும் மீறி, பாசிச எதிர்ப்பு சக்திகள் சரியான கிளர்ச்சியை முன்  வைக்க முடியும். அதற்கான அரசியல் சாத்தியப்பாடு உண்டு.

இந்த வகையில் “அரசியலற்ற” என்ற புலிசார்பு அரசியல் பூச்சை தகர்ப்பது அவசியம். இதற்கு மாறாக புலி – அரசு இரண்டையும் எதிர்த்து அரசியலாதல் மூலம், இந்த மாநாட்டை கலை கலைக்காக என்ற வரையறையை தகர்த்து ஒரு சரியான திசையில் அதை முன் தள்ள முடியும் அல்லது இந்த கிளர்ச்சியை முன்வைக்க முடியும்.

இந்த வகையில்

1. இரண்டு பாசிசங்களும் (அரசு – புலி) எம் மக்களை ஒடுக்கின. இங்கு புலி அரசியல் என்பது கூட்டமைப்பு அரசியல் உள்ளடங்க ஒன்றுதான்.

2. இவ்விரண்டு சித்தாந்தங்களும் இன்னமும் தீர்மானகரமான சக்தியாக நிலவுகின்றன.

அவர்களின் பலம் பலவீனங்களைக் கடந்து, இதை மையப்படுத்தி அணுகுவதன் மூலம் இந்த மாநாட்டின் எல்லைக்குள்ளேயே இதற்கு எதிராக இயங்க முடியும். பேரினவாதத்தையும், குறுந்தேசியவாதத்தையும் எதிர்த்து, அது கட்டமைத்த பாசிச சூழலை அம்பலப்படுத்தி இயங்க முடியும். இவ்விரண்டுக்கும் எதிராகவும், அதன் சித்தாந்த மற்றும் நடைமுறைக்கு எதிராகவும் போராடுவதன் மூலம், பொதுவான ஒரு பாசிச எதிர்ப்பை மையப்படுத்த முடியும்.  இதற்கான இடதுசாரிய இயங்கு அரசியல் சூழல் அங்கு காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியத்தை முன்னிறுத்தி, சிங்கள அரசின் பேரினவாத  மற்றும் புலி தமிழ் குறுந்தேசிய இன பிளவுவாதத்தை எதிர்த்து நிற்பதன் மூலம், அரசு மற்றும் புலியில் இருந்து விலகி நின்று தனித்துவமான அரசியல் நிலையை மிகச் சரியாக முன்தள்ள முடியும்.

இந்த மாநாட்டை

1. புலிக்கும்பல் அரசு சார்பானதாக துரோக முத்திரை குத்தியிருப்பதாலும்

2. மாநாட்டுக்காரர் அதை மறுப்பதுடன், தாம் அரசுடன் இல்லை என்று நிறுவுவதற்கான போராட்டத்தையும் நடத்துகின்றனர்.

3. இதனால் இதையொட்டி தமக்கான ஒரு சரியான அரசியல் கோட்பாட்டையும், நடைமுறையையும் உருவாக்க முனைகின்றனர்.

இந்தக் குறிப்பான சூழலை, மக்கள் சார்ந்து பாசிசத்தை எதிர்க்கும் சக்திகள் தம் கையில் எடுக்கவேண்டும். இந்த வகையில் பாசிசத்துக்கு எதிரான (அரசுக்கும் – புலிக்கும்), இனப் பிளவுக்கு எதிரான, குறுந்தேசிய மற்றும் பேரினவாத போக்குக்கு எதிரான மக்கள் சார்பு மாநாடாக இதை முன்னெடுத்து செல்லுமாறு விளக்க வேண்டியது பாசிச எதிர்ப்பு சக்திகளின் மையமான அரசியல் கடமையாக மாறியுள்ளது. மக்களைச் சார்ந்து நின்று, அதாவது பேரினவாதத்தை எதிர்த்தும், குறுந்தேசியத்தை எதிர்த்தும் மாநாட்டை நடத்தக் கோர வேண்டும்.

ஆம் நிச்சயமாக இங்கு அரசியல் என்பது, மக்களைச் சார்ந்து நிற்றல் தான். மக்களுடன் அரசும் புலிகளும் இல்லை. அதாவது மக்கள் அரசுடனும் புலிகளுடனும் இல்லை. இந்த உண்மையை சார்ந்து நின்று, மக்களின் குரலை முன்னிறுத்தி செயல்படுவதன் மூலம், புலியின் பிரச்சாரம் மற்றும் அரசு பயன்படுத்தல் என்பதை அரசியல் ரீதியாகவே இல்லாதாக்க முடியும். இந்தக் கடமையை பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்கள் கையில் எடுக்கவேண்டும். இது உங்களை இனம் காணவும், இனம் காட்டவும், ஒரு சரியான நடைமுறை சார்ந்த அரசியல் செயல்தளம்.

இதன் சாத்தியப்பாடு என்பது, உங்கள் இன்றைய இதையொட்டிய விவாதத்தின் புள்ளியில் சற்று விரிவாக்கும் தளத்தில் மலிந்து காணப்படுகின்றது. இதற்கு உதாரணமாக காணாமல் போனோர் சார்ந்த போராட்டங்கள் முதல் அதற்கான பகிரங்கமான சாட்சியங்கள் இன்று வெளிப்படையாக உள்ளது. இந்த விடையம் போன்று பல விடையங்களை நாம் முன்வைக்க முடியும்.

அரச நடத்தும் போலியான விசாரணையாளர் முன் சாட்சியமளிக்க வேண்டாம் என்ற இந்த புலத்து புலிக் கூட்டமும், தமிழ்தேசிய போலி இடதுசாரி கூட்டமும், தமிழ்நாட்டு புலித் தமிழ்தேசிய கூட்டமும் கோரவில்லை. அப்படிக் கோரினால், அது அந்த மண்ணின் மக்களினால் நடத்தையால் தோற்றுப் போகும். மக்கள் தாம் வாழும் சூழலுக்குள், தமக்காக போராட விரும்புகின்றனர். அவர்கள் அனைத்து சூழலையும் இதற்காக பயன்படுத்துகின்றனர்.

மக்களின் இந்தச் சாட்சியங்கள் பாசிசத்துக்கு எதிரான குரலாக, முழு உலகமும் அறியும் பல உண்மையாக இன்று வெளிவருகின்றது. தன்னியல்பான, தான் சார்ந்த இந்தக் குரல்கள் எல்லாம் ஒருங்கிணைந்தாக இருக்கின்றது. அரசின் போலி விசாரணையில் கூட, மக்கள் தங்கள் குரலை பாசிசத்துக்கு எதிரான ஒன்றாக தன்னியல்பாக பதிவாக்கி வருகின்றனர்.

இப்படி அந்த அப்பாவி மக்களே, பல தடைகளைக் கடந்து துணிவாக இதை செய்ய இன்று முடிகின்றது. இந்த அடிப்படையில் கூட, மாநாட்டை மக்கள் சார்ந்து நின்று உயர்த்த முடியும்.  “அரசியலற்ற இடதுசாரிய” கூட்டுக் கூட்டம் அரசியலாக கருதுவது, அரச பாசிசத்தை மட்டும் பேசக் கோருவது தான். புலியைச் சார்ந்து நின்று கோருகின்றனர். நாங்கள் அரசியலாக இதில் கருதுவது, அரசு புலி இரண்டு பாசிசத்தையும் மையப்படுத்தி அதற்கு எதிராக முன்னெடுக்கும் அரசியலைத் தான். இது மக்களைச் சார்ந்து நிற்றல்.

இந்த வகையில் வலதுசாரிய புலி அரசியல் பின் “அரசியலற்ற” புலி அரசியல் தான், இதை எதிர்க்கின்ற “இடதுசாரிய” அரசியல் வங்குரோத்துதனமாகும். இதற்கு மாறாக அரசு – புலி அரசியலை எதிர்த்து, மக்களைச் சார்ந்து நின்று குரல் கொடுக்க வேண்டும்.

இங்கு உள்ள பிரச்சனை, இதை முன்னெடுக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகள் உள்ளனரா? இது தான், இதை அரசியல் ரீதியாக கூர்மையாகத் தீர்மானிக்கின்றது. இன்று குறைந்தபட்சம் கொள்கை அளவில், உதிரிகளாக அவர்கள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைப்பதற்குரிய ஒரு புள்ளியாக, மாநாடு மாறியுள்ளது. மாநாட்டு எதிர்ப்பு அரசியல் இதற்கான அரசியல் அடித்தளத்தை உருவாக்கித் தந்துள்ளது.

இன ரீதியான அடையாளம் மூலம், மாநாடு எதிர்ப்பு மையப்பட்டுள்ளது. மக்களின் கடந்தகால நிகழ்கால துயரங்களையும் அவலங்களையும் காட்டியே எதிர்ப்பு முன் வைக்கப்படுகின்றது. இவர்களின் இந்த பொய்யான குறுகிய அரசியல் வக்கிரத்தை தகர்க்க வேண்டும். மக்களின் இந்த நிலைக்கு அரசு மட்டும் காரணமல்ல. புலியும் தான். பலி கொடுப்பும் (புலி), பலி யெடுப்பும் (அரசு) நடத்தியுள்ளது. எல்லா அவலங்களுக்கும் இரண்டும் காரணமாக இருந்துள்ளது. இவ் இரண்டுக்கும் எதிராக, மக்களைச் சார்ந்து நின்று, மாநாட்டை மக்களைச் சார்ந்து நடத்தக் கோருங்கள். இதில் இதுவே பாசிச எதிர்ப்பு சக்திகளின் முன்னுள்ள அரசியலாக உள்ளது. இதைச் செய்யுமாறு அறை கூவுகின்றோம்;.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
09.12.2010

Last Updated on Thursday, 09 December 2010 20:22