Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

  • PDF

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

 

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.

 

தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் என்பது மட்டும், புலிகளின் போராட்டத்தை வெற்றியாக்கிவிடாது. புலிகளின் ஆயுதங்களும், ஆட்பலமும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பொதுவாக இதில் எதிரி பலமாக இருந்தும், அவன் தோற்கடிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. இதுவே எதிர்நிலையிலும் பொருந்தும். முதலில் இந்த உண்மையை புலிகள் சுயவிமர்சனமாக உணர மறுப்பது என்பது, அவர்களின் தோல்விக்கான முதல் படியாகும்.

 

யுத்தத்தை வெல்ல வேண்டும் என்றால், மக்களை வெல்வது தான் யுத்தத்தின் முதல் வெற்றி. மக்களை தோற்கடித்துக்கொண்டு, எதிரியை வெல்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. புலிகள் அதைத் தான் மீளமீளச் செய்கின்றனர். மக்களை உருட்டிமிரட்டி அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டு, யுத்தத்தை செய்வதா சரியான யத்ததந்திரம்?

 

மக்கள் தமது யுத்தமாக ஒரு யுத்தத்தைக் கருதி அதை அவர்கள் நடத்தாத வரை, எந்த யுத்தத்தையும் வெல்லமுடியாது. மக்கள் யுத்தத்தை வெறுக்கும் போது, மக்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது, தோல்வியும் தவிர்க்க முடியாது. மக்கள் மேல் யுத்தத்தை புலிகள் திணிக்கின்றனர். யுத்த அவலம் மக்களை யுத்தம் செய்யத் தூண்டும் என்ற புலிகளின் 30 வருட சித்தாந்த இராணுவ வழியும், ஒரு தலைப்பட்சமான பிரச்சாரமும் தோல்வி பெற்று வருகின்றது.

 

மக்கள் மேல் திணிக்கப்படும் யுத்த பின்னணியிலோ, மக்களிடம் எந்த இலட்சியமுமில்லை, உறுதியுமில்லை, வீரமுமில்லை. அதை எல்லாம் புலிகள் காவு கொண்டு விட்டனர். மக்கள் எல்லாவற்றையும் புலிகளிடம் இழந்து விட்டனர். மக்களோ நடைப்பிணம். அஞ்சி நடுங்கி வாழும் கோழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்படி இருப்பதே தமிழ் இனம் என்ற அளவுக்கு, அவர்கள் மேல் ஒடுக்குமுறை. இவர்களால், இப்படிப்பட்ட அச்சத்திலுறைந்த மக்களைக் கொண்டு, எப்படி வெற்றிகரமான யுத்தத்தை செய்ய முடியும்.

 

புலிகளே மக்களை செயலற்ற தலையாட்டும் பொம்மைகளாக்கிவிட்டனர். அதுவே புலிகளை தோற்கடிக்கின்றது. இந்த நிலையில் தான் பிரபாகரன் "எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்." என்கிறார். இப்படிச் சொல்ல வைப்பது எது? தொடர்ச்சியான தோல்வி, நம்பிக்கை இழந்த நிலையில் இதைச் சொல்ல வைக்கின்றது. மக்களை தோற்கடித்து, சிங்கள பேரினவாதத்தை வெல்ல வைக்கும் அரசியல் இப்படி சரணடையவைக்கின்றது.

 

மக்களை புலிகள் தமது அதிகாரத்துக்கு உட்படுத்தி பொம்மைகளாகி விட்டு, உருவேற்றப்பட்ட கீ கொடுக்கும் பொம்மைகளை நம்பித்தான் புலித் தலைவர் நிற்பதை சொல்லுகின்றார். இது புலிகள் சந்திக்கும் நெருக்கடியின் உச்சத்தைக் காட்டுகின்றது. இதில் தோற்றால் குற்றவாளிகள் யார்? தான் அல்ல என்பதே, சொல்லவரும் செய்தியின் மற்றொரு சாரம்.

 

உண்மையில் சிங்களப் பேரினவாதம் புலிகளின் கழுத்தில் கையை வைக்கவில்லை. புலிகள் தான் தமது சொந்தக் கழுத்தில் கையை வைத்துள்ளனர். தற்கொலைக்கு ஒப்பான பாதையில், புலிகள் தமது தலையை தூக்கி கயிற்றில் மாட்டிவைத்துள்ளனர். இந்த நிலைமையின் தீவிரத்தையே, புலிகளின் மாவீரர்தின உரை பிரதிபலிக்கின்றது.

 

சொந்த அணிகளின் உறுதி, இலட்சியம், வீரம் என்று கூறுமளவுக்கு, புலிகளின் நெருக்கடி எதார்த்தமாகி அவர்கள் உணருகின்றனர். ஆனால் அது ஏன் தமக்கு ஏற்பட்டது என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்வதில்லை. பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் தான் ஏறுகின்றது. புலிகளும் மக்களும் கொண்டுள்ள உறவு தான், அனைத்தையும் தீர்மானிக்கின்றது. ஆனால் இதை புலிகள் நிராகரிக்கின்றனர்.

 

இன்று புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றுமில்லாத அளவுக்கு பிளவு ஆழமாகிச் செல்லுகின்றது. நினைத்துப் பார்க்க முடியாத மனித அவலத்தையும் சுமையையும், மக்கள் மேல் புலிகள் திணிக்கின்றனர். மக்கள் இதில் இருந்து விலகி ஓடவும், தப்பிச் செல்லவும் விரும்புகின்றனர். இது தான் யுத்த பூமியில் வாழும் மக்கள் ஒவொருவரினதும் நிலையாகும். பேரினவாதத்துக்கு அப்பால், புலிகளின் அரசியல் நடத்தைகளே இதை தீவிரமான எதிர் நிலைக்கு மாற்றியுள்ளது. மக்களோ புலிகளை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.

 

இப்படி மக்களைத் தலைமை தாங்கும் தலைமைப் பண்பே புலிகளிடம் கிடையாது. அதனிடம் ஒரு மனிதாபிமான, மக்கள் நலன் என, எதுவும் கிடையாது. ஒரு தலைமை ஒவ்வொரு மனிதனையும் வெல்லும் வகையில், இணங்கிச் செல்லும் வகையில் கையாளவேண்டிய பொறுப்புள்ள தலைமைப் பண்பை, புலிகள் நிராகரித்துவிட்டனர். மாறாக மக்களை உருட்டி மிரட்டி, அடிதடி மூலம் பணியவைத்தும், கொன்றும் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது. இதை செய்பவனுக்கு தலைமை தாங்க முடியும். அது தான் புலியில் நடக்கின்றது. இவனிடம் உண்மையான உணர்வுள்ள உறுதி, இலட்சியம், வீரம் இருப்பதில்லை.

 

இப்படித் தான் புலிகள் தோற்கடிக்கப்படுகின்றனர். தனது புதைகுழியை தானே வெட்டிக்கொண்டு செயல்படும் போது, தோல்வி தவிர்க்கப்பட முடியாது. இதில் இருந்து மீள்வதற்கு ஒரு வழிதான் உண்டு. அது புலிகள் தம்மைத் தாம் அரசியல் ரீதியாக, மக்களுக்காக சுயவிமர்சனம் செய்வது தான். தம்மை முழுமையாக சுயவிமர்சனம் செய்தால் மட்டும் தான், புலிகள் தமது தோல்வியில் இருந்து தப்ப முடியும். உருவேற்பட்ட புலி உறுப்பினரின் உறுதி, இலட்சியம், வீரம் இதைப் பாதுகாக்காது.

 

இதுவே பேரினவாதத்தின் வெற்றியாக மாறுவதை தவிர வேறு வழியில்லை. இப்படி நிலைமை இருக்க, அற்புதன் எம்மை மற்றொரு கோணத்தில் பார்க்க கோருகின்றார்."போர் களத்தில் உருமாற்றியுள்ள சமூக வர்க்க நிலை காரணங்களைக் கருத்தில் எடுக்க வேண்டும். புலிகளின் உள் நிகழ்ந்துள்ள வர்க்க நிலைப்பட்ட மாற்றங்களையும் இரயாகரன் கண்டு கொள்ள வேண்டும். புலிகள் என்னும் இயக்கம் எப்போதுமே ஒரே நிலையில் இருக்கிறது என்பது ஆரோக்கியமான அறிவியற் பார்வை கிடையாது." என்கின்றார். நீண்ட துயரமிக்க வகையில் மக்களை அதில் இருந்து அன்னியமாக்கி அழுங்குபிடியாகவே ஒருதலைப்பட்சமாக நடத்தப்படும் யுத்தம், பல விளைவுகளை உருவாக்குகின்றது. வர்க்கம், சாதி, பால், இனம், பிரதேசவாதம் என்று பல தளத்தில், பல சிதைவுகளையும், ஏன் இறுக்கத்தையும் கூட உருவாக்கியுள்ளது. இந்த எதார்த்தம் எழுப்பும் உண்மைகளை நாம் மறுக்கவில்லை.

 

பொதுவாக அனைவரும் அறிய நிலவும் இந்த உண்மைகளை நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதுக்கு அப்பால், புலிகள் எப்படிப் பார்க்கின்றனர் என்பது தான் நிலைமையினை தெளிவாக்கும். சமூக முரண்பாடுகளை இணக்கமாக புலிகள் கையாளுகின்றனரா?

 

முஸ்லீம் மக்கள் பற்றி புலிகளின் நிலையில் என்ன சுயவிமர்சனத்தை செய்துள்ளனர். வடக்கு கிழக்காக பிரிந்து போய்விட்ட பிரதேசவாத யாழ் மையவாதம் மீது, புலிகள் என்ன சுயவிமர்சனத்தை செய்துள்ளனர்? ஒடுக்கப்பட்ட சாதியத்தை சார்ந்தா புலிகள் உள்ளனர்? ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்தா புலிகள் உள்ளனர் ?

 

இது இல்லை என்பதும், இதை தீவிரமாக மறுப்பவர்களாக புலிகள் உள்ளனர். இதனால் தான் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் போராட்டம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சார்ந்து நிற்பதன் மூலம் தான் சாத்தியம். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்காமை, மக்கள் போராட்டமாக மாற்ற முடியவில்லை. இதை தான் நாங்கள் கோருகின்றோம்.

 

எம்மிடம் அற்புதன் இவற்றைப் பார்க்கக் கோருவது என்பது தவறானது. புலித் தலைமையை நோக்கி இவற்றை எழுப்புங்கள். புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்தாக வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். அதை செய்யுங்கள், அதைக் கோருங்கள். அது மட்டும் தான், தமிழ் மக்களின் உண்மையான தேசியத்தை உயிருடன் பாதுகாக்கும்.

 

இங்கு நாம் சுயவிமர்சனம் என்கின்ற போது, பாட்டாளி வர்க்க நிலைக்கு அவர்கள் வரவேண்டும் என்று நாம் கூறவில்லை. குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவ நிலைக்கு, தம்மை சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். தேசியத்தை உண்மையாக தமது கையில் எடுக்கும் நிலைக்கு வரவேண்டும். தேசியத்துக்கு என்று இரண்டு கூறுகள் உண்டு.

 

1. பாட்டாளி வர்க்க சர்வதேசிய நிலை


2. தேசிய முதலாளித்துவத்தின் தேசிய நிலை.

 

குறைந்தபட்சம் இந்த இரண்டாவதை புலிகள் சுயவிமர்சனம் மூலம் வந்தடைவதன் மூலம் தான், புலிகள் தம்மையே காப்பாற்ற முடியும். இதன் மூலம் தேசிய முதலாளிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரிவுகளை உள்ளடக்கிய, ஒரு இணங்கிய போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம். இது மறுக்கப்படும் போது தேசியமே மறுக்கபட்டு, போராட்டம் தோற்கடிக்கப்படும்.

 

இந்த சுயவிமர்சனம் என்பது அரசியல் ரீதியானது. மக்களின் நலனுக்கு உட்பட்டதே. புலியெதிர்ப்பு ராகவன் கூறுவது போன்ற மக்கள் விரோத எதிர் புரட்சிக்கல்ல. ராகவன் புலிகளிடம் கோருவது சுயவிமர்சனமல்ல, அது எதிர்ப்புரட்சி. அதை அவர் ".. மற்றைய அரசியல் கட்சிகள் அது தேசியக் கூட்டணியாக இருந்தாலென்ன முஸ்லிம் காங்கிரசாக இருந்தாலென்ன ஈ.பீ.டீ.பீ ஆக இருந்தாலென்ன அவர்களது அரசியலை சுயாதீனமாக செய்ய வழி விட வேண்டும். விடுதலை புலிகளுக்கு தங்களது அரசியல் பலத்தில் நம்பிக்கை இருந்தால் மற்றைய அரசியல் கட்சிகளை பற்றி கவலை பட தேவையில்லை. சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற விடுதலை புலிகள் இவ்வாறான விட்டு கொடுப்புகளை செய்தால் சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை அரசின் அத்துமீறல்கள் பக்கம் நிச்சயம் திரும்பும்." என்கின்றார். இது எதிர்ப்புரட்சி.

 

ராகவனின் இந்த புலியெதிர்ப்பு நிலையுடன் நாம் தெளிவாகவே முரண்படுகின்றோம். நாங்கள் சுயவிமர்சனம் செய்யக் கோருவது, மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கக் கோரித்தான். இன்னுமொரு புலி அரசியலை செய்யும், அவர்களின் ஒடுக்குமுறை உரிமையை அல்ல. அவர்களும் புலியைப் போல், மக்களின் உரிமையை அங்கீகரிப்பவர்கள் அல்ல. புலிகள் அதைச் செய்தால், அதுபோல் அவர்கள் செய்தால் அது வேறு.

 

புலியெதிர்ப்பு ராகவன் அரசியல் கோருவது சுயவிமர்சனமல்ல. தமிழ் மக்களை தமது பங்குக்கு வேட்டையாட, உரிமையை புலியிடம் கோருவது தான். நாங்கள் கோருவது, மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கும் படிதான். இதையே சுயவிமர்சனம் செய்யக் கோருகின்றோம். இதைவிடுத்து பேரினவாத சிங்கள அரசுடன் கூடி தமிழ் மக்களை ஒடுக்கும் குழுக்களின் உரிமைகளையல்ல.

 

ஏகாதிபத்திய நன்மதிப்புகளை அல்ல. மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அவசியமானது. புலியெதிர்ப்பு ராகவனுக்கு "சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை" என்பதற்கு, அவரின் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய அரசியலே வழிகாட்டுகின்றது. மாறாக எகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி, உலக மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இதை புலிகள் சுயவிமர்சனமாக செய்து போராடாத வரை, போராட்டத்தின் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது.

 

இவை எவற்றையும் செய்யாது புலிகளின் தலைவரின் உரை அமைகின்றது. தமது, அதாவது புலிகளின் " .. சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடி மகிழ்கிறது." என்பதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நிவர்த்தி செய்ய சுயவிமர்சனத்தை செய்தாக வேண்டும். இல்லாது "இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்." என்று கூறுவதால், மேலும் போராட்டம் தோற்கடிக்கப்படும். பாரதூரமான விளைவுகள் என்பது, புலிகள் பாணியில் சிங்கள மக்கள் மேலான கண்மூடித்தனமான தாக்குதலைத் தான் புலிகள் அர்த்தப்படுத்துகின்றனர். இது மேலும் போராட்டத்தை தோற்கடிக்கும்.

 

இப்படி தவறை அர்த்தப்படுத்தி அதை நடைமுறைப்படுத்திக்கொண்டு "எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது." என்பது, தமிழ் மக்களின் வாழ்வுக்கான, அவர்களின் மீட்சிக்கான அரசியல் பாதையல்ல. மீட்சிக்கான பாதை மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதும், அவர்கள் சார்ந்து நின்று போராடுவதும் தான். மக்கள் தமது விடுதலைக்காக, தாம் போராடுவது தான். இதை நோக்கி புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்தல் தான், அவர்கள் முன்னுள்ள ஒரேயொரு மாற்று அரசியல் வழியாகும்.

 

இல்லாது "எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்." என்றால், இன்னும் 10 ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்து, புலிகள் தமது பாசிச அரசியல் வாழ்வையே முடிப்பர்.

 

பி.இரயாகரன்
03.12.2007

Last Updated on Tuesday, 02 June 2009 05:36