Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல் பற்றி

தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல் பற்றி

  • PDF

தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதை கண்டு, இனியொரு அரசியலோ குமுறிப் பொங்கி எழுகின்றது. இதை "அரச ஆதரவு லும்பன்தனம்" என்கின்றது. சரி புலியாதரவு தமிழ்தேசியக் கூட்டத்தால், தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்று கேட்டால், முத்திரை குத்தி புலம்புகின்றனர். புலியாதரவு தமிழ்தேசியமோ தமிழ்மக்களுக்கு அழிவு அரசியலைத்தான் செய்தது. இதுதான் கடந்தகால வரலாறு என்றால், நிகழ்கால வரலாறும் அது தான். கடந்தகாலத்தைப் போல் தான் இன்றும்.

எம்மக்களுக்கு இந்தக் கும்பல் செய்த செய்கின்ற அழிவு அரசியலின் பின்னால் தான் இனியொரு கூடிக் கூத்தாடத் தொடங்கியது. இதை எதிர்ப்பதை, அரசு சார்பானதாக காட்டுகின்றனர். பழைய புலி அரசியல் தான், ஆனால் இடதுசாரிய மார்க்சிய சொல்லாடல்கள் மூலம் பூசி மெழுகுகின்றனர்.

தமிழ் மக்களைச் சார்ந்து நின்று, அரசு மற்றும் புலியை அம்பலப்படுத்தாத விமர்சிக்காத அனைத்தும் சந்தர்ப்பவாதம் தான். கோட்பாட்டளவில் அரசு மற்றும் புலியை எதிர்ப்பதும், குறிப்பாக சந்தர்ப்பவாதத்தை கையாள்வது என்ற இரட்டை அணுகுமுறை மூலம், இந்த மக்கள் விரோத அரசியலில் முன்தள்ளப்படுகின்றது.

அண்மைக்காலமாக இனியொருவும் புதியதிசைகளும் எமக்கு எதிராக முன்தள்ளும் அரசியலின் சாரம் "தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தலாகும்". இந்த வகையில் முன்நகர்த்தும், அந்த அரசியல் அடிப்படை என்ன என்பதை ஆராய்வோம்.

புலியை ஆதரிக்கின்ற, புலியை விமர்சிக்காத எவரும், தொடர்ந்தும் தமிழ்மக்களின் எதிரிதான். அரசை எதிர்ப்பதால் மட்டும், அவர்கள் மக்களின் நலனை உயர்த்துபவர்கள் அல்ல. புலியை எதிர்த்தாக வேண்டும். இங்கு எந்த சந்தர்ப்பவாதத்துக்கும் இடமில்லை.

தமிழக மற்றும் புலத்து புலிகள் முதல் புலி சார்பானவர்கள் பற்றிய அரசியல் மதிப்பீட்டை, திட்டமிட்டே, அவை மக்களுக்கு சார்பானதாக காட்டி நடத்துகின்ற ஒரு சந்தர்ப்பவாத அரசியலைத்; தான் இனியொரு செய்கின்றது. தனித்துவமான இடதுசாரிய அரசியலை இதன் மூலம் திட்டமிட்டே இல்லாதாக்க முனைகின்றனர்.

இன்று தமிழ் மக்களின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் யார்? புலிகள் தான். ஆம் எதிரியுடனான யுத்தத்தில் தான். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் இந்த எதிரியையும், எதிரியின் கூட்டாளியும் தான் காரணமென்று கூறி, புலியை தூக்கி முன்னிறுத்துகின்ற கூட்டம் தான், தமிழினத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தது. இதை பாதுகாக்க புலிக்கு இன்று இடதுசாரி கூத்துத் தேவைப்படுகின்றது.

புலிக்கு பின் நின்று அனைத்து மக்கள் விரோதக் கூறுகளையும் ஆதரித்த கூட்டம் தான், இறுதி யுத்தத்தின் போது மக்கள் கொல்லப்படுவதன் மூலம் புலியை காப்பாற்ற முடியும் என்ற புலியரசியலை முன்னிறுத்தி மக்களைக் கொல்ல உதவியவர்கள்.

கடந்த 30 வருட புலி அரசியல் தான், எம்மினத்தின் விடுதலை அரசியலை அழித்தது. இதற்கு துணை நின்ற கூட்டம், மக்களின் எதிரிகள் தான். இவர்கள் அன்றும் சரி இன்றும் சரி, மக்களுடன் நிற்கவில்லை. மக்களுக்கு எதிரான புலியுடன் கூடி நின்றவர்கள். இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை, கிடைக்கப் போவதில்லை. ஆனால் இவர்களைப் பாதுகாக்க, இன்று இவர்களுடன் இனியொரு நிற்கின்றது. மார்க்சியம், இடதுசாரிய முலாம் பூசி அதை மக்கள் சார்ந்ததாக அழகுபடுத்திக் காட்ட முனைகின்றனர்.

இவர்களைப் பாதுகாக்கத்தான் "தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தலாகும்" என்கின்றனர். இங்கு புலி ஆதரவு அல்லாத வேறு யாரையும் இவர்கள் குறிப்பிடவில்லை.

இந்த புலியாதரவுக் கூட்டத்தை நாம் தனிமைப்படுத்த வேண்டும். இது தமிழகம் புலம், இலங்கை எங்கிலும், இந்த சுயநலவாத பிழைப்புக் கூட்டத்தை தனிமைப்படுத்த வேண்டும். இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. 30 வருடமாக, தமிழ்மக்களுக்கு எதிரான அழிவு அரசியலை செய்தவர்கள். இனியும் தொடர்ந்து செய்ய அனுமதிக்கக் கூடாது. இனியொரு இவர்களைக் காப்பாற்றவே மார்க்சியத்தை பயன்படுத்துகின்றது. மீண்டும் திடீர் அரசியலில் குதித்த கூட்டம், இப்படித்தான் அரசியலை பல தளத்தில் திரித்துப் புரட்டிச் செய்கின்றது.

குறைந்தபட்சம் எந்த அரசியல் சரியானது? மக்களுடன் நின்று அரசு மற்றும் புலி இரண்டையும் யார் எதிர்க்கின்றனரோ, அவர்கள் தான். ஆனால் கோட்பாட்டளவில் மட்டுமல்ல. எங்கும், எல்லா சந்தர்ப்பத்திலும் சந்தர்ப்பவாத நிலையெடுக்காது, மக்களுடன் நின்று குறைந்தபட்சம் குரல் கொடுப்பவர்கள் தான். கோட்பாட்டளவில் இதைக் கூறிக்கொண்டு, நடைமுறையில் புலியுடன் கூடிக்குலவுபவர்களோ மூடிமறைத்த சந்தர்ப்பவாதிகள். அண்மையில் இனியொருவும், புதியதிசையும் இலண்டன் புலிகளுடன் கூடி இயங்குவதும், புலி தொலைக்காட்சியில் தோன்றுவதும் அரங்கேறுகின்றது. இனியொரு ஆசிரியரும், தமிழகத்து புலி ஆதரவு அருள்எழிலனும் புலியுடன் கூடி இலண்டனில் கூத்தாடுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் தமிழ்மக்ளுக்கு எந்த நன்மையும் கிடையாது.

தமிழகத்து புலி ஆதரவுக் கூட்டத்துடன் கூடி தமிழ்தேசியத்தை உச்சரிப்பதும், இனியொரு இணையத்தை கூட்டாகவே நடத்தியது எல்லாம் அரசியல் சந்தர்ப்பவாதம் தான். இப்படி உருவான அரசியல், தன் சந்தர்ப்பவாதத்தை மூடிமறைக்க, "தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தல்". முயற்சி என்கின்றது. தனிமைப்படுத்தும் முயற்சிதான். யார் புலியுடன் நிற்கின்றனரோ, அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சி தான். இதன் மூலம் யார் மக்கள் பக்கம் நிற்கின்றனரோ, அவர்களை பாதுகாக்கும் முயற்சி.

இதை இலங்கை அரசு சார்ந்து நிற்பதாக புலிப்பாணியில் மீண்டும் முத்திரை குத்துகின்றனர். "இன்று இலங்கை அரசினதும் அதன் அடிவருடிகளதும் பிரதான நோக்கங்களில் ஒன்று சாகடிக்கப்படும் ஈழத் தமிழர்களை தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தலாகும். புலம் பெயர் தமிழர்களைப் பிரிப்பதற்காக வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை பொரிங்க்டர் என்ற நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது ராஜபக்ச அரசு. புலம் பெயர் அரச ஆதரவு லும்பன்கள் இந்த நிறுவனத்தின் பணியைத் தாம் கையிலெடுத்துக்கொண்டு கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசு இனப்படுகொலை நிகழ்த்திய போது மூச்சுகூட விடத் திராணியற்றிருந்த இவர்களில் பலர், இப்போது தமிழ் நாட்டைச் சார்ந்த யாரும் மாநாடு குறித்து வாய் திறக்கக் கூடாது என்கிறார்கள். இலங்கை அரச பிரித்தாளும் தந்திரத்தின் எழுத்தாளர் வேடம் இது." என்று கூறி தம்மைத் தாம் நியாயப்படுத்துகின்றனர்.

புலியுடன் கூடி நிகழ்சிகளை நடத்தும் கூட்டம் தான், இன்று இதைக் கூறுகின்றது. இங்கு எழுத்தாளர் மாநாடு தொடர்பாக எமது கருத்துகள் ஏற்கனவே முன்வைத்திருகின்றோம்;. நாம் தொடர்ந்து மற்றொரு கட்டுரையில் மேலும் ஆராய உள்ளோம்.

அரசு பணம் கொடுத்தது என்று இனியொரு அடிக்கடி தமது புலிசார்பு அரசியலை நியாயப்படுத்த முன்வைக்க புலம்புகின்றது. அன்று இந்தியா பயிற்சி கொடுக்கத் தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர் பணம் கொடுத்தது வரையான எத்தனையோ சம்பவங்கள் எம்முன் இருக்கத்தான் செய்கின்றது. இஸ்ரேல் வழங்கிய ஆயுதப் பயிற்சி, தம் முகவர்கள் மூலம் அமெரிக்கா வழங்கிய ஆயுதம், ஏன் இலங்கை அரசு வழங்கிய பணமும் ஆயுதமும் என்று பல சம்பவங்கள் இன்னமும் தொடருகின்றது.

இதில் புலியின் கைக் கூலித்தனமும், அதன் பங்கும் அளப்பரியது. அந்த புலிக் கூட்டத்துடன் கூடிக் கூத்தாடுகின்ற அரசியலைத்தான், இன்று இனியொரு முன்தள்ளுகின்றது. அந்தப் புலி மாபியாக் கூட்டம் தமிழ்மக்களின் பணத்தை பெருமளவில் தனிப்பட்ட சொத்தாக்கிவிட்ட இன்றைய நிலையில், அதனுடன் சேர்ந்து தான் இயங்குகின்றது. அது நடத்தும் அரசியல் வே~த்தின் பின் நின்று, சந்தர்ப்பவாதிகளாக தன்னை முன்னிலைப்படுத்த முனைகின்றது. தமிழகத்து புலி ஆதரவு கூட்டத்துக்கு புலிகள் வழங்கிய பணத்தின், பின்புலத்தில் எத்தனை எத்தனை உண்மைகள் எல்லாம் புதைந்து இருக்கின்றது.

இப்படி பல உண்மைகள் பற்பலவாக இருக்கின்றது. இங்கு அரசு புலத்தில் அரசியல் செய்கின்றது என்ற உண்மை, இன்று நேற்றல்ல அன்று முதல் தான் செய்கின்றது. இன்று செய்வதாக மட்டும் காட்டுவது, நீங்கள் புலியுடன் சேர்ந்து செய்யும் சந்தர்ப்பவாத அரசியலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடாது.

உங்களைப் போல் புலியுடன் சேராத அரசியலை "புலம் பெயர் அரச ஆதரவு லும்பன்கள்" என்று கூறுகின்ற உங்கள் புலிசார்பு அரசியல், தமிழ் மக்களுக்கு எதிரானது. அந்த புலி ஆதரவு அரசியலும், அரசு ஆதரவு அரசியல் போன்றதுதான். ஒன்று உள்ளிருந்து மக்களை அழிப்பது, மற்றது வெளியில் நின்று அழிப்பது. இவ் இரண்டும் தமிழ்மக்களுக்கு எதிரானது.

 

பி.இரயாகரன்

21.11.2010

Last Updated on Sunday, 21 November 2010 11:04