Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" அருள் எழிலன்

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" அருள் எழிலன்

  • PDF

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்றால், மக்களைக் கொல்லக் கொடுத்தது நீதியான ஒரு அரசியல் செயல். யுத்தம் நடந்த காலத்தில் இதைக் கூறவில்லை. அண்மையில், அதுவும் புலிப் பணத்தைத் திருடி வைத்திருக்கும் பணக்காரப் புலிகள், பினாமி புலி ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நடத்திய ஊடகவியலாளர் கூட்டத்தில் தான் அருள் எழிலன் இதைக் கூறினார். அதேநேரம் தன் பேஸ் புக்கிலும் கூட,  இதைக் குறிப்பிடுகின்றார். "சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர்" என்று சிபார்சு செய்யப்பட்டவர் தான் இதைக் கூறியிருக்கின்றார். அவரோ இனியொரு இணைய ஆசிரியரில் ஒருவர். அவரோ புலிப் பினாமி ஊடகவியல் கூட்டத்தில் தண்டரா போடுகின்றார். இதேபோல் இனியொருவின் மற்றொரு ஆசிரியரை உள்ளடக்கிய புதியதிசை, அண்மைக்காலமாக புலிகளுடன் கூடி கும்மியடிக்கின்றது. புலத்துப் புலி மாபியாக்களை பயன்படுத்தி, தாங்கள் வர்க்கப் புரட்சி செய்யப் போகின்றார்களாம். இப்படி திடீர் அரசியலுக்கு வந்தவர்களின் பற்பல அரசியல் கூத்துகள்.

 

"புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்றால், விடுவிக்காது பலி கொடுத்தது சரி என்பது தான், அன்றும் இன்றும் புலி அரசியலாகும். அன்று கொல்லப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் வண்ணம், யார் தான் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தனர்? அன்று மக்கள் எதை எதிர்பார்த்தனர். தம்மை பலியெடுத்த யுத்த பூமியில் இருந்து, யுத்தமற்ற பூமிக்கு செல்ல விரும்பினர். யார் தான் இதை அரசியல் ரீதியாக முன்வைத்து கோரினர்? இதைக் கோருவதை யார் அன்று விரும்பவில்லை? சொல்லுங்கள். அன்று மக்கள் கொல்லப்படுவதை வைத்து அரசியல் செய்தவர்கள் யார்? இந்த அரசியலை கேள்விக்குள்ளாக்கியவர்கள் யார்? இந்தக் கொலைகார அரசியல் வால்பிடித்தவர்கள், புலியை இதற்காக விமர்சிக்கவில்லை. அதை இன்று வரை யாரும் சுயவிமர்சனம் செய்யவில்லை.

அன்று மக்கள் கொல்லப்பட்ட போது,  அதை தடுக்கும் வழி வகைகள் இருந்தன. இதை அன்றும், இன்றும் மறுப்பது மட்டும், எந்தவகையில் நேர்மையான அரசியல். மக்கள் தாங்கள் யுத்த பூமியில் சாக வேண்டும் என்று விரும்பவில்லை. மக்கள் சாக விரும்பினர் என்று சொல்பவன், கடைந்தெடுத்த கொலைகார அயோக்கியன். யுத்தத்தில் சம்பந்தமில்லாத மக்கள்,  தங்கள் சொந்தச் சாவில் இருந்து தப்பிச்செல்லத்தான் விரும்பினர். இதுதான் எதார்த்தம்.

பேரினவாத அரசு உலக ஆதரவுடன் யுத்தத்தை நிறுத்த மறுத்து நின்ற நிலையில், மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் புலிகளையே சாரும். ஆனால் கொல்வதை வைத்து பிரச்சாரம் செய்வது தான், புலிகள் கடைந்தெடுத்து முன்வைத்த அரசியலாகும். இதுதான் இன்றும் "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்று மீளவும் உறும வைக்கின்றது.

அன்று தமிழ் மக்களை கொல்லும் எதிரியிடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது, அதற்கு எதிராக போராடும் புலிகளைச் சார்ந்தது. இந்த வகையில் புலிகள் எந்தவிதத்திலும் செயல்படவில்லை. யுத்தத்தை நிறுத்து என்று கொல்பவனிடம் கோருவது, மக்களை பாதுகாக்கும் நோக்கில் முன் வைக்கப்பட்டதல்ல. தம்மைப் புலிகள் பாதுகாக்கும் நோக்கில் முன் வைக்கப்பட்டது. சரி இல்லை, மக்களை பாதுகாக்கும் நோக்கில் தான் முன் வைக்கப்பட்டது என்று எடுத்தால்,  அதற்கு பேரினவாத அரசு உடன்படவில்லை. அது கொன்று குவித்தது. இந்த நிலையில் மக்களைப் பாதுகாக்க என்ன செய்திருக்க வேண்டும்? வேறு வழி எதுவும் இருக்கவில்லையா? புலிகள் மாற்றாக என்ன தான் செய்தார்கள்? சரி நீங்கள் மாற்றாக என்ன தான் முன்வைத்தீர்கள்? மக்கள் கொல்லப்படுவதை காட்டி வீதியில் இறங்கிய யார்தான்,  மக்களை விடுவிக்க எதைத் தான் முன்வைத்தனர்.

மக்கள் பற்றிய அக்கறை அவ்வளவுதான். வலதுகள் மட்டுமல்ல, இடதுகள் கூடத்தான், எதையும் முன்வைக்கவில்லை. அனைவரும் புலிகளின் கோரிக்கையை முன்னிறுத்தினரே ஓழிய, அந்த மக்களின் கோரிக்கையை முன்வைக்கவில்லை. இடதுசாரிகளோ புலிகளை விமர்சிக்காத, புலியரசியலை முன்வைத்தனர். புலிக் கோரிக்கைக்கு வால்பிடித்தனர். பிணத்தை வைத்து புலி செய்த அரசியலுக்கு கம்பளம் விரித்தனர்.

புலி பிண அரசியலுக்குள், மக்கள் அனாதரவாக கொல்லப்பட்டனர். மக்கள் பலிகொடுத்த கொலைகார யுத்த முனையில் இருந்து, பிண அரசியலுக்குள் இருந்து தப்பிச்செல்லவே விரும்பினர். இதன் மேல் யார்தான் அக்கறை கொண்டனர். சுயநல குழு அரசியலுக்குள் மக்கள் பிணமாகினர்.

மக்கள் தப்பிச் செல்லக் கூடாது என்றவர்கள். புலித் தலைவர்கள் தப்பி செல்வதை விரும்பினார்கள். அப்படி புலிகள் தப்பிச் சென்று விட்டதாக கூறியவர்கள், அப்படி தப்பி இன்றும் பிரபாகரன் வாழ்வதாக கூறுகின்றவர்கள், என்றும் மக்கள் தப்பிச் செல்வதை விரும்பவில்லை. அவர்கள் மக்கள் பிணமாவதை வைத்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் புலிகள் பிணமாவதை விரும்பவில்லை. இப்படி இதன் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட மனித விரோத அரசியல் தான் அன்று என்றால், அதை நியாயப்படுத்துவது தான் இன்றைய தேசிய அரசியல்.

உண்மையில் புலிகள் தம்மைப் பாதுகாக்க, மக்களை பலியிட்டனர். நிச்சயமாக பலியெடுத்தவர்கள் பேரினவாத அரசுதான். பலிகொடுத்தவர்கள் நிச்சயமாக புலிகள் தான். புலியின் பலிக்கு உட்பட மறுத்து தப்பிச் சென்றவர்களை, புலிகள் பலியெடுத்தனர். இவை எதுவுமின்றி மக்கள் அங்கு கொல்லப்பட்டவில்லை. அங்கு மக்கள் புலிகளால் பணயம் வைக்கப்பட்டு தான் கொல்லப்பட்டடனர்.

புலிகள் தம்மைப் பாதுகாக்க இறுதியில் சரணடைந்தனர். ஆனால் மக்களைப் பாதுகாக்க எதையும் செய்யாதவர்கள். அன்று யுத்தத்தை நிறுத்து என்பதன் மூலமோ அல்லது யுத்தம் மூலமோ இதை செய்ய முடியாது என்பது, அனைவரும் அறிந்த ஒரு உண்மை. இறுதியில் நடந்தது என்ன? புலிகள் இறுதியில் சரணடைந்த பின், பலிகொடுப்பில் இருந்து தப்பிய மக்கள் பேரினவாதத்திடம் அனாதரவாகவே சரணடைந்தனர்.

இதுதான் நடக்கும் என்று நாங்கள் மட்டும்தான் அன்று அரசியல் ரீதியாக கூறியதுடன்,  மாற்றுக் கோரிக்கைகளை முன்வைத்தோம். அன்று நாம் மக்களை சர்வதேச சமூகம் பொறுப்பெடுக்கும் அரசியல் கோரிக்கையை முன்வைக்கக் கோரினோம். அதேநேரம் புலிகள் இறுதி வரை போராடி மடியக் கோரினோம். அத்துடன் மக்களை பணயம் வைத்த பலிகொடுக்கும் பிண அரசியலை கைவிட்டுவிட்டு, முற்றுகையை உடைத்து வெளியேறக் கோரினோம்.

இதை நாங்கள் மட்டும் அன்று முன்வைத்தோம் என்று கூறுவது, அரசியல் ரீதியானது. தனிப்பட்ட "தன்முனைப்பு" அல்ல. இல்லை தனிப்பட்ட "தன்முனைப்பு" என்று முத்திரை குத்தி, இதை அரசியல் நீக்கம் செய்ய முடியாது. அக்காலத்தில் மக்கள் சார்ந்து நின்று மக்கள் கோரிக்கையை அரசியலாக முன்னிறுத்தாத எல்லாத் தரப்பும், விதிவிலக்கின்றி மக்களை பணயம் வைத்து அவர்களைக் கொல்லவே உதவினர்.

அதை இன்றுவரை அரசியல் சுயவிமர்சனமாக பார்க்காமல் (புலி) தமிழ்தேசியத்தின் பின் அனைத்தையும் புதைக்கின்றனர். இந்த வகையில் தான் அருள் எழிலன்,  பினாமி புலி ஊடகவியலாளர்கள் முன்னும், மக்கள் பணத்தை திருடிய தமிழ்தேசிய அரசியல் பேசும் பணக்கார புலிகள் முன்னும், சத்தியப் பிரகடனம் செய்து உறுமுகின்றார்.

இவரைப் பற்றி ம.க.இ.க "தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர்." என்று சிபாரிசு செய்தனர். இப்படி ம.க.இ.க எமக்கு எதிராக சிபார்சு செய்த இந்த "நேர்மை"யாளன் தான், "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவது அநீதியான கோரிக்கை" என்று கூறியுள்ளார். அதாவது விடுவிக்காது கொல்லக் கொடுத்தது தான் நீதியானது என்கின்றார். தனிப்பட்ட "நேர்மை"யை அரசியலுக்குள் தேடக் கூடாது என்பது, இன்று தமிழ்தேசிய அரசியலாக, மக்கள் கொல்லப்பட்டதை புலிக்கு ஊடாக சரி என்று நியாயப்படுத்தப்படுகின்றது. வெட்கக்கேடான "வழிபாடு"ம், "கருத்துகளை மீளாய்வு செய்"யாத புலி வக்கிரமுமாகும். இன்று புலியின் கருத்துகள் இப்படித்தான் எங்கும் பிரதிபலிக்கின்றது.

 

பி.இரயாகரன்

01.11.2010

Last Updated on Sunday, 31 October 2010 21:46