Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!

செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!

  • PDF

ஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.


ஆனால், ஒரே ஒரு புள்ளி விவரத்தை மட்டும் தந்து "இந்தியாவில் வறுமையே இல்லை" என்று சொல்லி அசத்தி இருக்கிறார், முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான செட்டிநாட்டு சிதம்பரம்.  தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காங்கிரசு மாணவர் அமைப்பின் கூட்டத்தில் பேசும்போது, "நாடெங்கும் 60 கோடி பேரிடம் செல்போன் இருக்கும் நிலையில், இந்தியாவில் 77 சதவீத மக்கள் வறுமையில் உள்ளார்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?" என்று கேட்டுள்ளார், ப.சிதம்பரம்.  இந்தியர்கள் கைகளில் இருக்கும் செல்போன்களின் எண்ணிக்கையால் இந்தியாவின் வறுமைக் கோட்டையே ஒரே நிமிடத்தில் அழித்துவிட்டார், அவர். பின்னே, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த வல்லுநர் அல்லவா?


இந்தியாவில் 77 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே வருவாய் ஈட்டுகின்றனர் எனும் விவரத்தைத் தந்தது, பாகிஸ்தான் அரசு அல்ல. எந்த அரசில் அமைச்சராக சிதம்பரம் இருக்கிறாரோ, அந்த மத்திய அரசின் தேசிய மாதிரி ஆராச்சி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைப்புசாராத் தொழில்களுக்கான தேசிய ஆணையம்தான் இந்த விவரத்தை வெளியிட்டது. அரசே ஒத்துக்கொண்ட இந்திய வறுமை பற்றிய புள்ளி விவரத்தை மறுதலிக்கிறார், இந்தப் பொளுளாதாரப் புலி.


இந்த ஹார்வர்டு பொருளாதார மேதை சொன்ன செல்போன் எண்ணிக்கை பற்றிய வாதம், எவ்வாறு வக்கிரமானது என்பதை "சன்ஹதி" எனும் இணைய தளம் விளக்கி எழுதியுள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் செல்போன்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். வோடஃபோன் நிறுவன அறிக்கையே இதனை உறுதி செய்கிறது. "ஒருவரிடம் செல்போனில் ஒரு நிமிடத்துக்குப் பேசுவதற்கு 1998-இல் ரூ.15.30 -ஆக இருந்த கட்டணம்,  2010-இல் 68 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.  மேலும், மிகக் குறைந்த கட்டண அளவில் முன் கூட்டியே பணம் செலுத்திப் பேசும் (ப்ரீபெய்ட்) வசதிகளும், செல்போன் கருவியின் விலை ஆயிரம் ரூபாக்கும் கீழே இறங்கியதும், புது இணைப்பை வாங்கும் கட்டணம் குறைக்கப்பட்டதுமே செல்போன் சந்தை விரிவடைந்ததற்கான காரணம்" என்கிறது அந்த அறிக்கை. இதைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலும் உறுதிப்படுத்துகிறது.


இது மட்டுமல்லாமல், செல்போன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாதத் தவணை முறை, ஏழை மக்களின் வருமானத்துக்கு ஏற்புடையதாக இருந்தது. ப்ரீபெட் திட்டத்தில் வாழ்நாள்வரைத் திட்டமும் (லைப்டைம்), ஒரே குழுமத்துக்குள் பேசினால் இலவசம் எனும் திட்டமுமே செல்போனை அனைவர் கைகளிலும் கொண்டு வந்தது. வோடஃபோன் அறிக்கையே, குறைந்தபட்சம் இணைப்பைத் தொடர இம்மக்கள் ரூ.10 செலுத்தினால் போதும் என்று சொல்லியிருக்கிறது.


கிராமப்புறத்தைவிட, நகர்ப்புறங்களில் செல்போனின் பரவல் 6 மடங்கு அதிகமென்றும், ஒட்டு மொத்த செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் நகரத்தினர் மட்டும் 80 சதம் என்றும் வோடஃபோனின் அறிக்கை சொல்கிறது. இவர்கள் தோராயமாக ஒருநாளைக்கு ரூ.20க்கும் குறைவாகவே (இருவர் இணைப்பு வைத்திருக்கும் குடும்பங்கள்) பேசுவதில் செலவிடுகின்றனர் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.


செல்போன் கட்டண விகிதம் 10 சதம் அதிகரித்தால்கூட 23 சதவீத வாடிக்கையாளர்கள் இணைப்பைப் புறக்கணித்து விடுவர் என்கிறது அவ்வறிக்கை. தேவையின் அடிப்படையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் செல்போன்களை வைத்திருந்தாலும், ஒரு சிறு கட்டண உயர்வு கூட அவர்களின் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துவிடும் என்பது, பல செல்போன் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டிருக்கும் உண்மை.
உதிரித் தொழில்களில் ஈடுபடும் பெரும்பான்மை ஏழைகள் கவனமாகவும் சிக்கனமாகவும் செலவு செய்பவர்கள். இதில் ஒரு பகுதியினர், செல்போன் இணைப்புகளுக்கான கட்டணம்  குறைக்கப்பட்டதால், அதை உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதுவும் கூட, தமது வேலை சார்ந்த தேவைகளுக்கு மட்டும்தான் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.( இது குர்கானில் உள்ள அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நிலை பற்றி அண்மையில் வெளிவந்த ஆய்க் குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது).


சிதம்பரம் சொல்வதைப் போல செல்போன் எண்ணிக்கையை வைத்து வறுமை இல்லை என்று முடிவுக்கு வருவதானால்,  தில்லிப் பெருநகரில் ஏழைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனெனில், இந்தியாவில் செல்போன் பெருக்கம் அதிகமாக இருப்பது தில்லியில்தான். 2007-இன் இறுதியில் பாகிஸ்தானில்தான் செல்போன் வைத்திருப்போர் விகிதம் (அப்போதே 50 சதவீதம்),  இந்தியாவை விட அதிகமாக இருந்தது. இதன்மூலம் இந்தியாவை முந்திக்கொண்டு பாகிஸ்தான் வறுமையை ஒழித்துவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியுமா? ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 60 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. அதனால் அங்கு வறுமை ஒழிந்துவிட்டது எனச் சொல்ல முடியுமா?


சில செல்போன் நிறுவனங்கள் இணைப்பு பெற்ற பின், அதைத் தொடராமல் காலாவதியான இணைப்புகளையும்கூட கணக்கில் சேர்த்து தமது நிறுவனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கணக்கு காட்டுகின்றன. சில மேட்டுக்குடியினர் தனது தனிப்பட்ட உபயோகத்துக்கென பத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளைக் கொண்டிருக்கின்றனர். சில நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு தாமே செல்போன் வாங்கிக் கொடுத்து வேலை வாங்குகின்றன. இவற்றையும் செல்போன் நிறுவனங்கள் தனிப்பட்ட பயனாளர்களின் கணக்கில் சேர்த்துக் காட்டுகின்றன. எனவே, செல்போன் நிறுவனங்கள் காட்டும் இத்தகைய கணக்குகளும் புள்ளிவிவரங்களும் மிகைப்படுத்தப்பட்டவையாக  உள்ளன. இருப்பினும்,  இப்புள்ளி விவரங்களைக் காட்டி "செல்போன் குடியரசாக" இந்தியா மாறிவிட்டது என்றும், வறுமை ஒழிந்து நாடு முன்னேறிவிட்டதாகவும் சிதம்பரத்தைப் போலவே ஊடகங்களும் சித்தரிக்கின்றன.


புள்ளிவிவரக் கணக்குகள் ஒருபுறமிருக்கட்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை எவ்வாறு இருக்கிறது? விவசாயத்தின் அழிவினால், கிராமப்புற மக்கள் வாழ்விழந்து நகரங்களை நோக்கிப் பிழைப்பு தேடி ஓடி வருகின்றனர். நகரங்களில் இன்றைய சூழலில் அதிகளவு வேலை கிடைப்பது அமைப்புசாராத் தொழில் துறையில்தான். இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களே 93 சதவீதமாகப் பெருமளவில் உள்ளனர். நகரங்களில் கட்டிட வேலை, உதிரியான தொழில்கள் செய்வோருக்கும், வேலைதேடும் இளைஞர்களுக்கும் செல்போன்கள் தவிர்க்கவியலாத தேவையாகி விட்டது. நான்கைந்து வீடுகளைப் பெருக்கிப் பாத்திரம் கழுவும் வேலை செய்யும் பெண்களுக்குக் கூட, இவர்களைப் பணிக்கு அமர்த்தியிருப்பவர்கள் அழைப்பதற்கும், கட்டளை இடுவதற்கும் செல்போன் இன்று அத்தியாவசியமாகி விட்டது.


மாதச் சம்பளத்துக்குச் சிறுவர்களை வீடுகளிலிருந்து பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள், மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளத்துக்காக வீடு தோறும் ஏறி இறங்கி நுகர்பொருட்கள் விற்கும் விற்பனையாளர்கள், வீடுதோறும் தண்ணீர்க் குடுவைகள் விநியோகிப்போர் -என எல்லோருக்கும் அத்தியாவசியமாவிட்ட இந்த நவீனக் கருவி அனைவர் கையிலும் இன்று இருப்பதற்குக் காரணமே, கடந்த பத்தாண்டுகளில் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும் கட்டணமே என்பதைப் பாமரர்கள் கூட ஒத்துக் கொள்வர். இதனால் அவர்களுக்கு சராசரியாக மாதம் ரூ.200 செலவாகின்றது. இதற்காக அவர்கள் ஒருவேளை தேநீரைக் குறைத்துக் கொள்கின்றனர். செல்போன் கட்டணம் அதிகமாகி விட்டால், ஒரு வேளை உணவைக்கூட குறைக்கும் நிலையில்தான் அவர்கள் வாழ்க்கை உள்ளது.


சென்னை போன்ற பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பெருகி வரும் சேவைத்துறை சார்ந்த சிறு நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டுமானால் செல்போனும், மோட்டார் சைக்கிளும் வைத்திருப்பது முன்நிபந்தனை ஆக்கப்பட்டிருப்பதும், அந்த வேலையில் கிடைக்கும் குறைந்தபட்ச சம்பளமே மூவாயிரம் ரூபாய்தான் என்பதும் ‘உலகப் பொருளாதார மேதை’ சிதம்பரத்துக்குத் தெரியாதா? அந்த வேலைகள் செய்து வரும் இளைஞர்கள் என்ன, வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளவர்களா?


எண்பதுகளில் வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரசார் முழக்கமிட்டார்கள். தொண்ணூறுகளில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறிய பின்னர், அரசின் நலத் திட்டங்களை உலக வங்கிக் கட்டளைப்படி ஒழித்துக் கட்ட ரேசன் அட்டைகளை பச்சை என்றும், சிவப்பென்றும் வகைப்படுத்தி வறுமையை அளவிட்டுப் புள்ளிவிவர மோசடி செய்து ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்தார்கள். கூடிய விரைவில்  செல்போன் எண்ணிக்கையைக் கூட இவர்கள் அளவுகோலாக்கி, இந்தியாவில் ஏழைகளே இல்லை என்று சொல்லி, சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நலத்திட்டங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கைகழுவவும் செய்வார்கள்.


கடந்த பத்தாண்டுகளில், ஆண்டொன்றுக்கு இந்திய மக்கள் உண்ணும் உணவின் மொத்த அளவு, 1940-களில் வங்கப் பஞ்சத்தின்போது இருந்த அளவிற்குத் தாழ்ந்திருப்பதாகப் பொருளாதார மேதை அமர்த்யா சென் குறிப்பிட்டிருப்பதும் உண்மை. கிலோ  ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் புளுத்த அரிசியை வாங்கித்தான் தமிழ் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் வயிற்றை நிறைக்கின்றனர் என்பதும் உண்மை. இன்று 60 கோடி பேரிடம் செல்போன்கள் உள்ளன என்பதும் உண்மை. ஏழை மக்களின் கையிலுள்ள செல்போன்களைக் காட்டி, இந்தியாவில் வறுமை இல்லை என வக்கிரமாகச் சொல்லும் சிதம்பரத்தை நாட்டு மக்கள் இன்னமும் விட்டு வைத்துள்ளார்கள் என்பதும் உண்மை.


-கதிர்.