Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இன்று மகிந்த சந்திக்கும் மிகப்பெரிய எதிரி சரத்பொன்சேகாவே

இன்று மகிந்த சந்திக்கும் மிகப்பெரிய எதிரி சரத்பொன்சேகாவே

  • PDF

சரத்பொன்சேகாவை தன் அதிகாரங்கள் மூலம் தண்டித்து ஒடுக்க முனைந்தவர்கள், அதனாலும் மூக்குடைபடுகின்றனர். இது செயல்பூர்வமான, எதிர்ப்பு அரசியலை உருவாக்குகின்றது.  இதற்கு அடிப்படையாக இருப்பது, விட்டுக் கொடுக்காத உறுதியுடன் மகிந்தாவை எதிர்கொள்ளும் சரத்பொன்சேகாவின் உறுதியான நிலை. கைது, அவமானப்படுத்தல், உரிமைகளைப் பறித்தல், சிறை என்று தொடரும் அரச அடக்குமுறைகளை ஆளும் பாசிச வர்க்கம் அவர் மேல் ஏவுவதுடன், அதை வன்மம் கொண்டு திணித்தும் வருகின்றது. அது பாசிசத்தின் தன்மையையும், அதன் அரசியல் குணாம்சத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு எதிரான சரத்பொன்சேகாவின் விட்டுக்கொடுக்காத போராட்டம் அரசை தனிமைப்படுத்தி, அவர்களையே அதிரவைக்கின்றது. 

இதன் தோற்றம் என்பது இராணுவத்தின் இரண்டு அதிகாரம் கொண்ட தனிநபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு தான், ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிளவாக மாறியது. இதன் மூலம் படிப்படியாக ஒரு குடும்ப ஆட்சியாக ஆளும் வர்க்கம் மாறிய நிகழ்ச்சிப் போக்கு, சரத் பொன்சேகாவை ஒழித்துக் கட்டும் வண்ணம், அரசின் அதிகார இயந்திரங்கள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டன.

யுத்தக்குற்றத்தில் ஈடுபட்டவர்களிடையேயான இந்தப் பிளவு, சர்வதேசநாடுகளுக்கு இடையிலான பிளவுடன் இணைந்து கொண்டுள்ளது. சர்வதேசநாடுகளுக்கு இடையிலான பிளவு, இதை தனக்கு சாதகமாகி தன்னை இதில் ஒரு அணியாக்கிக் கொள்கின்றது.  

அதேநேரம் வளைந்து கொடுக்காத சரத்பொன்சேகாவின் தனித்தன்மை, இலங்கையில் மகிந்தவின் குடும்ப சர்வாதிகார அரசுக்கு எதிரான எதிர் அணியை உருவாக்கி வருகின்றது. எதிர்கட்சிகள் அரசுடன் சமரம் செய்யும் படியும், விட்டுக்கொடுக்கும் படியும் சரத் பொன்சேகாவிடமே கோருகின்ற நிர்பந்தத்தை திணிக்கின்ற ஒரு நிலையில் தான், சரத்பொன்சேகா உறுதிமிக்க தன் அரசியல் எதிர்ப்பைக் காட்டிவருகின்றார்.

ஐனாதிபதியிடம் சரத்தை மன்னிப்புக் கோரும்படியும், குடும்பத்தாரை ஐனாதிபதியிடம் இரங்குமாறு கோரியும், நாட்டை விட்டு வெளியேற சம்மதிப்பின் அவரை விடுவிப்பதாகவும் அரசு தரப்பு கொடுக்கும் நிர்ப்பந்தங்கள் அனைத்தையும் அவர் புறந்தள்ளிய உறுதியான நிலைப்பாடு, மகிந்த அரசுக்கு எதிரான அரசியல் அணிதிரட்சியாக மாறி வருகின்றது.

இலங்கையின் அரசுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் இதற்குள் மாறிவருகின்ற நிலையில், அரசு தன் அடக்குமுறையால் எதை செய்ய நினைத்தோ அது எதிர்மறையான அரசியல் விளைவாக மாறிவருகின்றது. இதன்பின் ஜே.வி.பி.யும் அணிதிரண்டு நிற்பதானது, இலங்கை எதிர்ப்பு அரசியலை மீண்டும் தவறான சக்திகள் தலைமை தாங்குகின்ற புதிய நிலை உருவாகி வருவதைக் காட்டுகின்றது.

இலங்கையில் மக்களை அணிதிரட்டிப் போராடும் எந்த வர்க்கக் கட்சியும் இன்று இல்லாத நிலையில், புரட்;சிகரமான அரசியல் செயல்பாடுகள் அற்ற நிலை காணப்படுகின்றது. இந்த அரசியல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு, அந்த நிலையை மாற்றும் போராட்டமின்றி, மகிந்த பாசிசத்தை நாம் எதிர்கொள்ள முடியாது என்பது வெளிப்படையான ஒரு அரசியல் உண்மை.

தமிழ்மக்கள் மத்தியில் புலித் தமிழ்தேசியம் சார்ந்த சிந்தனைமுறை ஆதிக்கம் வகிக்கும் நிலையில், புலித் தமிழ்தேசியம் சார்ந்த, சரத்பொன்சேகாவை பழிவாங்கும் எதிர்மறையான அரசியல் நிலைப்பாடு தான் காணப்படுகின்றது. தன் மற்றொரு எதிரியால் தண்டிக்கப்படுவதை அது ஆதரிக்கின்றது. இதன் மூலம் அரசுக்கு எதிரான போராட்டத்தை, அரசுக்கு சார்பான அரசியலாக படிப்படியாக மாற்றி வருகின்றது.

புலித் தமிழ்த்தேசியம் இலங்கை முதல் புலம் வரை அம்பலமாக்கப்படாத இன்றைய நிலையில், அவை செய்யப்படக் கூடாத அரசியலாக "இடதுசாரி மார்க்சிய" போக்குகள் புலித் தமிழ்தேசியத்தின் பின் புனர்ஜென்மம் எடுத்து நிற்கின்றது. இந்த நிலையில் பேரினவாத பாசிச அரசு, தமிழ்மக்களை தொடர்ந்தும் ஒடுக்குகின்றது. இதன் விளைவு, மீண்டும் புலி தேசிய அரசியல் தான் எங்கும் நிரம்பிய ஒன்றாக மாறி நிற்கின்றது.

இன்றைய இலங்கை சூழலில் புலித்தேசியம் கையறுபட்ட நிலையில் இருப்பதால், மகிந்த அரசை மறைமுகமாக அது பலப்படுத்துகின்றது. அரசுக்கு எதிரான சரத்பொன்சேகாவின் போராட்டம் ஒரு கூர்மையான எதிர் அணியாக மாறிவருகின்ற நிலையில், தமிழனைக் கொன்ற ஒரு குற்றவாளி என்ற அடிப்படையில் மட்டும் நின்று அணுகுவது தமிழ்மக்களுக்கே பாதகமானது.

மாறாக எம்மக்களுக்கு நடந்ததையும் உள்ளடக்கி அதை முன்னிறுத்திய வண்ணம், சர்வதேச முரண்பாட்டுக்குள் சரத்பொன்சேகாவின் போராட்டம் செல்வதை தடுக்கும் வண்ணமும், சரத்பொன்சேகாவுக்கு எதிரான அரசின் பாசிசத்தை அம்பலப்படுத்தி அதை அரசியல் ரீதியாக கையில் எடுப்பதும் தான் ஒரு புரட்சிகரமான அரசியல் இயக்கம் செய்ய வேண்டும். இதை செய்யும் எந்த புரட்சிகரமான கட்சியும் இன்று இலங்கையில் இல்லாத நிலையில், இன்றைய அரசியல் எதார்த்தம் இலங்கை மக்களின் தலைவிதியை ஏகாதிபத்தியத்திடமும்,  எதிர்த் தரப்பு ஆளும் வர்க்த்திடமும் தாரைவார்த்து விடுகின்றது.

எதிர்ப்பு அரசியல் புரட்சிகரமான அரசியல் கூறாக மாற தடையாக இருப்பது, புரட்சிகரமான அரசியல் சித்தாந்த நடைமுறை அங்கு இல்லாது இருப்பதுதான், அதற்கான  அடிப்படைக் காரணமாகும். இதை உருவாக்கும் அரசியல் நடைமுறை பணிதான், இலங்கை மக்களின் நலனுடன் தொடர்புடைய முதன்மையான மைய அரசியலாகும். இதை புரிந்து செயல்படுமாறு, புரட்சிகரமான சக்திகளிடம் கோருகிறோம்.

பி.இரயாகரன்
07.10.2010               

 

  

Last Updated on Thursday, 07 October 2010 11:48