Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

  • PDF

அனைத்துவித உண்மைகளையும் புதைத்து விடும் போது, பொய்கள் அரசியலாகிவிடுகின்றது. சரியான நேர்மையான தரவுகள் தான், உண்மையை பகுத்தாய உதவுகின்றது. இதை யார்தான் செய்தனர், செய்கின்றனர். நடந்து முடிந்ததைக் பற்றி முழுமையான பகுத்தாய்வு  இன்றி புதிய அரசியல் வழிமுறையை படைக்க முடியாது. மே 16ம் திகதி புலிகள் சரணடைந்ததன் பின்னான அரசியல், எந்தவிதத்திலும் எங்கும் நடந்ததை பற்றிய சுய விமர்சனமுமின்றி தான் அரசியலில் தாளம் போடுகின்றனர்.

புலிகளின் அழிவுக்கு முந்தைய சமாதான காலத்தில் புலிகள் பற்றிய விமர்சனத்தையும், அது சார்ந்த உண்மைகளையும் யார்தான் கொண்டு வந்துள்ளனர். இலங்கை, இந்தியா, புலத்தில், இதை அரசியல் ரீதியாக யார் தான் அணுகியுள்ளனர். எமக்கு வெளியில் யாரும் முன்னிறுத்தியிருக்கவில்லை. இதனால் நாங்கள் எங்கும் இருட்டடிப்பு செய்யப்பட்டோம். இதனால் எந்த மட்டத்திலும், எங்கும் மாற்று அரசியலுக்கு எந்த இடமுமில்லை என்ற நிலை உள்ளது. நடந்ததைப் பற்றி புலி சிந்தனைமுறைக்கு வெளியில், மாற்று சிந்தனை முறை செல்லவில்லை. இதை வைத்த நாம் மட்டும்தான். ஆனால் எம் இணையத்தை தாண்டி செல்ல முடியாத பல தடைகள். இன்று வரை அரசியல் ரீதியாக அதுதான் நிலை. இப்படி உண்மைகள், அரசியல் ரீதியாக எம் மக்கள் முன் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இது உள்ள வரை எந்த மாற்றமும் வராது.

இந்த நிலையில்தான் தீபச்செல்வன் போன்றவர்கள் இன்னமும் வீரியத்துடன் நடந்ததை திரிக்க முடிகின்றது. அவர் கூறுவதைப் பாருங்கள். "எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் எமது மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகிறோம்." என்கின்றார். புலிகளின் சொந்த புனைவை, இன்றும் எம் மக்கள் முன் வைக்க முடிகின்றது. இது புலிகள் தம்மைத்தாம் நியாயப்படுத்த, பிரச்சாரப்படுத்த கூறியவைதான். இங்கு நீங்கள் யார்? "எங்களைப் பொறுத்தவரை" என்று கூறுவது யாரை? இது மக்கள் அல்ல. மக்களுக்கு வெளியில் உள்ள உங்களைக் குறிப்பாக்கி, குறிப்பிடுகின்றீர்கள். "மக்களை பாதுகாப்பவர்கள்" என்று கூறும் நீங்கள் (அந்த "எங்களை பொறுத்தவரை" என்ற நீங்கள்) யார்? மக்களுடன் நிற்காத, புலிகளுடன் நின்ற குறிப்பான எந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு அப்பால், புலியைச் சேர்ந்த ரப்பர் பினாமிகள். "மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகிறோம்" என்று கூறும் நீங்கள் தான், மக்களுக்கு வாய்க்கரிசி போட்டு பாடையில் ஏற்றி அனுப்பியவர்கள். இது வேறு யாருமல்ல. பிறகு சுடலையில் நின்று, ஐயோ என் மக்கள் என்று ஓப்பாரி வைக்கின்றீர்கள். இந்த அரசியல் தான் புலி அரசியல். பிணத்தை உற்பத்தி செய்து, அதை வைத்து அரசியல் செய்தனர். 

வலிந்து யுத்தத்தை தொடங்கிய புலிகள், அதுவே அவர்களின் இறுதி முடிவாகிய போது அவர்கள் செய்த கோமாளித்தமான பாசிசக் கூத்துதான் "விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" என்ற கோரிக்கை. இதைத்தான் நீங்கள் கவ்விக் கொண்டு குலைத்தீர்கள். இது கேலிக்குரியதாக இருந்தது.

இப்படி இது உங்கள் கோரிக்கையாக இருந்தது ஆச்சரியமல்ல. சரி, மக்கள் விரோத  யுத்தத்தை வலிந்து மீளத் தொடக்கியது யார்? புலிகள்தான். அப்போது ஏன் இதை நீங்கள்  தடுக்கவில்லை.

யுத்தநிறுத்த காலத்தை எடுப்போம். புலிகள் தான் ஆயிரக்கணக்கான யுத்தநிறுத்த மீறலை, சொந்த மக்களுக்கு எதிராக செய்தனர். 2002-2005 நவம்பர் வரையான காலத்தில், யுத்த நிறுத்த மீறலாக யாரால் என்று இனம் காணப்பட்டு பதிவுக்கு வந்தது 3560யாகும்;. இதில் புலிகள் மீறியது 3424 ஆகும். இது அனைத்தும் சொந்த மக்களுக்கு எதிராக இருந்தது. அரசு மீறியது 153 யாகும். இது எப்படி சாத்தியமானது? பதிவுக்கு வராது போனது, பல ஆயிரம் ஆனால் கணக்கில் இல்லை. சொந்த மக்களுக்கு எதிரான இவைகள் தான் புலியை மிக வேகமாக தோற்கடித்தது. இதை யார் மக்கள் முன் கொண்டு சென்றனர். இக்காலத்தில் இராணுவ நடவடிக்கை சார்ந்த மீறல்கள் 50 ஆகும். இதில் 44 விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டது. 612 கொலைகள் நிகழ்ந்தது யுத்தக் குற்றமாக பதிவாகியுள்ளது. பதிவுக்கு வராததை உள்ளடக்கினால், இவை ஆயிரத்தைத் தாண்டும். இதைப் புலிகள் தான் பெருமளவில் சொந்த மக்களுக்கு எதிராகச் செய்தனர். இவை அமைதி, பேச்சுவார்த்தை காலத்தில் நிகழ்ந்தது. இந்த உள்ளடக்தில் நோக்காத அரசியல் சமன்பாடுகள், புலிகளின் தோல்வியை விளக்காது. இப்படி புரிந்து கொள்ளாத அரசியல் வெற்றிடத்தில், இப்படி முன்வைக்காத அரசியல் தளத்தில், இதை இருட்டடிப்பு செய்த சந்தர்ப்பவாத அரசியல் அனைத்தும் தளுவியதாக இருக்கும் போது, மாற்று அரசியலுக்கு இடமில்லை. இந்த வகையில் நாம் தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றோம்.

இந்த யுத்தத்தை எப்படி மக்கள் விரோத யுத்தமாக பலிகள் வலிந்து தொடங்கினார்கள் என்று பார்ப்போம். 2005 மார்கழி மாதம் 4ம் திகதி கோண்டாவில் சந்தியிலும், 6ம் திகதி இருபாலை வடக்கிலும், புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதல் மூலம் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் இதை தாங்கள் செய்யவில்லை என்று கூறியதன் மூலம், சமாதான ஓப்பந்தத்தை மீறாது கடைப்பிடித்தனர். செய்தவர்களை களையெடுக்கும் உரிமை அரசுக்கு உண்டு என்றனர். இப்படி களையெடுக்க கோரியவர்கள். அதே மாதம் 22ம் திகதி மன்னார் முகலம் துறையில் நடந்த தாக்குதலையும், பஸ்சில் பயணம் செய்த கடற்படையினர் மேல் பேசாலையில் வைத்த கிளைமோர் தாக்குதலையும் புலிகள் நடத்தினர். இப்படி 16 கடற்படையினர் கொல்லப்பட்டனர். இப்படி ஆங்காங்கே தாக்குதலை புலிகள் தொடர்ந்து நடத்தினர். ஆனால் தாங்கள் அல்ல என்றனர். இராணுவம் இது போன்ற தாக்குதலை தொடங்கவில்லை. அமைதி, சமாதான ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருந்தது. அரசு எதிர் யுத்தத்தைத் தொடங்க 6 மாதங்கள் (26.06.2006 மாவிலாறு) இருந்தன. ஆனால் ஒரு தரப்பாக புலிகள் அதனை மீறி வந்தனர். இதை யார் கண்டித்தனர்? தவறான இந்தச் செயல்கள், அவர்களின் முழுத் தோல்விக்கு காரணமாகியது.

இரு தரப்பாக இராணுவமும் யுத்தத்தைத் தொடங்க முன், வெளிவிவகார அமைச்சராக இருந்த கதிர்காமர் கொலை நடந்தது. புலிகள் இராணுவம் மீது தொடர்ச்சியான தாக்குதலை தொடங்கியிருந்தனர். 25.04.2006 அன்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடந்தது. இதில் 11 இராணுவம் கொல்லப்பட்டது. 26.06.2006 மாவிலாறு அணையை மூடி நீரை தடுத்ததைத் தொடர்ந்து, படிப்படியாக யுத்தம் தொடங்கியது. இந்த இடைக்காலத்தில் நூற்றுக்கணக்கான இரணுவத்தை புலிகள் ஒரு தரப்பாக கொன்றனர். இக்காலத்தில் புலிகள் - கருணா குழு மோதல் மட்டும் தான், புலிக்கு எதிரான சம்பவங்களாக தொடர்ந்து இருந்தது.

இது தொடர்பாக அன்று நாம் குறிப்பாக எழுதியவையும், இலங்கை இந்திய புலத்தில் அவை இருட்டடிப்பு செய்யப்பட்டவை. உங்கள் மீள் பார்வைக்கு

1. இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் கதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது. 

2. மக்கள் படையும் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும்

3.வீங்கி வெம்பிப் புழுக்கின்றது  (செஞ்சோலை தாக்குதல் பற்றியது)

4.வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

5.பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவுஇ ஏன் புலிகளுக்குள் நடந்தது?

6.அரசியல் ரீதியாக தோற்ற புலிகள்இ இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

7.புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?

அமைதி, சமாதானம் என்று கூறிக் கொண்டு, அதற்கு எதிரான புலிகள் நடத்தைகள்  அவர்களின் அழிவை மேலும் துரிதமாக்கி துல்லியமாக்கியது. தவறான அரசியல் கோரிக்கையுடன் பேச்சுவார்த்தையில் தோற்ற புலிகள், சண்டையை விரும்பினர். இப்படித் தான் மீள சண்டை வலிந்து ஆரம்பித்தது. உண்மையில் அமைதி சமாதான காலத்தில் புலிகள் முன்னிறுத்திய அரசியல் முதல் இராணுவ நடவடிக்கை வரை, தவறாக இருந்ததை யார் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர்? இலங்கை, இந்தியா முதல் புலம் வரை யாரும் இதைச் செய்யவில்லை. எமது குரல் மிகச் சிறிய தளத்தில் இருந்ததுடன், அவற்றைக் கொண்டு செல்வது என்பது முற்றாக பல வழிகளில் தடைப்பட்டது. எமக்கு இருந்த வழிகளும் படிப்படியாக அடைக்கப்பட்டது. புலியை முன்னிறுத்தி அனைத்தும் காட்டப்பட்டது.

புலிகளின் தவறுகளை சரி என்கின்ற தமிழ் தேசிய அரசியல், அதை விமர்சிக்காது பூசி மெழுகிய அரசியல், புலியை துரிதமாக அழித்தது. உதாரணமாக இங்கு இரண்டு உதாரணத்தை எடுப்போம்.

1. செஞ்சோலை தாக்குதல் அப்பாவி அனாதைக் குழந்தைகள் மேல் நடந்ததாக கூறுகின்ற புலிப் பாசிசப் புரட்டை, இன்று வரை சொல்கின்ற வரையறைக்குள் தான் புலிகளின் இழிவான நடத்தைகள் அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டது. அதில் கொல்லப்பட்டது செஞ்சோலை அனாதைக் குழந்தைகள் அல்ல. பல்வேறு பாடசாலைகளில் இருந்து பயிற்சிக்காக புலிகள் கட்டாயப்படுத்தி கொண்டு சென்ற அப்பாவி குழந்தைகள் என்ற உண்மையை மறுத்துதான், இன்று வரை புலியின் தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றது. இப்படி திரித்து புலிகளின் தவறுகளை எல்லாம் சரி என்று சொன்னவர்கள், இதை திரித்து காட்டியவர்கள், அதை பேசாத அரசியலை முன்தள்ளியவர்கள் தான், புலியை மறைமுகமாக அழித்துள்ளனர்.
        
2. யுத்தத்தை தொடங்கியது இராணுவம் என்று அடித்துச் சொன்னவர்கள்.

இப்படி தொடர்ச்சியான எதார்த்தத்தை மறுத்து திரித்து, உண்மைகளை புதைத்தும், புலியின் தவறுகள் எல்லாம் நியாயப்படுத்தப்பட்டது. இலங்கை, இந்தியா, புலம் எங்கு எடுப்பினும், நாம் மட்டும் தான் இதை முன் வைத்திருகின்றோம். இது இன்று வரை இதை யாரும் மீறவில்லை. மற்றவர்கள் அனைத்தும் ஒன்றில் புலி அல்லது இலங்கை அரசு என்ற ஒன்றைச் சார்ந்து நின்று சொன்னார்கள். பரந்துபட்ட மக்கள் முன் உண்மையை கொண்டு செல்லவும், அதற்காக போராடவும் யாரும் தயாராக இருக்கவில்லை. மாற்று எப்படி உருவாகும்? மாறாக புலி  தீபச்செல்வன்கள் தான் உருவாகின்றனர்.     

"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" என்ற கோரிக்கை, விடுதலைப்புலிகள் முன்னின்று முறித்து யுத்தத்தைத் தொடங்கிய போது, அதற்கு எதிரான குரலாக இருந்து இருந்தால் அதற்கு ஒரு தார்மீக ஆதரவு இருந்திருக்கும். 

அமைதி காலத்தில் அண்ணளவாக 1000 பேரை புலிகள் கொன்றனர். புலிகள் வலிந்து யுத்தத்தைத் தொடங்க முன், புலிகள் தங்கள் பினாமி அமைப்புகள் மூலம் "தலைவா யுத்தத்தைத் தொடங்கு" என்று அறிக்கைகள் விட்டு யுத்தத்தை தொடங்கினர். யாழ் குடாவில் மக்கள் படை என்ற பெயரில் கண்ணிவெடி மூலம் தாக்குதல்களை நடத்தினர். இந்தத் தாக்குதல் நடத்தியது தாங்கள் அல்ல என புலிகள் கூறி, அதைக் களையெடுக்க கோரினர். பேரினவாதம் தொடங்கிய களையெடுப்புத் தான், 3000 முதல் 5000 பேரைக் கொன்றது. இதனால் புலிகளின் வழமையான பிற பிரதேச தாக்குதல்ககளை படிப்படியாக  இல்லாதாக்கியது. மணலாறு தண்ணீரை தடுத்து நிறுத்திய புலிகள், மூதூர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நடத்தினர். இப்படி புலிகள் தொடங்கிய யுத்தம் தோற்ற போது தான், "விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" என்ற கோரினீர்கள். புலிகள் இதை தொடங்கிய போது, அதை நிறுத்தக் கோரவில்லை. அதை நடத்தத்தான் கோரினீர்கள்.

அரசு யுத்தத்தை வென்று வந்த நிலையில், அது யுத்தத்தை நிறுத்த மறுத்து வந்த நிலையில், பொதுமக்களை பாதுகாக்க என்ன கோசத்தை மாற்றாக வைத்தீர்கள். பேரினவாதம் மக்களை பலியெடுக்க, புலிகள் பலி கொடுக்க, மக்கள் பக்கத்தில் நின்று மாற்றாக எதைத்தான் முன்வைத்தீர்கள். சொல்லுங்கள். யுத்தத்தை நிறுத்த மறுத்த நிலையில், அன்று மக்களை பாதுகாக்க, மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வாக இருந்ததா? அல்லது யுத்த நிறுத்தம் தீர்வாக இருந்ததா? மக்களை வெளியேற்ற புலிகள் விரும்பவில்லை, அதை நீங்களும் தான் விரும்பவில்லை. இதனால் மக்களைக் கொல்லும் கோரிக்கையாகவே "விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" என்று கோரிக்கையை வைத்துக் கொண்டு இருந்தீர்கள். இதை விட வேறு தீர்வுகள் இருக்கவில்லையா?

தொடரும்
பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

Last Updated on Friday, 01 October 2010 06:17