Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!

அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!

  • PDF

அணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

 

இச்சட்டத்தை நிறைவேற்றினால்தான், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.  ஏனென்றால், அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து நிறுவப்படும் அணு மின் நிலையங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்திற்கு அணு உலைகளை/தொழில்நுட்பத்தை விற்ற அமெரிக்க நிறுவனங்கள் மீது நட்ட ஈடு கேட்டோ, கிரிமினல் குற்றம் சுமத்தியோ வழக்குத் தொடரக் கூடாது; அந்த அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள்தான் விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்கா விதிக்கும் நிபந்தனை.  இச்சட்டம் இப்படிபட்ட பாதுகாப்பை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அணு உலை இயந்திர பாகங்களை இந்தியாவிற்கு விற்க முன்வரும் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கிறது.

மன் மோகன் சிங்மன்மோகன் சிங் இச்சட்டத்தை நிறைவேற்றிய கையோடு, “அமெரிக்காவின் நலன்களுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை” எனச் சத்தியம் செய்யாத குறையாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.   ஆனால், இப்படிபட்ட சட்டம் எதுவுமில்லாமல் ரசிய உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணு உலைகள், மன்மோகன் சிங்கின் புளுகுணித்தனத்தையும், இச்சட்டம் அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் கொண்டு வரப்படுகிறது என்பதையும் ஒருசேர நிரூபிக்கின்றன.  இது மட்டுமல்ல, அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

அணு விபத்துக் கடப்பாடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.  பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை எதிர்த்ததால், அம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

‘‘அணு உலையை விற்ற நிறுவனம் அல்லது அதன் ஊழியர்களின் திட்டமிட்ட கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்திருந்தால், அணு உலையை இயக்கும் நிறுவனம் உலையை விற்ற நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு கோரலாம்” என்ற விதி (17ஆ) அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவும் இம்மசோதாவை எதிர்த்தது.  இந்த விதியை நிரூபித்து நட்ட ஈடு பெறுவது கடினம் என்ற போதிலும் அமெரிக்கா இந்த விதி சேர்க்கப்பட்டதை விரும்பவில்லை.

அமெரிக்கா முகஞ்சுளிப்பதை மன்மோகன் சிங்கால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் இந்த விதியை நீக்கக் கோரும் அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.  உறுப்பினர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்தது ஒருபுறமிருக்க, மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிவருடித்தனமும் அம்பலப்பட்டுப் போனதால், அவரது அரசு, “இது எங்களின் ஆலோசனைதான்” என்று கூறி இந்நீக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இம்மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் அணு உலை மற்றும் இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவதற்கான விதி 17(ஆ)-வில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.  இதன்படி, தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுடைய சாதனங்களை, பழுதான சாதனங்களை விற்றதால் விபத்து நேர்ந்ததாக நிரூபிக்கப்பட்டாலும், அணு உலையை இயக்கும் நிறுவனம் இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈட்டுத் தொகையைப் பெற முடியும் என்பது உள்ளட்ட 18 திருத்தங்களை முன்வைத்தது, நாடாளுமன்ற நிலைக்குழு.  போலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தவிர, பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் திருத்தங்களோடு, மசோதாவைச் சட்டமாக்க ஒப்புக் கொண்டனர்.

இப்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று விட்டு, அவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட ஆவணத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே தெரியாமல், ஒரு போர்ஜரி வேலை செய்தார் மன்மோகன் சிங். அம்மசோதாவில் தனித்தனியாக இருந்த 17(அ) என்ற விதிக்கும், 17(ஆ) என்ற விதிக்கும் இடையில் “மற்றும்” (and) என்ற விகுதியைச் சேர்த்து இரண்டையும் இணைத்தார்.  இதன் மூலம், அணு உலை இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடம், அணு உலையை இயக்கும் நிறுவனம் 17(ஆ) பிரிவில் காணப்படும் அம்சங்கள் குறித்துத் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே, நட்ட ஈடு பெற முடியும் என்ற நிபந்தனை நைச்சியமாக உருவாக்கப்பட்டது.  நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் “மற்றும்” (and) என்ற வார்த்தை மட்டும் அச்சிடப்பட்ட தாளை யாருக்கும் தெரியாமல் செருகியதன் மூலம் இந்த ஃபோர்ஜரி வேலையை நடத்தி முடித்தது, மன்மோகன் சிங் கும்பல்.

இந்த விசயத்தை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியதன் விளைவாக மன்மோகன் சிங் அரசின் போர்ஜரி வேலை சந்தி சிரித்தது. இதனையடுத்து மசோதாவிற்கு ஆதரவளிக்கச் சம்மதித்திருந்த பா.ஜ.க. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என அறிவித்தது.  ஃபோர்ஜரி அம்பலமாகி மாட்டிக் கொண்ட மன்மோகன் சிங் கும்பலோ, அதற்காக வெட்கப்படாமல், ஏதோ நாணயஸ்தர்கள் போல,”உறுப்பினர்களுக்கு விருப்பமில்லையென்றால், அந்த வார்த்தையை விலக்கிக் கொள்கிறோம்” எனக் கூறி அந்த வார்த்தையை நீக்கியது.

ஆனாலும் அக்கும்பல் அசராமல் அடுத்த சதியில் இறங்கியது.  நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்த திருத்தங்களைப் பரிசீலனை செய்வது என்ற பெயரில், “அணு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அணு உலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அதன் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர் என அணு உலையை இயக்கும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்” என்ற விதியை 17(ஆ) பிரிவில் சேர்த்தது மைய அமைச்சரவை.  மன்மோகன் சிங் கும்பலால் முன்னர் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைவிட அயோக்கியத்தனமானது இது.  ஏனென்றால், ‘விபத்து’ நேரிடும் எனத் தெரிந்திருந்தும், தனது இலாபத்திற்காக பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் திட்டமிட்டே புறக்கணித்தது என்பதை நிரூபிக்க ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதும், அதனை வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, இந்திய உச்சநீதி மன்றம்கூட ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதானே துரோக வரலாறு.

மன்மோகன் சிங் கும்பல் புகுத்திய இந்தப் புதிய விதியையும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால், அந்த விதியையும் கைவிட்டு, பின் பா.ஜ.க.-வின் ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, காங்கிரசு.  இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அடுத்தடுத்துப் பல மோசடிகளையும், சதிகளையும், பொகளையும் அவிழ்த்துவிட்டு அம்பலமாகி நிற்கும் மன்மோகன் சிங், அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை.  எதிர்க்கட்சிகளும் அவருடைய நாணயத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.  ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த ஒற்றுமைதான், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி அமெரிக்காவிற்காக மாமா வேலை செய்யலாம் என்ற துணிவையும், திமிரையும் மன்மோகனுக்கு வழங்கயிருக்கிறது.

சி.பி.எம். கோரியதைப் போல் நட்ட ஈட்டு வரம்பை 10,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தியும் விபத்துக்கான முழு பொறுப்பை அணு உலைகளை விற்கும் நிறுவனங்கள் மீது சுமத்தியும் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, இச்சட்டத்தை நாட்டு நலனை விரும்புவோர் ஆதரித்துவிட முடியாது.  ஏனென்றால், அமெரிக்க முதலாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்ல இச்சட்டத்தின் நோக்கம்.  இந்திய அணுசக்தித் துறையின் சுயசார்பான வளர்ச்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் மன்மோகன் சிங் கும்பலின் நோக்கம்.

அணுஉலை விபத்துத் தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெத்துப் போட சம்மதம் தெரிவித்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.  இந்த உடன்படிக்கை அணு விபத்திற்கு அணு உலை உபகரணங்களை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதைத் தடை செய்கிறது; 2,100 கோடி ரூபாய்க்கு மேல் நட்ட ஈடு கோருவதைத் தடை செய்கிறது.  அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டால்,  இந்தியச் சட்டம் வழங்கியிருக்கும் அற்ப பாதுகாப்புகளும் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டப்படும்.  அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் சிங் ஆசையும் பிசகில்லாமல் நிறைவேறிவிடும்.

______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

________________________________