Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  • PDF

இனவொடுக்குமுறையினால் தொடரும் பொது அவலம், சுயநிர்ணயம் என்ற அரசியலற்ற பொதுக் கோசம், அரசுக்கு எதிராக முன்னிறுத்திய அடையாளங்கள் மூலம், அரசியல் இன்று தொடர்ந்து சாக்கடையாகின்றது. இதற்குள் வேறுபாடியில்லை என்று காட்டுவது தான், குறுந்தேசிய அரசியல் உள்ளடக்கமாகும்;. இங்கு வலது இடது வேறுபாடு இன்றி, அனைத்தும் சூக்குமமாக மக்களுக்கு எதிராகவே பயணிக்கின்றது. இதுதான் வலதுசாரிகளின் மைய அரசியல் அடிப்படையாகும். புலிகள் இருந்தவரை அனைத்தும் இதுவாக இருந்தது. இன்று அனைத்தும் பொது அவலம் மேல் ஏறி, மிக சூக்குமாக பயணிக்கின்றது. மக்களிடையேயான முரண்பாடுகளை இன முரண்பாட்டின் மூலம் பாதுகாத்தபடி, மக்கள் விரோத அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்தகாலத்தில் இதைப் பாதுகாக்கவே, புலிகள் மக்கள் மேல் வன்முறையை எவி பாசிசத்தை நிறுவினர்.  

இப்படி கடந்த 30 வருடமாக தொடர்ந்த அரசியல் பற்றி எந்த மதிப்பீடுமின்றி, இன்று மீள்வும் அதே அரசியல் அரங்கேற்றப்படுகின்றது. 30 வருடத்தக்கு முன், இது பற்றி இருந்த புரட்சிகரமான அடிப்படையான அரசியல் பார்வை கூட, இன்று இதன் மேல் கிடையாது. அனைத்தும் கலந்து சாக்கடையாகின்றது. கூட்டணியும், புலிகளும், தமிழ் குழுக்களும் நஞ்சிட்டு வளர்த்த குறுந்தேசிய இனவாதம், தொடர்ந்து நஞ்சையே கக்கின்றது.
 
கடந்த 30 வருட கால அரசியல், தமிழ் மக்களை அழிக்கவில்லையா? வலது முதல் இடது வரை இதைச் செய்யவில்லையா? இதற்கு எந்த அரசியல் பொறுப்பும் இருக்கவில்லையா? அனைத்தும் அரசா!? அனைத்தும் புலியா!? இதைப் பற்றி எந்த விமர்சனம், சுயவிமர்சனமுமற்ற பாதையில் அனைவரும் பயணிக்கின்றனர். கடந்தகாலத்தில் போராட்டத்தை சிதைத்த வலது இடது கூட்டம் தான், எந்த சுயவிமர்சனமுமின்றி மீண்டும் தங்கள் அரசியலைத் தொடருகின்றனர். கடந்தகால தவறுகள் பற்றிய விமர்சனம் செய்யாத, சுயவிமர்சனம் செய்யாத அனைத்தும், மீண்டும் மக்களை ஏய்க்கும் சந்தர்ப்பவாத அரசியல்தான். அவர்கள் பொய்யர்களாக பித்தாலாட்டப் பேர்வழிகளாகவே தொடருகின்றனர்.

இதில் கடந்த 30 வருடகால இடதுசாரியம் பற்றிப் பேசாத அரசியல், முழு சந்தர்ப்பவாதத்துடன் கூடிய படுபிற்போக்கானது. புலியல்லாத புதுச் சூழலை, தங்கள் இருப்புசார் அரசியல் மேல் இன்று உருவாக்குகின்றனர்.

இதன் மூலம் மக்களின் மந்தைக்குரிய அறியாமை சார்ந்த நிலையை தக்கவைத்து, தமக்கு ஏற்ப தொடர்ந்து அதைப் பயன்படுத்த முனைகின்றனர். இன்று அரசியலில் உள்ளவர்கள் தான், கடந்தகால அரசியலிலும் இருந்தவர்கள். கடந்தகால நிலைமைக்கு யார் பொறுப்பு? இவர்கள் தான். புலி வலதுசாரிகள் முதல் பு.ஜ.மா.லெ.கட்சி என்று இடதுசாரிகள் வரை இதற்குப் பொறுப்பு. இதை இன்று எவர்தான் மீள பரிசீலனை செய்து, அந்தத் தவறுகளை தாமாக இனம் காட்டியுள்ளனர்? இப்படிச் செய்யாத எவரும், கடந்தகாலம் போல் நிகழ்காலத்திலும் மக்களை ஓடுக்கி தாம் வாழ்வதற்கு ஏற்ப அவர்களை ஏமாற்றுகின்றனர். இதுதான் உண்மை. தங்கள் கடந்தகாலம் பற்றிய உண்மைகள், மக்கள் தெரிந்து கொள்ளாத மந்தைத்தனத்தை தொடர்வதற்கு ஏற்ப, கடந்தகாலம் மீது விமர்சனம் சுயவிமர்சனத்தை செய்யாது அதை மூடிமறைக்கின்றனர்.

இன்று பொது இனவொடுக்குமுறை மீதான எதிர்வினை அரசியல் அடையாளங்கள் மூலம், தொடர்ந்து தங்களை மூடிமறைந்த அரசியல் மூலம் பித்தலாட்டங்கள் செய்கின்றனர். வாய் மூலமாக சூழலுக்கு ஏற்ப, நபருக்கு எற்ப முன்வைக்கும் சந்தர்ப்பவாத அரசியல் மூலம், இன்று தொடர்ந்து அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றது.

வலதுசாரிய இடதுசாரிய அரசியலுக்கு இடையில் உள்ள அரசியல் இடைவெளி என்ன என்பதையோ, இடதுசாரிய நிலைப்பாட்டுக்குள் தங்கள் குறிப்பான அரசியல் நிலை என்ன என்பதையோ, வெளிப்படையாக முன்வைத்து விமர்சனம் சுயவிமர்சனம் எதையும் நேர்மையாக செய்வது கிடையாது. குறிப்பாக மக்கள் முன் இதை முன்வைப்பது கிடையாது. மூடிமறைத்த அரசியலுடன், சதிக் குழுக்களாகவே இயங்குகின்றனர். வெடிகுண்டு அரசியலான, தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றனர்.  

கடந்தகாலம் போல் விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் மறுத்த, பொது அரசியல் சாக்கடையில் இன்று அரசியல் மிதக்கின்றது. இதில்தான் தீபச்செல்வனும் மிதக்கின்றார். எப்படி அவர் அதில் மிதக்கின்றார் என்று பார்ப்போம்.    

தொடரும்

பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

Last Updated on Saturday, 11 September 2010 06:30