Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

“இனியொரு விதி செய்வோம்” – 2

  • PDF

முயன்று – தவறி – கற்றல் மனிதகுல வளர்ச்சி இன்றைய மட்டத்துக்கு உயர்ந்து வர உதவிய ஒரு வழி இது. இருப்பதில் திருப்திப்பட்படாமல் இன்னும் மேலே என ஒவ்வொன்றிலும் முன்னேறத் துடிக்கும் புது வழி ஒன்றுக்கான தேடல் எடுத்த எடுப்பில் சரி வந்து விடுவதில்லை. சரி வந்து, அந்தத்திமிரோடு அடுத்த அடி எடுத்து வைக்கும் போதாவது தவறிவிட இடமுண்டு. தவறி விடுவதால் முடங்கி விட்டால் முன்னேற்றம் சாத்தியமாவதில்லை. மீண்டும் தொடங்கும் மிடுக்குக்கான வாய்ப்பு இருப்பதாலேயே புதிய வளர்ச்சிகள் சித்திப்பன. இவற்றிலிருந்தான கற்றல் அடுத்த ஒரு முயற்சிக்கு உதவ வல்லன. சரியானதிலிருந்த மேலும் தெளிவையும் தவறிலிருந்து தவிர்ப்பு வழிகளையும் கற்றாக வேண்டும்.

இலங்கையின் இனத் தேசிய மோதல்களில் தமிழ்த் தேசியமும் சிங்களத் தேசியமும் பெற்ற தோல்விகளில் இருந்து கற்பதற்கு நிறைய உண்டு. அவற்றிலிருந்து பெறும் புதிய விதியை முன்னிறுத்தி மார்க்கம் ஒன்றைத் தேடும் முயற்சியில் இந்தத் தொடரும் ஒரு எத்தனம்.

இரு தேசியங்களும் தோல்வியுற்றுள்ளன!

அது சரி, மோதும் இரு தேசியங்களும் தோல்வியுற்றன என்று போகிற போக்கில் சொல்லிவிடுவதா? தமிழ்த் தேசியம் தோல்விகண்டு கழித்தற் பெறுமானத்தை வந்தடைந்திருக்கிறது. சரி, சிங்களப் பேரினவாதம் வெற்றி மமதையில் திளைக்கிறதே, அதையும் தோல்வியில் சேர்ப்பது என்ன நியாயம்?

அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ஒன்றல்ல இரண்டல்ல 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விட்டு வந்திருக்கிறார். அந்த அடிமைச் சாசன ஒப்புதலுக்கு சிறு முணு முணுப்பைக்கூட காட்டமுடியாத முடக்கத்தில் சிங்களத் தேசியம்!

இதனைச் செய்து முடிப்பதற்காகவே முப்பது வருடங்கள் இரு தேசிய இனங்களும் மோதவிடப்பட்டன. முதல் ஒப்பந்தம் 1987 இல் நடந்ததைத் தொடர்ந்து தமிழ்த் தேசியத் தலைமையுடன் இந்தியப்பிராந்திய மேலாதிக்கம் நேரடியாக மோதியது. சிங்களப் பேரினவாதத் தலைமையின் இராஜதந்திரத்தை இதன்பொருட்டு வியந்தவர்கள் இருக்கிறார்கள், வளர்த்த கடா பிராந்திய மேலாதிக்க மார்பில் தாக்கியதும் ஒன்றையொன்று மோதவிட்டதும் பெரும் இராஜதந்திரம் என்பதாக.

வேடிக்கை என்னவென்றால், வெளியியேறிய பிராந்திய மேலாதிக்கம் சிங்கள மக்களை பெரும் அழிவுக்கு ஆட்படுத்தும் வகையில் யுத்தத்தை வளரவிட்டு, சிங்களப் பேரினவாதிகளை தன் காலடியில் மண்டியிடும் இராஜதந்திரத்தில் இன்று வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான். வல்லவனுக்கு வல்லவன்! சகோதரர்களாக வாழ்ந்திருக்க வேண்டிய சிங்கள – தமிழ் மக்களை இரத்தம் சிந்தவைத்து, முழு இலங்கையின் இறைமையைப் பறித்தெடுத்து இருக்கிறது இந்தியா. தமது சுயாதிபத்தியத்தையும் சுயநிர்ணயத்தையும் இழந்து போய்விட்டதைக் கூட உணர முடியாத துயர்மிகு போதையில் இன்று சிங்களத் தேசியம் முடங்கிப்போயுள்ளது.

இதனைத் தமிழ் இன உணர்விலிருந்தும் ஏற்க முடியாது என்று நீங்கள் சொல்ல முடியும் நண்பரே! இப்போது அதை விவாதித்துக்கொண்டு இருக்க வேண்டாம். ஏற்கனவே நிறைய முடக்கங்களுடன் நாம். சிங்களத் தேசியம் தோற்றிருக்கிறது என்றால் அதிலே குதூகலிக்க எங்களுக்குள் ஆட்கள் நிறைய உண்டு. எமது ஆண்டபரம்பரைத் தமிழ்த் தேசியம் எந்தப்பெரிய மேலாதிக்கத்திடம் சிங்களத் தேசியத்தை மாட்டவைத்து, அவர்களிடமிருந்து அற்பச் சலுகைபெறலாம் என்ற இராஜதந்திரத்தில்தானே தனது போக்கை நிர்ணயித்திருக்கிது – சிங்களம் அடிமைப்படுத்தப்படும் எந்த மேலாதிக்கத்திடமும் நாமும் அடிமைகளாவோம் என்ற சிறிய தர்க்கத்தையும் உணராத மூடத்தனத்தோடு.

சகோதரத் தேசிய இனங்களுக்கு சமத்துவத்தை வழங்க மறுத்து சிங்களத் தேசியம் தனது சுயநிர்யத்தையும் இழந்து நிற்கிறது. எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை, எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும் என்ற எத்தனத்தில் தமிழ்த் தேசியம் இன்னும் மோசமான எதிரிகளிடம் எமது சுயநிர்ணயத்தை அடகுவைத்துவிடுகிறது.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரங்காத கல் நெஞசர்களாய் நாம். ஆளுக்கு ஆள் குழிபறித்க முயற்சித்து ஒட்டுமொத்தமாக அடிமைப்பட்டிருக்கிறோம். ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகளில் ஒருவர் வீழ்ந்தால் மற்றவர் உயர முடியுமோ? ஒரு நாட்டினுள் இருக்கும் இரு பேரினவாத சக்திகளான சிங்கள – தமிழ் ஆதிக்கசக்திகளுக்குப் பலியாகும் உழைக்கும் மக்கள் ஒருவரை மற்றவர் புரிந்தும் மதித்தும் இல்லையெனில் நிம்மதியான வாழ்வு எப்படிச் சாத்தியம்?

ஆண்ட பரம்பரைத் தமிழ்ப் பேரினவாதம் தாம் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை ஒருபோதும் உணர்வதில்லை. அவர்கள் தேசிய விரோதிக்கு எதிராக பிராந்திய – உலக மேலாதிக்வாத ஒடுக்குவோருடன் கூட்டுச் சேர்ந்துவிடுவதால் எப்போதும் ஆளுந்தரப்புத்தான். இப்போது சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி அடிமைப்பட்டிருக்கும் போது நாடுகடந்த ஈழத் தமிழ் தேசியம் உலக மேலாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கும்மாளமிடுகிறது. அவர்கள் எங்கே ஒடுக்கு முறையை உணர்வது?

ஈழத்தமித் தேசியத்துக்கான மிகப் பெரும்பான்மையான மக்களை வேறுபடுத்திப்பார்த்தாக வேண்டும் ஆண்டபரம்பரைத் தமிழ்த் தேசியத் தலைமை ஒடுக்கு முறையிலிருந்து விடுதலைக்கான மார்கங்களைத் தேடாமல் இன்னும் இன்னும் மோசமான எதிரிகளுடன் கூட்டுச்சேர்ந்து சொந்தமக்களாகிய எங்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது என்பதை எமது மக்களுக்கு உணர்த்தியாக வேண்டும். தமிழ்த் தேசியம் எனப் பம்மாத்துக் காட்டுவதனாலேயே அதன் பின்னால் கண்மூடித்தனமாய்ப் போய்விட முடியாது. ஆண்ட பரம்பரைத் தமிழ்த் தேசியத்திலிருந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழ்த் தேசியம் பெறும் வேறுபாட்டை இனங்காணவில்லையெனில் எமக்கான விடுதலை சாத்தியமில்லை. ஆண்ட பரம்பரைத் தமிழ்த் தேசியத்தை நிராகரித்து தனிமைப்படுத்தி நாமே வீழ்த்தாமல் அதன் கீழ், இல்லையெனில் அதுவும் இருந்து விட்டுப் போகட்டும் எனச் செயற்படுவோமெனில் உய்வில்லை. அவர்கள் எப்போதும் ஆள்வோராக இருப்பதற்காக எம்மைச் சகதிக்குள் ஆழ்த்தி மூழ்கடித்துக் கொண்டே இருப்பார்கள்.

இரு தேசியங்களும் தம் சொந்த இன உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றது!

ஆண்டபரம்பரைத் தமிழ்த் தேசியம் சொந்த இனத்தின் உழைக்கும் மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி வஞ்சிப்பது போன்றே சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்களை ஒடுக்கியவாறு – அவ்வாறு ஒடுக்குவதனைக்காண வெளிப்படுத்துகின்றனர். ஏனைய இனங்கள் மீதான ஒடுக்குதலை வெளிப்படுத்துகின்றனர். அவர்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளை மறுத்து வயிற்றில் அடிக்கும் செயல்களை அரசு தொடர்ந்து செய்கிறபோது அவற்றுக்கு எதிராகப் போராடுதற்கு சிங்கள மக்கள் மத்தியில் எந்தவொரு சக்தியும் இன்று இல்லை.

தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வெறும் பேச்சுக்கு அரசு சொன்னாலும். ‘இந்தியாவின் ஆணைக்குப்பணிந்து நாட்டைப் பிரிக்காதே’ எனச் சுவரொட்டிப் ‘போராட்டம்’ நடாத்துவதோடு ஜே.வி.பி. அடங்கிவிடும். இந்தியாவிடம் இறைமையை முழுதாக இழந்ததை அவர்கள் அறியவில்லையாம்.

ஜே.வி.பி.யை மேவி பேரினவாத எக்காளமிட்டு, அதனைப் பிளவுபடுத்திய விமல் வீரவன்ச யுத்தத்தின்போது மனித உரிமை மீறல் நேர்ந்தமை குறித்து ஐ.நா. செயலாளரின் ஆலோசனைக் குழு ஒன்றின் நியமனத்துக்கு எதிராகப் போராடுவதிலேயே தன் சக்தி அனைத்தையும் அர்ப்பணமாக்கியுள்ளார். அரசில் அமைச்சராக இருந்தவாறு ஐ.நா. காரியாலயத்தை முற்றுகையிடும் அவரது பொறுப்பற்ற செயல் சிங்கள மக்களால் போதியளவு கண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கோடானது மட்டுமன்றி, அவரைப் பெரும் தேசிய வீரராகக் கொண்டாட முயலும் போக்கு இருக்க முடிகிறது என்பது நாட்டின் எதிர்காலம் குறித்த கையறு நிலையுடன் துயர்கொள்ள இடமளிக்கிறது.

கையறு நிலைக்கு அடிப்படைக்காரணம் சிங்ளப் பேரினவாதத்துக்கு எதிராக கிளர்தெழ சிங்களமக்கள் மத்தியிலிருந்து ஆரோக்கியமான சக்தி சிறிய அளவிலேனும் இல்லையே என்பதால் கூடவே அதற்கு உரமூட்டும் வகையிலேயே தமிழ்த் தேசிய இனவெறியும் ஏனைய தேசிய இனங்களது சந்தர்பவாதங்களும் அமைந்துள்ளன. மனித உரிமை மீறல் விசாரணையைத் தடுக்க சிங்களப் பேரினவாத உணர்வு முந்துதல் போலவே, அதைக்கண்டு குதூகலிக்கும் தமிழ்த் தேசிய உணர்வும் அற்பத்தனமானது.

அரபு மண்ணில் இஸ்ரேல் பண்ணும் அட்டூழியங்களை ஐ.நா. விசாரணைக்கு உட்படுத்தியதுண்டா? பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பண்ணிய கொடூரங்கள் குறித்து விசாரிக்க எத்தனித்ததுண்டா? அமெரிக்க மேலாதிக்கவாதத்தை நம்பிக்கெட்டது போதாதென்று ஐ.நா.வின் இந்தப் போலி நாடகத்துக்கும் மயங்க வேண்டுமா?

இனியேனும், இந்த நாட்டினுள் மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகளை இனங்கண்டு அவர்களது கரங்களை வலுப்படுத்த என்ன செய்யலாம் எனச்சிந்திக்க மாட்டோமா? மேலாதிக்க வாதிகளின் ஆக்கிரமிப்பு சதிகளுக்குத் துணைபோகாமல் இந்த மண்ணில் ஐக்கியப்பட இயலுமான அனைவரோடும் ஒன்றுபட்டுப் போராடுவதன் வாயிலாகவே தேசியப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியும் என்;பதை விளங்கிக்கொள்வதில் என்னதடையுள்ளது.

(தொடரும்) 

1.“இனியொரு விதி செய்வோம்” - 01

Last Updated on Friday, 10 September 2010 19:00