Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் செம்மொழி மாநாடு: கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை!

செம்மொழி மாநாடு: கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை!

  • PDF

கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது.

கோவை மக்கள் அகலமாக்கப்படும் சாலைகளைப் பற்றியும் புதைந்துபோன வீடுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கோவைக்கு வரப் போகும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி பெருமை பேசுகிறார்கள். பொதுவாக கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் ஒருவரும் தமிழைப் பற்றி மறந்தும்கூட பேசுவதில்லை.

தொன்னூற்று மூன்றாம் வருடம் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். அப்போது எனக்கிருந்த அறிவுக்கு மாநாடு என்றால் அதில் என்ன செய்வார்கள் என்பது பற்றி எந்த ஆர்வமும் எழவில்லை. ஊரைச் சுற்றி போடப்பட்ட சாலைகளும் ஒரு மிதவைப்பாலமும் ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட பொன்னி அரிசி சாதமும் மட்டுமே நான் விவாதிக்கப் போதுமானதாக இருந்தது.

இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதே மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தமிழ் மாநாட்டின்போது ஜெயலலிதாவின் கட் அவுட்டுக்கள் தஞ்சை நகரெங்கும் பயமுறுத்தின. இப்போது அதே நிலைதான் நீடிக்கிறது. கருணாநிதி ஸ்டாலினின் மண்டைகளைப் பார்க்காமல் நீங்கள் இங்கு கால் கிலோமீட்டர் கூட பிரயாணம் செய்ய முடியாது, அத்தனை பேனர்கள் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழாய்வு மன்றத்தின் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது. அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் "தேவையை' அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க.வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருக்கக்கூடும் என்பது அவருக்கு தோன்றவில்லை போலும்!

நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம் மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.

அதன் பிறகு சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத்தமிழாய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் " மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்'. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும்.

சட்டமன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் எண்ணத்திலிருந்த கருணா இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இவ்வளவு குறுகிய காலம் போதாது என்று என்று கோரியதன் பிறகு மாநாடு ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. முத்தமிழ் செக்யூரிட்டிக்கு (காவலருங்க) ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்ரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப்போல எளிமையானதான தோன்றியதை என்னவென்று சொல்வது?

தமிழை ஒழித்துக்கட்டும் முயற்சி ஏதோ ஜெயலலிதா காலத்தில் துவங்கி கருணாநிதி காலத்தில் நிலைபெற்றதாக பலர் கருதுகிறார்கள் சில தமிழறிஞர்கள் உட்பட. தமிழ் மொழி காமராஜர் அண்ணாதுரை காலம்தொட்டே அரசினால் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் அண்ணாதுரையை அரியாசனத்தில் அமர்த்தியது. தமிழின் வளர்ச்சிக்கு அவர் செய்தது என்ன? இன்னும் சொல்லப்போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் மாணவர்ளை காட்டிக்கொடுக்கும் வேலையைத்தான் செய்தார்.

லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 1968ல் அண்ணதுரையால் நடத்தப்பட்ட இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான சிலைகள் சென்னையில் திறக்கப்பட்டன அலங்கார ஊர்திகள் மாநாட்டில் ஊர்வலம் சென்றன, வேறென்ன நடந்ததென்றால் யாருக்கும் தெரியாது. நாடகத்துறையில் இருந்தவர் என்பதால் அரங்கம் அமைப்பதைத் தவிர வேறெதையும் அவரும் செய்யவில்லை.

அதன் நீட்சியாக கருணாநிதியும் மொழிக்கு அவர் செய்யப்போகும் சிறப்பு பற்றி ஒரு எழவும் பேசியதாகக் காணோம் எப்போதும் மாநாட்டுப் பூங்காவில் தொடங்கி அரசுக் கழிப்பிடம் கட்டுவது வரையிலான கட்டுமான விவகாரங்களைப் பற்றித்தான் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப் பிழைத்தது.

அண்ணாதுரை காலத்தில் துவங்கிய ஜனரஞ்சகமான மாநாடு எனும் பழக்கம் இப்போது கருணாநிதியின் கதை வசனம் எழுதப்பட்ட படங்களைப் போல சகிக்க முடியாததாக வளர்ந்திருக்கிறது. மொழியைக் காப்பதற்கு ஏதாவது செய்பவர்தானே அதை வளர்ப்பதற்கும் தகுதியுடையவராவார்? கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்?

தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது (இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் மயிரளவுகூட தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?

தாய்மொழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டுமே நடத்த முடியும். பொதுவாகப் பார்க்கையில் அரசுப்பள்ளிகளது தரம் குறைவது என்பது எதேச்சையானது அல்ல. இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அரசின் கல்விச் செலவினத்தை குறைக்கவும் இன்னொருபுறம் தனியார் வசம் கல்வியை ஒப்படைக்கவுமே அரசு விரும்புகிறது. இப்போது அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை ஏற்க மறுத்து பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அரசை மிரட்டும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சொல்வது என்ன? நாங்கள் இல்லாவிட்டால் பின்னாளில் தரமான கல்வி பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிறது.

ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தும் அரசுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா? ஓராண்டுக்கு முன்பு கல்வியாளர் வசந்திதேவியால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.

பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள். நிர்வாகப் பணியையே செய்யத் திணறும் ஆசிரியரால் எப்படி ஐந்து வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்? இப்படியான சூழலில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பாடச்சுமையை எப்படி எதிர்கொள்வார்கள்? பெரும் சதவிகிதமான மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவதற்குள் படிப்பிலிருந்து விலகுகிறார்கள். அரசும் அதையே விரும்புகிறது. ஏழைகள் எல்லோரும் படிக்கத் துவங்கினால் பிற்பாடு அவர்கள் உயர்கல்வி கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே அரசுப்பள்ளிகளை தரமில்லாமல் வைத்திருப்பது அரசுக்கு மிக அவசியம்.

இந்த ஆண்டு +2 தேர்வில் மிக அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அரசுக் கல்லூரிகூடக் கிடையாது. கேட்டால் சிறிய மாவட்டம் அதனால் அரசுக் கல்லூரி அமைக்க முடியாது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால் அங்கு ஏறத்தாழ இருபது தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இப்படி வறிய மக்கள் போகக்கூடிய ஒரே இடமான அரசுக் கல்லூரிகள் இல்லாத பட்சத்தில் ஏழைப் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவார்கள்?

மற்றொரு வாதம் தமிழ்வழிக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை என்பது. இது ஏறத்தாழ உண்மையே. ஆயினும் மக்களை அந்த சூழலுக்கு தள்ளியவர்கள்தான் தமிழ்நாட்டை நாற்பதாண்டுகளாக ஆள்கிறார்கள். இவர்கள்தான் ஆளுக்கொருமுறை தமிழ் மாநாட்டை நடத்தினார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட எந்த ஒரு உயர்கல்வியும் தமிழில் இல்லாததால் மக்கள் எல்லோரும் இயல்பாகவே ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவெடுக்கவே செய்வார்கள்.

ஒருவேளை தமிழ் வழியிலேயே தமது பிள்ளைகளை படிக்க வைக்க விரும்புபவர்களுக்கு இங்கு போதுமான பள்ளிகளும் கிடையாது. ஆக ஏழை மக்களாக இருந்தாலும் சரி தமிழ்வழியில் தம் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்பும் நடுத்தரவர்க்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவது உறுதி. இப்படி சிறுகச்சிறுக மக்கள் தமிழ் வழிக்கல்வி மீது அலட்சியத்தை உருவாக்கிய அரசுதான் இப்போது செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.

இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ்மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை. ஆக தமிழ் வழியில் படிக்கவும் வாய்ப்பு கிடையாது படித்தவனுக்கும் வாய்ப்பு கிடையாது.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் நாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை அணுகவேண்டும். தமிழ்மொழியை இந்தத் தலைமுறையோடு தலைமுழுக வைக்கும் காரியங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்கமுடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை.

மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வை தமிழில் எழுதி படாதபாடுபட்டார் மருத்துவர் ஜெயசேகர், அது எப்படி முடியும் என எள்ளி நகையாடியவர் தி.மு.க.வின் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன். இப்போதும் தமிழ் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புக்களில் பல ஆங்கிலத்தில் இருப்பதாக தினமலரே சொல்கிறது. மாநாடுக்காக துவங்கப்பட்ட வலைதளம் பல மாதங்களாக முன்னேற்றமில்லாமல் கிடந்தது. இம்மாநாடு ஒரு சதவிகிதம் கூட தமிழுக்காக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

எத்தனை சான்றுகளை கொட்டினாலும் இக்கட்டுரை முடியாது. இது கருணாநிதி தனது ஓய்வுக்கு முன்பு சர்வதேச அளவில் நடத்திக்கொள்ள விரும்பும் ஒரு பாராட்டுவிழா முயற்சி. தான் விரும்பியது யாவையும் உடனே கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பணக்கார இளைஞர்களைப் போல கருணாவும் தன் வாழ்நாள் கனவுகளை தனது ஆட்சிக்குள் அல்லது ஆயுளுக்குள் செய்துகொள்ள விரும்புகிறார். கட்சிக்கு கிடைக்கும் கட்டுமான கமிஷனையும் கோவை வட்டாரத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இதில் இணைத்ததில்தான் கருணாநிதியின் சாணக்கியத்தனம் இருக்கிறது. மற்றபடி இது தமிழுக்காக செய்யப்படும் முயற்சி என்றால் அதை திமுககாரன்கூட நம்பமாட்டன். ஆறு மாதத்தில் வீணாகப் போகிற சாலைகளும் ஜூலை மாதத்திலிருந்து கவனிப்பாரில்லாது போகும் பூங்காக்களுமே கோவை மக்களுக்கு மிச்சமாகப் போகிறது.

சரி நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால் தான் காப்பாற்றப்படுகிறது. இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரஞ்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கான மக்களுக்கு அன்றாட உணவே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்து மட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.

ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் "என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம், அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது'. • வில்லவன் (செம்மொழி மாநாட்டுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை)