Wed04172024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

  • PDF

எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையாலாம். ஆரம்ப சமர் இதழ்களை படிக்காதவர்கள், மற்றும் என்னை மண்ணில் தெரியாதவர்களுக்கு இது புதிய விடையமாக இருப்பது தவிர்க்க முடியாது என்று குறிபிட்டு எழுதியிருந்தேன். ஆனால் பின்னால் மாறிய சூழலை கையில் எடுத்து, புலிப் பாசித்தை பற்றி விரிவாக எழுதினோம். இந்த நினைவுகள் எழுதிய காலத்தில், பாசிசம் பற்றி பெரிதாக எழுதுவது தவிர்க்கப்பட்டது. இந்த குறிப்பு, அன்றைய சூழலை எடுத்துக் காட்ட இன்று உதவுகின்றது.

புலிகளின் பாசிசம் பற்றி முன்பு பேசியும், எழுதியும் வந்த போதும், எனது பிற்காலத்தைய எழுத்தில் இவற்றை நான் நேரடியாகவே தவிர்த்திருந்தேன். இதனால் பாசிசம் இல்லாமல் போய்விட்டது என்ற அர்த்தமில்லை. இந்த வார்த்தைப் பிரயோகத்தை, அதன் உள்ளடகத்தையும் புலிகளுக்கு பொருத்த முடியுமா என்று கேட்டனர். இப்படி பாசிசத்தையே நியாயப்படுத்தும் பினாமித்தனத்தை முறியடிக்கும் வகையில், புலிப்; பாசிசத்தை அம்பலம் செய்ய வேண்டி இருந்தது. புலிகளின் பாசிச போக்கை பற்றி எந்தப் பத்திரிகையும் எழுதுவதில்லை. இதானல் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்ற அரசியல் தவறுகள் தொடர்ச்சியாக எற்படுகின்றது.

நான் ஆரம்பத்தில் எனது நடைமுறை போராட்டத்திலும், பின் எனது எழுத்திலும் இவற்றை பயன்படுத்திய போதும், இதை பின்னால் தவிர்க்க வேண்டிய நிலைமை எற்பட்டது. புலிகள் பாசிசத்தை உலகளாவிய வழிமுறையாக தாம் அல்லாதவர்கள் மேல் கையாளத் தொடங்கிய நிலையில், பாசிசம் குறித்து எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தினேன். செய்யவேண்டிய அரசியல் பணி இதற்கு வெளியில் இருந்தது. பாசிசத்துடன் தனி மனிதனாக மோதி நேரடியாக பலியாவதால் எந்தப் பயனும் உடனடியாக எற்படாது என்பதை புரிந்து கொண்டதனால், இந்த முடிவு தவிர்க்க முடியாதாக என் முன் இருந்தது.

பாசிசத்தைப் பற்றி தனிபட்ட நபர்கள், சமூக அரசியலுக்கு வெளியில் எழுதுவதினால் என்ன நடந்து விடுகின்றது என்ற கேள்வி என் முன் எழுந்தது. இரண்டாவதாக புலிகள் அல்லாத பிரிவுகள், புலிக்கு எதிரான தமிழ் மக்களின் எதிரியுடன் கூடிக்; குளிர் காய்வது நிகழ்ந்து கொண்டு இருந்தது. இந்த புலிகள் அல்லாத இந்தப் பிரிவு தாங்கள் கதம்பமாக இருந்தபடி, மார்க்சியத்தை மறுத்து வந்தனர். இந்த நிலையில் பாசித்துக்கு எதிரான அரசியல் மாற்றத்தை கோரும் முன்னோக்கிய அரசியல் பாதையை தடுத்து சிதைத்தது. அவர்கள் மீதான கடுமையான எனது அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில், எனது அகால மரணத்தைக் கூட அவர்கள் மனப்ப+ர்வமாக விரும்பினர். உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. புலிகளுடன் நேருக்கு நேர் முட்டி மோதுவதை விட, ஒரு அரசியல் உணர்வுள்ள அணிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையே, சமூக இயக்கம் மீண்டும் மீண்டும் எனக்கு உணர்த்தி நின்றது. இது மட்டும் தான் செயலுக்குரிய, மாற்றத்துக்குரிய அணியாகவும், பாசிசத்தை எதிர்த்து களமாடும் அரசியல் அடிப்படையில் பாசிசம் குறித்து முட்டி மோதி எழுதுவதை பின்போட வைத்தது. இதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று அடித்துக் கூறும், தர்மிகப் பலத்தை நடைமுறை ரீதியாக நான் இன்று வரை பெற்றுவிடவில்லை.

மார்க்சியத்தை நடைமுடை சார்ந்த ஒரு புரட்சிகரமான தத்துவம் என்ற அடிப்படையில், சமூக உணர்வுள்ள சக்திகளை வென்று எடுக்கும் நோக்கில் நான் போராடத் தொடங்கினேன். இதுவே எதையும் மாற்றியமைக்கும். பாட்டாளி வர்க்க கட்சிக்கான முன்னியாளர்களை உருவாக்கும்; இந்த சரியான நிலைப்பாடு சார்ந்து, புலிகளை நேருக்கு நேர் மோதுவதை தற்காலிகமாக தவிர்த்தேன். மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கை முழுமையாக சார்ந்து நின்று, அரசியல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். புலிகளின் அனைத்து பிரதான நடவடிக்கை மீதும், மக்களின் ஜனநாயக கோரிக்கை சார்ந்த விமர்சனப் போக்கை உருவாக்கினேன்;. உண்மையில் போராடும் சக்திகள் முன், இந்த ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் புலிகளுக்கு எதிரான உணர்வை அரசியல் மயமாக்கி முன்வைத்தேன். இந்த அரசியல் விமர்சனம் பரந்த தளத்தில் செல்லாமல், குறித்த எல்லைக்குள் மட்டுமே சென்றது. இதனால் தாக்கம் கூட எல்லைக்குட்பட்டதாக இருந்தது.

ஆனால் இது மற்றொரு தளத்தில், புலிப் பாசிசத்தை இனம் காண்பதை, பின் தள்ள வைத்துள்ளது. யுத்த தந்திர ரீதியாக நான் பாசிசம் குறித்த ஆழமான விமர்சனங்களை தவிர்த்து வந்தேன். இதனால் பலர் ஜனநாயக கோரிக்கை என்ற எல்லைக்கு கீழ் நின்று, புலிகளின் பாசிசப் போக்கின் பின் வாலாக மாறியது துரதிஸ்ட வசமானதே. சமூக இயக்கத்தின் போக்கு இப்படி நீடிப்பதும், சீராழிவதும் தொடருகின்றது. இந்த நிலையில் புலிப் பாசிசத்தை அதன் கோட்பாட்டு வேர்களில் இருந்து அம்பலப்படுத்துவதன் மூலம், அதன் அரசியல் பரிணாமத்தை அரசியல் ரீதியாக முன் வைப்பது அவசியமாகிவிடுகின்றது.

பாசிசம் குறித்து மேற்கு நாடுகளுக்கும் எமது நாடுகளுக்கும் இடையில், அதன் வளர்ச்சி வடிவத்தில் குறிப்பான வேறுபாடுகள் உண்டு. ஆட்சிக்கு வரத் துடிக்கின்ற பாசிசம், எங்கும் தேசிய என்ற மையக் கோசத்தில் தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இந்தப் பாசிச தேசியம், பல்வேறு சமூகக் கூறுகள் சார்ந்து தன்னை நிலை நாட்டுகின்றது. மதம், தூய்மைக் கூறு, சாதி, இனம், நிறம், மரபு என வௌ;வெறு வழிகளில், பாசிச தேசியத்தை கட்டமைக்கின்றது. இது குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலன்களை பூர்த்தி செய்வதாக பாசங்கு செய்தபடி, தன்னை நேர்மையானவனாக தூய்மையானவனாக காட்டிய படி அரங்குக்கு வருகின்றது. ஆனால் இந்தப் பிரிவு ஆட்சிக்கு எறுகின்ற போது, அந்த ஆட்சி; குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை பிரதிபலிப்பதில்லை. இது அந்த நாட்டில் எந்த பொருளாதார சமூக கட்டமைப்பு காணப்படுகின்றதோ, அதற்கு இசைவான பொருளாதார ஆதிக்க பிரிவை பலப்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. உண்மையில் பாசிசம் உழைக்கும் மக்களை தொடர்ந்தும் சுரண்டும் வழியை நவீனப்படுத்தும், ஒரு வர்க்க சர்வாதிகாரமே. இருக்கும் சுரண்டும் வர்க்க நலன்களை தக்கவைக்கவும், அதை பாதுகாக்கவும், இருக்கின்ற சமூக அமைப்பால் முடியாத அளவுக்கு வர்க்கப் போராட்டம் நடக்கின்ற ஒரு நிலையில், பாசிசம் அதிகாரத்துக்கு வந்து சுரண்டு வர்க்கத்தைப் பாதுகாக்கின்றது. பாசிசம் எப்போதும் அதிகாரத்துக்கு மூலதனத்தின் துணையுடன் வருகின்றது.

அரச என்பது எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகரமே. ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமே. இது இருக்கின்ற அமைப்பில் சுரண்டும் வர்க்கத்தின் அரசாகவும், அதன் ஜனநாயமாகவும் உள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் அடிப்படை நலன்களை, அமைதியான முறையில் சுரண்டி முன்னேற்ற முடியாத வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் நிலையில், வன்முறை மூலம் சுரண்டலை பாதுகாப்பதே பாசிசத்தின் மையமான அரசியல் சராம்சமாகும். ஆனால் பாசிசம் ஆட்சிக்கு வரும் போது, இடைப்பட்ட வர்க்கங்களை பெருமளவில் சார்ந்தும், அடிநிலை வர்க்கங்களின் மேலான ஆதிக்கம் சார்ந்தே சாத்தியமாகின்றது. பாசிசம் ஆட்சியை கைப்பற்ற முன்பாகவே, தன்னை முழுமையாக மூடிமறைத்த கலைவை கோட்பாடுகளுடன், இடைப்பட்ட வர்க்கங்கள் சார்ந்து தன்னை ஒரு இயக்கமாக, கட்சியாக காட்சியாளிக்கின்றது.

இன்னொரு வகையான பாசிசம், இருக்கின்ற ஆட்சி அமைப்புக்குள் நிகழ்கின்றது. இங்கும் அவை முழுமையான பாசிசமாக தன்னை முதலில் இனம் காட்டுவதில்லை. உழைக்கும் மக்களை சுரண்டும் வடிவம் எந்தளவுக்கு அதிகமாக எதிர்ப்புக்கு உள்ளாகின்றதோ, அப்போது ஆட்சி அமைப்பில் பாசிசம் ஒரு கூறாக வளர்ச்சியடைகின்றது. இது பாசிசமாக முழுமை பெறுவது, பாட்டாளி வர்க்கம் ஆட்சியமைப்பை கைப்பறும் இருவழிப் போராட்த்தில் தான். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் பாசிசம் என்பது, மேலும் கூர்மையாக பொதுவாக அரசியல் கட்சிகளின் அரசியல் வழியில் இணைந்தே காணப்படுபகின்றது. இங்கு பூர்சுவா ஜனநாயகம் என்பது சமூகத்தின் ஒரு கூறாக இருப்பதில்லை. இங்கு பாசிசம் என்பது ஒரு பண்பியல் கூறாக, அதன் பொருளாதார சமூகக் கட்டமைப்பு மீது இணைந்தே காணப்படுகின்றது. இதனால் பாசிசம் என்பது அதன் சமூக பண்பாட்டு கலாச்சாரக் கூறில் இனங்கான முடியாத சமூகக் கூறாக உள்ளது. அது தன்னை கலவைக் கோட்பாடுகளால் முடிமறைத்தபடி, இது உயிருள்ளதாக எப்போதும் உள்ளது. மக்களைச் சாராத அனைத்து சமூகக் கூறுகளும், பாசிசக் கூறை அடைப்படையாக கொள்கின்றது. இங்கு உருவாகும் அமைப்புகள், இயக்கங்கள் மக்களை விட்டு விலகி, பாசிசத்தை தனது வழியாக நடைமுறையாக கொள்கின்றது.

பாசிசத்தை புரிந்து கொண்டால் தான், இதை நாம் புரிந்து கொள்ளமுடியும்;. பாசிசத்தை தவறாக புரிந்து கொள்ளாமல் இருப்பது மிக முக்கியமானது. முதலில் ஒவ்வொரு ஜனநாயகமும் ஒரு சர்வாதிகாரம் தான். இதை தெளிவாக நாம் புரிந்து கொண்டாக வேண்டும். அதாவது பூர்சுவா ஜனநாயகத்தையும், பூர்சுவா சர்வாதிகாரத்தையும் எதிரெதிராக கட்டுவது, புரிந்து கொள்வது தவறானது. அரசு என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சி தான். ஒரு அரச பற்றி, அந்த அரசை தெரிவு செய்யும் ஜனநாயகம் பற்றி, அந்த அரசு பின்பற்றும் கொள்கை பற்றிய மயக்கம் இருக்காத வரை தான், பாசிசத்தை செம்மையாக துல்லியமாக புரிந்து கொள்ளமுடியும்;. மக்கள் மேல் நிறுவும் ஆட்சி எந்த வடிவில் இருந்தலும், அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி தான். அது ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான்;. பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசுக்கும் இது பொருந்தும். இங்கு பாட்டாளி வர்க்க அரசுக்கும் மற்றைய ஆட்சிக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு, எந்த வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது தான். இதில் துல்லியமான அடிப்படையான வேறுபாடு உண்டு. எந்த வர்க்கத்தைப் பலப்படுத்தி, எந்த வர்க்கத்தை ஒடுக்குவது என்பது பாட்டாளி வர்க்கமல்லாத அரசுகளின் அடிப்படையாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் தன்னை பலப்படுத்திய படி, வர்க்கத்தை ஒழிப்பதை அடிப்படையாக கொள்கின்றது. அதாவது அனைத்து மக்களையும் உழைக்கும் மக்களாக்குவதன் மூலம், சுரண்டுவதை ஒழித்து வர்க்கங்களை இல்லாது ஒழிக்கின்றது. சுரண்டும் வர்க்க அரசு என்பது வர்க்கங்களின் நலன்களுக்காக உழைப்பது அல்லது அதைப் பாதுகாப்பது என்பதை அடிப்படையாக கொண்டது. அரசு என்பது சர்வாதிகாரத்தை அடிப்படையாகவும் ஆதாரமாக கொள்கின்றது.

பாசிசம் வர்க்கத்துக்கு அப்பாலான ஒன்று அல்ல. சுரண்டும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை மேலும் ஆழமாக்குவதே பாசிசம். அதாவது பல்வேறு வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டத்தில், தொடர்ந்தும் சுரண்டலை நடத்த முடியாத ஒரு நிலையில், பாசிச சர்வாதிகாரம் ஆட்சியில் அமர்த்தப்படுகின்றது. ஆனால் பாசிசம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக தன்னை ஒழுங்கமைக்கின்றது, ஆட்சிக்கு வருகின்றது. ஆனால் அதன் பண்பியல் சமூக கூறுகள் தொடங்கி, அதன் நோக்கம் ஒரே விதமாக வெளிப்படுகின்றது.

பாசிசத்தின் உருவாக்கம் எப்போதும் சுரண்டல் கட்டமைப்பு சார்ந்த, ஜனநாயக விரோதப் போக்கே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் உள்ளது. இதுவே பாசிசத்தின் மையமான மூல ஊற்றாக உள்ளது. ஆனால் பாசிசம் எப்போதும் உழைப்பவன் சுரண்டப்படுவதை முடிமறைக்கின்றது. மாறாக வர்க்க கூட்டடைப்பற்றியும், ஆட்சிக்கு வந்தால் வர்க்க முரண்பாட்டை ஒழிக்கப்போவதாக மாயை எற்படுத்துகின்றது. மக்களை மயக்க நிலையில் தள்ளி, மந்தை நிலைக்கு தாழ்த்துகின்றது. தமது சொந்த பாசிசக் கோட்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள முடியாத இருட்டில் நிலை நிறுத்துகின்றது. கதம்பக் கூட்டுடன் கூடிய வெறித்தனமான தேசியவாத தத்துவம் இனைந்தே, பாசிசத்தை உருவாக்கின்றது. தேசியவாத வெறியை, மற்றைய மக்கள் இனங்கள் மேல் கட்டமைக்கின்றது. மற்றயை இன மற்றும் இனவாத கட்சிகளின் கோட்பாடுகளின் மேல் அல்ல. ஆளும் வர்க்க கோட்பாடுகள் மேல் அல்ல. மக்களுக்கு எதிரான சுரண்டலை அடிப்படையாக கொண்டு, சுரண்டும் ஜனநாயக விரோத போக்குகளை எதிர்த்து, பாசிசம் தன்னை கட்டமைப்பதில்லை. மாறாக அதை மூடிமறைத்தபடி, அதை மேலும் ஆழமாக செய்வதை அடிப்படையாக கொண்டே, மக்கள் கூட்டத்தை எப்போதும் எதிரியாக காண்;கின்றது. ஆரம்பம் முதலே உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் சித்தாந்தங்களையும், அது சார்ந்த அமைப்புகளையும் வேட்டையாடுகின்றது. மக்கள் சுயமாக சிந்திக்க முடியாத நிலையை தகவமைத்து, அந்த நிலத்தில் தான் பாசிசம் செழித்து வளரத் தொடங்குகின்றது.

பாசிச இயக்கம் எப்போதும் நெருக்கடிகளின் போதும், யுத்தத்ததின் போதே இலகுவாக தன்னை தகவமைக்கின்றது. சமூகங்களுக்கிடையான மக்கள் விரோத முரண்பாட்டை முன் தள்ளுவதன் மூலம், பாசிசம் தன்னைத் தான் அரங்கில் முன்நிறுத்துகின்றது. இந்த பாசிச முரண்பாட்டை யுத்த நிலைக்கு நகர்த்தும் போது, பாசிச சட்டங்கள், ஒழுக்கங்கள் இலகுவாக சமூக அங்கீகரத்துக்குள்ளாகிவிடுகின்றது. முரண்பட்ட சமூகப் பிரிவுகளை ஒடுக்க உருவாகும் சட்டங்கள், படிப்படியாக இயல்பில் சொந்த மக்கள் கூட்டத்தின் கழுத்தில் கைவைத்து குரல் வலையை நெரித்தே கொன்றுவிடும் அளவுக்கு தன்னை பலப்படுத்திவிடுகின்றது. இந்த நிலைமை கனிந்து வர, தற்செயலான குறிப்பான செயல் தந்திரங்களில் முற்றாகச் சார்ந்து நிற்கின்றது. இங்கு முன் கூட்டியே திட்டமிட்ட ஒழுங்கமைப்பில் பாசிச கட்டமைப்புகள் சாத்தியமாவதில்லை. ஏன்னெனின் பாசிசம் மக்கள் விரோதத் தன்மை கொண்டமையால், தன்னை மூடிமறைத்தே அரங்கில் நுழைகின்றதே ஒழிய, முன் கூட்டியே ஒழுங்கமைந்த வடிவில் தன்னை நிர்வணப்படுத்திவிடுவதில்லை. பாசிசம் உருவாகம் குறிப்பாக ஸ்தாபன ரீதியான கட்டமைப்பை மட்டும் எப்போதும் அடிப்படையாக கொள்வதில்லை. மாறாக பொருளாதார நிலமை, உள்நாட்டு முரண்பாடுகள், அக புற நிலமைகள், தொழிலாளர் வர்க்கத்தின் வீச்சு என பல அம்சத்துடன் தான் பாசிசம் தன்னை தகவமைக்கின்றது. மக்கள் போராடும் தன்மையைப் பொறுத்து, பாசிச சர்வாதிகாரம் நிலைமைக்கு எற்ப வடிவங்களை மாற்றுகின்றது. தன்னை மூடிமறைக்கின்றது. கதம்பமாக தன்னை அலங்கரித்துக் கொள்கின்றது. தீவிரமான சமூகப் பிளவுகளை முன் தள்ளுகின்றது. அதில் தன்னை தூய்மையானவனாக, நேர்மையானவனாக காட்டிக் கொள்கின்றது. நடைமுறையில் உள்ள சமூகப் பண்பாட்டு கலாச்சாரத்தின் பிற்போக்கு கூறுகளை நுட்பமாகத் தெரிந்தெடுத்து அதை உயர்த்துகின்றது. அதை பாதுகாக்கப் போவதாக சபதம் எற்கின்றது.

பாசிசம் எப்போதும் மக்களின் அடிப்படையான அன்றாட பிரச்சனை மீது அக்கறையுள்ளதாக நடிக்க முடிகின்றது. இதன் மூலம் மக்களை திரட்டமுடிகின்றது. மக்களின் நல் உணர்வுகளையும், தியாக உணர்வுகளையும் கூட பாசிசம் தனது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துகின்றது. ஆனால் எதாhத்தத்தில் பாசிசம் அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு இடத்திலும், மக்களின் அடிப்படையான தேவைகளையும் கோரிக்கைகளையும் அழிப்பதில் தீவிரமான செயல் தளத்தைக் கட்டமைக்கின்றது. மக்களை கவர்ச்சி காட்டி, அதில் அவர்களை வழ வைத்து, அதில் இருந்து மீள முடியாத வகையில் செரித்து விடுவது பாசிசத்தின் அடிப்படையான பண்பாகும். அரசை கைப்பற்ற தீவிரமான உணர்ச்சிகரமான கோசங்களால் தன்னை அலங்காரிக்கும் அதே உள்ளடகத்தில், அதை வென்று எடுக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பது அவசியம் என்பதை ஒரு பாசிச பண்பாடாகவே சமூகத்திடையே எடுத்துச் செல்லுகின்றனர். ஜனநாயகத்தின் அனைத்துவிதமான பண்புக் கூறுகளையும் பாசிசம் அழிக்கும் போது, மக்கள் நீதியின் பாலான நம்பிக்கையை முற்றாக இழிந்துவிடுகின்றனர். சமூகத்தின் நீதி என்று எதுவும் இருப்பதில்லை. எல்லாவிதமான வழிகளிலும் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைப்பாடு, ஒரு பணக்காரக் கும்பலை அதிரடியாக உற்பத்தி செய்கின்றது. எப்படியும் வாழ முடியும் என்ற நிலையில், பாசிச கட்டமைப்புக்கு பணத்தை தாரை வார்ப்பதன் மூலம், தீடிர் பணக்கார கும்பல் ஒன்று உருவாகின்றது. நீதியான வாழ்வு மறுக்கப்படுகின்றது. மக்கள் நீதியின் பாலன நம்பிக்கைகளை இழந்து, எதையும் நியாயப்படுத்தும் நிலைக்கு சமூகத்தை இட்டுச் செல்லுகின்றது.

மக்கள் தாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை அறியாத இருட்டில் தள்ளிவிடுவதும், தாம் எப்படி இனி வாழப் போகின்றோம் என்பதை தெரியாத சூனியத்திலும், பாசிசம் செழித்தொங்குகின்றது. இது ஒட்டு மொத்தமாகவே ஜனநாயகத்தின் குரல் வலையை வெட்டிச் சாய்க்கின்றது. இதன் முதல் படியாக பாசிசம் ஆட்சியை கைப்பற்ற அரசை எதிர்க்கும் அதே நேரம், மற்றைய கட்சிகளையும் ஈவிரக்கமற்ற சமரசமற்ற அழித்தொழிப்பை நடத்துவதன் மூலம் தன்னை துய்மையானதாக நிலை நாட்டமுனைகின்றது. அழித்தொழிப்பு சமூக இருப்பின் அடிப்படையான, சமூகக் கோட்பாடாக பாசிசம் முன்தள்ளுகின்றது. எங்கும் எதிலும் அழித்தொழிப்பு மையக் கோசமாக, பாசிச அமைப்பின் நீடிப்பிற்கான உயிராகவும் மாறிவிடுகின்றது. இந்த அழித்தொழிப்பு இல்லாத எந்த நிலையிலும், பாசிச இயக்கத்தின் இருப்பு நீடிக்க முடியாது என்ற நிலை படிப்படியாக உருவாகிவிடுகின்றது. இது தன்னை மூடிமறைக்க கட்டுப்பாடற்ற இனவெறி பிடித்த, ஆதிக்க வெறி பிடித்த யுத்தத்தை முன் தள்ளுகின்றது. எதிரியை ஏன் நாம் எதிர்கின்றோம் என்ற அடிப்படையான அரசியல் காரணத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, இனவெறி பிடித்த ஆதிக்க வெறி பிடித்த யுத்தத்தை ஆணையில் வைக்கின்றனர். மக்களின் அடிப்படையான அரசியல் அபிலாசைகளை மறுத்து நிற்கும் பாசிசம், மாறக மற்றைய மக்கள் கூட்டம் மீதான ஆதிக்க வெறியை அரசியலாக்கிவிடுகின்றனர். இதன் மூலம் தன்னைப் பலப்படுத்தவும் நீடிக்கவும் கடிவாளம் இடுகின்றனர்.

தனது பாசிச கட்டமைப்பை நீடிக்கவும், நிலைக்கவும் சலுகைகளை ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. ஒரு லும்பன் கூட்டத்தை உருவாக்கி, சமூக இயக்கத்தை கண்காணிக்கும் வடிவில் கட்டமைக்கின்றது. பாசிசம் தன்னைச் சுற்றி தனது கட்டமைப்பில் தன்னுடன் இனைந்து நிற்பவனுக்கே சலுகைகளை வாரி வழங்குகின்றது. இதைச் சுற்றி பெரும்பாலன மக்கள் தம்மையும், தமது தேவையையும் பூர்த்தி செய்வது நிகழ்கின்றது. எதைச் செய்தாலும் பாசிசத்தை நியாப்படுத்துவது ஒரு நிபந்தனையாக மாறிவிடுகின்றது. இது அடிப்படையில் நியாயப்படுத்துவதை கடமையாகவும், அடிப்படையான தேசியக் கொள்கையாகவும் மாற்றி விடுகின்றது. மக்களின் மந்தைத் தனத்தை இதற்கு சாதகமாக்கிவிடுகின்றது. தன்னைச் சுற்றி பொறுக்கி வாழும் லும்பன் கும்பலை அடிப்படையாக கொண்டு, பாசிசத்தைக் கட்டமைப்பதுடன், மக்களை கண்காணிக்கும் அமைப்பாக மாற்றுகின்றது.

அத்துடன் பாசிசம் தனது கட்டுப்பாட்டு பிரதேசம் தொடங்கி மற்றைய பிரதேசங்கள் எங்கும் தகவல் மீடியாக்களை, தனது பாசிச பிரச்சார வடிவமாக்கிவிடுகின்றது. பத்திரிகைகள் பாசிசத்தின் துண்களாகி விடுகின்றது. பத்திரிகை அமைப்பு பாசிசத்தை நியாயப்படுத்தும் பினாமியத்தை, தனது சுதந்திரமான வெளிப்பாடாக பீற்றுவது பாசிச பண்பாகி விடுகின்றது. முற்றாக மாற்று கருத்து தளத்தை இல்லாத்தாக்கின்றது. மக்கள் முரண்பாட்டின் அடிப்படையில் சிந்திக்க துண்டும் மாற்றுக் கருத்துகள் முற்றாக இல்லாது ஒழிக்கின்றது. பாசிசத்தை நியாயப்படுத்தும் செய்திகளும், சமூக கண்ணோட்டமும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றது. இதற்கு அப்பால் உள்ளவைகளை முற்றாக பாசிசம் அழிக்கின்றது. எங்கும் எதிலும் பாசிசம் குடிகொள்கின்றது. இந்த கட்டமைப்பு பொறுக்கி வாழும் லும்பன் கும்பல் ஒன்றால் சீராகவும் ஒழுங்கவும் நிர்வாகிகப்படுகின்றது. இது இயன்ற எல்லை வரை பொறுக்கி வாழும், தனது சமூக அடிப்படைக்கு தேவையான நிதியை மக்களிடம் இருந்து பகற் கொள்ளை அடிக்கின்றது. சமூகத்தை சுரண்டும் மூலதனத்துக்கு வாலாட்டி நக்கும் இந்த பாசிசக் கும்பல், மக்களை நிறுவன ரீதியாகவே சுரண்டுவதில் தன்னை ஒழுங்கமைக்கின்றது. எங்கும் எதிலும் சுரண்டலை அடிப்படையான கட்டமைப்பாக மாற்றிவிடுகின்றது. செல்வத்தை திரட்டும் போக்கு அதிகரிக்கும் போது, பாசிசம் அதன் வளர்ச்சி படியில் எகிறிச் செல்லுகின்றது. பணத்தின் திரட்டல் உயர்ச்சியடைகின்ற போது, அதை சார்ந்து பொறுக்கி வாழும் ஒரு கும்பலும் வளர்ச்சி உறுகின்றது. இது பாசிச சிந்தாந்தத்தால் தன்னை ஒழுங்கமைத்து ஒரு சமூக நிறுவானமாக மாகின்றது.

பாசிசம் மக்கள் மேல் ஒரு பயங்கரவாதத்தை கட்டமைத்து தொடரான அச்சுறுத்தல் மேல் தன்னை நிலைநிறுத்தி நீடிக்கின்றது. எங்கும் எதிலும் மிரட்டல் அடிப்படையிலான சமூக ஒழுங்கை முன்வைக்கின்றது. பயங்கரவாதம் என்பது சமூக உட் கூறில் உயிருள்ள ஒரு பிண்டமாகவே தொடருகின்றது. இது வரைமுறையற்ற அச்சுறுத்தலை நிலைநிறுத்துகின்றது. இந்த பயங்கரவாதத்தின் நீடித்த நிலைத்த தன்மையை, செயல் உள்ள இயக்கமாக மாற்ற, தனக்கேயுரிய லும்பன் கும்பலை சமூகத்தில் இருந்து எப்போதும் சரியாக இனம் கண்டு கொண்டு அணிதிரட்டுகின்றது. பாசிசம் தன்னையும் தனது கட்டமைப்பையும் பாதுகாக்க, சமூக உழைப்புடன் ஈடுபடாத இளம் வயதினரை அதிகம் சாhந்து நிற்கின்றது. மாற்றுக் கருத்து எதையும் தெரிந்த கொள்ளாத மந்தைச் சமூகத்தை இதற்க ஆதாரமாகவும் அடிப்படையாகவும் கொள்கின்றது. இளம் வயது சிறுவர் சிறுமிகளின் அடித்தளத்தில் பாசிசம் தன்னை உறுதியாக கால் உறுகின்றது. உழைப்பு பற்றி தெரிந்தே இராத இந்த சிறுவர்கள் சிறுமிகள், உழைப்பாவனின் உழைப்பை சூறையாடுவதில் தலை சிறந்த கொள்ளைக்காராக மாறிவிடுகின்றனர். உழைப்பவனை இழிவாக கருதும் சமூக அடிப்படையை சுவீகரிக்கும் இந்த லும்பன்கள், உழைப்பனை எப்படியும் நடத்தும் பண்பாடு உயிருள்ளதாகவிடுகின்றது. பாசிசக் கட்டமைப்பில் சமூக இழிவே உழைப்பவனை அலங்கரிக்கின்றது. உழைப்பனை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கூட பாசிசம் கருத மறுக்கின்றது. சமூக உறவுகளைக் கூட பாசிசம் உழைப்பவனிடம் இருந்து எட்டி உதைக்கின்றது. உழைப்பவனிடம் பொறுக்கி வாழ்வதும், சூறையாடி வாழ்வதும் இந்த சிறுவர்களுக்கு களிப்ப+ட்டக் கூடிய ஒரு வக்கிரமான கவர்ச்சிகரமான பொழுபோக்காக மாறிவிடுகின்றது. அதிக செல்வத்தை திரட்டிக் கொடுப்பதன் மூலம், நம்பகத் தன்மையை பாசிசம் அவர்களுக்கு பரிசளிக்கின்றது.

மக்களை பாசிச ஒழுங்கமைப்பில் நீடிக்க வைக்கவும், அதற்குள் சிந்திக்க வைக்கவும், செயற்iகான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கின்றனர். பாசிசம் சமுதாயத்தில் வறுமையை செயற்கையாக உருவாக்கிவிடுகின்றது. உணவுக்கு வழியற்று கையேந்தும் நிலையை உருவாக்கி, எழைக் குழந்தைகளை உள் வாங்குகின்றது. தாய் தந்தைகளை எதிரியிடமும், சொந்த பாசிச கட்டமைபிலும் கொன்று விட்ட நிலையில், அநாதைகளாகும் அப்பாவிக் குழந்தைகளை பாசிசம் அபகரிக்கின்றது. இந்த குழந்தைகள் பாசிசத்தின் நிலையான துண்களாக மாற்றிவிடுகின்றனர். பாசிசம் கட்டமைப்பின் ஆரம்ப வடிவங்கள், எப்போதும் அராஜாகத்தை ஆதாரமாக அடிப்படையாகவும் கொள்கின்றது. எந்த சட்ட ஒழுங்கையும், அது தனக்கு தானே மறுக்கின்றது. மக்கள் மேல் கடுமையான அராஜக  ஒடுக்குமுறையை வரைமுறையின்றி கையாளுகின்றது. தனது பாசிச சட்டத்தில் இருந்து சொந்த அணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கின்றது. இந்த அராஜக லும்பன் கும்பலின் சித்தாந்த செயல்பாடுகள் ஆரம்பத்தில், இருக்கும் எந்த சமூக அமைப்புக்கு உட்பட்டவை அல்ல. சலுகையுடன் கூடிய பாசிச அமைப்பு, மக்களுக்கு எதிராக எதையும் எப்படியும் கையாளும் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டது. மக்களை நாயிலும் கீழானவர்களாக இழிவுபடுத்துகின்றனர்.

இந்த லும்பன் பாசிசக் கும்பல் தமக்கு இடையில் உட்கட்சி ஜனநாயகத்தை முற்றாக மறுதளிக்கின்றது. இங்கு அதிகாரத்தின் வடிவம் சார்ந்து, இராணுவ ஒழுங்கமைப்பை அரசியல் வடிவமாக்கின்றது. ஆயுதத்தை அரசியலில்; ஆணையாக்கி அதை வடிவமைக்கின்றது. இயக்கத்தின் கட்டமைப்பு இராணுவ வாதம் சார்ந்த ஒன்றாக நீடிக்கின்றது. இங்கு துப்பாக்கி குண்டுகளை ஆணையில் வைக்கின்றது. எந்த சட்ட ஒழுங்கும் உட்படாத இயக்க உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக செயல்படுவது மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. மற்றைய எல்லா நிலையிலும் எதையும் எப்படியும் செய்து கொள்ள அனுமதிக்கின்றது. சொந்த அணி உள்ளிட வெளியில் தமது பாசிச கட்டமைப்பை நியாயப்படுத்தக் கூடிய அணியை விலைக்கு வாங்குகின்றது. இதற்கு அடிப்படையாக போலியான பராட்டு நிகழ்ச்சிகளை பாசிசம் கட்டமைக்கின்றது. எங்கும் எப்போதும் பொய்யும் புரட்டும், கவர்ச்சியும், போலிப் பராட்டுகளும் பாசிசத்தின் ஒழுங்கு அமைப்புக்கும்;, அதன் நீடிப்புக்கும் ஆதாரமான அடிப்படையான நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

சமூகத்தை கட்டுப்படுத்தவும், அடக்கி ஆளவும் தனது அதிகாரத்தை உயர்ந்த பட்சமாhக ஆணையில் வைக்கின்றது. பாசிசம் அதிகாரத்தை தலைக்கு மேல் உயரமாகவே குவித்துவிடுகின்றது. இதன் மூலம் தனது வர்க்க தன்மையை கதம்பக் கோட்பாட்டில் இருந்து, தெளிவாக பெரும் மூலதனத்தின் நலன்களை வெளிப்படுத்த தொடங்குகின்றது. இதன் மூலம் ஒட்ட மொத்தமாக தன்னை ஒரு சீரான கோட்பாட்டு ரீதியான நடைமுறை சார்ந்த அமைப்பாக காட்ட முனைகின்றது. இது குட்டிப+ர்சுவா வர்க்க நலனை பூர்த்தி செய்யும் தகுதி தனக்கு உண்டு என்று நிறுவ முனைகின்றது. ஆனால் இது கானல் நீராகவே எப்போதும் உள்ளதை நடைமுறை அனுபவம் இலகுவாக அம்பலப்படுத்தி விடுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களையும் அனுசாரித்த செல்லும் போக்கு சார்ந்த எந்தக் கோட்பாடும் பாசிசத்திடம் இருப்பதில்லை என்பது அம்பலமாகத் தொடங்கிவிடுகின்றது.

தன்னை முடிமறைத்துக் கொள்ள, பாசிசம் சுரண்டும் வர்க்க பிரதிகளுக்கிடையில் பகைமையை களைந்து ஒரே குடையின் கொண்டு வர முயலும் போதும், உண்மையில் ஆழமான பகைமையே அதிகரிக்கின்றது. இது இடைவிடாது முரண்பாட்டை உற்பத்தி செய்கின்றது. இது இடைவிடாத ஆயுதம் எந்திய தனிக் குழுக்களை உருவாக்கின்றது. லும்பன் வாழ்வின் கட்டுப்பாடற்ற சமூகப் போக்கு, தவிர்க்க முடியமால் லும்பன் கண்ணோட்டம் சார்ந்த குழுக்களை, சமூக முரண்பாடுகள் சார்ந்து தொடர்ச்சியாக உற்பத்தி செய்கின்றது. இது ஆயுதம் எந்திய எல்லை வரை விரிகின்றது. இது எதிரிக்கு நல்ல வாய்பை வழங்குகின்றது. வர்க்க அமைப்பாக சமூகச் சுரண்டல் உள்ளதால், எத்தனை கட்சிகளையும் குழுக்களையும் அழித்தாலும் அவை புத்துயிர் பெறுகின்றது. வர்க்க முரண்பாடுகள் தவிர்க்க முடியாது மாற்றுக் கருத்துக்கான இயங்கியல் போக்காக்கின்றது. மக்கள் விரோத முரண்பாடுகளும், யுத்தமும் இன்றி பாசிசம் நீடிக்க முடியாத ஒரு நிலையை அடையும் போது, இவை திட்டமிட்டு உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக முனைப்புக் கொள்கின்றது. பாசிசம் யுத்தத்ததை அடிப்படையாகவும், அடித்தளமாகவும் கொண்டு செயல்படுவதால், தேசிய பொரளாதாரத்தை அழித்து முற்றாக நாசமாக்கின்றது. இது இன்றைய உலகநிலையில், மீள முடியாத அடிமைத்தனத்தை சமூகக் கூறாக்கி விடுகின்றது. தேசங் கடந்த பன்நாட்டு நிறுவனங்களின் உடுருவலை, பாசிசம் தனக்கு சாதகமாக வளைத்துப் போடுகின்றது. அவர்களின் கைக்கூலிகளாக தம்மை தகவமைத்து அதுவாகிவிடுகின்றனர். ஏகாதிபத்தியம் ஆழமாக சமூகத்தில் உடுருவவும், தேசியப் பண்புகளை உட்செரித்து அழிக்கவும்;, பாசிசம் இயன்றவரை தன்னை தனது நடவடிக்கைளால் தகவமைக்கின்றது.

பாசிச கட்டமைப்பில் இருந்து மக்கள் மீட்டு எடுப்பது என்பது மிகவும் கடினமானதும், நுட்பமானதுமாகும். பாசிசம் பற்றிய தவறான மதிப்பீடு குட்டிபூர்சுவா வர்க்கத்தின் மத்தியில் ஊசலாட்டத்தையும், சோர்வை சீதனமாக்கின்றது. செயலற்ற தன்மைக்கு அடிக்கால் போடுகின்றது. பாசிசம் பற்றிய தவறான மதிப்பீடுகள் எப்போதும், பாசிசத்துடன் சமரசம் செய்யும் அடிப்படைக் கண்ணோட்டத்தில் இருந்து பிறக்கின்றது. இது பரஸ்பரம் தகவமைவதால், பாசிசம் அல்லாத சக்திகளின் சோரம் போதல் வீச்சாக தொடரும். தளத்தில் ஒரு எதிரி இருக்கும் பட்சத்தில், அவனுடன் சேர்ந்து நிற்பதன் மூலமும் சீராழிவு சமாந்தரமாக கட்டமைக்கப்படுகின்றது. பாசிசத்தை வெல்ல முடியாத ஒன்றாகவும் கூட குட்டிபூர்சுவா மனபாங்கு கட்டமைக்கின்றது. பாசிசத்தின் பயங்காரவாதத்தால் பீதியுற்ற பிரமைகள், எங்கும் எதிலும் புகுந்துவிடுகின்றது. சமூக இயக்கமே பீதியில் உறைந்து போகின்றது. பாசிசம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட உருவாக்கும் அடிப்படையான அரசியல் நிலைப்பாடு எப்போதும், சமூகம் செயலற்ற பீதியில் தத்தளிப்பதை உறுதி செய்கின்றது. இதை வெற்றிகரமாக உருவாக்கிவிடும் போது, பாசிசம் வெற்றி பெற்றுவிடுகின்றது. பாசிசம் பற்றி தவறான சித்தரிப்பு விதைக்கப்பட்ட நிலையில், செயலற்ற தன்மைக்கு அடிகால் இடப்படுகின்றது. பாசிசத்துக்கு எதிரான அரசியல் உணர்வுள்ள கட்டமைப்பின் அவசியம் நிராகரிப்பதில் இருந்தே, பொதுவான மாற்றுச் சிந்தனைத் தளம் தன்னை தகவமைக்கின்றது. இதன் மூலம் பாசித்துடன் அக்கம்பக்கமாக கூடி வாழ்ந்து விட முடியும் என்ற நம்புகின்றது.

பாசிசத்தை எதிர் கொண்டு போராடுவதற்கு எதிர்நிச்சல் அவசியமானது, நிபந்தனையானது. பாசிசத்தின் பொதுச் சூழலில் அவற்றை எதிர்கொள்ள, பாசிசத்துக்கும் மக்களுக்கும் இடையிலான அடிப்படை சமூகத் தேவைகளை இனம் பிரித்து அதை அகலப்படுத்த வேண்டும். பாசிசத்தின் மக்கள் விரோத முரண்பாடுகளை அகலமாக்க வேண்டும். பாசிச அழித்தொழிப்பு சமூக நடைமுறையாகவே உள்ள நிலையில், பாசிசத்தின் பிராதன முரண்படாக காட்டும் அடிப்படை முரண்பாட்டில் மக்கள் நலன்களை உயர்த்தி அதை பாசித்துக்கு எதிராக மாற்றவேண்டும். அதாவது மக்களுக்கு ஒரு எதிரி இருக்கும் பட்சத்தில், அந்த எதிரி பாசிசத்தின் எதிரியாகவும் இருக்கும் பட்சத்தில், மக்களின் அடிப்படை நலனில் இருந்த பாசிசத்தின் நலனை பிரித்து முரண்பாட்டை சமூக மயமாக்க வேண்டும். பாசிசத்தின் நலனும், பாசித்துக்கு உட்பட்டுள்ள மக்களின் நலனும் எப்போதும் எங்கும் ஒன்றாக இருப்பதில்லை.

பாசிசம் இருக்கின்ற சமூகக் கட்டமைப்பை தனக்கு இசைவாக தகவமைக்கின்றது. ஜனநாயகக் கோரிக்கை எதையும் இதற்குள் புகுத்த மறுக்கின்றது. இதை நாம் எப்போதும் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமானதாகும். இதில் இருந்தே பாசிசத்தை வேர் அறுக்கும் கண்ணியை நடவேண்டும். பாசிசத்துக்கு எதிரான எதிர்ப்பை, அரசியல் உணர்வுடன் செய்ய வைப்பது அனைத்தையும் விட முக்கியமானதும், முதன்மையானதுமாகும். இங்கு உணர்வு என்பது எப்போதும் தெளிவாக அரசியல் சார்ந்தாக இருக்க வேண்டும். எப்போதும் அரசியல் உணர்வற்ற செயல்பாடுகள், பாசிசத்தை செலுமையாக வளர்ப்பதாகவே மாறும். பாசிசத்துக்கு எதிராக தன்னிச்சையான மக்கள் போராட்டம் நடக்கும் போது, பாசிசத்தை சார்ந்து நிற்கும் சக்திகள் தடுமாறுவதையும், பாசிச கொள்கை மேலான சந்தேகம் அதிகமாக எப்போதும் கேள்விக்குள்ளாகின்றது. இதை எப்போதும் சாதகமாக கொண்டு, அகலப்படுத்த வேண்டும். பாசிசம் அதிகாரத்துக்கு வந்த பின்பு அழித்தொழிப்பு ஒரு பாசிச சமூக நடைமுறையாக உள்ள ஒரு நிலையில், அவர்களின்; செயல்பாடுகளுடன் நேரடியாக முட்டி மோதுவதன் மூலம் தனிமைப்படுதல், இனம் காணப்படுத்தல் அதிகாரிக்கும். மாறாக மக்களின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புடையதும் பாசிசத்துடனான முரண்பாட்டையும் மிக தெளிவாக அடையாளம் கண்டு, அதை அகலப்படுத்துவதன் மூலம் பாசிசக் கட்டமைப்பில் விரிச்சலை உருவாக்க முடியும்;.

பாசிச கட்டமைப்பில் முரண்பாடு கொண்ட மக்கள் கூட்டம், புரட்சிகரமான மாற்று அடிப்படை இன்றி தம்மை ஒரு நாளும் தாமாக வெளிப்படுத்த மாட்டார்கள். பாசிசத்துடன் தம்மை இனைத்துக் கொண்டுள்ளதாக நடிப்பர். இதை நாம் தெளிவாக புரிந்த கொண்டு, அரசியல் ரீதியாக இதை அணுக வேண்டும். மக்கள் கூட்டம் பாசிசத்தை புகழும் போது, அங்கு பாசிசக் கட்டமைப்பு உருவாக்கி விட்ட போலியான புகழ்ச்சியான அதை கண்ணோட்டத்தில் தான் பாசிசத்தையும் அணுகுகின்றனர். இங்கு தம்மைத் தாமாக வெளிப்படுத்தி இனம் காட்டமாட்டார்கள். கடுமையான கண்காணிப்புடன் கூடிய பாசிச கட்டமைப்பில், மக்கள் அப்படித் தான் இருப்பார்கள்; எங்கும் ஒரு மயான அமைதியுடன் கூடிய மௌனம் நீடிக்கும். இதை நாம் நிச்சயமாக புரிந்து கொள்வது அவசியமானது, அடிப்படையானது.

இதை புரிந்து கொள்ளாத செயலற்ற தன்மையில் இருந்த, பிதற்றுவதால் எதுவும் நடக்காது. இந்த நிலையிலும் மோதல்களும் முரண்பாடுகளும் பாசிச அமைப்புகளில் எற்படுவது தவிர்க்கமுடியாது. ஆனால் பாசிசம் தனது சொந்த முரண்பாட்டால் ஒரு நாளும் தானாக சிதைந்துவிடுவதில்லை. எனெனின் அதன் கட்டமைப்பு பாசிச வழிகளில் உருவானதால், தனது சொந்த முரண்பாடுகளை அதே வழியில் எதிர் கொள்ளும் திரணை அது கொண்டுள்ளது. இலகுவாகவே, அதை இயல்பான பாசிச வழிகளில் இல்லாதாக்கிவிடுகின்றது. இங்கு எந்த கூச்சலும், அதிர்வும் நடப்பதில்லை. சமூக முரண்பாடுகள் தானாக ஒடுக்கு முறையை தீர்க்கும் என்ற கற்பனை போலியானது. அதே போல் அவர்களின் ஆதிகத்தில் உள்ள மக்கள், ஒரே நாளில் பாசித்துக்கு எதிராக வந்துவிட மட்டார்கள். மாற்று அரசியல் வழி சரியாக பாசிசக் கட்டமைப்புக்குள் ஊடுருவி பிளக்காத வரை, மக்கள் கூட்டம் பாசிசத்துக்கு எதிராக சுட்டு விரலைக் கூடா நீட்டாது. மாறாக தன்னை அதனுடன் இணைந்து இருப்பதாக பாசங்கு செய்தும்;, போலியான புகழ்ச்சிகளை அள்ளி வழங்கும். இது மக்கள் தமது இருப்பிற்கான ஒரு வழியாக காண்கின்றனர்.

பாசிசத்தில் எற்படும் முரண்பாட்டை அகலப்படுத்த வேண்டும். இது பாசிச அமைப்பின் உள் கட்டமைப்பில், மக்கள் சார்ந்த அன்றாட வாழ்வியல் அடிப்படை விடையத்தில் உருவாக்கப்பட வேண்டும். பாசிச அரசு இயந்திரம் வர்க்க உறவுகளில் இருந்து கட்டமைக்கப்படுகின்றது என்பதை புரிந்து கொண்டால், பாசிசம் நிரந்தரமானதோ, நிலையானதோ, நீடிக்ககூடியவையோ அல்ல என்பதை புரிந்து கொள்ளமுடியும். வர்க்க உறவுகள் பாசிச கட்டமைப்பில் எப்போதும் எதிர்மறையில் முரண்பாட்டை தோற்றுவித்த வண்ணமே இருக்கும். இதை சரியாகவும், நுட்பமாகவும் புரிந்து கொண்டு பிளவுகளை ஆழமாக்க வேண்டும். பாசிசத்தைச் சுற்றி ஒழுங்கமைக்கபட்ட நபர்கள் எப்போதும், இந்த வர்க்க உறவுகளில் இருந்து விலகியிருப்பவர்கள் அல்ல. அதற்குள் தான் இருப்பதால், மக்கள் நலன்களை முன்நிறுத்துவதன் மூலம், பாசிச கட்டமைப்பிலும் வெடிப்புகளையும் எற்படுத்த முடியும். பாசித்தின் மேல் உள்ள முரண்பாட்டை சரியாக பிளப்பதன் மூலம், பாசிசத்துக்கு எதிராக செயல்படுவதை அத்தியவசியமாகும்.

பாசிசத்தின் இந்த சமூக அடிப்படை புலிகளுக்கும் அப்பட்டமாக அப்படியே ஒவ்வொரு விடையத்திலும்  பொருந்தும். இதை சிலர் மறுக்கின்றனர். குட்டிபூர்சுவா வர்க்கதின் ஜனநாயக இயக்கமாக புலிகள் உள்ளனர் என்பது முற்றாகவே தவறானது. குட்டிபூர்சுவா வர்க்கதின் பிரதிநிதியாக புலிகள் இருந்தாலும், புலிகளின் அரசியல் நோக்கம் இதுவல்ல. இது கூட பாசிசத்தின் முக்கியமான அடிப்படைப் பண்பாகும்;. புலிகள் இன்றும் குட்டி+ர்சுவா அடித்தளத்தில் இருந்தே ஆட்களை கவர்ந்த இழுக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் ஜனநாயகப் புரட்சியை, புலிகள் ஒரு துளி தன்னும் தனது அரசியலாக வரிந்த கொள்ளவில்லை. மாறாக இருக்கும் தரகுமுதாலளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில், பூர்சுவா ஜனநாயக பண்பியலின் கூறுகளைக் கூட ஒழித்துக் கட்டயுள்ளனர். இதன் முன்னைய நிலைக்கு கூட, புலிகளால் மீள மீட்க முடியாது. இது பொருளாதார கட்டமைப்பில் கூட இதுவே நிகழ்கின்றது. தேசிய உற்பத்தியை முற்றாக ஒழித்துக் கட்டினர். தேசிய வளங்களை ஏகாதிபத்தியத்திடம் தரைவார்த்தனர். இதை பொதுவான சமூக கட்டமைப்பில் செய்துவிட முடியாது என்பது, அனைவரும் நன்கு அறிந்ததே. பாசிச சமூக கட்டமைப்பு மூலம் தான் அனைத்தும் நிறைவு செய்யப்படுகின்றது. இதை புலிகள் எப்படி சாதித்தனர். குறுந் தேசிய பாசிச வெறியை முன்தள்ளி, குறுந் தேசிய யுத்தம் பற்றி பீற்றிக் கொண்டே, முற்று முழுதாகவே தேசிய வளங்களையும், அதன் ஜனநாயக கூறகள் எல்லாம் அழித்துவிடுகின்றனர்.

பாசிசத்தை அடிப்படையாக கொண்ட நாசிகளின் தலைவரான கிட்லரின் தோழரான முக்கிய கிழட்டு நாய் கோயரிங், மக்களின் அடிப்படை உரிமைகளை எப்படி பறிப்பது என்பதை வழிகாட்டினான்; அவன் அதை அழகாகவே ~~தலைவர்கள் தாம் விரும்பியபடியெல்லாம் மக்களை ஆட்டுவிக்கமுடியும்... நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நாம் தாக்கப்படுகிறோம் என்ற சொல்லுங்கள். சமாதானம் பேசுபவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றும், நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும் தூற்றுங்கள். இந்தச் சூத்திரம் எந்த நாட்டிலும் வேலை செய்யும்|| என்றான். இது புலிகளுக்கு மட்டுமல்ல, இந்தியா இந்து பாசிட்டுகளுக்கும், சியோனிச இஸ்ரேலுக்கும், ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் கூட பொருந்தும். இதைத் தான் இவர்கள் தத்தம் அரசியல் ஆணையில் எப்போதும் வைக்கின்றனர்.

பி.இரயாகரன்

தொடரும்

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01) 

 

Last Updated on Sunday, 25 July 2010 08:35