Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)

சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)

  • PDF

சமஸ்கிருதம் வேதகால ஆரிய சடங்குகளை செய்யக் கூடியவர்களின் மொழியாகியது. ஆரிய வழிவந்த பூசாரிப் பிரிவுகள் சமூகத்தில் சிதைந்த போதும், சமுதாயத்தில் சுரண்டும் சமூக அமைப்பின் தேவையுடன் உருவான மதங்கள் ஆரிய பூசாரிகளுக்கு புத்துயிர் அளித்தது. தம் பூசாரித் தன்மையூடாக, தனிச்சலுகை பெற்றவராக மாறினர். இந்தியச் சமூக அமைப்பில் அவர்கள் ஒரு சலுகைக்குரிய சுரண்டும் வர்க்கமாக, தனிச் சலுகையுடன் நீடிக்கத் தொடங்கினர். தனிச்சொத்துரிமை அமைப்பில் தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், இதற்கு மூலமாக இருந்த மந்திரத்தை இரகசியமாக பேணவும் முனைந்தனர். தமது பழைய மொழியின் சிதைவில் இருந்தும், அவர்கள் சிதைந்து வாழ்ந்த புதிய மொழியில் இருந்தும் உருவாக்கிய ஒரு மந்திர மொழியான சமஸ்கிருதத்தை, பார்ப்பனர் சுரண்டி வாழ உதவியதால் அதை இரகசியமாக்கினர். அதை தமக்குள், தம் சாதிக்குள் தக்கவைத்தனர். இந்த மொழி தான் சமஸ்கிருதம்.

இதை அவர்கள் தமக்கும், கடவுளுக்கும் மட்டும் தெரிந்த ஒரு மொழியாகக் கூறிக்கொண்டனர். கடவுளுடன் நேரடியாக தொடர்புகொள்ளக் கூடியவர்களின் மொழியாக்கினர். இதை இரகசியமான மந்திர மொழியாகப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள் மட்டும்தான், கடவுளுடன் பேச முடியும் என்ற நம்பிக்கையைக் கட்டமைத்தனர். மறுபக்கத்தில் தாம் அல்லாத மற்றவர்கள், இதைக் கற்பதைத் தடைசெய்தனர்.

இதன் மூலம் தனிச் சலுகையுடன், தாம் மட்டும், சுரண்டி வாழ இம்மொழி அவர்களுக்கு உதவியது. இன்றும் உதவுகின்றது. இதனால் இது கடவுளின் மொழியாக, இது ஒரு குறித்த சாதியின் இரகசியமான பிழைப்பு மொழியாகியது. இந்த மொழி மேலான பரம்பரை உரிமையும், தொழில் சார்ந்த இரகசியமும் தான், வருண அமைப்பின் ஊடாக சாதி வடிவில் இறுகியது.

இதனால் இது பரந்துபட்ட மக்களின் பொது மொழியாக என்றும் மாற முடியவில்லை. இது கீழ் இருந்து உருவாகவில்லை. மேல் இருந்தவர்களின் தேவைக்கு ஏற்ப உருவானது. இதனால் இதைக் கொண்டு சுரண்டி வாழ்ந்த பார்ப்பன பூசாரிகள், இதை மற்றவர்கள் கற்பதை அனுமதிக்கவில்லை. சமஸ்கிருத மொழியிலான பார்ப்பனிய இலக்கியங்கள் உருவான காலத்தின் பின் கூட, எத்தனையோ மொழிகள் சமுதாயத்தில் உருவாகின. அவை வளர்ச்சியுற்றன. ஆனால் உயர் சுரண்டும் வர்க்கத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த, செல்வாக்கு பெற்றிருந்த இந்த சமஸ்கிருத மொழி மட்டும், சமுதாய மொழியாக மாற பார்ப்பனர்கள் என்றும் அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் கற்பதையே, கடவுள் குற்றமாகத் தடை செய்தனர். ஏன் என்றால், இந்த மொழி மக்களை ஏமாற்றவும், சுரண்டி வாழவும் உதவியதுடன், மற்றவர்களை அடக்கியாள இந்த மொழி தான் அவர்களுக்கு உதவியது.

எல்லாம் கடவுள் என்ற சமுதாயத்தில், இவர்கள் அல்லாத மற்றவர்கள் நேரடியாக கடவுளை அணுக முடியாதபடி, இந்த மந்திர மொழி மூலமும் தடை செய்தனர். இப்படி பார்ப்பனன் தன்னை கடவுளின் ஒரு இடைத்தரகனாக்கிக் கொண்டு, அதற்கு ஏற்ற ஒரு மொழியாக சமஸ்கிருதத்தை உருவாக்கினான். இதை மற்றவர்கள் கற்பதற்கு தடைவிதித்தனர். இதன் மூலம் சுரண்டத் தெரிந்த தன்னை, பல்வேறு தடைகள் மூலம் ஒரு பார்ப்பனச் சாதியாக நிறுவிக்கொண்டான்;. இதற்கு உதவிய தமது மந்திரமொழியையும், தமக்குள் இரகசியமாக பாதுகாத்துக் கொண்டான்.

பார்ப்பனரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுத்தல் என்பது, அதிகார வர்க்கத்துக்கு (ஆளும் உயர் சாதிக்கு) மட்டுமாக இருந்தது. இது தமது பார்ப்பனிய சாதிய அறநெறிகளை கற்றுக் கொடுக்கவும், பார்ப்பனிய இலக்கியத்தை ஆளும் வர்க்கம் கற்று அதன்படி தமக்காக ஒழுகவும், இந்த மொழி பார்ப்பனரல்லாத ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு பார்ப்பனரால் கற்பிக்கப்பட்டது. இதற்கு வெளியில், இதைக் கேட்கும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றக் கோரியது. அதாவது உழைத்து வாழ்பவனும், மற்றவனுக்காக உழைப்பவனும் கற்கக் கூடாது என்றனர்.

இந்த மொழி கற்பது, வருண அமைப்பில் தடைக்குள்ளாகவில்லை. வருண அமைப்பில் இந்த மொழி அறிவுத்துறையின் மொழியாக, இலக்கிய மொழியாக, மத மொழியாக காணப்பட்டது. மக்கள் மொழி வேறாக இருந்தது. அதேநேரம் அன்று அறிவும் இலக்கியமும், மதம் சார்ந்தே இருந்தது. பல மதங்களின் தோற்றத்துக்கு முன்னும் பின்னும், சமஸ்கிருத்தில் இருந்த மத இலக்கியத்தை கற்றல், அதை மறுத்தல், புதிய தர்க்கங்களை முன்வைத்தல், இந்த சமஸ்கிருத்தில் நடந்தது. மதப் பிளவுகள், பிரிவுகள் பார்ப்பனருக்கு இடையிலும் நடத்தது. பல ஆரிய வழிப் பார்ப்பனர்கள், புதிய மதத்துக்கு சென்று மீள் கலப்புக்கு உள்ளாகினர். அவர்கள் சமூதாயத்தில் இனம் தெரியாது கலந்து போனார்கள். பார்ப்பன சிதைவும், மதங்களின் தோற்றமும், சமஸ்கிருதத்தின் எல்லையை பல மதங்களின் எல்லைவரை விரிவாக்கியது. இதனால் இந்த மொழி மதம் சார்ந்தும், மத மறுப்பு சார்ந்தும், அறிவுத்துறையினரிடையே வளர்ச்சியுற்றது.

ஆனால் சாதியத்தின் தோற்றத்துடன், அந்த மொழியின் வளர்ச்சி முற்றுப்பெற்றது. ஒரு பிழைக்கும் சுரண்டல் மொழியாக, சாதிமொழியாக அது குறுகிப்போனது. சாதியத்தை எது தோற்றுவித்ததோ, அதே காரணமே இந்த மொழியை குறித்த சாதியின் மொழியாக்கியது.

சமஸ்கிருதத்தின் தோற்றம், ஆரிய சிதைவின் விளைவாகும்
 
சமஸ்கிருத மொழியின் வரலாறு என்பது, பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட ஒரு மொழியாகவே இன்றுவரை உள்ளது. இப்படித் தான் இந்த மொழியின் வரலாறு, அடையாளம் காட்டி நிற்கின்றது. இதை அவர்கள் கடவுளின் மொழி என்று கூறிக்கொண்டனர். இம் மொழி பேசும் தம்மைத்தாம், கடவுளாக்கிக் கொண்டனர். சமஸ்கிருதம் மனிதர்கள் பேசும் மொழி அல்ல என்றனர். அத்துடன் தாமல்லாதவர் பேசுவதை தடுத்து நிறுத்தினர். இப்படி இந்த மொழி, குறுகிய பிரிவின் சாதி மொழியாகியது.

மறுபக்கத்தில் சமஸ்கிருத மொழித் தோற்றம் எதைக் காட்டுகின்றது. இவர்களின் வேத-ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, அதை இழந்து போகும் அளவுக்கு ஆரியர் சிதைந்து போனதைக் காட்டுகின்றது. இப்படி இந்திய சமுதாயத்திற்குள், ஆரிய சிதைவு நிகழ்ந்துள்ளதையே காட்டுகின்றது.

இந்த ஆரிய வேத மொழியின் சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் இரகசிய சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் மொத்த சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் வேத-ஆரியர், தமது சொந்த அடையாளமே இன்றி சிதைந்து போனார்கள். அவர்கள் ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற சுய அடையாளமே இன்றி, சமுதாயத்தினுள் அழிந்துபோனார்கள்.


தொடரும்

பி.இரயாகரன் 

6. உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06

5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05

4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01 

Last Updated on Sunday, 27 June 2010 09:13