Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

  • PDF

சாதிய தோற்றம் மீதான திரிபுகளும், அதன் அடிப்படைகளுமே, எங்கும் சாதி பற்றி அறிவாக உள்ளது.  சாதியம் எப்படி தோன்றியது? இதன் மீதான தர்க்கங்கள், வாதங்கள், முடிவுகள் பற்பல திரிபுகளாகவுள்ளது. இது பார்ப்பனியத்தின் அடிக்கட்டுமானத்தையே பாதுகாக்கின்றது. சாதிய மேல்கட்டுமானத்தை அசைப்பதன் மூலம், பார்ப்பனியத்தை தக்கவைக்கின்ற போக்கு ஆதிக்கம் பெற்று காணப்படுகின்றது. இப்படி சாதியம் தோற்றம் பற்றிய திரிபுகளின், மையமான அடிப்படையான எடுகோள்கள் எவை. 

1.இந்திய சமூக அமைப்பில் நிலவிய குலக்குழுக்கள் தான் சாதியாகின என்ற வாதங்கள்.

2.இந்தியாவில் இருந்த இனக் குழுக்கள் தான் சாதியாகின என்ற வாதங்கள்.

3.பரம்பரைத் தொழில்களும், புதிய தொழில்களும் தான் சாதியாகின என்ற வாதங்கள். 

4.நிலவிய அகமணங்கள் தான் சாதியாகியது. புறமண மறுப்பும் சாதியாகியது என்ற வாதங்கள்.

5.வருணம், வருண அமைப்பு சாதியாகியது என்ற வாதங்கள்.

6.பார்ப்பனர் தலையிடாத இந்தியாவின் சமூக பொருளாதார அமைப்புத் தான், சாதியாகியது என்ற வாதங்கள்.

7.கடவுள் தான் உடம்பின் வௌ;வேறு உறுப்பு வழியாக, வேறுபட்ட சாதி மனிதனை தோற்றுவித்தன் மூலம், சாதிகள் தோன்றின என்ற பார்ப்பனிய வாதங்கள்.

8.சாதி ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நிலவி வருகின்றது. இது தொன்மையானது, வரலாற்றுக்கு அப்பாற்பட்டது என்ற பார்ப்பனிய வாதங்கள்.

இப்படி முன்வைக்கப்படுகின்ற எடுகோள்கள் அனைத்தும், சாதியத்தை திரித்து, அதைப் பாதுகாக்கின்றது. இதில் பார்ப்பனிய எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதும், பார்ப்பனிய ஆதரவை அடிப்படையாக கொண்டதுமான இரண்டு எதிர்வாதங்களானது. இவ்விரண்டும் சாதிய தோற்றத்தை மேலெழுந்தவாரியாக திரித்தும், புரட்டியும் விளக்குகின்றது.

சாதியம் இதிலிருந்து, இவற்றில் இருந்து தோன்றியதல்ல. சாதியத்தின் தோற்றம், வர்க்க அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அடிப்படையான திரிபு தான் காரணமாகும். வர்க்க அமைப்பு திரிந்தபோது, அது சாதியாகத் திரிந்தது. இதை மேலும் ஆழமாகவே தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

குலக்குழுக்கள்;, இனங்கள், மொழிகள், தொழில்கள், வேறுபட்ட பண்பாடுகள், வருணம், அகமணங்கள், புறமணங்கள் என்று சமூதாயத்தில் நிலவிய ஒவ்வொரு சமூக முரண்பாடும் சாதிகளாகின. இவை சாதிக்குள் சாதியாக திரிந்தது. இவைகள் தான் பல ஆயிரம் சாதிகளாகியது. சாதியை ஏற்றுக்கொள்ளாத புறமணமும், புதிய தொழில்களும் உருவாக்கிய புதிய சாதிகளை விட, சாதியம் கோலோச்சிய சமூகத்தின் உள்ளான சமூக முரண்பாடுகள் தான், பல ஆயிரம் சாதிகளை உருவாக்கியது. 

இப்படி பல சாதிகள் தோன்றிய போதும் குலக்குழுக்கள்;, இனங்கள், மொழிகள், தொழில்கள், வருணம், வேறுபட்ட பண்பாடுகள், அகமணங்கள், புறமணங்கள் என்று எண்ணற்ற முரண்பாடுகளில் இருந்து, சாதி தோன்றவில்லை. ஆனால் இவை எல்லாம், முரண்பாடான தனிதனிச் சாதிகளாகின. அதாவது முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை. 

இந்த நுட்பமான வேறுபாட்டை புரிந்துகொள்ளாது, சாதியின் தோற்றத்தை இதனூடாக காண்கின்ற ஆய்வுகள், கருத்துகள் அனைத்தும் சாதியை பற்றிய அறிவை திரிப்புக்குள்ளாக்கியுள்ளது. அப்படியாயின் சாதியைத் தோற்றுவித்தது எது? மேலே குறிப்பால் கூறியதை, பின்னால் விரிவாக பார்க்கவுள்ளோம். 

சமூதாயத்தில் நிலவிய ஒவ்வொரு முரண்பாடும் சாதிகளாகின என்பதால், அது சாதியின் தோற்றுவாயல்ல. குறித்த முரண்பாடுகள், சாதியைத் தோற்றுவிக்கவில்லை. இந்த முரண்பாடுகள் உலகெங்கும் நிலவியதுதான்.

சாதிய சமூக அமைப்பில் பெரும்பாலான சமூக முரண்பாடுகள் பொதுவில் தனித்தனி சாதியாக இருப்பதால், அதை சாதியாக காட்டுகின்ற ஆய்வுகள், கருத்துகள் அனைத்தும் சாதி பற்றிய திரிபுகளாகும். ஏன் வருணம் கூட நேரடியாக சாதியாகவில்லை.

இவை அனைத்தும் சாதியின் தோற்றத்தைத் திரித்து, வர்க்க அமைப்புக்கு வெளியில் புனைகின்றது. சுரண்டலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக காட்ட முயற்சிக்கின்றது. அத்துடன் சாதியை பார்ப்பானும் பார்ப்பனியமும் அல்லாத ஒன்றாக காட்ட முனைகின்ற, மற்றொரு சூக்குமமான குதர்க்கமான முயற்சியுமாகும்.

தொடரும்

பி.இரயாகரன்

3.எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

2.பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

 

1.பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01

 

Last Updated on Saturday, 12 June 2010 19:11