Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சமூகங்கள் இணங்கி வாழ்வதை மறுக்கும் மே 18, மூடிமறைத்து முன்தள்ளும் இனவாதம்

சமூகங்கள் இணங்கி வாழ்வதை மறுக்கும் மே 18, மூடிமறைத்து முன்தள்ளும் இனவாதம்

  • PDF

பேரினவாதம் மக்களை பிரித்து பிளந்து அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் தமிழ் தேசியமும் செய்தது, செய்கின்றது. தமிழ்தேசியம் இன்று செய்ய வேண்டியது, இதை மறுத்து போராடுவதுதான். சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல, இனவாதமும் அதை முன்வைக்கும் அரசும் தான் எமது எதிரி. இதைக் கூறி,  தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும். இதைச்செய்யாத அனைத்தும், தமிழ் இனவாதம் தான்.

மீளாய்வு என்பது, மக்களை எதிரியாக்கிய வலதுசாரிய போக்குகளை அம்பலப்படுத்தி, அதை சரிசெய்வது தான். தவறான போராட்டமாக மாறி, அழிந்து போன எம் வரலாறு பற்றிய பொய்களையும், கற்பிதங்களையும் தகர்த்தெறிவதுதான். வலதுசாரிய தேசியம் கொண்டிருந்த இனவாதத்தை சமூகத்தில் இருந்து தூக்கியெறிவது தான் மீளாய்வாக இருக்க முடியும். அதை ப+சி மெழுகி, மீளப் புது விளக்கம் கொடுத்து அரைப்பதல்ல.   

கடந்த வலதுசாரிய தேசியம் என்ன செய்தது? எம் பங்குக்கு, சிங்கள மக்களிடமிருந்து  எம் மக்களை இனவாதமாக பிளந்தனர். அதையே இன்று தொடருகின்றனர். சிங்கள மக்களை எமது எதிரியாக கூறிய குறுந்தேசிய வாதம் தான், எம் போராட்டத்தையே அழித்தது. எம் மக்களையே ஒடுக்கியது. மக்கள் இணங்கி வாழ்வதை மறுப்பதுதான், தமிழ் தேசிய அரசியலாகியது. சக மனிதனை எதிரியாக்கி, சொந்த மக்களை ஒடுக்கும் வக்கிரத்தைத்தான் தமிழ்தேசியமாக்கினர்.

இதுதான் எம் வரலாறு. அன்றும் இன்றும் இதுதான் எம் கதை. இதையா இன்று மீளாய்வு செய்கின்றார்கள். இல்லை. துரோகிகளின் அரசியல் கூத்தை வைத்து, இந்த பிளவுவாத இனவாதத்தை பொத்திப் பாதுகாக்கின்றனர்.

துரோகிகளும், கைக்கூலிகளும் இனவாதிகளுடன் தாங்கள் கூடிவாழ்வதை, இணக்க அரசியலாக முன்வைக்கின்றனர். கீழ் இருந்து மக்களை இணக்க அரசியலுக்கு அணிதிரட்டாத வரை, மக்களின் எதிரிகள் கூட்டாக ஒடுக்கும் செயலை இணக்க அரசியலாக காட்டி அவனால் தொடர்ந்து ஒடுக்க முடிகின்றது. கீழ் இருந்து ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணக்கத்தை செய்யும் அரசியலை முன்வையாது, மேல் ஒடுக்குபவன் கொண்டுள்ள இணக்கத்தைக் கண்டிப்பது இனவாதம். இனவாதத்தில் இருந்து, நாம் வேறுபட எம்மை அணிதிரட்டாதவரை, அரசியலை முன்வைக்காத வரை, அவை இனவாதம் தான். மேல் இருந்து ஒடுக்கும் இனவாதம் ஒடுக்க கூட்டுச் சேர்வதும், கீழ் இருந்து மக்களை ஒடுக்க பிளக்கும் இனவாதமும் அரசியலாக தொடர்ந்து  அரங்கேறுகின்றது.

இந்த வகையில் மே18 ரகுமான் ஜான், தன் உரையில் "இன்னுமொரு தரப்பினர் இப்படிப்பட்ட ஒரு பாரிய தோல்வியின் பின் மக்களுக்கு இணக்க அரசியல் பற்றி முன்மொழிகிறார்கள். இணக்க அரசியல் என்பது வெறும் வார்த்தை அளவில் பார்த்தால் மிகவும் நியாயமான கோரிக்கை போலவே தோற்றமளிக்கிறது." என்று அரசுடன் இணக்க அரசியல் செய்வோரை சரியாகவே மறுக்கின்ற போது, இதைக் கொண்டு மறுதளத்தில் இனவாதத்தை பிரச்சாரம் செய்கின்றார். ரகுமான் ஜானின் இனவாத அரசியல் இதுதான். வலதுசாரிய இனவாதத்துக்கு மாற்றாக, அதை முறித்துக்கொள்ளும் வண்ணம், அவர் எந்த இடதுசாரிய அரசியலையும் முன்வைக்கவில்லை.

பேரினவாதத்துடன் இணக்க அரசியல் செய்யும் கூலிக் குழுக்களுக்கு எதிரான, புலிப்பாசிச அரசியல் இனவாதத்தைக் கொண்டு தான், அவர் அதை எதிர்க்கின்றார். இன ஐக்கியத்தைக் கோரிய, தமிழ் இனவாதம் இந்த இணக்க அரசியலை எதிர்க்கவில்லை. மே 18  ரகுமான் ஜான் இந்த தமிழ் இனவாதத்தைத் தாண்டி, சிங்கள மக்களுடனான இணக்க அரசியலை முன்வைக்கவில்லை. இங்கு ரகுமான் ஜான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துகின்ற பாணியில், இந்த தமிழினவாதத்தை சார்ந்து நின்று "மீளாய்வு" செய்கின்றார்.

சிங்கள மக்களுடன் எமது உறவு எப்படிப்பட்ட இணக்கத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் வலதுசாரியத்தை அம்பலமாக்கி கூறுவதன் மூலம் தான், பேரினவாத அடிவருடித்தனத்தையும், தமிழ் இனவாதத்தையும் கடந்து மக்களைச் சார்ந்து நின்று போhராட முடியும். இல்லாத வரை, இது தமிழ் வலதுசாரிய இனவாதம். இதைத்தான் மே 18 ரகுமான் ஜான் இங்கு நாசுக்காக செய்கின்றார்.

இந்த இனவாதத்துக்கு அவர் இட்ட தலைப்பு "ஈழவிடுதலைப் போராட்டம்: ஒரு மீளாய்வை நோக்கி.." என்பதாகும். இங்கு "மீளாய்வு" என்பது இனவாதத்தை மூடிமறைத்து சொல்வது தான். இவரின் மற்றொரு மீளாய்வைப் பாருங்கள் "இன்று போராட்டத்தை மீள்மதிப்பீடு செய்யும் எவருமே புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட உண்மையான தேசபக்த சக்திகளை ஒரு போதும் நிராகரித்துவிட முடியாது. இந்த தேசபக்த சக்திகள் புலிகளது தவறான அரசியல் பற்றிய போதிய விழிப்புணர்வுடனேயே இருந்தார்கள். ஆயினும் களத்தில் நின்று போராடிய ஒரே சக்தி என்ற வகையில் அவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தார்கள்." என்று மூடிமறைத்து அவர்களின் மீட்சிக்காக கூறுவது தான், இவரின்  "மீளாய்வு". தமிழினவாதத்தையும், பாசிசத்தையும் பூசி மெழுகி காட்டும் மீளாய்வு.

அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி அணிதிரட்ட வேண்டிய வலதுசாரிய கூறுகளை, தடவிக் கொடுத்து நழுவும் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் "மீளாய்வு" என்கின்றார்.

இந்த இடத்தில் தந்திரக்காரனாக மாறிக் கூறுகின்றார் "இன்று புலிகளது புலம்பெயர் தலைமையானது உண்மையில் ஒரு வியாபாரக் கூட்டத்திடம் சிக்கியுள்ளது." என்று. சரி இதில் உள்ள தந்திரம் என்ன. "இன்று" என்ற வார்த்தையை சொல்வதன் மூலம், அன்று சரியாக இருந்தது என்பதை சொல்லுகின்றார். இதன் மூலம், மூன்று அரசியல் பித்தலாட்டத்தைச் செய்கின்றார்.

1. அன்றும் வியாபார கூட்டத்திடம் தான் விடுதலைப் போராட்டம் அதன் தலைமையும் இருந்ததை, அரசியல் ரீதியாக மறுத்து புலியை பாதுகாக்கின்றார். இதை "இன்று" என்று திரிக்கின்றார்.   

2."இன்று அரசியல் தலைமை வியாபார கூட்டத்திடம்" இருப்பதாக கூறுவதன் மூலம், இந்த போராட்டத்தின் வலதுசாரிய அரசியல் சரியானது என்கின்றார். வியாபாரிகள் தான் போராட்டத்தை சீரழிக்க காரணம் என்கின்றார்.

3."இன்று" அல்ல அன்று " உண்மையான தேசபக்த சக்திகள் … அரசியல் பற்றிய போதிய விழிப்புணர்வுடனேயே இருந்தார்கள். ஆயினும் களத்தில் நின்று போராடிய ஒரே சக்தி என்ற வகையில் அவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தார்கள்." என்று பாசிசத்தை தொழுத அன்றைய தமது சந்தர்ப்பவாத அரசியலை பாதுகாக்கின்றார். அத்துடன் அன்று செய்தது இன்றும் சரியானது என்று கூறுவதுடன், அதை ஆதரித்து அந்த சந்தர்ப்பவாத பாட்டுகளை தொழக் கோருகின்றார்.

இப்படித்தான் மே 18 பல தளத்தில் தன் "மீளாய்வை" செய்கின்றது. சந்தர்ப்பவாதத்துடனும் இனவாதத்துடனும், மூடி மறைத்த வலதுசாரிய அரசியலை இடதுசாரியமாக பூசி மெழுகி முன்னெடுக்கின்றார். மே 18 ரகுமான் ஜான் இதையே கடந்த 30 வருடத்தில் தொழிலாக செய்தவர். இன்று அதை மீளாய்வு செய்வதை மறுத்து நிற்பதன் மூலம், வலதுசாரியத்தை மீளவும் அரங்கேற்றுகின்றார். 

பி.இரயாகரன்
09.06.2010
 

          


 

Last Updated on Wednesday, 09 June 2010 11:00