Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி தமிழ் இனவாதிகளின் புலம்பல்

இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி தமிழ் இனவாதிகளின் புலம்பல்

  • PDF

இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றி, சதா தமிழ் இனவாதிகள் புலம்புகின்றனர். இதன் மூலம் இந்திய நலன்களும், இந்திய ஆதிக்கமும் இந்து சமுத்திரத்தில் பறிபோவதாக கூறி,  தமிழ் இனவாத புலி அரசியல் செய்கின்றனர்.

அடிக்கடி இலங்கை முதல் இந்தியா வரை, புலியாதரவு தமிழ் தேசியம் பேசும் இனவாதிகள், இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றிய பீதியை வெளிப்படுத்துகின்றனர். ஏன், அடிக்கடி  படமும் கூட காட்டுகின்றனர். இதன் மூலம் இவர்கள் சொல்லவருவது, இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா மாறவேண்டும் என்பது தான். இலங்கை அரசை ஒடுக்க, தங்கள் புலியாதரவு தமிழினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி இவர்கள் கனவுகள், இந்திய நலன்களுடாக வக்கரித்தே வெளிப்படுகின்றது. இப்படித்தான் 1980 களில், எம் போராட்டத்தை இந்திய நலனுக்குத் தாரை வார்த்தனர்.

   

ஆம், இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரிக்கின்றது, எனவே இந்தியா எம் பக்கம் வரும் என்று, ஒரு பிரமையை விதைக்கின்றனர். இதன் மூலம் போராட்ட உணர்வுகளுக்கு நஞ்சிடுகின்றனர். இதன் மூலம் தமிழ் தேசிய இனவாதம், இந்தியாவின் பின் குளிர் காய முற்படுகின்றது. ஆனால் உண்மையான அரசியல் எதார்த்தம் என்ன?

 

அன்று இலங்கைக்குள் இந்தியா தலையிட்டு பயிற்சி வழங்கியதன் மூலம், எம்மக்களின்  போராட்டத்தை அழித்தது. அன்றைய தலையீடு என்பது, இயக்கங்களை சிதைத்து போராட்டத்தை அழித்தது என்பது, இந்தியப் பொருளாதார பிராந்திய நலன் சார்ந்துதான் செய்தது.

 

இந்த நிலையில் இன்று இந்தியா இலங்கை மேலான தன் ஆதிக்கத்தை இழந்து விட்டதாகவும், சீனா ஆதிக்கம் பெற்றுவருவதாகவும் கூறுவது சுத்த அபத்தம். படம்தான்  காட்டமுடியும்.

 

எதார்த்தம் என்ன? தொழிலாளர் உரிமைகள் எதுவுமற்ற மலிவான கூலியைக் கொண்ட சீனப் பொருளாதாரம், உலகம் தளுவிய அளவில் விரிவாகின்றது. அது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் கூட, பாரிய தலையீட்டை நடத்துகின்றது. அதிகரித்த உபரியான நிதி மூலதனம் முதல் பொருட்களின் உற்பத்தியையும் அதன் சந்தையையும் கூட சீனப் பொருளாதாரம் முழு வீச்சில் உலகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. உலகத்தை மறுபங்கீடு செய்ய, சீனப் பொருளாதாரம் கோருகின்றது. இதனால் உலகளவில் பல நெருக்கடிகள், தலையீடுகளும் உருவாகின்றது. இந்த முரண்பாடு கூர்மையாக, மக்கள் மேலான ஒடுக்குமுறைகள் உலகளவில் அதிகரிப்பதும் அவை அங்கீகாரம் பெறுவதும் நடக்கின்றது.  

 

இந்த வகையில் தான் இலங்கையிலும், சீனாவின் தலையீடு அதிகரிக்கின்றது. அத்துடன் பிராந்திய நலன் சார்ந்த செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதிலும், சீனத் தலையீடு அதிகரிக்கின்றது.

 

சீனாவின் இந்த நிலைமை உலகளவில் பொதுமையானது. இது இலங்கையில் குறிப்பானதல்ல. இல்லை இது குறிப்பானது, என்பதுதான் தமிழ்தேசிய இனவாதத்தின் குறுகிய உலகப் பார்வையாகின்றது. இதை இந்தியாவுக்கு எதிரானதாக காட்டி, தம்மைச்சுற்றிப் பரிவட்டம் கட்டுவதன் மூலம் மீளவும் குறுக்கு வழி அரசியல் செய்ய முனைகினறனர்.

 

சீனப் பொருளாதாரத்தின் வீச்சில், இந்தியாவை மீறி இலங்கை சென்றுவிடுமா!? எனின் இல்லை. மகிந்தாவின் குடும்ப ஆட்சியை, இந்தியாவே கட்டுப்படுத்துகின்றது. 

 

அன்று பயிற்சி மூலம் இந்தியா இலங்கை மீது செல்வாக்கு வகித்ததுடன், அந்த அரசியல் தேவை முடிந்தவுடன் அவர்களை அழித்தது. இந்த சகதியில்தான், தமிழ்மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டம் அழிக்கப்பட்டது.

 

இன்று எப்படி, எதன் மூலம் இலங்கையை இந்தியா கட்டுப்படுத்தி வைத்திருகின்றது? பொருளாதாரம் உட்பட பல வடிவங்களில் இதை இந்தியா கொண்டு இருந்த போதும், இதற்கு வெளியில் மகிந்தா என்ற குடும்பத்தின் தலைவிதியை இந்தியா தன் கையில் வைத்திருக்கின்றது.

 

மகிந்த குடும்பம் இந்தியாவை மீறி இனிச் செல்ல முடியாத வண்ணம், போர்க்குற்ற ஆவணங்களை இந்தியா தன் கையில் வைத்திருக்கின்றது. அதிகளவில் போர்க்குற்றத்தை செய்யத் தூண்டிய இந்தியா, அதை முழுமையாக இலங்கைக்கு எதிராகவே ஆவணமாக்கிக் கொண்டது. இதன் மூலம் இலங்கை ஆட்சியாளர்களை, தன் பிடிக்குள் முழுமையாக கொண்டு வந்துள்ளது.

 

இந்த வகையில் இந்தியாவின் பிராந்திய நலன்களை அடைய, இலங்கை போர்க்குற்றத்தை செய்யத் தூண்டியது. தன் பங்குக்கு அதை அவர்களைக் கொண்டு செய்வித்ததுடன், அதை ஆவணமாக்கி ஆதாரப்படுத்தியும் வைத்திருக்கின்றது. இந்தியா நினைத்தால், மகிந்த குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும். மகிந்த குடும்பம் போர்க் குற்றவாளியாக இருப்பதையும், அதன் தலைவிதியை இந்தியாவே தீர்மானிக்கும் நிலையில், இந்தியா அதனை முழுiமாக தன்னகத்தே கொண்டுள்ளது.

 

இந்திய நலன் என்பது மகிந்த குடும்பம் நிகழ்த்திய போர்க்குற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம், இலங்கையில் செல்வாக்கு வகிக்கின்றது. இந்திய நலன் எந்த நெருக்கடியும் இன்றி இலங்கையில் தொடர, மகிந்தாவின் குடும்ப ஆட்சியை தொடர்வது இந்திய நலனுக்கு உகந்ததாகின்றது. மகிந்த குடும்பம் செய்த போர்க்குற்றம் முதல், புலிகளிடம் இருந்து மகிந்த கும்பல் களவாடிய பல ஆயிரம் கோடி செல்வத்தை பாதுகாக்க, இந்தியாவின் நலனுடன் பின்னிப்பிணைந்து விட்டது மகிந்தவின் குடும்ப நலன்.

 

இதை மீறி எதையும் மற்றைய நாடுகளை தலையிடவும், ஆதிக்கம் வகிக்கவும் முடியாத நிலையில், இந்திய நலன்களுக்கு உட்பட்டே இலங்கை ஆட்சி காணப்படுகின்றது. மகிந்தா குடும்ப நலன், இந்திய நலனுடன் பிணைந்துவிட்டது. இலங்கையில் நிலவும் குடும்ப சர்வாதிகாரமும், அதன் பாசிச ஆட்சியும், இந்திய நலனுடன் நேரடியாக தொடர்புடையதாகிவிட்டது. இலங்கையில் போராட்டம் என்பது, இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக உள்ளது.    

   

பி.இரயாகரன்
02.06.2010

          

 

Last Updated on Wednesday, 02 June 2010 08:02