Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

வெளியீடுகளும் அவைகள் மீதான பார்வையும்

  • PDF

எமது போராட்டம் பாசிசத்தால் மூழ்கடிக்கப்பட்ட இன்றைய நிலையில் அதை எதிர் கொள்ள பலதரப்பினரும் குரல் கொடுக்க முனைந்தனர். இந்த வகையில் சஞ்சிகைகள், பத்திரிகைகள் என பல தோன்றி வருகின்றன. சில நின்றும் போய்விடுகின்றன.  எம் போராட்டத்தில் எழுந்த சஞ்சிகைள் பத்திரிகைள் வளர்ச்சிப்போக்கில் தத்தம் நோக்கங்களைக் கூட இனறு மாற்றி வருகின்றன. சில பத்திரிகைகள் தமது சுயதிருப்திக்காக என்ற நிலைக்கு பரிணாமம் அடைந்துள்ளது. சில பத்திரிகைகள் பிழைப்புவாத பிரமுகர்களை காப்பாற்றும் நோக்கில் சீரிழிந்துள்ளது.

இன்று வெளிநாட்டிலும் சரி, இலங்கையில் சரி வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளையும் எடுப்பின் அவைகள் எவையும் ஒர் கோட்பாடு அடிப்படையில் வெளிவருவதில்லை . மாறாக   புலிகளின் பாசிசத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் என்ற கோசத்தின் அடிப்படையில் மற்ற எல்லா கருத்தையும் தாங்கி வருகிறது. இந்த வகையில் மார்க்சிசம் சரி மார்க்சிசத்திற்கு எதிரான கருத்து எனிலும் சரி எல்லாம் தாங்கி வருகின்றன. இவை புலி எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு என்ற வரையறையில் மட்டும் முற்போக்கைப் பேணுகின்றன. இந்தவகையில் கவிதை கதை இலக்கியம்....... என அனைத்தும் மார்க்சியம், மார்க்கியத்திற்கு எதிர் என அனைத்தையும் முற்போக்குக்குள் உள்ளடக்கி  வெளிவருகிறது.  இப்பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஆசிரியர் குழுவைக் கொண்டிருந்த போதும் அவர்களுக்கு என்று ஒரு தெளிவான அரசியல் கோட்பாடு கிடையாது. தேடல், கட்டம் என்று கூறியபடி எல்லாவற்றையும் அச்சிட்டு வெளியிடும் பணிக்கு அப்பால் இவர்கள் முன்னேறவில்லை.

 

அரசு, புலி எதிர்ப்பை மட்டும் கொண்ட இவர்கள் எந்த அரசியல் வழியையும் சுட்டிக்காட்டத் தயாரற்று உளளனர்.  சில சஞ்சிகைகள் 5 வருடங்களுக்கு, மேலே வெளிவந்த போதும் தமது அரசியலை வெளிப்படுத்த தயாரற்று உள்ளனர். தேடல் என்ற போர்வைக்குள் இதையே தொடர்கின்றனர். இதன் ஊடாக தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முனைவதுடன், சுயதிருப்தித் தன்மையையும் வெளிக்காட்டுகின்றனர்.  இப்படி உள்ள பல ஆசிரியர்கள் மையவாதிகளாகவுள்ளனர். எந்தக் கருத்தின் மீதும் ஒரு தெளிவான முடிவை எடுக்காது சமரசவாதிகளாக இருக்க முனைகின்றனர்.  அந்த வகையில் ஒரு கருத்துப்பட அமைப்பு உருவாக்க முடியாத வகையில் வாசகர்களை திசைதிருப்ப முனைவதன் ஊடாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு துரோகம் இழைப்பவர்களாக தம்மை அறியாமல் உள்ளனர். இச்சஞ்சிகையில் எழுதும் எழுத்தாளர்கள் பலதரப்பட்டவர்கள் உள்ளனர். அந்தவகையில்


1. பழம் பெரும் பிழைப்புவாத அறிவு ஜீவிகள்
2. புதிய இடது போக்கை பிரதிநிதிப்படுத்துவோர்கள்
3. தமது மேதாவித்தனத்தை காட்ட எழுதுபவர்கள்
4. சுயதிருப்திக்காக எழுதுபவர்கள்
5. உண்மையைத் தேட தமக்குத் தெரிந்த வகையில் எழுதுதல்
6. மார்க்சிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முதன்மைப்படுத்தி எழுதுதல்


இந்த வகையில் எழுதும் இச் சஞ்சிகைகளை, வாசகர் எழுதும் எழுத்துக்களைக் கொண்டு ஒரு சஞ்சிகையை மதிப்பிடமுடியாது. ஏன் எனில் சஞ்சிகையில்  ஆசிரியர் குழு அக்கருத்துக்கள் மீது தமது பொறுப்புக்களை நிராகரிக்கின்றனர். சஞ்சிகைகளை மதிப்பிடல் என்பது ஆக்கங்களைக் கொண்டு செய்ய முடியாது. ஏனெனில் அதற்கும் ஆசிரியர்குழுவிற்கும் எந்தச் சம்மந்தமும் இலலை. மாறாக தொகுத்து அச்சிடும் பணியையே செய்கின்றனர். சஞ்சிகைகளை நாம் இக்கட்டுரையில் மதிப்பிடும் போது அவைகளின் பொதுப் போக்கையே விமர்சிக்க முடியும். அதிலுள்ள கருத்துக்கும் சஞ்சிகை வெளியிடுவோர்க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. வெளியிடுவோர் யார்? வெறும் அச்சுக் கோப்பவராகவும், அரசு எதிர்ப்பு, புலி எதிர்ப்பில் என்ற அரசியலைப் பற்றிய மையநிலையைப் பேணுகின்றனர். இதை கொண்டு நாம் சஞ்சிகைகளை மதிப்பிட முனையும்  அதேநேரம் நேரடி விவாதங்களைக் கொண்டும் இம்மதிப்பீடு உள்ளது.
 
சுவடுகள்
 
மாதம் தவறாது வரமுனையும் இச்சஞ்சிகையின் 54 இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளது. முதல் 25 இதழ்களை நாம் வாசிக்காத நிலையில் பிந்தைய சுவடுகள் மீது நாம் பார்வையை முன்வைக்கிறோம். சுவடுகள் வெளியிடுவோர் முன்பு புதியஜனநாயகம் சுட்டிக்காட்டியது போல் சுயதிருப்தித்தன்மை கூடுதலாக வெளிப்படுகிறது.  சுவடுகளில் 22ம் இதழுக்கும் 52ம் இதழுக்கும் இடையில் கருத்தியல் ரீதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. பிழைப்புவாத பிரமுகர் முதல் தேசத்தின் மீது அக்கறை உள்ள பலரின் கருத்துக்களை தாங்கி வருகிறது. மார்க்சியம் முதல் மார்க்சிய எதிர்ப்புக்களையும் தாங்கி வருகிறது. தாம் நடுநிலை என்ற கோசத்தின் கீழ் ஒரு கதம்பமாலையாக உள்ளனர்.

 

வெளிநாட்டுப்போராட்டங்கள் முதல் விளம்பரங்கள் வரை வெளிக்கொண்டு வரும் இச்சஞ்சிகை ஈழப்போராட்டத்தை தம் கையில் எடுக்கவேண்டிய பணியை நிராகரிக்கின்றனர். அதற்குப் பதில் நோர்வே அரசியல்வாதிகளிலும், சில சமாதான தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு ஊடாக ஒரு தீர்வை முன்வைக்க கனவு காண்கின்றனர். இந்த வகையில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடுநிலையாளர்களாக இருக்க தீவிரமாக முயல்கின்றனர். தமது விமர்சனங்களை கூடுதலாக தவிர்த்து எல்லோரிடத்திலும் நன்மதிப்பைப் பேண முனைகின்றனர். சுவடுகள் என நமது கால்களையும் முன்வைக்க எந்த சுவடுகளையும், சுவடு கடந்த 5 வருடமாக இனங்காட்டவில்லை. சுவடுகள் வைத்த பாதையை சுட்டிக்காட்டுவீர்களா?
 
தூண்டில்
 
ஜெர்மனியிலிருந்து மாதம் தவறாது வந்த இச்சஞ்சிகை இன்று பொருளாதார நெருக்கடியுடன் கருத்தின்மையும் இணைந்து நின்றுபோய்விட்டது. இது வரையில் 58 இதழ்களை வெளியிட்டுள்ளது. புலி எதிர்ப்பைக் கொண்டிருந்த இந்தப் பத்திரிகை 40 இதழ்களுக்குப் பின்பு இலங்கையிலிருந்து சிலர் எழுதத் தொடங்கியவுடன் சில மாற்றத்தை கொண்டிருந்தது. ஆனால் பின் பழையபடி மீண்டும் பழைய நிலையை நோக்கிய சரிவை கொண்டிருந்தனர்.   தமக்கு என எந்த அரசியலையும் கொண்டிராத தூண்டில் வெளிவரும் கட்டுரைகளைத் தொகுத்து விடுவதை தமது பணியாக கொண்டிருந்தனர். பத்திரிகை வடிவமைப்பில் வளர்ச்சி பெற்றிருந்த போதிலும் தேடல் கட்டத்தில் உள்ளோம் எனக் கூறியபோதிலும் தமக்கான தேடலை 58 இதழுக்குப் பின்னும் பெற்றுக்கொள்ளவில்லை.

 

எல்லாக் கருத்துக்களையும் பிரசுரிக்கவென முன்னெடுத்த போக்கு எல்லோருடனும் சந்தர்ப்பவாத சமரசத்தை நிலைநாட்டுவதில் உறுதியிட்டு நின்றது. 40 இதழ்களுக்கு பின்பு ஏற்பட்ட அரசியல் வழிப்பட்ட எழுத்துக்கள் தூண்டிலை எவ்விதத்திலும் அரசியல்மயப்படுத்தவில்லை. 40 இதழ்களுக்கு முன்பு ஜரோக்கிய பிழைப்புவாத பிரமுகர்களுக்கு திறக்கப்பட்டிருந்த கதவு சில அரசியல் வழிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து  பிரமுகர்கள் எழுதுவதை நிறுத்தி கொண்டனர். தூண்டிலுக்கு ஜரோப்பியப் பிரமுகர்கள் பற்றிய முடிவு ஏதும் இல்லாதபோதும். ஈழத்து அரசியல் எழுத்துக்கள் அவர்கள் எழுதுவதை தானாகவே தடுத்தும் இருந்தது. அரசியல் முடிவை அடையவேண்டும் என்ற கோரிக்கையை வேண்டுமென்றே சந்தர்ப்பவாத சமரசத்தை நிலைநாட்டும் அடிப்படையில் நிராகரித்தனர். உண்மையான அக்கறை கொண்ட, மார்க்சியத்தின் மீதும் விருப்பம் இருந்தபோதும் அதை அடையும் வழிகளில் பிரதான குறைபாடாக உள்ளது சந்தர்ப்பவாத சமரசமே. இதைக் கலைவதன் ஊடாக ஓர் அரசியல் நோக்கை அடையமுடியும். தூண்டில் போட முனையுமுன் தூண்டிலில் இரை கட்டப்படவேண்டும். அப்போதே மீன்பிடிக்க முடியும். தூண்டிலில் இரைபோடாமல் 6 வருடங்களுக்கு மேலாக  வந்த ஒரு சஞ்சிகை எந்தவொரு நபரையும் வென்றெடுக்காமல், தாமும் வளராமல் சமரசத்தை கடைப்பிடித்து நின்றுவிட்டது. இது எல்லாப் பத்திரிகைக்கும் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை விமர்சனத்துடன் எல்லோரும் அணுகவேண்டும். அணுகுவீர்களா?
 
மனிதம்
 
மூன்றுமாதத்துக்கு ஒருமுறை சுவிஸ்சிலிருந்து இச்சஞ்சிகையில் இதுவரை 26 இதழ்கள் வெளிவந்துள்ளன. வெளிவரும் கருத்துக்களுக்கும் மனிதம் இதழுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. புலிஎதிர்ப்பை அரச எதிர்ப்போடு மட்டுப்படுத்திய முற்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவர்கள் ஜரோப்பாவில் பாரிய குழுவாக இருந்தபோதிலும் மாறுபட்ட பல கருத்தைக் கொண்டோராக உள்ளனர்.

 

இவர்கள் தமக்கிடையில் எந்த ஒரு அரசியல் வழியையும் வைத்து ஈழப்போராட்டத்தை தமது கையில் எடுக்கும் பணியை கடந்த 5 வருடமாக தவிர்த்து சந்தர்ப்பவாதமாக உள்ளனர்.  சில சீர்திருத்த நடவடிக்கைகளை வலியுறுத்தி அதை தாம் பேண முயல்கின்றனர்.  இதன் ஊடாக ஒரு புரட்சிகர மாற்றத்துக்கான  அரசியலை நிராகரிக்கும்  அரசியலை வழியை உயர்த்த முனைந்துள்ளனர். இந்த வகையில் புதிய இடது போக்குகளையும், திரிபுவாதப் போக்குகளையும், பரப்புவதில் விடாப்பிடியாக முனைகின்றனர். எல்லாக் கருத்துக்கும் கருத்துச்சுதந்திரம் என்ற வரையறையில் எல்லாவித மார்க்சிய விரோத கருத்தின் மையமாக இன்று மாறியுள்ளனர்.

 

ஆரம்பத்தில் பிழைப்புவாதப் பிரமுகர்களின் கருத்துக்களையும் தாங்கி வந்த இச்சஞ்சிகையில் இன்று அவர்களின் கருத்துக்களை வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இது அவர்கள்  ஒரு கருத்தைக் கொண்டு மட்டுப்படுத்தியதில்லை. மாறாக மனிதத்தில் புதிய இடதுசாரிப்போக்கின் வளர்ச்சியும் திரிபுவாதமும் அவர்கள் எழுதுவதை தவிர்த்துள்ளது.  மனிதம் சில சீர்திருத்த நடவடிக்கைகளை சிறியளவில் தம்முள் கடைப்பிடித்த போதிலும் சீரழிந்த சில திரைப்படங்களை  சிறந்த திரைப்படங்களாக காட்டமுனைகிறது.  இதன் ஊடாக அதே சீர்திருத்தத்துக்கு எதிரான படங்களுக்கு நல்ல திரைப்படம் என வாழ்த்தியும் வருகின்றனர்.  இப்படி பல வாசகர்களை திருப்தி செய்யும் எழுத்துக்களையும் விமர்சனம் இன்றி பிரசுரிக்கும் மனிதம் ஒரு திட்டத்தில் போராடவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து தமது சந்தர்ப்பவாத சமரசத்தை பேண முயல்கின்றனர். 

 

மனிதம் குழுவில் பல நல்ல சக்திகள் இருந்தபோதிலும் அவர்கள் சந்தர்ப்பவாத சமரசத்தை எதிர்த்து போராடாத வரை ஈழப்போராட்டத்துக்கு தலைமை கொடுக்கும் பணிக்கு துரோகம் இழைப்பவர்களாகவே தொடர்வர்.  மனிதம் பேணவேண்டின் மனிதத்தை பேணும் அரசு வேண்டும். மனிதத்தை பேணும் அரசமைக்க அதற்கு தத்துவம் வேண்டும். மனிதத்தை பேணும் கோட்பாடு வேண்டும். அக்கோட்பாட்டை வைப்பீர்களா?
 
பனிமலர்
 
லண்டனில் இருந்து வெளிவரும் இச் சஞ்சிகை இதுவரை 10 இதழ்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. இச்சஞ்சிகை ஆரம்பத்தில்  சுயதிருப்தியின் தலைமை ஆதிக்கமாக காணப்பட்டதும் இன்று சில மாற்றங்கள் பெற்றும் உள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியர்குழுவில் ஜரோப்பிய பிழைப்புவாத பிரமுகர்கள் உட்பட இருந்த ஆசிரியர் குழு இன்று அவர்களை இல்லாது ஆக்கியுள்ளது. சீனாவின் தயவில் பிழைப்பை நடத்திய இவ் ஆசிரியரும் சீனாவை எதிர்க்கும் ஆசிரியர்கள் என இவ்விருவரும் ஒரே குழுவாக செயலாற்றினர். நேரெதிரான இரண்டு அரசியல் வழிப்பட்டவர்களின் ஆரம்பக் கூட்டு இன்று தகர்ந்துள்ளது. இன்றும் சரி அன்றும் சரி அரச எதிர்ப்பை உயர்த்தியவர்கள் புலிகளை எதிர்ப்பதில் சந்தர்ப்பவாத நிலையை கடைபிடிக்கின்றனர்.

 

புலிகளுடன் ஜக்கிய முன்னணியில் உள்ள நினைப்புடன் கட்டுரைகளை மட்டுப்படுத்தும் இவர்கள் கூட வெளிவரும் கட்டுரைக்கான பொறுப்பை நிராகரிக்கின்றனர். அநேகமான கட்டுரைகளை புலிகளே மீண்டும் விநியோகிக்கும் அளவுக்கு புலிகள் பற்றிய சந்தர்ப்பவாதத்தை கொண்டுள்ளனர். மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களை அதிகமாக பிரசுரிக்கும் இவர்கள,; அதேநேரம் புலிகள் பற்றிய மார்க்சிய ஆசான்களின் கோட்பாட்டுக்கு முரணான முடிவிற்கு வருகின்றனர். வடிவமைப்பில் ஜரோப்பிய சஞ்சிகைகளிலே சிறந்து விளங்கிய போதும் கோட்பாட்டு ரீதியில் ஒர் கோட்பாட்டை உயர்த்தவோ அதன் அடிப்படையில் கட்டுரைகளை மதிப்பிடத் தவறி சந்தர்ப்பவாதப் போக்கை பேணுகின்றனர். பனிமலராக மலர்வது எனின் மலருக்கான செடியை நாட்ட வேண்டும் நாட்டுவீர்களா?
 
சரிநிகர்
 
இலங்கையிலிருந்து வெளிவரும் இப்பத்திரிகை இன்று இரண்டு கிழமைக்கு ஒன்றாக வர ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 43 இதழ்களை வெளியிட்டுள்ளனர்.  சரிநிகரை ஒட்டி ஓர் விரிவான விமர்சனத்தை வைக்க முன் வருகிறோம். இது ஜரோப்பாவில் வெளிவரும் அநேக சஞ்சிகைகளுக்கும் சிறப்பாக பொருந்தும். சரிநிகர் பற்றிய விமர்சனத்தில் வரும் அநேக விமர்சனங்கள் இச்சஞ்சிகைகளுக்கும் பொருந்தும்.  இப்பத்திரிகை இலங்கையிலிருந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இப்பத்திரிகை பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்து வெளிவருகிறது. இப்பத்திரிகையை நாம் அரசியல் ரீதியில் விமர்சனத்துக்கும் உட்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். இப்பத்திரிகையை சிலர் அரசு ஆதரவு என்றும் புலி ஆதரவு என்றும் புலி ஆதரவுப் பத்திரிகை எனவும் விமர்சிக்கின்றனர்.  ஆனால் இதை மறுக்கும் சரிநிகர்  இதை கட்டுரைகள் மீது காணும்படி கோருகின்றனர். உண்மையில் இப்படிப் பிரச்சாரம் செய்பவர்களின் நோக்கம் வேறுபட்டதாக இருந்தபோதும் அவ் விமர்சனத்துக்கான பதில் முழுமையானதும் சரியானதும் அல்ல. சரிநிகரைப் பார்த்து அரசுசார்பு, புலிசார்பு எனப் பிரச்சாரம் செய்ய முடிகிறது எனின் அது ஏன் சாத்தியமாகிறது. இங்குதான் சரிநிகரின் தவறு உள்ளது. அரசு புலி ஆகியவற்றுக்கு எதிராக உண்மையில் வெளிவரும் இப் பத்திரிகையின் அரசியல் என்ன? நோக்கம் என்ன? இதுவே எல்லாவற்றுக்குமான அடிப்படைப் பிரச்சனை. இதை நிராகரிப்பின் இயல்பில் அரசு அல்லது புலிக்கான இந்த சமூக அமைப்புக்கு அப்பால் சரிநிகர் சென்று விடமாட்டாது. அரசியல் என்ன? என்பதற்கு சரிநிகர் இதுவரை தன்னை இனம் காட்டவில்லை. நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு ஒரு பிழையான விளக்கத்தை அநேகமாக வெளிப்படுத்துகின்றனர். அதாவது உண்மையைக் கொண்டு வருதல், எல்லாப் பத்திரிகையைப் போல் ஒவ்வொன்றிற்கும் இடையிலான வேறுபட்ட போக்கில் சரிநிகர் புலி, அரசுக்கு எதிரான உண்மையான செய்திகளை(முழுமையானதும் சரியானதும் அல்ல) வெளிக்கொண்டு வருவதே இதன் முற்போக்கு ஆகும்.  உண்மை என்பது என்ன? உண்மைகளை ஏன் வெளிக்கொண்டு வரவேண்டும். சரிநிகரோ மற்றைய சஞ்சிகைகளோ எதைச் சாதிக்கின்றன? என்ற கேள்விகளை  இப்பத்திரிகையாளார்கள் எழுப்பின் மட்டுமே நோக்கம் அற்ற உண்மை எதையும் சாதிக்காது என்பதை கண்டு கொள்ள முடியும்.

 

சரிநிகர் ஆசிரியர் குழு மற்றைய சஞ்சிகையைப் போல் வெளிவரும் கருத்துக்கு பொறுப்பேற்பது கிடையாது. அதற்கு மாறாக புலி எதிர்ப்பு, அரசஎதிர்ப்பு மட்டும் என மட்டுப்படுத்தும் ஒரு ஆசிரியர் குழுவை கொண்டுள்ளனர். ஏனெனில் தமக்கு என அரசியல் எதையும் கொண்டிராத ஆசிரியர் குழு(சரிநிகர்) இதை மறுக்கமுடியாது. இதிலிருந்தே முன்பு சஞ்சிகைகளைப் பற்றி ஒரு விமர்சனத்தை தொடங்கியவர்கள் அதை நிறுத்திக் கொண்டனர். எந்த முகத்துடன் விமர்சிக்க முடியும்.  உலகில் உண்மை என்பது என்ன? மார்க்சியத்தின் விரிந்த பக்கமும் அதை விஞ்ஞானமாக விரித்துப் பார்ப்பதுமே உண்மையாகும். ஒவ்வொரு விடையத்தையும் மார்க்சிய வழிகளில் விமர்சிக்க முற்படும் போது மட்டுமே அது உண்மையாகும். அல்லாத வரையில் இச்சமூக அமைப்புக்குள்ளான குட்டி பூர்சுவா வர்க்கப் பத்திரிகையாக அதன் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாகவே இருக்கும். அது முழுமையான உண்மை என்பது மார்க்சிய அடிப்படையில் விமர்சிக்கும் போது மட்டுமே சாத்தியப் படும். இது கதை, கவிதை கட்டுரை, ஓவியம்---- என அனைத்துக்கும் பொருந்தும். இது சரிநிகருக்கு ஆக்கம் எழுதும் ஆக்கதாரர்களுக்கான விமர்சனம் மட்டுமானது அல்ல, சரிநிகர் ஆசிரியர் குழுவிற்குமான விமர்சனமே. அவர்களே இக்கருத்தின் ஊற்று மூலமாக உள்ளனர். 

 

உண்மைகளை ஏன் வெளிக்கொண்டு வரவேண்டும். அதனால் என்ன இலாபம் என்று ஒர் கேள்வி சரிநிகர் ஆசிரியர் குழுவைக் கேட்க வேண்டி உள்ளது. அரசு புலி மற்றும் ஏனைய தரப்பினருக்கும் தமது சுரண்டல் சமுதாயத்தைக் காப்பாற்ற பொய்களில் உயிர் வாழ்கின்றனர் என்பது உண்மையே.  அவர்கள் பொய்களைக் கூறும் போது தமக்கென கோட்பாட்டையும் கொண்டுள்ளனர். உண்மையைக் கொண்டுவரின் அவ்வுண்மையின் பின் கோட்பாடிருக்கவேண்டும்.  இல்லாதவரை உண்மையை தெரிந்து கொள்வதால் எதுவும் நடந்து விடாது. எதிர்கட்சிக்கு வாக்களிக்கவே ஊக்குவிக்கும். மாறாக இந்த சுரண்டல் சமுதாயத்தை தகர்த்துவிட உண்மையான சுரண்டல் அற்ற சமுதாயத்தை படைக்க பத்திரிகைகள் பணியாற்ற வேண்டும். இதுவே மிக முக்கியமானது. இல்லாதவரை சரிநிகரைப் போல் பல பத்திரிகைகள் தோன்றி மறையலாம்.  ஆனால் எதுவும் நடந்துவிடாது. மக்கள் இச்சமுக அமைப்புக்குள்  தொடர்வதே நிகழும்.  இதையே சரிநிகர் செய்வது மட்டுமின்றி ஊக்குவிக்கிறது. அதாவது தரகுமுதலாளித்துவ பொய்களில் இருந்து வெளிவரும் மக்களை குட்டிபூர்சுவா பொய்களுக்குள் நிலை நிறுத்தி விடுகின்றனர்.

 

சரிநிகர் பத்திரிகைக்கு சமூகத்தை மாற்றும் நோக்கம் கிடையாது. அது தன் கருத்துக்கும் பொறுப்பேற்பது இல்லை. அத்துடன் திறந்த பத்திரிகை எனக் கூறி குட்டிபூர்சுவா உண்மைகளை விட மார்க்சிய அடிப்படையிலேயே உண்மையான உண்மை உருவாகும்.  எந்த மனிதனுக்கும் கருத்து உண்டு. அதன் வெளிப்பாடுதான் பத்திரிகை. இந்த வகையில் சரிநிகருக்கு எந்த அரசியலை முதன்மைபடுத்துதல் என்பதில் கருத்துண்டு. சரிநிகரை எடுப்பின் குட்டிபூர்சுவா கருத்துக்கு முதன்மையான தன்மையை வெளிக்காட்டுகிறது. மார்க்சிய ஆதரவு, மார்க்சிய எதிர்ப்பு என எல்லாவகையான கருத்தையும் வெளியிட்டு இதில் உண்மையைப் பேணமுடியாது உள்ளனர். ஒருவர் கட்டுரை எழுதின் அவர் பற்றிய அறிமுகத்தில் புகழ்தல் என ஒன்றை செய்து அந்நபர் பின் உள்ள சீரழிவையும், தவறுகளையும் மறைத்து விடுகின்றனர். இதன் ஊடாக எதிர்கால போராட்ட சக்திகளை தவறான வழிக்கும் தவறான தலைமையின் கீழ் அணி திரளவும் முனைகின்றனர். 

 

சரிநிகர் இன்று இலங்கை, வெளிநாடு என பலரின் பிழைப்புவாத களமாக மாறி வருகிறது. பத்திரிகை இன்று ஆரம்ப நோக்கில் இருந்து விலகி மற்றைய வியாபாரப் பத்திரிகைப் போல் வியாபாரமற்ற ஒரு பத்திரிகையில் உண்மையை கொண்டுவரும் வழியில் மட்டும் வேறுபாடு உள்ளது.  அதாவது ஆசிரியர் குழுவிற்கிடையில் இரு வேறுபாடுண்டு.

 

(1) வியாபார நோக்கமற்றது

(2) அரசு புலி எதிர்ப்பை கொண்டிருத்தல்.

 

பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடைபெறாத இலங்கையில் சரிநிகரின் பணி பூர்சுவா ஜனநாயக உண்மையை( அதாவது இது பொய்யே) வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடைபெற்ற மேற்குநாடுகளில் அந்நாட்டு மொழியில் சரிநிகர் போல் பல பத்திரிகைகள் உள்ளன. இது அந்நாடுகளில் இன்று முற்போக்குப் பாத்திரத்தை ஆற்றவில்லை. இது  இலங்கையிலுள்ளபோது முற்போக்குப் பாத்திரத்தை ஆற்றுகிறது.  இந்த வகையில் நாம் எல்லா சஞ்சிகைகளையும்  முற்போக்குப் பத்திரிகை என வரையறுக்க முனைகிறோம்.  ஆனால் இம்முற்போக்கு (குட்டிபூர்சுவா) இன்று அரசியல்ரீதியில் எதையும் சாதித்துவிட முடியாது.  ஈழப்போராட்ட வரலாற்றில் உருவான அனைத்து இயக்கமும் ஒரு வழியில் குட்டிபூர்சுவா உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவையே. ஆனால் இன்று அதை விமர்சிக்க வேண்டிய தேவையற்றவை ஆகிவிட்டது. என்-எல்-எவ்-டி போன்றவை குட்டிபூர்சுவாவிற்க்கும் மார்க்சியத்திற்க்கும் இடையில் ஊசலாடியது. அதுவே அது எதிலும் முன்னேற முடியாது போனது. குட்டிபூர்சுவா கருத்துக்களும் அப்பத்திரிகைகளும் அதன் வளர்ச்சியில் மார்க்சியத்தை அல்லது ஒடுக்கும் வர்க்கத்தை சார்ந்துவிடும். இதுவே யதார்த்தமான உண்மை. இன்று மார்க்சிய இயக்கங்கள் இல்லாத நிலையில் குட்டிபூர்சுவா உண்மைகள் (மார்க்சிய அடிப்படையில் பொய்கள்) நீடித்து நிற்க முடியாது. சரிநிகர் நீண்ட இடைவெளியை வைத்து ஆராயும் போது இதை நாம் காணமுடியும். பத்திரிகையின் எழுத்துக்கள் பிழைப்புவாதிகள் கையில் நழுவிச் செல்வதை காணமுடியும்.

 

ஆசிரியர் குழுவுக்கு உண்மையான சரியான கருத்தை வெளிப்படுத்தாவரை சரியான சக்திகள் சரிநிகரை தமது பத்திரிகையாக காணமாட்டார்கள்.  மலையகமக்களை ஏமாற்றும் தொண்டமானுக்கு எதிராக உருவான சந்திரசேகரை பலர் உடனடியாக முற்போக்காகக் கண்டு பின் சென்றனர். ஆனால் பின் பலர் அதில் இருந்து பின் வாங்கினர். முற்போக்கு என ஒரு பத்திரிகை, அமைப்புக்கு பின் உருவாக கூடிய மாயை தகர்ந்து வருவது வரலாற்றில் நிறையவே கண்டுள்ளோம். தமது கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்து அதன் அடிப்படையில் செயற்படாத வரையில் அதன் நோக்கம் இச்சமூக அமைப்புக்குள்ளானதே. அடுத்து ஒரு குறித்த கருத்தை முன்வைத்து இலங்கையில் பத்திரிகையை கொண்டுவருவது சாத்தியமா? என்ற கேள்வியை சில வேளை எழுப்பலாம். நாம் ஜரோப்பிய நாடு ஒன்றில் இருந்தபடி இதை விவாதிப்பது முரண்பட்ட நிலையே. இருந்தபோதும் இதைக் கோட்பாட்டு ரீதியில் விமர்சிக்காமல் விடுவது தவறானது.

 

எந்தநிலையில் எந்தக் கருத்தையும் கோட்பாட்டு அடிப்படையிலேயே அணுகவேண்டும். அது வெளிப்படும் தன்மையில் மட்டுமே வேறுபாடுகள் அமையலாம். இதை சரிநிகர் கடைபிடிக்கவில்லை. அதற்கு மாறாக சரிநிகர் மாற்றுக்கருத்துக்களை பிரசுரிக்க ஒரு நிறுவனமாக அதை பாதுகாப்பவராக, அச்சிடுவோராகவும் உள்ளனர். இது இச் சமூக அமைப்பில் எதையும் சாதித்துவிட மாட்டாது. இச்சமுக அமைப்புக்குள் பூர்சுவா ஜனநாயகக் கோரிக்கையாக மட்டுப்படுத்தி விடுகின்றது. மாற்றுக்கருத்துக்களை மார்க்சியம் கொண்டுள்ளது. அந்த வகையில் கூட சரிநிகர் வெளிவரவில்லை. நாம் திறந்தபக்கமே, எமக்கு அவர்கள் எழுதலாமே என சரிநிகர் சிலவேளை கேள்வி எழுப்பலாம். இதை ஜரோப்பிய சஞ்சிகைகள் எல்லாம் விதிவிலக்கின்றி கூறிவருகின்றன. இது தோற்றுநோயாக தமது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த கைக்கொள்ளும் வாதமே. நாம் விவாதிப்பது ஆசிரியர் குழுவின் கருத்துக்களையே ஒழிய வாசகர்களை அல்ல  மாற்றுக் கருத்துக்கு பத்திரிகைகள் என்று கூறியபடி வெளிவரும் அனைத்துப் பத்திரிகைக்கும் ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

நாம் முன்பு தூண்டில் ஆசிரியர் குழுவிடம் தூண்டிலில் வெளிவரும் கதைகள் தொடர்பான ஒரு விவாதத்தை நடத்தினோம். கதைகளை வெளியிட எந்த அரசியல் வரையறை இன்மையைச் சுட்டிக்காட்டியபோது தமது சந்தர்ப்பவாத நிலையை நியாயப்படுத்தினர். அப்போது நாம் கூறினோம், நீங்கள் வெளியிடும் கதைகளை விட ஆனந்தவிகடன் குமுதம்,--- களில் சிறந்த கதைகள் வெளிவருகின்றன- அதை நாம் மீண்டும் பிரதி பண்ணி அனுப்பின் நீங்கள் வெளியிடுவீர்கள். அதைப் புகழ்ந்து தள்ள ஓர் கூட்டம்  இருக்கும் என்றோம். அப்போது தூண்டில் ஆசிரியர் தயவு செய்து அப்படி செய்து போடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.  இந்நிலையில் தூண்டில், சரிநிகர், மனிதம் சுவடுகள் ஒசை,---- என அனைத்தும், கதையைப்போல் கட்டுரைகள்--- என அனைத்தும். இதை மதிப்பிட ஆசிரியர் குழுவிற்கு எந்த அரசியல் வரையறையும் கிடையாது. இதுவே இன்று வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளின் நிலை. இதை எப்போது தகர்க்கப் போகிறோம். சரிநிகராக மனிதர்கள் இருக்க புரட்சியும் அதற்கான தத்துவமும் தேவை. அத்தத்துவத்தை சரிநிகர் அடைய உயர்த்துவீர்களா?

சஞ்சீவி


டென்மார்க்கில் இருந்து வெளிவரும் இச் சஞ்சிகை இதுவரை பல இதழ்களை வெளியிட்டுள்ளது. முதலாவது இதழில் பிள்ளையார் படத்துடன் தொடங்கி இன்று ஒரு அரசியல் திட்டம் வைக்குமளவிற்கு பல மாற்றத்தை பெற்றுள்ளது. இருந்தபோதும் இன்று வரை இச்சஞ்சிகை மற்றைய சஞ்சிகையில் இருந்து வேறுபடாத வகையில் கருத்துக்குப் பொறுப்பு ஏற்பது கிடையாது. எந்தக்கருத்தின் மீதும்  அரசியல் வரையறை கிடையாது. புலி எதிர்ப்பு, அரசு எதிர்ப்பில் சஞ்சிகையை கொண்டுவரும் பொறுப்பில் மட்டும் ஆசிரியர் குழு உள்ளது. குறுக்கு எழுத்து முதல் கம்யூனிச சார்பு கட்டுரை வரை வெளிவருகின்றது.

 

யு.என்.ஒ இலங்கை வரவேண்டும் என கையெழுத்து வேட்டை நடத்த சஞ்சீவி கோரியது. இன்று மூன்றாவது பாதைக்கான திட்டத்தை முன்வைத்து தமது கடந்தகால சந்தர்ப்பவாதத்தை சுயவிமர்சனம் செய்ய முனைகின்றனர்.  இதற்கப்பால் திட்டத்தின் அடிப்படையில் சஞ்சீவியின் கருத்துக்களை எதிர்காலத்தில் வெளிக்கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  சஞ்சீவியாக இருக்க விரும்பின் அதைக் கொடுக்க வேண்டும். அதை இறுதி இதழில் முன்வைத்த நீங்கள் அதை பிரச்சாரம் செய்பவர்களாக மாறுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

 

தேடல்
 
கனடாவிலிருந்து வெளிவரும் இச்சஞ்சிகை இதுவரை பதினோரு இதழ்களை வெளியிட்டுள்ளது. மனிதத்தைப் போல கனடாவில் பெரிய குழுவாக செயல்படுகின்றனர்.  சில நிகழ்ச்சிகளையும் செய்கின்றனர்.  தேடலைப் பொறுத்தவரை புலி எதிர்ப்பு, அரசு எதிர்ப்பை உயர்த்திப்பிடிக்கும் இவர்கள் எந்தக் கருத்தின் மீதும் தமக்கான அரசியல் வரையறையைக் கொண்டு சஞ்சிகையை வெளியிடவில்லை. மாறாக அச்சடிக்கும் பணியைதான் ஆசிரியர்குழு செய்கிறது.

 

தேடல் எனக் கூறியபடி ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு தலைமை கொடுக்கும் பணியை நிராகரித்து தமது சந்தர்ப்பவாத நிலையைத் தொடர்கின்றனர். தேடல் எனக் கூறியவர்கள் தேடலை ஒரு குறித்த திசையில் நோக்கி நகரும் போதே தேடமுடியும்.  இல்லாது திசை தெரியாது தேடின் அது முடிவற்றதே. குறித்த திசையில் தேடுவீர்களா? இதுவரை தேடியதை முன்வைப்பீர்களா?
 
உயிர்ப்பு
 
லண்டனில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகை இதுவரை மூன்று இதழ்களை வெளியிட்டுள்ளது. மற்றைய சஞ்சிகைகளை விட வேறுபட்ட தன்மைகளை கொண்டுள்ளது. அதாவது கவிதை, கதை, என பக்கங்களை நிரப்பாது போராட்டத்தின் மீது தமது கட்டுரைகளை வெளியிடுகின்றனர். பெரிய கட்டுரைகளை வெளியிடும் இவர்கள் கட்டுரை மீது பொறுப்பேற்பது கிடையாது. அதாவது எல்லாச் சஞ்சிகைகளையும் போல் சஞ்சிகை ஆசிரியர்களிடத்து கருத்தில்லாமல் வெளிவருகிறது. பிழைப்புவாத பிரமுகர்களுக்கு வக்காலத்து வாங்கும் உயிர்ப்பு புலி, அரசு எதிர்ப்புக்களால் விமர்சனங்களை நிராகரிக்கின்றனர். 

 

உயிர்ப்பு என்கின்றபோது உயிர்ப்பு பெற சில அணுக்கள் இணைய வேண்டும். அந்த வகையில் இணைப்புக்கான அணுக்களை கைவிட்டு சம்மந்தமில்லாத அணுக்களை இணைக்க முயல்கின்றனர்.  குழந்தை உண்டாக ஆண் பெண் விந்துக்கள் இணையின் உயிர் உண்டாகும். இதை விடுத்து மனித விந்தையும் விலங்கின விந்தையும் கலந்து உயிரைத் தேடுகின்றனர். அதாவது மார்க்சியத்திற்க்கும் திரிபிற்கும் வித்தியாசம் இல்லை எனக் கூறி திரிபைப் பாதுகாக்கின்றனர். திரிபை பாதுகாப்பின் உயிர்ப்பு பெறமுடியாது. உயிர்ப்பை பெற திரிபை நிராகரிப்பீர்களா?

ஒசை
 
பாரிசில் இருந்து வெளிவரும் இவ்விதழ் பதினைந்து இதழ்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. இச்சஞ்சிகை மற்றைய சஞ்சிகைகளைப் போல் புலி, அரசு எதிர்ப்பைக் கைக்கொள்ளுவது கதை, கவிதை,---- என இலக்கியத்துக்கு என வெளிவருகிறது. அதாவது அரசியல் பற்றி மௌனம் சாதித்தபடி கலை கலைக்காக என்ற கோசத்தின் அடிப்படையில் வெளிவருகிறது. அரசியல் பற்றி எந்த வரையறையும் இலக்கியம் மீது கொண்டிராது வரும் இலக்கியங்களை தொகுத்தபடி வெளிவருகிறது. ஓசையாக இருக்க எதையும் செய்யவில்லை(சொல்லவில்லை) மணி ஓசைபோல் ஒலிக்க ஒரு கருத்தைப் பற்றி பிடித்து ஒசையாக இருக்கக் கோருகிறோம்.

 

மௌனம்
 
பாரிஸில் இருந்து வெளிவரும் இவ்விதழ் இதுவரை 3 இதழ்களை வெளியிட்டுள்ளது. வடிவமைப்பில் சிறப்பாக உள்ள போதிலும் ஒசை போன்று ஒரு இலக்கியப்பத்திரிகையே. மௌனம் என்ற  பெயர் பற்றி அவர்களின்  விளக்கக் குறிப்பில் சிலர் மௌனமாக வைக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர். இது யாரை என்ற கேள்வியை எழுப்பும் நாம் இதுபற்றி பரவலான விமர்சனத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஈரோஸ் பாலகுமாரையும் அவரது சகபாடிகளையுமே இப்படிக் குறிப்பிடுகின்றனர் என்ற விமர்சனமும் பொருத்தமானதே. மௌனம் எனக் கூறியபடி மௌனமாக எல்லாப் பிரச்சனை மீதும் உள்ள நிலை முன்பு ஈரோஸ் செய்ததை நினைவுபடுத்துகிறது. மௌனம் எதற்காக? எதைச் சாதிக்கும்?. மௌனமான நிலை, அதுவும் பிரான்சில் எனின் இதில் உள்ளது மிக மோசமான சந்தர்ப்பவாதமே. மௌனமாக இருப்பதை விட்டு(சந்தர்ப்பவாதத்தை விட்டு) வெளிவருவீர்களா? உங்கள் கருத்தை மௌனத்தைக் கலைத்து முன்வைப்பதே ஒரு சஞ்சிகையின் கடமை.

 

சக்தி
 
இது நோர்வேயில் இருந்து வெளிவருகின்றது. இது வரை 9 இதழ்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சக்தி பெண்கள் சஞ்சிகையாக வெளிவருகின்றது. இச்சஞ்சிகையும் மற்றைய சஞ்சிகையைப்போல் எந்தக் கோட்பாட்டின் கீழ் வருவதில்லை. அனைத்து வகை பெண்களும் எழுதும் இச்சஞ்சிகை எந்தப் பெண்விடுதலையையும் சாதிக்கப் போவதில்லை. காரணம் மாறுபட்ட வர்க்கம் உள்ள சமுதாயத்தில் எல்லாப் பெண்களையும் ஒரு அமைப்பாகத் திரட்டிவிட முடியாது. இச்சஞ்சிகையில் ஜரோப்பிய பிரமுகர்களுக்கு தளம் அமைத்து கொடுத்துள்ளனர். பெண்விடுதலையை வென்றெடுக்க அதற்கு என கோட்பாடு அவசியம். ஆனால் எல்லாச் சஞ்சிகையையும் போல் எந்தக் கோட்பாடுமற்ற நிலையைக் காப்பாற்றுவதன் ஊடாக சந்தர்ப்பவாத நிலையை பேணுகின்றனர். சக்தியாக இருக்க வேண்டின் ஒரு குறித்த இலக்கை உடைய கோட்பாட்டில் சக்தியாக இருக்க வேண்டும். உங்கள் சக்தியை கோட்பாட்டின் அடிப்படையில் இனங்காட்ட முன்வருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
 
சிந்தனை
 
ஜேர்மனியில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகை இதுவரை 10 இற்கு மேற்பட்ட இதழ்களை வெளியிட்டுள்ளனர். இச்சஞ்சிகை தம்மை ரோஸ்கியவாதிகள் எனக் கூறிய போதும் ரோஸ்க்கியின் கருத்துக்களுக்கு விசுவாசம் தெரிவித்தது கிடையாது. எல்லாச் சஞ்சிகையைப் போல் கருத்துக்கு பொறுப்பேற்பது கிடையாது.  சுயதிருப்தியில் ஈடுபடும் இவர்கள் மார்க்சிய விரோதக் கருத்துக்களுக்கு வடிகாலாக உள்ளனர். இலங்கையில் சீரழிந்து போனதும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக் கட்சியின் மந்திரிசபையில் அங்கம் வகித்த பழைய முதலாளித்துவ கம்யூனிஸ்டுக்களைப் போற்றி புகழ்ந்துள்ளனர்.  அரச எதிர்ப்பு, புலி எதிர்ப்பு கொண்ட அனைத்து வகை கருத்திற்கும் சந்தர்ப்பவாத நிலையை பேணுகின்றனர்.  சிந்தனையாக சிந்திக்க வழிகாட்ட எந்தக் கோட்பாட்டையும் உயர்த்தத் தயார் இன்றி சந்தர்ப்பவாதமாக உள்ளனர். உங்கள் அரசியல் கோட்பாட்டை வைப்பீர்களா?
 
அ.ஆ.இ
 
டென்மார்க்கில் இருந்து வரும் இச்சஞ்சிகையின் இதுவரை 16  இதழ்கள் வெளிவந்துள்ளன. இச்சஞ்சிகை இன்று பிழைப்புவாத பிரமுகர்களின் ஒரே சஞ்சிகையாக மாறியுள்ளது.  இவர்களும் மற்றைய சஞ்சிகையைப் போல் கருத்துக்கு பொறுப்பேற்பது கிடையாது. புலி, அரசு எதிர்ப்பை உயர்த்தும் இவர்கள் மார்க்சியவிரோத கருத்துக்களின் களமாக இன்று மாறியுள்ளனர். மார்க்சிய கருத்துக்களை நிராகரிக்கும் இவர்கள் இன்று பிழைப்புவாத பிரமுகர்கள் போலி பிற்போக்குகளுக்கு களமாக மாறியுள்ளனர். போலிகளை புகழ்வதிலும் முன்நிலைக்கு சென்றுள்ளனர். கலை கலைக்காக என்ற கோசத்தை அதிகமாக உயர்த்திப் பிடித்துள்ளனர். அ.ஆ.இ உடன் நின்று சிறுபிள்ளைக்கு உரிய வகையில் புகழ்ந்து தள்ளுகின்றனர். அ.ஆ.இ கற்று ஈ. உ க்கு செல்ல வேண்டும் என்ற நிலையை நிராகரிக்கின்றனர். 

 

ஊதா

 

ஜேர்மனியில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகை 2 இதழ்கள் வெளிவந்தது எனக் கருதுகிறோம். இன்று இச்சஞ்சிகை வெளிவருவது நின்றுவிட்டது என ஒரு தகவல். இப் பெண்கள் சஞ்சிகை சக்தியை விட எந்தவிதத்திலும் மாறுபட்டது அல்ல. ஜரோப்பிய சஞ்சிகையைப் போல் 10 தோடு 11 ஆகும்.

தேனீ

 

ஜேர்மனியில் இருந்து வெளிவரும் இச் சஞ்சிகை எத்தனை இதழ்களை வெளிக்கொண்டு வந்தது எனச் சரியாக அறிய முடியவில்லை. இன்று இச்சஞ்சிகை வெளிவருவது நின்று விட்டது என ஒரு தகவல். இது பெண்கள் சஞ்சிகை இது சக்தியை விட எந்தவிதத்திலும் முன்னேறியதில்லை. ஆனால் சக்தியை விட தேனீ, ஊதா மத்தியதர பெண்களின் குரலாகவே அநேகமாக ஒலித்தது. சக்தி எல்லாவித பெண்களின் கருத்தையும் கொண்டுள்ளது.

 

நான்காவது பரிணாமம்

 

கனடாவில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகை இதுவரை 12 இதழ்கள் வெளிவந்தன. இச் சஞ்சிகை ஓசை, மௌனத்தில் இருந்து பெரியளவில் மாறுபட்டது இல்லை. கலை கலைக்காகவே என்ற ரீதியில் வெளிவருகின்றது. கவிதை, கதைகளை நிரப்பி வெளிவரும் இச்சஞ்சிகை ஈழப்போராட்டத்தின் மீது பெரிய அளவில் தனது கருத்தைக் கூறுவதை தவிர்க்கின்றது.

 

மரபு

 

அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகை இதுவரை 18 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதுவும் ஓசை, மௌனம், நான்காவது பரிணாமத்தில் இருந்து வேறுபட்டது இல்லை. கலை கலைக்காகவே என்ற வாதத்தில் இருந்து வெளிவருகின்றது. ஈழப்போராட்டம் தொடர்பாக பெரியளவில் அக்கறைப்படுவது இல்லை.

 

மீட்சி

 

லண்டனில் இருந்து வெளிவரும் இப் பத்திரிகை 7 இதழ்கள் வெளிவந்துள்ளன. இச் சஞ்சிகையை விடுவோர் முன்பு இந்தியாவில் இருந்த இன்பமேசன் சென்றருடன் தொடர்புடையோரே. அகதிகள் பற்றி அதன் சட்டதிட்டங்கள் பற்றி அனேகமாக எழுதும் இவர்கள் மேற்தட்டு வர்க்கத்தின் கனவுகளை திருப்தி செய்யும் ஒரு பத்திரிகையாகும். புலி பற்றி மௌனம் சாதிக்கும் இவர்கள் அரசுக்கு எதிராக அவ்வவ்போது எழுதுகின்றனர். இடைக்காலத் தீர்வுக்கு அதிகமாக முயலும் இவர்கள் மேல் தட்டுப்பிரிவினரின் படித்த பிரிவினரைச் சார்ந்தும் உள்ளனர்.

 

எரிமலை, மண், வான்மதி

 

என்பன புலிகள் சார்புப் பத்திரிகை. பாசிசத்தின் தூண்களாகச் செயல்படுகின்றனர்.
 
சுமைகள்

 

நோர்வேயிலிருந்து வெளிவரும் இச் சஞ்சிகை இதுவரை 8 இதழ்களை வெளியிட்டுள்ளது. இன்று நின்று போய்விட்டது என ஒரு தகவல். இச் சஞ்சிகை மற்றைய சஞ்சிகையில் இருந்து வேறுபட்டதில்லை. சுவடுகள் போல் சுயதிருப்தியின் தன்மை வெளிப்படுகிறது. எந்தக் கோட்பாடும் அற்ற இச் சஞ்சிகை அரசு, புலி எதிர்ப்பை கொண்டுள்ளது. சுமைகளை இல்லாது ஆக்க கோட்பாட்டை வைக்க சந்தர்ப்பவாதமாக வெளிவந்தது. 

 

கதிர்

 

பாரிஸில் இருந்து வெளிவரும் முகவரி அற்ற சஞ்சிகை. ஒரு சமய சஞ்சிகையைப் போல் வெளிவருகிறது.
 
நின்று போன சஞ்சிகைகள் பற்றி சிறு விமர்சனம் ஒன்றை முன்வைக்கிறோம்
 
கண்

 

பாரிஸில் இருந்து வெளிவந்த இப் பெண்கள் சமையல் குறிப்பு முதல் அனைத்து வண்ணமுடனும் வெளிவந்தது. இது மேல் தட்டு வர்க்கப் பெண்களை திருப்தி செய்தது.

 

தேடல்

 

பாரிஸில் இருந்து வெளிவந்த இச் சஞ்சிகை ஈ.பி. சார்பு நிலையை பேணியது. இந்திய சார்பு நிலையை உயர்த்தியது.

 

பள்ளம்

 

இரு இதழ்களே வெளிவந்தது. புலிகள் தாக்கினர் என ஒரு பொய்யான காரணத்தை சொல்லி நின்று போனது. இச்சஞ்சிகை சுயதிருப்தியின் தன்மையுடன் சிலரை புகழ்வதில் போய்விட்டது.

 

நமது குரல்

 

பெண்கள் சஞ்சிகையான இவ் இதழ் ஜேர்மனியில் இருந்து வெளிவந்தது. இதுவும் மத்தியதர வர்க்க பெண்களின் குரலாக வெளிவந்தது.

 

புதுமை

 

ஜேர்மனியிலிருந்து வெளிவந்த இச்சஞ்சிகை பல வண்ண திரிபுகளின்  களமாக விளங்கியது. சுயதிருப்தியின் தளத்தில் வெளியாகியது இச் சஞ்சிகை.

 

வெகுசனம்

 

ஈ.பி சார்பு பத்திரிகையாக வெளிவந்தது.  மற்றும் கடல், நகர்வு, அருவி, சிந்து, சிறுவர்மலர், கலை விளக்கு, கதிர், நண்பன், தமிழ்நாதம், அக்கினிகுஞ்சு, பெண்கள் சந்திப்பு, காலம், அமுதம்,  தமிழீழம், தமிழ் முரசு, செய்திக் கதிர், கலாச்சாரம், அஞ்சல், நூலகம், அடுத்த காலடி,------ என பல வெளிவந்தன. இவை புலி- ஈ-பி சார்பு என சில அதற்கு வெளியில் மற்றைய சஞ்சிகைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத வகையில் வெளிவந்த கோட்பாடற்ற பல வண்ண பத்திரிகையே. 

 

நாம் இனி எமது பத்திரிகையையும் கூறவேண்டியுள்ளது. சமர் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் வெளிவருகிறது. எம்மீதான விமர்சனங்கள் பெரும்பாலானவை மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை.  பரந்துபட்ட வாசகர்களை திரட்டாத எமது சஞ்சிகை முன்னேறிய பிரிவினரை சார்ந்து வருகிறது. இதை மாற்ற நாம் முனைந்துள்ளோம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டி பின் தங்கியது முதல் முன்னேறிய பிரிவினர் வரை சமூகத்தை புரிந்து கொள்ள அரசியல் கட்டுரைகளை உள்ளடக்க முனைகிறோம். அழகியல் குறைபாடுடைய எமது பத்திரிகையை எதிர்காலத்தில் திருத்த முனைகிறோம்.  இறுதியாக முன்பு புதிய ஜனநாயகம், சஞ்சிகைகள் பற்றி வைத்த விமர்சனத்தின் மீதான எமது  பார்வையை முன் வைக்கின்றோம்.

 

சமருக்கும் மனிதத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துமோதல்களின் போது மனிதம் சார்பாக சிலர் புதிய ஜனநாயகம் முன்வைத்த விமர்சனத்தை சுட்டிக்காட்ட முனைகின்றனர். புதிய ஜனநாயகம் விமர்சனம் முன்வைத்த காலத்தில் சமர் வெளி வராதது குறிப்பிடத்தக்கது. புதிய ஜனநாயகம் முன்வைத்த விமர்சனத்தை ஒட்டி நாம் ஒரு விமர்சனத்தை புதிய ஜனநாயகம் நோக்கி முன் வைத்தோம். ஆனால் பதில் தரப்படவில்லை. மனிதம் பற்றிய புதிய ஜனநாயகம் முன்வைத்த கருத்துக்கள் சஞ்சிகையில் இருந்து முழுமையாகப் பெற்றது அல்ல. மாறாக நேரடி விவாதம் மூலம்    பெற்றவையாகவும் இருக்கலாம் என நம்புகிறோம்.

 

ஆனால் இன்று புதிய ஜனநாயக மதிப்பீட்டுக்கு புறம்பாகவே மனிதம் உள்ளது. அதற்குள் மாறுபட்ட பல சக்திகள் உள்ளதும். ஒவ்வொரு நபரின் கருத்தும் மனிதம் ஆகிவிட மாட்டாது. இதை புதிய ஜனநாயகம் காணத்தவறியது. சீர்திருத்தங்கள் கோட்பாடு அற்று உள்ள போது அது பிற்போக்கை உறுதிப்படுத்தும் என்பதை  புதிய ஜனநாயகம் காணத்தவறியது. மற்றும் அவர்கள் சீர்திருத்தம் என்றும் பெரிய அளவில் செய்து விடவில்லை.  மாறாக சீரழிவுச் சினிமாவை நிராகரிக்கக் கோரியயபடி அதைப் பாராட்டியும் எழுதுகின்றனர். இந்த வகையில் தான் எல்லாம். மனிதம் விற்பனை செய்யும் போது ஆண்கள் விற்பதை விட பெண்களைக் கொண்டு விற்பதை முதன்மைப்படுதுகின்றனர். இது ஒரு விளம்பரம் என கூறினர். இப்படிப் பல. புதிய ஜனநாயகத்தில் சஞ்சிகைகள் பற்றிய மதிப்பீடுகள் சரியாக இருந்த போதும் சிலவற்றை தவறாக மதிப்பீடும் செய்துமுள்ளனர்.