Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...05

ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...05

  • PDF

1974 ஆம் ஆண்டு புதுவருடத்தைத் தொடர்ந்து, வடக்கே நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பமாகியிருந்தது. வடக்கே தென்னோலைத் தோரணங்களும், வாழைமரங்களும், மின் அலங்காரங்களும், சப்பறங்களும், அலங்கார வளைவுகளுமாக யாழ்நகரம் விழாக்கோலம் கொள்ளத் தொடங்கியது.

இவ் ஆரவாரங்கள் இப் புத்தாண்டையடுத்து ஆரம்பமாகி இருப்பினும், மாநாட்டுக்கான முயற்சிகள் 70 களின் தேர்தலுக்கு முன்னரே தொடங்கப்பட்டும் இருந்தது. 22-1-70-இல் யாழ் - வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மாநாட்டையொட்டி முன்னைநாள் மலேசியப் பல்கலைக்கழக இந்தியத் துறைப் பேராசிரியரும், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இணைச்செயலாளரும், “தமிழாராய்ச்சி ஏடு”  (Journal of Tamil Studies ) ஆசிரியருமான அறிஞர் தனிநாயகம் அடிகள் கருத்தரங்கு ஒன்றை நடத்த இருந்தார்.

 

இக்கருத்தரங்குக்கு முதல்நாள் ''நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு - நமது பொறுப்புக்கள் யாவை?” என்ற கட்டுரை (21-1-70 இல்) 'ஈழநாடு' பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

 

இக்கட்டுரை அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின் பொறுப்பை 'நறுக்'கென்று சொல்லியிருந்தது. 'இதிகாசங்கள், புராணங்களின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்வதைவிட, இன்றைய யதார்த்த நிலையிலிருந்து இவ்வாராட்சி மாநாட்டை நடத்தும்படி' இது கோரியிருந்தது. இக்கட்டுரை சிங்கள தமிழ் புத்திஜுவிகளை, கல்விமான்களை கவர்ந்துமிருந்தது. மாநாட்டுக் குழுவினர் இக்கட்டுரையின் கருத்தை ஏற்றுக்கொண்டதுடன், மூன்றாவது தமிழாராய்ச்சி குழுவுக்கும் (பிரான்ஸ்) இதை அனுப்புவது எனத் தீர்மானித்தனர். இக்கட்டுரை பின்னர் புத்தகமாக வெளிவந்துமிருந்தது.

 

தமிழ்மொழியைப் பேசுகின்ற முதலிரு மாநாடுகளையும் நடத்திய ஆசியநாடுகளில், அந்நாட்டு அரச தலைவர்களே இம்மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இதனால் சிறீமாவோ பண்டாரநாயக்கா இம்மாநாட்டைத் தொடங்கி வைக்கவேண்டும் என்ற பிரச்சனை 'தேர்தலின் (70) பின்னர் தரகு அரசியல்களுக்கு இடையே பலத்த முரண்பாடாக மாறத் தொடங்கியும் இருந்தது.

 

72 இல் புதிய அரசியல் அமைப்பை அடுத்து இப்பிரச்சனை முறுகல் நிலையை எட்டியிருந்தது. ''பிரதமர் சிறிமாவை மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் கவுரவிக்கப்படுவது முரண்பாடாக அமையும்'' என்று இளைய தீவிரவாத தலைமுறையினரும், தீவிரவாத இளைஞர்களுக்கான அரசியல் போக்காக இதைப் புடம்போட்டுக் காட்டும், வணிகத்தரகுகளின் கபடம் நிறைந்த 'தரகுப் போட்டியின்' பழிவாங்கும் அரசியலாக இம்மாநாடு கையாளப்பட்டது!

 

இம் முரண்பாடானது முற்போக்காளரை அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் - இலங்கைக் கிளையில் இருந்து வெளியேறவும், இம்மாநாட்டை பகிஸ்கரிக்க முற்படவும் வைத்தது. அனைத்துலக தழிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் டாக்டர் எச்.டபிள்யூ. தம்பையா தனது தலைமைப்பதவியைத் துறந்திருந்தார். டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா, கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர். இவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்தார்.

 

1972 ஆம் ஆண்டிலேயே  இலங்கைக் கிளையின்  'மாநாட்டுக்கான' பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள 'சாந்தம்' மனையிலே கூடுவதற்கு முன்பே....

 

வணிக, தொழிற்துறைத் தரகுமுகாம்களின் நலன்சார்ந்த இரு முகாமைத்துவக் கட்சிகள், இக்கிளைக்குள்ளேயே உருவாகியிருந்தன. ஆளுங்கட்சி  தொழிற்துறை தரகுநலன் சார்பாக கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்க இருந்த முகாமைக் குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத  -வணிகத்தரப்பு நலன் சார்ந்த - வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே தமது ஆளுமையைக் கொண்டுவர திட்டமிட்டனர்.

 

இதனால் ஆளுங்கட்சி தரப்பு எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும், இளைஞர் ஆதரவுகளும், பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றனர். அன்று முதல் தொடர்ந்து பல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே 'இந்த வெற்றி' தீவிரவாத இளைஞர் மட்டத்திலும் அதன் மேய்ப்பர்களாலும் சிலாகித்துப் பேசப்பட்டன.

 

இந்தக் கூட்டம், இலங்கை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபையை உருவாகியது. இச்சபைக்கு கோலாலம்பூர் மாநாட்டில், தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலவர்களில் ஒருவராக அங்கு நியமனம் பெற்றிருந்தார்! தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினரின் கருத்தை ஆதரித்தவர். ஆயினும், அவரை -இக்கூட்டத்தில்-  இலங்கைக் கிளையின் முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்த போது யாருமே மறுப்புத் தெரிவித்திருக்கவில்லை. ''அரசுடன் ஒத்தூதும் இடதுசாரிகளை அநுமதிக்க இடம் வைக்கக்கூடாது!''  என்று  வணிகத்தரகுப்பக்கம் 'துணிந்தவர்களும்', ஆமோதித்தனர்.

 

1973 அக்டோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக்குழுக் கூட்டங்களில், எச்.டபிள்யூ.தம்பையா அவர்கள், ஒரு வருடத்துக்கு மேலாக மாநாட்டினைக் ''கொழும்பிலே வைக்கவேண்டும்'' என்று வலியுறுத்தி வந்தார். 

 

1973-10-02 ஆம் திகதி 'தமிழ் இளைஞர்களை' (ஏனைய அரசியல் போக்கைச் சார்ந்த கைதிகளை அல்ல!) விடுதலை செய்யக் கோரி வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நிகழ்த்தப்பட்டு, கைதிகள் விடுவிக்கப்படத் தொடங்கியபோது மூன்றாவதுநாள் நடத்தப்பட்ட முகாமைக்குழுக் கூட்டத்தில் தம்பையாவைப் பார்த்து ''தலைமைப் பதவியினைத் துறக்கும்படி '' வணிகத்தரகு சார்பினர் முகத்திற்கு முன்னே கேட்டனர். அவரும் உடனே தனது பதவியை துறந்திருந்தார். இவரும் பதிலுக்கு, இந்தக் ''கவரிமான்''களிடம் தான் நன்கொடையாக வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டும் கொண்டார்.

 

இதையடுத்து  1973-10-05 ம் திகதி பேராசிரியர் சு.வித்தியானந்தனை தலைவராகவும், கட்டடக்கலை வரைஞர் துரைராஜாவை செயலாளராகவும், கோ.மகாதேவாவை பொருளாளராகவும் கொண்டு புதிய இம் 'மாநாட்டுக்குழு' அமைக்கப்பட்டது. இதன்பின் பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன்) தனியனாகவே அமைச்சரைச் சந்தித்தார்.  இதன்போது அமைச்சர் மூன்று அம்சக்கோரிக்கையை முன்வைத்தார்.

 

1. மாநாடு கொழும்பிலே நடத்த வேண்டும்; மாநாட்டிற்கு பண்டாரநாயக்க மண்டபத்திலே எவ்விதமான கட்டணமும் இன்றி இலவசமாகத் தரப்படும்.

2. பிரதமர் சிறிமா மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்.


3. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும் முன்வைக்கப்பட்டன.

 

''தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்து விட்டார், அதனால் பேச்சுகே இடமில்லாமற் போய்விட்டது.'' என தீவிரவாத இளைஞர்களை உசுப்பேத்தி மகிழ்ந்தனர். (மேற்படி முரண்பாடுகளே புதிய தலைமையை உருவாக்கியது என்பது இங்கு சுவாரசியமானது. பிரான்சில் -70இல்- நடந்த மாநாட்டில் இலங்கைக் கிளை சார்பாக பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ். எம். கமாலுதீன் எனும் மூவரும் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.)

 

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஜக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தோங்கியது. அதேவேளை அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராகவும் இருந்தார். இந்தக் கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினரை ஓரங்கட்டும் முகமாக ''அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டுகின்றனர்.'' என இவர்கள் இளைஞர்களை இனவாதமாகத் தனிமைப்படுத்தினர். (இவ் - இ.மு.எ.ச- முக்கியஸ்தர்களே பின்னாளில் புலித்தேசியத்தின் பீரங்கிகளாக இருந்தனர் என்பது முரண்நகையாகும். இவை பற்றி அக்கால நிகழ்வுகளுடன் ஆராய்வோம்.)

 

இவை அனைத்தும் 73ஆம் ஆண்டு கால்இறுதிஆண்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

 

இக்காலத்தில் தெற்கிலே, 71 கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட யே.வி.பி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படியும், அவர்களை புனர்வாழ்வு மற்றும் இயல்பு பொதுவாழ்க்கையில் இணைக்கும்படியும், கொல்லப்பட்ட யே.வி.பி உறுப்பினர்களின் குடுப்பத்தினருக்கு நட்டஈடு வழங்கும்படியும், யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் உரியபடி விசாரிக்கப்பட வேண்டுமெனவும் சிங்கள மக்களின் வலியுறுத்தல்கள் அமைப்புருவாக மேலெழுந்திருந்தன.

 

இந்நெருக்குதலின் விளைவும், மாநாட்டில் வெளிநாட்டவர்களின் பங்குபற்றுதலும், நெருங்கிவரும் 'சிறிமா - இந்திரா' ஒப்பந்தத்தையும் அரசு கணக்கில் கொண்டு அரசு:- ஒரு தொகுதி கைதிகளை 73 இறுதி மாதங்களில் விடுதலை செய்தது.

 

யே.வி.பியின் முக்கிய தலைவர்கள் மற்றும் இக்கிளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்தவர்கள் புறநீங்கலாக, ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண் உட்பட, இலங்கை திராவிடக் கழக உறுப்பினர், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க உறுப்பினர்கள் (கே.டானியல் உட்பட), தமிழ் தீவிரவாத இளைஞர்களில் குட்டிமணி தவிர - ஏனையோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 

அரசு தலைநகரில் மாநாட்டை நடத்தி, அதற்கு ஒத்துழைப்பை வழங்கி - திறந்துவைத்து - 'நல்லபிள்ளைத் தரகாக' தனது முரண்பாட்டை மாற்ற அரசு காய்களை நகர்த்தியது. யாழ்.வீரசிங்கம் மண்டபம் உட்பட, யாழ்.மேயரின் நிர்வாகத்தின் கீழிருந்த முற்றவெளி அரங்கமும், அரச பாடசாலை மற்றும் பொதுமண்டபங்களும் மாநாட்டு குழுவுக்கு புத்தாண்டுக்கு முன் மறுக்கப்பட்டது.

 

இச்சதுரங்க விளையாட்டுக்கு எதிர்க் காய் நகர்த்தலாக, குடாநாட்டு திரைப்பட மாளிகையின் உரிமையாளர்கள் பேரம்பலத்தின் கடிதமூலமான வேண்டுகோளை ஏற்று ''1974 தை 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நான்காம் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ்நகரில் இடம்பெறும் என'' இலவசமாக  விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கரையோர கடல் கண்காணிப்பை வழமைக்கு அதிகமாக அரசு அதிகரித்தது. (இந்தியாவில் இருந்து மாநாட்டுக்கு பேச்சாளர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க)

 

இந்த நேரத்தில் குட்டிமணி வெடிமருந்து 'சக்கைகளை' ஏற்றி வள்ளத்தில், இலங்கைக்கு கடத்திவர முற்பட்டார். இவ்வள்ளம் கடற்படையினரின் கண்ணில் ஏத்துப்படவே, குட்டிமணி இந்தியாவை நோக்கி ஒடி தப்பித்த வேளை இந்தியக் கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டார். பின்னர் இவர் (கருணாநிதி அரசால்) இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நிகழ்த்தப்பட்டது (02-10-73).

 

இந்த நிகழ்வுகளை அடுத்து.....

 

1973 ஜப்பசியில் சம்பத்தரிசியார் கல்லூரியில் நடந்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியின் போது, இராணுவத்துக்கும் குருநகர் மக்களுக்கும் இடையில் நடந்த தகராறைத் தொடர்ந்து....

 

சேந்தாங்குளம் சந்தியில் சங்கானை சங்கரத்தைக்காரர் ஒருவருக்குச் சொந்தமான காரொன்றை இராணுவத்தினர் தீயிட்டுக் கொழுத்தியிருந்தனர். மேற்படி தகராறைச் சாட்டாக வைத்து, சேந்தாங்குளத்தில் இருந்து வல்வை வரையான கரையோரப் பாதையோரக் (ஏ - 40) கடைகளை கொள்ளையிட்டும், இவ்வீதியால் வருவோர் போவோரை ஆங்காங்கே தாக்கியும் அரச பொலீசார் அட்டகாசம் செய்துமிருந்தனர்.

 

1973 நவம்பரில் மலையகப் பகுதியில் யூஎன்பி மற்றும் தொண்டமான், தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புடன் ''மக்கள் வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில்'', விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருந்த 10 தீவிரவாத இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள மலையகம் சென்றனர். இதில் ஒருவர் சிவகுமாரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்பின்னணியில் தான் 1974 ஆம் ஆண்டும் பிறந்தது.

 

(ஆண்டு 1974 முதலாம் பகுதி)

 

வருடப்பிறப்பு அன்றே அரசு, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை யாழில் நடாத்துவதற்கும், அதற்கான மண்டபங்களுக்கான அனுமதியையும் வழங்கியது. இதையடுத்து யாழ்ப்பாணம் விழாக்கோலம் கொள்ளவும் தொடங்கியது.

 

மாநாட்டின் ஆய்வின் அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், யாழ்.'றிம்மர் கோல்' இலும் நடந்தன. இதன் கலைநிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளியரங்கிலும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்தில் மாலைவேளைகளில் தமிழர் பண்பாட்டுப் 'பொருட்காட்சி' யும் நடைபெற்று வந்தன. இப்பொருட்காட்சியின் போது, சாலை இளந்திரையனைத் தலைவராகவும், குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தை (இவர் ஒரு ஆவணத் தொகுப்பாளர்) செயலாளராகவும் கொண்டு 'உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்' என்ற ஒன்றை சாலை இளந்திரையனால் முன்மொழிந்தும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இம்மாநாட்டுக் காலத்தில் வருகை தந்திருந்த (அரசினால் பலருக்கு அனுமதி -வெளிநாட்டவருக்கு - மறுக்கப்பட்டிருந்தது!) அறிஞர்களுக்கு ஒரு விருந்துபசாரத்தை யாழ் நகரசபை சார்பாக துரையப்பா இறுதிநாள் வழங்க அழைப்பு விடுத்திருந்தார். இவ்வழைப்பை நிராகரிக்கும் படி 'கூட்டணி'யினரும், தீவிரவாத இளைஞர்களும் 'கவரிமான்' என்ற துண்டுப்பிரசுரம் மூலமாகக் கோரியிருந்தனர்.

 

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'அரசியல்வாதிகள்' உரையாற்றுவதை அரசு மறுத்திருந்தது. இருப்பினும் ''உலகத் தமிழர் இளைஞர் பேரவையின்'' தலைவர் டாக்டர் ஜனார்தனனை, தீவிரவாத இளைஞர்கள் கள்ளமாகக் கடத்தி (வள்ளத்தில்) நாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். இது குட்டிமணியின் கைதுக்கு முன்னர், இரகசியமாக நடந்தது.

 

இறுதிநாளான வழியனுப்பு விழாவான 10-01-74 ஆன அன்று '' சென்னையில் இருந்து தலைவர் டாக்டர் ஜனார்தனன் கலந்துகொள்வார் '' எனக் கூட்டணி பிரச்சாரப்படுத்தியும் இருந்தது.

 

ஆனால் தை 3ஆம் நாள் தொடக்கம் 9ஆம் நாளுக்கு பின்னர் மாநாட்டுக்கான அனுமதிகள் அரசால் மறுக்கப்பட்டிருந்தது.

 

10ஆம் திகதி வழியனுப்பும் மாலை விழாவுக்கான அனுமதியை ஏ.ரி.துரையப்பாவிடம் இருந்து கடிதம் மூலமாக வேண்டவேண்டிய நிலை வணிகத் தமிழ் தரகுகளுக்கு உருவானது. 09ஆம் திகதிவரை அனுமதிக்கப்பட்ட திறந்த வெளியரங்கு, 'றொலெக்ஸ்' ஒளி-ஒலி அமைப்பினர் பாவனைக்கும், சப்பறம் மற்றும் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியை அனுபவிக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

இறுதிநாட்களில் தனது 'விருந்துபசாரத்தை' நிராகரித்த மாநாட்டு குழுவினரின் நடைமுறையை அடுத்து, துரையப்பா குடாநாட்டுக்கு வெளியே சென்றிருந்தார்.

இந்த முரண்பாட்டுச் சிக்கலுக்கு இடையில், கூட்டணியினர் 'ஊர்தி ஊர்வலங்களை' திறந்த வெளியரங்கில் நிறைப்பதன் ஊடாக, 10ஆம் திகதியை வீரசிங்கம் மண்டபத்தின் இறுதிநாளை வெளியே - திறந்த விளையாட்டு அரங்குக்கு நகர்த்துவதும் - வில்லங்க கிரிமினல் வக்கில் மூளையை பாவிக்கத் தொடங்கியது. (ஜனார்த்தனனை முற்றவெளியில் பெரும் சனத்திரள் மத்தியில் பேசவைப்பது சாத்தியமென்ற கிரிமினல் திட்டத்தைத் தீட்டினர்)

 

மாநாட்டு குழுவினர் 'சனநெருசலைச்' சுட்டிக்காட்டி, வெளியரங்குக்கு நகர்வதற்கான அனுமதியை  பொலீசாரிடம் கோரினர். பொலீசார் மாநாட்டு மண்டபத்தின் வெளிச் சுவருக்கு வெயியே அனுமதியை மறுத்தனர். இதனால், வீரசிங்கம் மண்டபத்தின்- திறந்த வெளியை- நோக்கிய முன்வாசலுக்கு பிரச்சார மேடையை நகர்த்துவதற்கு மட்டும் பொலீசார் அனுமதித்தனர்.

 

இந்த நிலையை அடுத்து 'ஊர்திகள் திறந்தவெளியை நோக்கி நகரத் தொடங்கின.

 

நல்லூர் சங்கிலியன் சிலையில் இருந்து புறப்பட்ட பிரமாண்டமான 'ஊர்தி' ஊர்வலம் பொலீசாரால் தடுக்கப்பட்டது. இவ்வூர்தி ஊர்வலத்துக்கு சிவகுமாரன் தலைமை தாங்கினான். பொலிசாருக்கும் _சிவகுமாரனுக்குமான வாக்குவாதம் முற்றியது. '' முப்படை வரினும் ஊர்வலம் தொடரும்'' என சிவகுமாரன் முழங்கினான். இறுதியாக அமைதியாக ஊர்வலத்தை நடத்த பொலீசார் அனுமதி அளித்தனர். டாக்டர் ஜனார்தனன் இவ்வூர்வலத்துக்குள் மறைத்து அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வூர்வலம் யாழ் - ஆஸ்பத்திரி வீதியில், 'உணர்ச்சிக் கோசத்துடன்' கடந்தபோது, தெருவிளக்கு மின்கம்ப வயருடன் ஊர்தி மோதியதால் ஏந்பட்ட 'மின் ஒழுக்கில்' ஊர்வலத்தில் இருந்த இருவர் இஸ்தலத்திலேயே மரணமாகினர்.

74 tamil_aarashi.jpg

இவ் மின்விபத்தையடுத்து யாழ் மின்சாரசபை, யாழ்நகருக்கான மின்சாரத்தைத் துண்டித்தது. இவ்விபத்தையும், இதில் பலியாகிப் போனவர்களின் குடும்ப நிவாரணம், மற்றும் தமதுபக்கக் கவலையீனம், தவறுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற, வணிகத்தரகுக் கும்பல் கூட்டணியும் இதன் தீவிரவாத இளைஞர் சக்திகளும் இச்சம்பவத்தை வரலாற்றில் மூடிமறைத்தனர். இதற்கு மேலாக இச்சம்பவத்தால் யாழ்நகரம் இருளில் மூழ்கியதை ''துரையப்பாவின் திட்டமிட்ட சதிச் செயல்!'' எனவும், துரையப்பாவின் மீது பழியைப் போட்டனர்.

 

இறுதிநாள் நிகழ்வின் இறுதிப் பேச்சாளரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்தார். நேரம் இரவு 10:30 ஜ தாண்டியும் விட்டது. இரவு 10:30 வரைக்குமே இவர்கள் அனுமதியைப் பெற்றும் இருந்தனர். பொலீசார் நேரத்துக்குள் விழாவை முடிக்கும்படியும் அழுத்தம் கொடுத்தனர்.

 

நேரம் கடந்துகொண்டு சென்றது.

 

கூட்டத்தில் இருந்த ஒருபகுதி சனம் ''பேச்சைத் தொடரவிடு!'' என ஆவேசமாக குரல் எழுப்பியது. சில கணத்துக்குள் இரு தரப்பு தரகுகளின் கவுரவ கனவுகளுக்குள் பல பொதுமக்களின் பெறுமதிமிக்க உயிர்களின் மீதான விபரீத விளையாட்டு பணயமானது.

 

முகமதுவின் பேச்சை அடுத்து ஜனார்தனனை பேசவைப்பது, கூட்டணியினரினதும், தீவிரவாத இளைஞர்களினதும் சவாலாக இருந்தது. ஜனார்த்தன் பேசுவதைத் தடைசெய்வதும், அவரை கைதுசெய்வதும் அரச பொலீசார் தரப்பு சவாலாக இருந்தது.

 

இறுதி நேரத்தில்... இதுபற்றிய தெளிவான நேர்மையான, உண்மையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை!...

 

இந்த இருதரப்பு நலன்களுக்குள்ளும் 09 பேர் இறந்திருந்தனர். 09 பேரும் மின்சாரம் தாக்கியும் கிணற்றுக்குள் தவறிவிழுந்தும் இறந்திருந்தனர்.

 

 0309-jan1974.jpg


இவ் இறுதிநாள் நிகழ்வில் உயிர் நீர்த்தவர்களின் விபரம்:

 

01. சின்னத்தம்பி நந்தகுமார் - மாணவன் (14)
02. வேலுப்பிள்ளை கேசவராஜன் - மாணவன்(15)
03. இராசதுரை சிவானந்தம் - மாணவன் (21)
04. பரம்சோதி சரவணபவன் (26)
05. இராஜன் தேவரட்ணம் (26)
06. வைத்தியநாதன் யோகநாதன் (32)
07. ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் - ஆசிரியர் (52)
08. புலேந்திரன் அருளப்பு - தொழிலாளி (53)
09. சின்னத்துரை பொன்னுத்துரை - ஆயுள்வேத வைத்தியர் (56)

 

இதற்குமுன்னர் ஊர்வலத்தில் உயிர்நீர்த்த இருவரின் விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை! அல்லது எனது தேடலுக்குக் கிடைக்கப்பெறவில்லை!

 

இறுதிநேர நிகழ்வுகள் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. (17-01-74) இதில் துரையப்பா தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.

 

suthanthiran1.jpg

இவ் இறுதிநேர அனர்த்தங்கள் தொடர்பான விசாரணை அரசால் நடத்த முயற்சிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக இவ் நிகழ்ச்சியை புகைப்படம் பிடித்த, பலாலிவிமான நிலையத்துக்கு அருகில் இயங்கிய செய்தித்தாள் பத்திரிகையாளரான கைலைநாதனின் புகைப்படம் அனைத்தையும் அரச பொலிசார் கைப்பற்றினர். 

 

விசாரணையின் தொடக்கத்தில்...

 

இறுதி நிமிடங்களில், பொலிசார் தீர்த்த 'மேல்வெடி' காரணமாக மின்கம்பவயர் அறுந்து மின்னொழுக்கு நிகழ்ந்ததாக, மாநாட்டு தரப்பினர் வாதிட்டனர். அரச பொலீஸ் தரப்பினர் இதை மறுத்தனர். ஏற்கனவே நிகழ்ந்த மின்னொழுக்கால் ''சம்பவம் நிகழும் வரை'' யாழ் நகருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக, ( ஏற்கனவே நிழந்த மின் விபத்து காரணமாக) மின்சாரசபை ஊழியர் தமக்கு வாக்குமூலம் அழித்திருப்பதாக பொலீஸ்தரப்பு அறிவித்தது.

 

இதனால் முற்றவெளியில் இயங்கிய, 'றொலெக்ஸ்' நிறுவனத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

 

விசாரணைகள் ஒத்துழைப்பின்றி சீர்கெட்டன. இருதரப்பினரும் தமது மக்கள் விரோத செயல்களை மறைப்பதற்கு, இனக்குரோதத்தை இழுத்துப் போர்க்க முற்பட்டனர்.

 

இவ் இழுபறியை அடுத்து....

 

ஒரு பாதிரியாரை முதன்மைப்படுத்தி, கூட்டணி முக்கியஸ்தர் ஒருவரின் சுண்டுக்குழி வீட்டை தலைமையகமாகக் கொண்டு 'சுயாதீன விசாரணையை' மாநாட்டு தரப்பு கோரியது. இதை அரசு கண்டும் காணாமலும் அசட்டை செய்தது.

 

இவ்வாறு இரண்டு தரப்பு மக்கள் விரோதச்செயல்களும் வரலாற்றில் புதைந்து, (புதைக்கப்பட்டுப்) போனது.

 

இறுதிநிகழ்வில் ஜனார்த்தனன் ஒரு பாதிரியாரின் உடையில் மண்டபத்தில் இருந்து தப்பியிருந்தார். ஜனார்த்தனனை கைதில் இருந்து தடுப்பதற்காகவே, இவரைச் சுற்றிய தீவிரவாத இளைஞர்கள், கற்கள் மற்றும் வெற்றுப் போத்தலால் பொலீசாரைத் தாக்கத் தொடங்கினர்.

 

(ஆனால் ஜனார்த்தனன் இலங்கையில் வந்து இறங்கியதும், அவர் இந்தியா தப்பி போகும் வரைக்கும் இவர் மீது எந்த 'கீறலும்' இலங்கை - இந்திய அரசால்'- நிகழ்த்தப்படப்படவில்லை, அல்லது நிகழ்த்தப்படப் போவதில்லை! என்பதை வாசகர் நேயர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்!)

 

ஜனார்த்தனனை அப்புறப்படுத்திய சிவகுமாரன் குறூப்பினர், முற்றவெளியில் சிதறிக்கிடந்த 'செருப்புக்கள்'  உடல்களை அகற்றிய பின்னர், விரத்தியுடன் வீடு திரும்புகின்றான். மாநாட்டு சப்பவத்தின் பின்னர்,  'கூட்டணியின் அரசியலைப் பொறுத்தவரை' சிவகுமாரன் இனி.. ஒரு பிரளயம்!.....

 

(74ஆம் ஆண்டின் பகுதி -2-  இனித் தொடரும்..)

 

- ரூபன் -
190510

 

Last Updated on Wednesday, 16 June 2010 19:14