Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?

  • PDF

காலனிய ஆட்சிக் காலத்தில் அன்று பிரிட்டனின் நூற்பாலைகளுக்குப் பருத்தி தேவைப்பட்டது. இத்தேவையை இந்தியாவின் மூலம் நிறைவு செய்வதற்காக அன்றைய சென்னை மாகாணத்தில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியில் 800 ஏக்கரில் பருத்தி விவசாயத்தை சோதனை அடிப்படையில் காலனிய அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் 1868 இல் விவசாயக் கல்லூரியைத் தொடங்கியது. இது பிரிட்டனுக்குத் தேவையான பருத்தி மற்றும் விவசாயக் கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வல்லுநர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இப்படி காலனியக் கொள்ளைக்காக வெள்ளைக்காரனால் ஆரம்பிக்கப்பட்ட விவசாயக் கல்லூரிதான் இன்று தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகமாக கோவையில் உருவெடுத்துள்ளது. இன்று மக்கள் வரிப்பணத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் 32 ஆராய்ச்சி நிலையங்கள் 5 பயிர் பாதுகாப்பு நிலையங்கள் 7 பாடசாலை வளாகங்கள் 10 கல்லூரிகள் 16 வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் பல நகர்ப்புறத் தோட்டக்கலை மையங்கள் என பெரும் வலைப்பின்னலைக் கொண்ட நிறுவனமாய் வளர்ந்துள்ளது.

 

நவீன அறிவியல் முறைகளைக் கையாண்டு விவசாயத்தையும் உற்பத்தியையும் மேம்படுத்தவும் விவசாயச் செலவுகளைக் குறைக்கவும் இப்பல்கலைக்கழகம் சேவை செய்யும் என்று தமிழக விவசாயிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டது. இப்படி மக்களின் வரிப்பணத்தை கோடிகோடியாகப் பெறும் இப்பல்கலைக்கழகம் யாருக்காகச் சேவை செய்கிறது?

 

இப்பல்கலைக்கழகம் தமிழக விவசாயிகளுக்காக அல்லாமல் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதாலாளிகளுக்காகவே பல்வேறு கள மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2004ஆம் ஆண்டில் விரிவாக்கக் கல்வி இயக்குநர் வடிவேலு தலைமையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ""துல்லிய பண்ணைத் திட்டம்'' என்ற பெயரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் விவசாயிகள் குழுக்களாக அணிதிரட்டப்பட்டனர். இப்படி அமைக்கப்பட்ட குழுக்கள் விவசாய இடுபொருள் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டன. இக்குழுக்களுக்கு நகர்ப்புற மேட்டுக்குடிகளின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் நோக்கிலும் ஏற்றுமதிக்கான விவசாயத்தை மேற்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட விவசாயத்தை ""உயர் மதிப்பு விவசாயம்'' (High Value Agriculture -HVA) என்று அழைக்கின்றனர்.

 

மறுபுறம் உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வது என்ற பெயரில் சில்லறை வியாபார நிறுவனங்களுடன் இத்திட்டம் இணைக்கப்பட்டது. இதில் ரிலையன்ஸ் பிரஷ் பாரதி ஆதித்யா பிர்லா முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஏகபோக கம்பெனிகளுக்கு இடுபொருட்களுக்கான சந்தையைக் கைப்பற்றவும் உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்யவும் ஏதுவாக அமைந்தன. இந்த ஏற்பாட்டை ""தருமபுரி மாதிரி'' துல்லிய பண்ணைத் திட்டம் என்று குறிப்பிடுகின்றனர். சுருக்கமாகக் கூறினால் ""ஏர் கலப்பை முதல் உணவுத் தட்டு வரை'' அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொள்ளையடிப்பதுதான் துல்லிய பண்ணைத் திட்டத்தின் நோக்கமாகும்.

 

இக்கள ஆய்வின் வழியாக கிடைத்த அனுபவத்தை வைத்து 28 மாவட்டங்களில் ஏறத்தாழ 34000 ஹெக்டர் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம்: ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனம். பரப்பளவில் தரகு மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் விவசாயம் மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மா வாழை திராட்சை கொய்மலர் விவசாயிகளை சங்கங்களாக ஒருங்கிணைத்து வருகிறது. இதற்காக அமெரிக்க நிதி உதவி (USAID) என்ற அமைப்பு இந்திய அமெரிக்க விவசாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதி உதவி செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்குத் தேவையான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அவற்றை அந்நிறுவனங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யவுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகமும் இந்தியாவின் மகிகோவும் (அமெரிக்க ஏகபோக விதைக் கம்பெனியான மான்சாண்டோவின் துணை நிறுவனம்) இணைந்து தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மரபணு மாற்ற கத்தரியில் (பி.டி. கத்திரியில்) ஆய்வுகள் நடத்துகின்றன. இதற்கும் அமெரிக்க நிதி உதவி (USAID) அமைப்பு இந்தியஅமெரிக்க விவசாய ஒப்பந்தம் அடிப்படையில் நிதி உதவி செய்கிறது. மக்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் பி.டி பயிர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவதற்காகவும் பி.டி பயிர்களை விவசாயத்தில் திணிப்பதற்காகவும் இப்பல்கலைக்கழகம் முழு மூச்சாகச் செயல்படுகிறது.

 

இந்தத் திட்டம் தாவர மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேசன் மற்றும் பிற ஏகபோக நிறுவனங்களுடன் நெருங்கிய உறவு கொண்ட சாமியப்பன் இதை முன்நின்று நடத்துகிறார். இன்னொரு பக்கம் பயிர் இனவிருத்தி மற்றும் மரபியல் மையத்தின் இயக்குநர் தியாகராஜன் தலைமையில் பன்னாட்டு நிதி உதவியுடன் மரபணுப் பயிர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மேலும் முன்னாள் துணைவேந்தர் இராமசாமிஇ பேராசிரியர் செல்வராஜ் (விவசாயப் பொருளாதார துறை) போன்றோர் மான்சாண்டோவின் விற்பனைப் பிரதிநிதிகள் போல் செயல்படுகிறார்கள். இதை இந்நாள் துணைவேந்தர் பூபதி முருகேசன் வழிமொழிந்து வருகிறார். சுருக்கமாகச் சொன்னால் பலவகையான ஆய்வுகள் நடக்கின்றன. பல வகையான ஏகாதிபத்திய கைக்கூலிகளும் உருவாகியுள்ளனர்.

 

அதேசமயம் அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் காய்ப்புழு எதிர்ப்புத் திறன் கொண்டதாகப் பீற்றிக்கொள்ளப்பட்ட பி.டி பருத்தி புழக்கத்தில் வந்த சில ஆண்டுகளிலே எதிர்ப்புத் திறனை இழந்துவிட்டது. இந்த உண்மையை அண்மையில் மான்சாண்டோவே ஒப்புக் கொண்டுள்ளது (ஆதாரம்: இந்து நாளேடு 6.03.2010). மேலும் பருத்தி விவசாயத்தில் மந்தமாக இருந்த மாவுப்பூச்சியின் தாக்கம் வலுவடைந்து பருத்தி மற்றும் பிற பயிர்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இருப்பினும் இப்பல்கலைக்கழகம் பி.டி. கத்திரி மட்டுமின்றி நெல் நிலக்கடலை பப்பாளி தக்காளி கரும்பு மக்காசோளம் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலும் மரபணு மாற்றத்திற்கான ஆய்வுகளைச் செய்து வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மரபணு ஆராய்ச்சிகளின் திசைவழியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தீர்மானிப்பது தமிழக விவசாய அமைச்சகம் அல்ல் மாறாக அமெரிக்க நிதி உதவி ராக்பெல்லர் பவுண்டேசன் போன்ற பன்னாட்டு ஏகபோக அமைப்புகள்தான். இப் பல்கலைக்கழகம் பேயர் சைன்ஜென்டா டூபாண்ட் டவ் கேட்பரி இந்தியா போன்ற பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் தேவையான ஆய்வுகளைப் பணம் வாங்கிகொண்டு செய்து கொடுக்கிறது.

 

ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையில் கேட்பரி இந்தியா நிறுவனம் தமிழகத்தில் கோக்கோ விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்திடம் ரூ.50 இலட்சம் வாங்கிக்கொண்டு தமிழகத்திற்கு ஏற்ற கோக்கோ ரகத்தை உருவாக்கித்தர இப்பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இராஜாமணி என்பவர் தலைமையில் நடக்கிறது. இதேபோல் மான்சாண்டோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆறுமுகசாமி என்பவர் தலைமையில் பி.டி மக்காசோளம் செயல்திறன் பற்றிய ஆய்வு நடக்கிறது.

 

1961இல் இப்பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக விவசாயப் பொருளாதாரத் துறை தொடங்கப்பட்டது. இத்துறை போர்டு ராக்பெல்லர் பவுண்டேசன் வின்ராக் இன்டர்நேசனல் சுவீடன் பன்னாட்டு வளர்ச்சிக் குழுமம் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி கழகம் மற்றும் உலக வங்கியுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. இங்கு பணியாற்றும் வல்லுனர்களில் பெரும்பான்மையானோர் பவுண்டேசனின் நிதி உதவியுடன் வெளிநாடுகளில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் பட்டங்கள் பெற்றவர்கள் ஆவார்கள். இத்துறை தமிழக அரசின் விவசாய திட்டங்களை வடிவமைப்பதிலும் கொள்கைரீதியான முடிவு எடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மத்திய மாநில திட்டக் கமிஷனிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

 

பொதுவாக இப்பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு அமைப்புகளுடன் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சன்மானங்களைப் பெற்று அவற்றுக்குத் தேவையான வேலையை முடித்துக் கொடுப்பவர்களே "அறிவாளி'களாகவும் "திறமைசாலி'களாகவும் கருதப்படுகிறார்கள்; அவர்களுக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் சன்மானங்களும் வாரியிறைக்கப்படுகின்றன. இதனால் இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மத்தியில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து அவற்றுக்கு எட்டப்பன் வேலை செய்வதற்குக் கடும் போட்டியும் குடுமிபிடிச் சண்டையும் நடக்கிறது.

 

இப்பல்கலைக்கழகம் போர்டு ராக்பெல்லர் பவுண்டேசன் முதற்கொன்டு 45க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகளுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. 2004 2005இல் மட்டும் 45 ஆராய்ச்சிக்குப் பன்னாட்டு அமைப்புகளிடமும் 107 ஆராய்ச்சிக்குத் தனியார் ஏகபோக முதலாளிகளிடமும் நிதி வாங்கியுள்ளது. (ஆதாரம்: 100வது ஆண்டு மலர்). இவற்றில் அமெரிக்கா நிதி உதவி நிறுவனம் மட்டுமே சுமார் 8 கோடி ரூபாய் கொடுத்துள்ளது (ஆதாரம்: Front line 02-15 2005). ஒட்டுமொத்தமாகவே இப்பல்கலைக்கழகம் ஏகாதிபத்திய நாடுகளின் நிதியமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் உறவு கொள்வதையும் அவற்றுக்குச் சேவை செய்வதையும் தனது அறிவிக்கப்படாத கொள்கையாகவே கொண்டுள்ளது.

 

மறுபுறம் இப்பல்கலைக்கழகம் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்திற்கான வல்லுனர்களை உருவாக்கும் பணியை அறவே கைவிட்டுவிட்டது. உலகமயத்தின் தொடர்ச்சியாக விவசாயத்திலும் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் தரகுமற்றும் பன்னாட்டு முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. சங்கிலித்தொடர் சில்லறை வியாபாரக் கடைகள் உணவு பதனிடும் தொழில் தொடர் விவசாய இடுபொருள் விற்பனை அங்காடிகள் சேமிப்புக் கிடங்கு சேவை ஒப்பந்த விவசாயம் போன்றவை முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு இப்பல்கலைக்கழகம் உணவு பதனீடு தொழிற்பட்டம் விவசாய முன்பேர வர்த்தகம் விவசாய வர்த்தக மேலாண்மை போன்ற புதிய துறைகளில் பட்டதாரிகளை உருவாக்குகிறது. அதாவது உலகமயத்திற்கு ஏற்ப விவசாயக் கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இந்தப் பட்டதாரிகளைக் கொண்டு தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தேவையை நிறைவு செய்து கொள்கின்றன.

 

இப்பல்கலைக்கழகம் வெள்ளைக்காரன் ஆட்சிகாலத்தில் என்ன செய்ததோ அதையே இன்றைய உலகமயமாக்கச் சூழலில் பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளுக்குச் செய்துவருகிறது. எட்டப்பன்களும் மீர்ஜாபர்களும் அரசியலில் மட்டும் இல்லை. அறிவார்ந்த பல்கலைக்கழகங்களிலும் இருக்கிறார்கள்.

 

• சுடர்