Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கொலைகார முதல்வர் போலீசாரைக் கைது செய்து தண்டனை கொடு

கொலைகார முதல்வர் போலீசாரைக் கைது செய்து தண்டனை கொடு

  • PDF

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்று மரணத்தை விளைவிக்கும் முறைகேடுகள் நிறைந்த பல்கொலைக்கழகமாகச் சீரழிந்து நிற்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டாமாண்டு பொறியியல் மாணவர் கௌதம் குமார், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு தாமதமாகச் சிகிச்சை அளித்ததைக் கண்டு குமுறிய மாணவர்கள், பின்னர் அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால், வழியிலேயே அம்மாணவர் மரணமடைந்துவிட்டார்.

 

இது பற்றி முறையிட நள்ளிரவில் திரண்டு வந்த மாணவர்களைச் சந்திக்க மறுத்த பல்கலைக்கழக முதல்வர், போலீசை வரவழைத்து விரட்ட முயற்சித்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரிப் பேருந்தையும் மருத்துவமனையின் முகப்பையும் தாக்கினர். அதைத் தொடர்ந்து நள்ளிரவில் போலீசார் பெரும்படையாகத் திரண்டு வந்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தடியடித் தாக்குதல் நடத்தியதால், தடியடிக்குப் பயந்து தப்பிக்க முயன்ற சுமித்குமார், முகம்மது சரிஃப்ரஸ் ராஸ் மற்றும் ஆஷிஷ் ரஞ்ஜன்குமார் ஆகிய மூன்று மாணவர்கள், அருகிலுள்ள குளத்தில் இருளில் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். இது, தமிழகத்தையும் மாணவர்களையும் கல்வியாளர்களையும் பெரிதும் அதிர வைத்துள்ளது. நிர்வாகத்தின் திமிரும் போலீசின் வெறியாட்டமும்தான் இக்கொலைகளுக்குக் காரணம்.

 

இப்படுகொலைகளுக்கு எதிராகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.மா.இ.மு அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று சிதம்பரம் காந்தி சிலையருகே ""சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொடரும் படுகொலைகளுக்கு முடிவு கட்டுவோம்!'' என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விதிமுறைகளை மீறிமாணவர் சேர்க்கை,பல இலட்சக்கணக்கில் கட்டாய நன்கொடை, உணவு விடுதிகள் தனியார்மயம், தரமற்ற கல்வி, ஆசிரியர்பணியாளர் நியமனங்களில் ஊழல், மருத்துவமனையின் தரம் தாழ்ந்த நிலை, பல்கலைக்கழகத்தில் நிகழும்தொடர் மரணங்கள், போலீசின் அடக்குமுறை ஆகியவற்றை இந்த ஆர்ப்பாட்டம் அம்பலப்படுத்திக் காட்டியது. கொலைக்குற்றவழக்கில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் முதல்வரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்; இப்பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; அதற்காக மாணவர்களும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு போராடவேண்டும் என்று முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். பெற்றோரும் கல்வியாளர்களும் மாணவர் இளைஞர்களும் தோழமை அமைப்பினரும் பங்கேற்று நடத்திய இந்தஆர்ப்பாட்டம், கொலைகாரத் தனியார் கல்விக் கொள்ளைக்கூடாரத்தின் கோரமுகத்தைத் திரைகிழித்துக் காட்டி, போராட அறைகூவுவதாக அமைந்தது.

 

— பு.ஜ.செய்தியாளர்கள்.

Last Updated on Monday, 26 April 2010 06:12