Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தேர்தலில் நிற்கும் தகுதி என்பது, ஜனநாயகத்தை மறுத்தல்தான்

தேர்தலில் நிற்கும் தகுதி என்பது, ஜனநாயகத்தை மறுத்தல்தான்

  • PDF

ஜனநாயகத்தை மறுக்கத் தெரிந்த ஒவ்வொருவரும், அதை கண்டுகொள்ளாது அரசியல் பிழைப்பை நடத்தக் கூடிய ஒவ்வொருவரும், ஜனநாயக மறுப்பை முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றனர். இந்தவகையில் மகிந்த குடும்ப பாசிசம் முதல் புரட்சி பேசும் புதியஜனநாயகக்கட்சி வரை எந்த விதிவிலக்கும் கிடையாது. பாராளுமன்ற சாக்கடையில் இறங்கி நின்று, இதுதான் "ஜனநாயகம்" என்று மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் இங்கு மக்கள் யாரையும் சுதந்திரமாக தெரிவு செய்வதில்லை. தெரிவு செய்ய வைக்கப்படுகின்றனர்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறா நாட்டில், ஜனநாயக பாராளுமன்றம் என எதுவும் இருப்பதில்லை. இந்தப் பாராளுமன்ற பன்றிகளை தெரிவு செய்யும் வழிகள், அதன் சுத்துமாத்துகள் எதுவும், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டதல்ல. இப்படி இருக்க மகிந்த குடும்ப பாசிசம் தேர்தல் ஜனநாயகத்தை எப்படி மக்களுக்கு காட்டுகின்றதோ, அப்படியேதான் புதியஜனநாயகக் கட்சியும் தேர்தலை மக்களுக்கு காட்டி வாக்கு பொறுக்குகின்றனர்.

இந்த "ஜனநாயகத்தின்" வெட்டுமுகம் என்ன? ஒரே  கட்சிக்குள் நடக்கும் குத்துவெட்டுகள், விரும்பு வாக்குகளை பெற நடத்தும் சூதாட்டங்கள், அலைபாயும் கட்சிகுள்ளான வன்முறைகள், ஆளையாள் கவிழ்க்கும் தேர்தல் மோசடிகள் எதுவுமின்றி தேர்தல் நடக்கவில்லை. மொத்ததில் எப்படிப்பட்டவர்கள் தேர்தலில் இறங்கியுள்ளனர் என்பதை, இது தோலுரித்துக் காட்டுகின்றது. இங்கு மக்கள் எங்கும் எவரையும் சுதந்திரமாக தெரிவுசெய்வதில்லை. மாறாக தெரிவு செய்ய வைக்கப்படுகின்றனர்.

வேட்பாளர்கள் கூறிக்கொள்ளும் ரவுடிகளும், மாபியாக்களும், வன்முறையாளர்களும், தேர்தலை வெற்றிக்கொள்ளும் தங்கள் தகுதியாக இவைகளை கொண்டுள்ளனர். இவையின்றி தேர்தலில் வெல்ல முடியாது என்பதும், விரும்பு வாக்கைப் பெற முடியாது என்பது இன்று வெளிப்படையான உண்மை. இப்படிப்பட்ட உண்மையை மறுத்து, மக்கள் தான் "ஜனநாயகபூர்வமாக" சுதந்திரமாக தேர்வு செய்கின்றனர் என்பது, ஜனநாயகத்தையே கேலி செய்வதுதான். இதைத்தான் இந்த பண்புகளை கொண்டிராதவர்கள், தங்கள் அரசியல் பிழைப்புக்காக செய்கின்றனர். உண்மையில் மாபியாக்களினதும், ரவுடிகளினதும் "ஜனநாயக" வே~த்துக்கு ஏற்ப, எடுபிடிகளாக மாறி குரைப்பதுதான் தேர்தலில் பங்கு கொள்ளும் மற்றவர்கள் நிலை. இதுதான் புதிய ஜனநாயக கட்சியின், "ஜனநாயக" அரசியலாகும்.

மக்களை ஓடுக்கவும், மக்களைச் சுரண்டவும் நடத்தப்படுகின்ற தேர்தலில், வெற்றி பெற்று சலுகைகளுடன் சம்பாதிக்க முன் கூட்டியே முதலிடுகின்றனர். இங்கு தேர்தல் என்பது, பணம் சம்பாதிப்பதற்கான ஒரு முதலீடு. இதனால் தேர்தலில் பணத்தை வாரியிறைக்கின்றனர். விலைக்கு வாக்குகளை வாங்குகின்றனர். தங்களைச் சுற்றி அடியாள் படைகளை உருவாக்கி, வாக்கு வேட்டையில் ஈடுபடுகின்றனர். தன் வெற்றிக்கு ஏற்ப, போட்டி வேட்பாளரை தோற்கடிக்கும் வண்ணம் வேட்பாளரை நிறுத்துகின்றனர். இதற்கு பணம் கொடுப்பதும், பணத்தை இதற்குள் முதலீடும் செய்கின்றனர். இப்படி வெற்றிக்காக பணம் தாராளமாக, பல தளத்தில் இறைக்கின்றனர். பண "ஜனநாயகம்" தான், தங்களுக்கு வாக்குப்போட வைக்கின்றது.

இதற்கு அமைவாக அதிகாரத்தை பயன்படுத்துவது, அடாவடித்தனம் செய்வது, வன்முறைகளை ஏவுவது, அவதூறுகளை அள்ளி வீசுவது அரசியலாகின்றது. இதற்கு அமைவாக பணத்தை பாயாக்கி, ஊடகவியலை அதில் படுக்கவிட்டு "ஜனநாயக" விபச்சாரம் செய்கின்றனர். இப்படி மக்களை திசை திருப்புவதன் மூலம், தங்களைத் தாங்களே தெரிவு செய்கின்றனர். அதை மக்களைக் கொண்டே செய்வதையே, "ஜனநாயகம்" என்கின்றனர். இப்படிப்பட்ட மக்கள் விரோத கூறுகளைத்தான், "ஜனநாயகத்தின்" அரசியல் உள்ளடக்கமாகவும், தேர்தலின் அரசியல் மகிமையாகவும் காட்டுகின்றனர்.

இப்படி வெல்லும் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்ற பின் என்ன செய்கின்றனர்? தாங்கள் வெல்வதற்காக  செலவு செய்த பணத்தை மீட்பதுடன், மேலும் பலமடங்காக செல்வத்தை தம் பின் குவிக்கின்றனர். மக்களை ஒடுக்கியும் சுரண்டியும் வாழும் கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தபடி, மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவருகின்றனர். அடக்குமுறைகளை ஏவுகின்றனர்.

தங்கள் அதிகார மற்றும் அடாவடித்தனங்கள் மூலம், நாட்டின் "சட்ட ஆட்சியை" தமக்கு விதிவிலக்காக்கிக் கொண்டு ஆட்டம் போடுவதுதான் "ஜனநாயகத்தின்" அடிப்படையான பண்பாகி விடுகின்றது.

அதேநேரம் தமக்கு சட்டபூர்வமான ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை உருவாக்கி அதை நுகர்ந்தபடி, சட்டவிரோதமான காம களியாட்டங்கள் முதல் ஒரு இரகசிய மாபியா வாழ்க்;கையையே தம்மைச்சுற்றி கட்டியமைக்கின்றனர்.

வெளிநாடுவரை வரை பரவும் இந்த இரகசியமான நுகர்வு வாழ்க்கை, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வெளிநாட்டு மருத்துவம் கல்வி என்று அனைத்தையும் அனுபவிக்க இந்த போலி "ஜனநாயகம்" தான் உதவுகின்றது. மக்கள் பணம் தான், இப்படி இவர்களின் பொறுக்கித்;தனமான "உயர்தரமான" வாழ்க்கையாகின்றது. மக்களை ஏமாற்றி மோசடித்தனமாக தின்பது, வக்கிரமான "ஜனநாயகமாகி" அதன் உணர்வாகின்றது.

மக்களை ஒடுக்கி, அவர்களுக்கு அடிப்படையான சமூக தேவைகளை மறுத்து நிற்பது தான், இந்த "ஜனநாயகத்தின்" அரசியல் அடிப்படையாகும்.

இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை மறுப்பது தான், இன்று "ஜனநாயகத்தின்" அரசியல் பண்பாகிவிட்டது. இந்த மாபியா கூட்டத்துடன் சேர்ந்து நின்று போட்டியிடுவது தான், "ஜனநாயகத்தின்" அரசியல் அடிப்படையாக காட்டுவது தான் "முற்போக்கு முதல் இடதுசாரி" போலிகளின் பிழைப்பு அரசியலாகிவிட்டது.

ரவுடிகளுடன், மாபியாக்களுடன் சேர்ந்து நின்று கூத்தாடுவது தான், "ஜனநாயகம்" என்கின்றனர். இப்படித்தான் தேர்தல் கூத்தை அனைவரும் ஆடுகின்றனர். மக்களை இதற்கு வெளியில் அணிதிரட்டாத வரை, மாபியாக்களும் ரவடிகளும் கட்டமைக்கும் பாசிசத்தின் கீழ் மக்களை அடக்கியொடுக்க உதவுவதுதான், தேர்தலில் குதித்துள்ள இவர்கள் அல்லாதவர்களின் அரசியலாகின்றது. இப்படி இந்தத் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் அரசியல் இதுவாக இருப்பதை இனம் காண்பது தான், இன்று மக்கள் அரசியலில் முதல்படியாகும்.

பி.இரயாகரன்
04.04.2010

Last Updated on Monday, 05 April 2010 18:49