Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பெண் - சில கேள்விகள்

பெண் - சில கேள்விகள்

  • PDF

“ஏங்க நீங்க இந்த உலகத்துல நடக்குறதைப்பத்தி தெரிஞ்சுக்கவே மாட்டேங்குறீங்க ? ” நான் சந்திக்கும் பலரிடமும் தன்னைப்பற்றி / இவ்வுலகத்தைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் இக்கேள்வியை கேட்காமல் இருந்ததே இல்லை. குறிப்பாக இக்கேள்விக்கு பெண்களிடம் ( நடுத்தர வர்க்க,மேட்டுக்குடி) வரும் பெரும்பாலான பதில்களோ ஊமையாகவே இருக்கின்றன.

 

பெண் என்ற வகையில் அவர் ஒடுக்கப்பட்டவருள் ஒடுக்கப்பட்டவர். ஏதாவது ஒரு படி நிலையில் அழுந்திக்கிடப்பவர் என்பது தான் உண்மை. பெண்கள் சரளமாக படிக்கிறர்கள், வேலைக்குப்போகிறார்கள் என்பது மட்டுமே உரிமையாக பார்க்கப்படுகிறது. வேலைக்குப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?

 

ஒரு பெண் தனக்காக, தன்னுரிமைக்காக சுயேச்சையாக வாழ முடிகிறதா? தான் எந்தப்படத்திற்கு போக வேண்டும், தான் எந்த நகையை விரும்பி அணிய வேண்டும்? தன் கணவனுக்கு எந்த சமையலை விரும்பி செய்ய வேண்டும் ? தன் கணவன் மனம் கோணாது எப்படி நடக்க வேண்டும்? என்பனவற்றை முடிவு செய்யும் பெண்ணால் ஒரு ஆணைப்போல் சுயேச்சையாக வாழ முடிகிறதா?

  

ஒரு ஆண் திருமணம் ஆகாமலிருந்தால் அது பிரம்மச்சாரி(பெருமை) அதுவே ஒரு பெண் திருமணம் ஆகாமலிருந்தால் அது கன்னி கழியாதவள்(அவமானம்). யாராவது வம்பு செய்தால் எதிர்த்து கேட்கும் போது / தன்னுரிமையை பேசும் போது “ஆம்பிளை மாதிரி நடந்துக்குறா”. ஒரு பெண் ஆண் மாதிரி இருக்கிறாள் என்பது கேவலம். அதைப்போலவே ஒரு ஆணைக்கேவலப்படுத்த பெண்ணைப்போல இருக்கிறாய் என்கிறது சமூகம். ஒரு பெண் எப்படி விமர்சிக்கப்படுகிறார் இங்கு?

 

செயா ஒரு பாசிஸ்ட் பெண் தான் அவரை நடத்தைகெட்டவள் என விளிக்கும் திமுகவினர் தன் தலைவன் நடத்தைகெட்டுப்போனதை பேசுவார்களா? அல்லது அதிமுகவினர்தான் கருணா ஒரு விபச்சாரி என்று பேசுவார்களா என்ன? ஆண் எனில் அது அவனது திறமை, பெண்ணெனில் அது விபச்சாரம்.

  

ஒரு பாலினத்தை மாற்றிக்கூறுவது கேவலபடுத்துவதாகவே கூறப்படுகிறது. அதில் கூட எவ்வளவு நயவஞ்சகம்? பெண்ணே நீ அடக்க ஒடுக்கமாக இரு இல்லையேல் அது கேவலம்(அடிமைத்தனத்தோடு இரு). ஆணே நீ நெஞ்சை நிமிர்த்தி குடும்பத்தை அடக்கி ஆள் (அடக்கு) இல்லை என்றால் அது கேவலம்.

 

ஆக அவரவர்கள் அவரவர் இடத்திலே இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆண் எதற்கும் கோபப்பட வேண்டும், பெண்ணை அடிக்க வேண்டும், ஊர் மேய வேண்டும், யாருக்கும் பதில் சொல்லாமல் வாழ வேண்டும். அவன் அதை மீறி நான் ஏன் ஒரு பெண் கவரும் படி நடந்து கொள்ள வேண்டும்? எனக் கேட்டால் “டேய் இது ஆம்பிளைங்க சமாச்சாரம்”.

 

பல வருடங்களுக்கு முன் வேலை செய்த இடத்தில் பெண்கள் ஒடுக்கப்படுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன் என்னைத்தவிர மற்ற நால்வரும் எனக்கு எதிராக பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண்ணும் அடக்கம். அந்தப்பெண் சொன்னார்”என்னவோ நீங்க ஒரு பொண்ணைக்கூட சைட் அடிச்சதே இல்லையா?”. நான் கொஞ்சம் பேசி விட்டு சொன்னேன்” நீங்க பெரிய யோக்கியமா பேசுறீங்களே நீங்க எத்தனை பேரை பார்க்குறீங்க தினமும் ? ” உடனே அப்பெண் அழ ஆரம்பித்தார். ” என்னப்பார்த்து இப்படி கேக்குறீங்களே” என்றவுடன்

  

நான் சொன்னேன் “ஆம்பிளை சைட் அடிக்குறது சரின்னு சொல்லுற உங்களால ஏன் பொம்பளை ஆணை ரசிக்குறது சரின்னு சொல்ல முடியல?”

 

பெண்ணை ஒடுக்கு!! அப்போதுதான் நீ ஆண் ஏதோ ஒரு வகையில். எதிரில் பெண் வந்தால் பார்க்க வேண்டும், நாயைப்போல பின்னாலேயே அலைய வேண்டும், அவரை கவர்வதற்கு என்னவெல்லாமோ அனைத்தையும் செய்ய வேண்டும். ஆண் என்றால் பெண்ணை “கரெக்ட்” செய்ய வேண்டும். ஒருவரையா? ”இல்லையில்லை பார்க்கும் அத்தனை பேரையும் “ திருமணம் ஆனால் மனைவிக்கு பூ அல்வா எல்லாம் வாங்கித் தரலாம் சுதந்திரத்தைத் தவிர. அதுதான் ஆம்பிளைக்கு அழகு.

கல்லூரிக் காலத்தில் ஒருவன் சொல்வான் ” பையன்னா எல்லா பொம்பளைங்களையும் பார்க்கவேண்டும் ? கல்யாணம் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி பார்க்கணும் இல்லைன்னா அவன் ஆம்பிளை இல்லை ” . இப்போதும் அவன் தன் மனைவியோடு தான் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். அவன் சொன்னது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

 

எது அழகு ? எது நல்லது ? எது தேவை ? எல்லாவற்றையும் இந்த ஆணாதிக்க சமுதாயமே முடிவு செய்யும். அப்படியெல்லாம் சொல்ல முடியாது, எல்லாம் மாறிகிட்டே வருது. எது மாறிவிட்டது.வேலைக்குப்போனாலும் தாலி செயினாக மாறியிருக்கிறது என்பதைத்தவிர வேறெதாவது மாற்றத்தைக்காட்ட முடியுமா? மாறிப்போன காலத்தில் ஏன் தாலி? எதற்கு மெட்டி? இந்தக்கேள்விகள் எங்கே எழுகிறது ? படிப்பிற்கும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பள்ளியிலே , கல்லூரிகளிலே, அலுவலங்களில் பெண்ணடிமைத்தனம் நடக்காமலா இருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் பார்வை ஆணாதிக்கமாக இருக்கும் போது மேற்கண்ட இடங்களில் மட்டும் எப்படி இல்லாமல் இருக்கும்?

 

” கல்யாணம் ஆகியும் தாலிக்கட்டாமல் வாழ்ந்தால் அது விபச்சாரியாகத்தான் இருக்க முடியும் ” இது மெத்தப்படித்த ஐந்திலக்கவாதியின் பேச்சு. சொல்லப்படுகிறதே கல்வியில் முன்னேறிவிட்டால் எல்லாம் மாறிவிடுமென்று. மாறிவிட்டதா பெண்ணடிமைத்தனம்.நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதை ஏன் இன்னொருவனுக்கு தெரிவிக்க வேண்டும்? தெரிவிக்க வேண்டும், தெரிவித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் பாதுகாப்பு இல்லை. ஆணைப்பார்த்து திருமணம் ஆனவனா இல்லையா என்பதை கண்டறிய முடியாதே? அப்படியெனில் பாதுகாப்பு அவனுக்கு வேண்டாமா?பாதுகாப்பை நிர்ணயம் செய்பவனே அவன் தானே.

  

தான் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம் என்பதை பல பெண்களும் உணர்வதாயில்லை / உணர்ந்தாலும் அதை தெரிவிப்பதாயில்லை. பிறப்பு முதல் பார்ப்பான் ஓதும் மந்திரத்திலிருந்து ஒவ்வொன்றையும் எவ்வளவு அழகாய் பெண்ணை அடிமையாக்குவதற்கு வைத்திருக்கிறார்கள் ? தெரிந்திருந்தும் இது ஏன் உனக்குபுரியவில்லை?

 

“இந்த உலகத்தைப்பத்தி நான் ஏன் தெரிஞ்சிக்கணும்? தெரிஞ்சி என்ன ஆகப்போவுது? ஒண்ணும் மாத்த முடியாது. என்னோட கணவர் நான் துணிய துவச்சா அவர்தான் காயப்போடுவார், கடைக்கு அவர்தான் போவார், இவ்வளவு பண்றாங்க இல்ல” உரிமை என்றால் என்னவென்றே தெரியாமலிருக்கும் உன்னைப்பார்த்து சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை.

 

எனக்கு பிடிச்சுருக்கு அதான் புர்கா போடுறேன் எனக்கு பிடிச்சுருக்கு அதான் தாலி கட்டிக்குறேன்,தோடு போடுறேன், கொலுசு மாட்டிக்குறேன் எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஏன் உனக்கு பிடித்தது? எல்லாம் உனக்கு பிடிக்கவைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பிடித்திருக்கிறது என எல்லாப்பொருளையும் ஏற்கலாம், இவனைப்பிடித்திருக்கிறது என காதலனை சொல்லும் போதுதான் எது இனி உனக்கு பிடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுவார்கள்.

 

” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக ” என்று பலரும்தான் சொல்கிறார்கள். செயலில் ஈடுபட என்னத்தயக்கம்? இந்தக்காலத்திலும் பல பெண்கள் பள்ளிகளுக்குப்போனதில்லை, வெளியே போக அனுமதியில்லை. ஆனால் நீ அவ்விசயத்தினை பொறுத்த மட்டில் கொஞ்சம் சுதந்திரமாகத்தானே இருக்கிறாய்? உன் விடுதலையை அறிய / பெற தடுப்பது எது? உன் பாதிப்பை உரக்கச்சொல்வதை எது தடுக்கிறது?

 

” அப்படி சொன்னால் இந்த சமுதாயம் எங்களை விமர்சிக்கும் எங்கள் பாதிப்பை சொன்னால் கேலி செய்யும்” நீ இந்த அளவுக்கு உரிமைகளைபெற்றிருக்கிறாயே அதைப்பெற பாடுபட்டவர்களை இந்தச்சமுதாயம் எப்படி கேலி பேசியிருக்கும்? மனதை வதைத்திருக்கும்? அவர்கள் போராட வில்லையா? உனக்கு உரிமைகளைப்பெற்றுத்தரவில்லையா?

 

நீ பயப்படுகிறாயே அந்த பயம் தான் அந்த சங்கிலி அதன் கண்ணிதான் அடிமைத்தனம் . உன்னைக் கேலி பேசுவார்கள் நீயும் திருப்பி பேசு, கேள்வியைக்கேள், தன் தாயை தன் சகோதரியை தன் மனைவியை அடிமையாய் நடத்தும் இச்சமுதாயத்தை கேலி செய். பெண்ணிற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. செல்லும் ஒவ்வொரு அங்குலத்திலும் வதைக்கப்படுகிறார். இதை எப்படித்தான் தீர்ப்பது?

 

அமைதியாய் இதைப் பேசாமாலே இருந்தால் போதுமா?

 

” எனக்கும் நீங்க சொலற மாதிரி வாழணும்னு ஆசைதான் தாலிகட்டாம சம உரிமையோடு, ஒழுக்கமாக , நாணயமாக………. ஆனால் எங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர் ” உன் உரிமையைப்பற்றி பேசுவது நீ சுதந்திரமாக வாழ்வது உன் அப்பனின் கண்டிப்புக்கு ஆளாகுமா?

 

அப்படியெனில் நீ கண்டிப்பாய் பேசித்தான் ஆக வேண்டும். உன் அப்பன், சகோதரன் ,கணவன் எல்லோரையும் நீ கண்டித்துதான் ஆக வேண்டும். போராடாமல் எதும் கிடைத்ததாய் சரித்திரம் இல்லை. போராடுவதற்கு முன் அதற்கு தயாராகவாவது இருக்க வேண்டும் இல்லையேல் அதைப்பற்றி கேட்கவாவது தயாராயிருக்க வேண்டும்.

 

ஒன்றை இழக்காமல் ஒன்றைப்பெற முடியாது. நம் அடிமைத்தனத்தை இழக்காது உரிமைகளைப்பெற முடியாது. சாதி என்ன சொல்லும் ? வீட்டில்என்ன சொல்லுவாங்க ? என சாக்கு சொல்லிக்கொண்டிருந்தால் எதையாவது பெற முடியுமா என்ன? சினிமாவுக்கு போகலாம், பார்க்கிற்கு போகலாம் ஆனால் உன் உரிமையைபேசும் ஒரு பத்திரிக்கையை படிக்கமாட்டேன், பெண் உரிமையைச்சொல்லும் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அடிமைத்தனத்தைத்தவிர

 

தொடர்புள்ள பதிவுகள்

 

 

Last Updated on Sunday, 04 April 2010 08:40