Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!

ஒபாமா: கழுதையின் மூக்கு வெளுத்தது!

  • PDF

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின்நாயகன்" , என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றபோதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின.

"ஆம், நம்மால்முடியும்!" என்ற அவரது தேர்தல் முழக்கத்தை ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஜபித்தது. அமெரிக்காவில் மட்டுமன்றி, இங்கேயும் சிலர் ஒபாமா காய்ச்சல் தலைக்கேறிச் சுற்றிக் கொண்டிருந்தனர். "புரட்சிப் புயல்' வைகோ, ஒபாமாவைப் புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதி, அதனை அவரிடமே கொடுத்து கையெழுத்து வாங்கிவந்தார். முதலாளித்துவ ஊடகவியலாளர்களும், கருணாநிதியின் வாரிசு கனிமொழி முதல் தலித்திய எழுத்தாளர்கள் வரை அனைவரும், கருப்பின மக்களுக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவு பலித்துவிட்டது எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தனர். ஆப்கானில் அமெரிக்கப் படையை திரும்ப அழைப்பார், ஈராக் போரை முடித்து அந்நாடு சுதந்திரமடையச் செய்வார், பொருளாதாரச்சீரழிவில் அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களைக் காப்பாற்றுவார் என பலரும் நம்பிக்கையூட்டினர்.

 

ஆனால் இன்று ஒரு வருடம் முடிந்த பின்பு, இந்தநம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டது. இவரைப் பற்றி அமெரிக்க பத்திரிக்கைகள் கேலிச்சித்திரம் போடாத நாளே கிடையாது என்கிற அளவுக்கு அவர் காரியக் கோமாளியாகிவிட்டார். "ஆம், நம்மால்முடியும்!" என்கிற இவரது மந்திரச் சொல் துவங்கி, இவர் வாயைத் திறந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேலி செய்யப்படுகிறது. சமீபத்தில் "வாஷிங்டன் போஸ்ட்"என்ற பத்திரிக்கை நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முக்கால்வாசி அமெரிக்கர்கள் ஒபாமாவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அமெரிக்க அதிபரும் இவ்வளவு குறைவான மக்கள் ஆதரவைப் பெற்றதில்லை ஜார்ஜ் புஷ்ஷைத் தவிர. ஆப்கானில் செருப்படி வாங்கிக்கொண்டு புஷ் வெளியேறிய பின்னர், அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமா செய்த முதல் வேலை, ஆப்கானில் போரைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான். அதுமட்டுமல்லாமல், ஆப்கானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட்டார்.

 

ஆப்கான் போரைப் பாகிஸ்தான் வரை நீட்டித்து சென்றார். ஒபாமாவின் இந்த "இமாலயச் சாதனையை'ப் பாராட்ட நினைத்த நோபல் கமிட்டியினர் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிக் கவுரவித்தனர். "நீங்கள் இதுவரை செய்த செயல்களுக்காக இந்தநோபல் பரிசு தரப்படவில்லை, இனிமேல் செய்யப்போவதற்காக முன்கூட்டியே உங்களுக்கு இந்தப் பரிசைத் தருகிறோம்"எனக் கூறினார்கள் நோபல் கமிட்டியினர். எதிர்காலத்தில் செய்யவிருக்கும் "நல்ல' செயல்களுக்காக நோபல் பரிசு பெற்ற நபர், உலக வரலாற்றிலேயே ஒபாமா ஒருவராகத்தான் இருக்கக் கூடும். இப்படி உலகைக் காக்க வந்த ஒபாமாவின் அடுத்தபணி, சொந்த நாட்டு மக்களைக் காப்பது. பொருளாதாரச் சீரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒபாமா கொண்டுவந்த தீர்வு "பெயில் அவுட் பேக்கேஜ்". வீடிழந்து, வேலையிழந்து, இதுவரை சம்பாதித்தது அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்ற 2010 ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒபாமா எதுவும் செய்யவில்லை. மாறாக, பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணமாக இருந்து, அதன் மூலம் பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த முதலாளிகளுக்கு "பெயில்அவுட் பேக்கேஜ்" என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுத்தார்.

 

வேலையிழப்பைத் தடுக்கப் போகிறேன்; ஒருவாரத்தில் பல லட்சம் வேலைகளை உருவாக்கப் போகிறேன் என ஒபாமா அளித்த வாக்குறுதிகளெல்லாம் வெற்று வாய்ச் சவடால்களாகப் போய்விட்டன. வேலையிழப்பு அங்கே தொடர்கதையாகிவிட்டது. 2010ஆம் வருடம் பிறந்தது முதல் இதுவரை 20 வங்கிகளுக்கு மேல் அமெரிக்காவில் திவாலாகிவிட்டன. மருத்துவமனைகள் முற்றிலும் தனியார்மயமாகிவிட்ட அமெரிக்காவில், மருத்துவத்துக்கு ஆகும் செலவுகள் மிக மிக அதிகம். மருத்துவக் காப்பீடு இல்லாமல் போனால் சாதாரண வியாதிக்கே கூட மக்கள் தங்களது சேமிப்பு முழுவதையும் இழக்க வேண்டிவரும். அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாத மக்களின் எண்ணிக்கை4 கோடிக்கும் அதிகம். மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ள இவர்களைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில், மருத்துவநலச் சீர்திருத்தமசோதா ஒன்றை ஒபாமா கொண்டு வந்தார்.

 

இது "உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத்திட்டம்' போன்றதொரு மோசடித் திட்டம் என்பது வெகு சீக்கிரத்தில் அம்பலமாகி விட்டது. இவ்வாறு தொடர்ந்து சரிந்து வந்த தனது பிம்பத்தை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த ஒபாமா தேர்ந்தெடுத்த வழி நமது முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் வழி!; அது வேறொன்றும் இல்லை நாடுமுழுவதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடுவது, அவர்களுக்கு அறிவுரை சொல்வது. ஆனால் ஒபாமாவின் அறிவுரைகளை ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்ட மாணவர்கள், இப்போது ஒபாமா பேசுகிறார் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையே, இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற அவர்களுக்குக் கரிசனமாகப் பேசுவது, குரானிலிருந்து வாசகங்களைப் பயன்படுத்துவது எனப் பல வேலைகளைச் செய்து பார்த்தார். ஆனால், அவையாவும் பலிக்காமல் போய்விட்டன.

 

இவற்றின் எதிரொலியாக அண்மையில் மாசாசூட்ஸ் இல் நடந்த செனட்டருக்கான இடைத்தேர்தலில் ஒபாமா கட்சி படுதோல்வியடைந்தது. அதிகம் அறிமுகமில்லாத குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ள அமோக வெற்றி, "இது நம்ம ஆளு!" என்று ஒபாமாவை ஆதரித்து நின்றவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. அண்மையில் ஹெய்தி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவால் பல்லாயிரக்கணக்கான கருப்பின மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த போது, அருகிலுள்ள அமெரிக்க ஒபாமா அரசு உடனடியாக உதவ முன்வரவில்லை. வெகுதொலைவில் உள்ள ஐஸ்லாந்து நாடுதான் உடனடியாக வந்து உதவியது. இப்போது ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் அமெரிக்கத் துருப்புகள் அந்நாட்டில் நிவாரணஉதவி என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளன. ஒபாமா செய்த ஒரே நல்ல காரியம், ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல்வாதியால் ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை மாற்றியமைத்துவிட முடியாது, அதன் தன்மையை தனிமனிதரின் ஆளுமை மயிரளவும் மாற்றிவிடாது என்பதை நிரூபித்துக் காட்டியதுதான்.

 

ஒரு அரசியல் தலைவர், எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறார், அவர் எந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்று பரிசீலிக்காமல், சாதிமதஇன அடைப்படையில் பிழைப்புவாதத்துடன் ஆதரிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஒபாமா எதிர்மறையில் நிரூபித்துக்காட்டிவிட்டார். கடந்த ஓராண்டில் ஒபாமாவின் நிலைப்பாடும், செயல்பாடும் புஷ் காலத்திய செயல்பாடுகளிலிருந்து வேறுபடவில்லை. அமெரிக்க அதிபராக புஷ் இருந்திருந்தால் அவர் என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதையேதான் ஒபாமாவும் செய்துள்ளார். தலித்தியத் தலைவி மாயாவதியைப் போல, ஆளும்வர்க்கங்களுக்குச் Nசுவை செய்து தனது முகத்திரையை வெகுவிரைவிலேயே கிழித்துக் கொண்ட கருப்பின அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நாம் நன்றி சொல்லத்தான்வேண்டும்.

 

 மணி

Last Updated on Tuesday, 30 March 2010 06:17