Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஜனநாயகத்தையும், ஜனநாயக விரோதத்தையும் தீர்மானிப்பது, ஜனநாயக புரட்சிக்கான கடமைதான் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 04)

ஜனநாயகத்தையும், ஜனநாயக விரோதத்தையும் தீர்மானிப்பது, ஜனநாயக புரட்சிக்கான கடமைதான் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 04)

  • PDF

ஜனநாயகப் புரட்சி தான், பாராளுமன்றத்துக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், பாராளுமன்றத்தை ஜனநாயக வழியாக காட்டுவது ஜனநாயகம் பற்றிய திரிபாகும்;. ஜனநாயகத்தை மீட்க மகிந்தாவை ஆதரித்த புலியெதிர்ப்பு போன்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மகிந்தாவை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு "மார்க்சியம்" போன்றது.

மக்களை ஏய்ப்பதற்கு மார்க்சியத்தை திரிப்பதும், ஜனநாயகத்தை திரிப்பதுமே, இன்றைய  உடனடியான அரசியல் களமுனை அரசியலாய் இருக்கின்றது. இந்த வகையில் இனியொரு நாவலனுடன் புதியதிசைகளும் இணைந்து, ஜனநாயகம் பற்றியும் தேர்தல் பற்றியும் தங்கள் அரசியல் திரிபையே, தங்கள் புது அரசியலாக அறிவித்துள்ளனர். ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாட்டில், தேர்தலை ஜனநாயகத்தின் உள்ளடக்கமாக காட்டி அறிவித்துள்ளனர்.

 

இப்படி ஜனநாயகத்தை மீட்க தேர்தலைப் பயன்படுத்தல் என்பது, ஜனநாயக புரட்சிக் கடமையைக் கூட மறுக்கின்ற சுத்துமாத்து அரசியலாகும். ஜனநாயகத்தை தேர்தல் மூலம் அடையாளம் காண்பது என்கின்ற நிலையானது, அரசியலை திரிப்பதாகும்.

  

இந்த வகையில்தான் மார்க்சியத்தை ரகுமான் ஜானும் திரித்துக் காட்டுகின்றார். அவரின் கடந்த காலமோ, மார்க்சியத்தை பயன்படுத்தி பிற்போக்கை முன்னிறுத்தியதே. இது அவரின் கடந்தகால வரலாறு. இன்றும் அதுதான் அவரின் கடைந்தெடுத்த வழிமுறையாகும். இன்று மார்க்சியத்தை பயன்படுத்துவதன் நோக்கம், மிகத் தெளிவானது. அது தேர்தலில் நிற்றல் அல்லது ஆதரித்தல்.

 

அவர் பழைய புலியில் இருந்து புளட்டுக்கும், அதைத் தொடர்ந்து தீப்பொறிக்கும், அதன் பின் தமிழீழக் கட்சிக்கும்; சென்றவர், இன்று திடீர் மே18 இயக்கத்தைக் முன் தள்ளுகின்றார். இதை அவர் தன் கடந்தகால அரசியல் மற்றும் நடைமுறையில் இருந்து எதைச் செய்தாரோ, அதையே மீளவும் இங்கு கையாளுகின்றார். தன் கடந்தகால அரசியல் சுத்துமாத்து போல், இன்றும் மார்க்சியத்தை முன்வைத்தே மற்றவனை ஏமாற்ற முனைகின்றார். இதன் மூலம் தன் தவறான அரசியல் வழிக்கு மற்றவனை உடன்பட வைக்க, மார்க்சியத்தை திரித்துப் புரட்டுகின்றார். இதைத்தான் கடந்தகால இயக்கங்களும், மே18 ரகுமான் ஜானும் தமது கடந்தகாலம் முழுக்கச் செய்தனர்.

 

கடந்த காலத்தில் மார்க்சியத்தை சொல்லி மக்களை ஏமாற்றி அவர்களை படுகுழியில் தள்ளியவர்கள் இவர்கள். தங்கள் இந்த புதைகுழி அரசியலைப் பற்றி, எந்த சுயவிசாரணையும் சுயவிமர்சனமும் அவர்கள் வைத்தது கிடையாது. அவர் தன் பின் மந்தைகளை உருவாக்கும் சுத்துமாத்து அரசியல் உள்ளவரை, மார்க்சியம் மூலம் சுத்துமாத்து செய்வதே அவரின் அரசியல் வழிமுறையாகும்.

 

இன்று மார்க்சியத்தை சொல்லி வைக்கும் தீர்வு என்ன? தேர்தலில் நிற்றல் பங்குபற்றல் சரியானது என்ற வாதம்தான். இங்கு நாவலனுக்கும், ஜானுக்கும் மிக நன்கு தெரிகின்றது, புரட்சிகர பிரிவுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அரசியல் உண்மை. இதை ஏற்க வைக்கத்தான், இவர்கள் தங்கள் சுத்துமாத்து வழிகளில் தேர்தல் பற்றிய தங்கள் முடிவை  தர்க்கிக்கின்றனர்.

 

மார்க்ஸ் மற்றும் லெனினைக் காட்டும் இவர்கள், மாவோ இதை நிராகரித்ததைப் பற்றி வாய் திறக்காது பேச முனைகின்றனர். மார்க்ஸ், லெனினின் வாதங்கள் ஜனநாயக புரட்சி நடைபெற்ற சமூகத்தை அடிப்படையாக கொண்டது. மாவோவின் வாதங்கள் ஜனநாயக புரட்சி நடைபெறாத சமூகத்தின் மேலானது.

 

ஜனநாயகப் புரட்சி நடைபெற்ற நாடுகளின் பாராளுமன்ற ஜனநாயகம், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளின் ஜனநாயகம் என்பது, ஜனநாயக விரோதத்தை அடிப்படையாக கொண்டது. இதை இவர்கள் அரசியல் மறுதலிக்கின்றது.

 

இலங்கை ஜனநாயகப் புரட்சி நடைபெறாத ஒரு நாடாகும். இதன் ”ஜனநாயகம”;, ஜனநாயக விரோதத்தை அடிப்படையாக கொண்டது. குறைந்தபட்சம்; இந்த ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டிய நிலையில், ஜனநாயக விரோதத்தை ஜனநாயகமாக காட்டி களமிறங்குகின்றனர். இதற்காக மார்க்சியத்தை தம் நிலைக்கு ஏற்ப திரிக்கின்றனர். இலங்கை தழுவியதாக ஜனநாயகத்தை அணுகாது, தமிழ் மக்களை மட்டும் காட்டி திரிக்கின்றனர்.  

     

இவை எல்லாம் எதற்காக? மக்களையும், புரட்சிகர சக்திகளையும் ஏமாற்றத்தான். மக்களுக்காக போராடும் புரட்சிகர சக்திகள் முதல் தேர்தல் மூலம் எதுவும் கிடைக்காது என்று நம்பும் மக்களை வரை, பாராளுமன்ற தேர்தல் முறையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் எதையும் அடைய முடியாது என்று நம்புகின்றனர். இதை தகர்க்கவே 'புரட்சிகர" கோசங்கள் முதல் மார்க்சியம் வரை தங்கள் தேவைக்கு ஏற்ப கையாளுகின்றனர். தம்மை நம்பவைத்து, அவர்கள் கழுத்தை அறுக்க வேண்டியிருக்கின்றது. பாராளுமன்றமும், அதற்கு வரும் வழிகளும், அரசியல் சாக்கடை என்ற கருதும் புரட்சிகர பிரிவை ஏமாற்றி, அவை புரட்சிகர வழி என்று நம்பவைக்கத் தான் தர்க்கிக்கின்றனர்.  

 

ரகுமான் ஜான் கூறுகின்றார், தேர்தலை சட்டபூர்வமான செயலுக்குரிய ஒன்றாக, தேர்தல் வழிமுறையை  பயன்படுத்த முடியுமாம். இதைத்தான் புதிய திசையும் சொல்லுகின்றது. இது ஜனநாயகம், ஜனநாயக விரோதம் என்ற இரு அடிப்படையான சமூக கட்டமைப்பின், அரசியல் அடிப்படைக் கூறையே மறுதலிக்கின்றது. ஜனநாயகம் பற்றிய உள்ளடக்கத்தை திரித்து  மறுதலிக்கின்றது.

 

சரி, சட்டபூர்வ வழி மூலம், எதைச் சாதிக்க தேர்தல் வழிமுறை உதவும்? நீங்கள் சாதிக்கப் போவதாக கூறாது கூறுவதை, தேர்தல் வழிமுறை அரசியல் ரீதியாகவே சிதைக்கின்றது. ஜனநாயக புரட்சி நடைபெறாத ஜனநாயக விரோத பராளுமன்றத்தையும் அதன் வழிமுறைகளையும், ஜனநாயகத்தின் வடிவமாக காட்டுகின்றது. இதைக்கொண்டு ஜனநாயகத்தை அடைய, இதைப் பயன்படுத்த முடியும் என்கின்றது.

 

இது எப்படியிருக்கிறது என்றால், இந்தியாவிடம் பயிற்சியும், ஆயுதமும் வாங்கி தமிழீழம் காணப் புறப்பட்ட அதே உத்திதான். புலிகள் தமிழீழத்தை காண ஜனநாயகத்தை மறுத்த அதே குள்ளநரித்தனமான மக்கள் விரோத அரசியல் தான். புலியெதிர்ப்பு அணி ஜனநாயகத்தை பெற, தேசியத்தை மறுத்து இறுதியில் மகிந்தாவின் மடியில் படுத்த அதே அரசியல்தான்.

 

பாரளுமன்றம் மூலம் ஜனநாயகத்தைப் பெற, அதை பயன்படுத்துங்கள் என்கின்றார். வேடிக்கையாகவில்லை. ஜனநாயகம் என்றால் என்ன? இதன் வரைவிலக்கணம் தான் என்ன? சுரண்டப்படும் மக்களுக்கும், சுரண்டும் வர்க்கங்களுக்கும் ஜனநாயகம் என்றால், அது அரசியலில் கேலிக்குரியது. இங்கு கேலிக்குரியவகையில் அனைத்தையும் திரிக்கின்றனர்.

 

சட்டபூர்வ செயல்பாட்டுக்கு தேர்தல் வழியைக் காட்டுவது, பாராளுமன்ற சாக்கடையில் மக்களை புரண்டு படுக்கக் கோருதுதான். இங்கு சட்டபூர்வமானது என்பது, ஜனநாயக விரோத உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது. தேர்தல் சட்ட பூர்வமானது என்பது, அதை ஜனநாயக உறுப்பாக காட்டுவது, அரசியல் மோசடி. இலங்கை ஜனநாயகப் புரட்சியிலான ஒரு பாராளுமன்றத்தைக் கொண்டதல்ல. இது ஜனநாயக விரோதமான உள்ளடக்கத்தை  அடிப்படையாகக் கொண்டது. அதாவது ஜனநாயகப் புரட்சிக்கு எதிரானது. அதாவது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் இதன் உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டது.

 

தொடரும்

 

வாக்கு போடாதவனை, வாக்குப்போட வழிகாட்டும் இனியொரு நாவலனும், மே 18 ரகுமான் ஜானும் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 01)

 

கம்யூனிச கட்சிகள் பாராளுமன்றம் சென்று சீரழிந்த வழியையே, இனியொருவும் மே18ம் வழிகாட்கின்றது (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 02)

 

ஜனநாயக விரோதிகளாக இருத்தல்தான், பாராளுமன்ற ஜனநாயகத்தின் உள்ளடக்கம் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 03)

 

பி.இரயாகரன்
05.03.2010

 

 

Last Updated on Friday, 05 March 2010 08:48