Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

  • PDF

“பாக்சைட்டுக்காக”
பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும்
ப.சிதம்பரம் சொல்கிறார்,
நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்!

தாதுக்கிழங்கைச் சூறையாட
வெறிகொண்டு பாயும் ஓநாய் கம்பெனி “வேதாந்தாவோடு”
சூதுசெய்யும் காங்கிரசு பன்றிகளைப் பார்த்து
நடுங்குகிறது நியாம்கிரி மலை…
பசுந்தளிர்களின் குரல்வளையை மிதிக்கும்
இந்திய இராணுவ பூட்சுகளின்
பன்னாட்டுக் கம்பெனி பற்களைப் பார்த்து
அலறுகிறது தண்டகாரண்யா…

எப்படிப் பிறந்தான்
எனும் சிக்கலே இன்னும் தீராத
செப்படி ராமனுக்கு நம்பிக்கை அடிப்படையில்
பிறப்பிடம் அயோத்தியென
உரிமை வழங்கி அதற்கு ஊறு நேராதவாறு
உத்திரவு வழங்கும் நீதிமன்றம்,
நிறைந்துள்ள நாட்டில்,
கானகத்து அரும்பிலும்
காட்டுமர நரம்பிலும்
காட்டுப்பூச்சிகள் தீண்டிய தழும்பிலும்
மலைப்பொருட்களின் தாதிலும்
வரலாறாய் கலந்திருக்கும்
பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!

இப்படி பேசுபவனுக்கு
இனி நாடு சொந்தமில்லையென
எழுந்துவிட்டது டோங்கிரி!
மண்ணை விட்டால் தன்னை விட்டதாய்
கருதும் அந்த பழங்குடி
காடும் மலையும் கூட இனி
இந்திய  ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி!

பழங்குடி மக்களின் கண்களில்
பத்திரமாக இருக்கிறது மலை..
அவர்களின் தாலாட்டில்
வேரோடியிருக்கிறது காடு…

பறக்கும் வண்-ணத்துப்பூச்சிகளின் சிறகிலும்
துளிர்க்கும் பச்சிலைகளின் நுனி நாக்கிலும்
படிந்திருக்கிறது அவர்கள் மொழி….

கடும் பாறைகள் அவர் மார்புகள்..
கரும் மரக்கிளைகள் தலைமுறைக் கைகள்…
அடர்ந்த காடும், நிமிர்ந்த மலைகளும்
பழங்குடி மக்களின் பரம்பரை உணர்ச்சிகள்.
அவர்கள்,
பேசும் காடுகள், நகரும் மலைகள்
உதடுகள் கொடுத்து
காட்டு மூங்கிலை பேச வைத்தவர்கள்…
உணர்ச்சிகள் கொடுத்து
மலை, நீர்ச்சுனைகளை வாழ வைத்தவர்கள்…

பால்வடியும் தம் பிள்ளைகளோடு
பனிவடியும் செடி, கொடிகளுக்கும்
பெயர் வைத்து அழைத்தவர்கள்…
தயங்கும் ஓடைகளை அழைத்துவந்து
தாவரங்களோடு பழக வைத்தவர்கள்…
கிழங்கு, கனிகள், பச்சிலைகள் என
காடு, மலைகளின் இயற்கை பெருமிதத்தை
தங்கள் இரத்தத்தில் அறிந்தவர்கள்….

இயற்கை உரிமையுள்ள
இந்த எண்ணிறந்த மக்களை
ஒரு அந்நியக் கம்பெனியின் இலாபவெறிக்காக
அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே
அவர்களை அடித்து துரத்தும்
ஆபத்தான பயங்கரவாதி யார்?

மன்மோகனிஸ்ட்டா?
மாவோயிஸ்ட்டா!

ஒன்பது டஜன் சோடாபாட்டிலை
சைக்கிளில் கட்டிக் கொண்டு,
எதிர்காற்றை முறித்து
மிதிவண்டி அழுத்துகையில்
பாட்டிலில் கலந்த காற்று
நெஞ்சக் கூட்டில் வந்து வெடிக்கும்
கமறும் இரத்தத்தை
எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி
ஒற்றை மனிதர்களாய்
உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில்
ஒரே நாளில்
கோக் பெப்சியை
டன் கணக்கில் இறக்கவிட்டு
சிறுதொழில் முகத்தையே சிதைத்த
படுபயங்கரவாதி யார்?

இந்த நாடுமாறி அரசா?
இல்லை நக்சலைட்டா!

நீங்கள் கஞ்சிச் சட்டை போட
தன் நெஞ்சுக் கட்டை தேய
கைத்தறியை இழுத்து, இழுத்து அடிக்கும் கைகள்,
தலைமுறையாய் தறியாடி
இடுப்பெலும்பு கழலும்
தறிநூலாய் தொண்டை நரம்புகள்
அசைந்து அசைந்து வெறும்வயிற்றில்
உயிர் உழலும்
நசுங்கிய சொம்புத் தண்ணி
அவ்வப்போது நாவுக்கு பசைபோடும்…

பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும்
படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி
சுயதொழில், சுயமரியாதையுணர்வோடு வாழ்ந்த நெசவாளர்களின்
கைத்தறி ரகங்களை பிடுங்கி விசைத்தறிக்குக் கொடுத்து
அன்னிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து
கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து
மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க
தன் உடலை விற்கும்படி
உருத்தெறியாமல் சிதைத்த இரக்கமற்ற  பயங்கரவாதி யார்?

இந்த நாடாளுமன்ற சாடிஸ்ட்டுகளா?
நக்சலைட்டுகளா!

கண்தோல் காய்ந்தாலும்
மண்தோல் காயாமல்
மடைபார்ப்பான் விவசாயி.

பிள்ளை முகத்தில் கட்டிவந்தாலும்
பெரிதாக அலட்டாமல்
சுண்ணாம்பை தடவிவிட்டு…
நெல்லின் முகத்தில் ஒரு கீறல் எனில்
வட்டிக்கு கடன் வாங்கி
வைப்பான் அடி உரம்

வரப்பின் சேற்றில் பல் துலக்கி
மடையின் நீரில் முகம் கழுவி
வயல் நண்டில் உடல் வலி போக்கி
கதிரின் வாசத்தில் உயிர்வலி போக்கி
களத்து மேட்டில் நெல்லைத் தூற்றும்
உழைப்பின் வேகத்தில் தூரப் போய்விழும் சூரியன்.

அவரை, மொச்சை, துவரை
ஊடுபயிரோடு
அத்தை, மாமன், தமக்கை உறவும்
வளர்ந்து நிற்கும்.

பால்மாடு, வண்டிமாடு
பசுந்தழை மேயும் ஆடு,
அறுவடைக்காலத்தில் தன்பங்கையும் சேமித்து
மாட்டுக் கொட்டகைக்குள் மகிழ்ந்திருக்கும் குருவிக்கூடு

இப்படி ஒட்டுமொத்த உயிர்ப்பு பொருளாதாரமாய் விளங்கிய
வளங்களை நீரின்றி, விலையின்றி திட்டமிட்டு அழித்து
சிறப்பு பொருளாதாரமண்டலமென சீரழித்து வளைத்து
ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து
நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி;
நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும்
பச்சை பயங்கரவாதி யார்?

இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா?
தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா!

கடும்பனிக்கு அஞ்சி
சூரியனே தலைமறைவாய் கிடக்கும்
கம்பளிப் பூச்சியும் நகர்ந்து இலை மறைவாய்ப் படுக்கும்.

சிறுகடை வியாபாரி கைகளோ போய் வேகமாய்
பஜாஜ் எம்.எய்.டியை எடுக்கும்…
கோயம்பேடு சரக்கை குந்த இடமின்றி அடுக்கும்
வந்த காய்கறியை குடும்பமே வகை பிரிக்கும்

நடுத்தர வர்க்கத்தின் நாக்கு விழிக்கும் முன்னே
பால் கவர் போட்டு,
அடுத்த வேலையாய் தண்ணீர் கேன் போட்டு
அடுத்தடுத்த குரலுக்கு அளந்து போட்டு
திரிந்த பாலுக்கும் குழைந்த அரிசிக்கும்
எரிந்து விழும் பார்வையை ஆற்றுப்படுத்தி, மாற்றிக் கொடுத்து
மெல்ல மெல்ல சில்லறை வணிகச் சந்தையை
தன் கையால் காலால் கட்டி எழுப்பிய வியாபாரிகளை
ஒரே போடில் தலைவேறு, முண்டம் வேறாய்,
சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும்
ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும்
உலவவிட்டு
சிறுகடை வியாபாரிகளை கடை கடையாய் வேட்டையாடிய
கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்?

இந்தக் கயவாளி அரசா?
மக்களை காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!

ஹூண்டாய் கார் போகும் சாலையில்
குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,
மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம்
ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்
சிங்காரச் சென்னையின் அழகுக்காக
அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள்.

பற்றவைக்கும் பயங்கரவாதி யார்?

உள்நாட்டு தொழிலாளர்க்கோ
உயிர் வாழும் உரிமையில்லை
அன்னிய பன்னாட்டு கம்பெனிகளுக்கோ
உன்னை சாகடிக்கவும் சலுகைகள்..

போர்டுக்கு, ஹூண்டாய்க்கு முன்னே போராடினால்
அடித்துத் துவைக்க அதிரடிப்படையை அனுப்பிடும்
அந்த பயங்கரவாதி யார்?

வெள்ளைக்காரன், வெளிநாட்டு கம்பெனியை
விரட்டத்தானே சுதந்திரபோராட்டம் நடத்தியதாய்
சொல்கிறீர்கள்?
பின்னே ஏன் இத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளை
இழுத்து வருகிறீர்கள் இப்போது
சுரண்டும் வர்க்கத்தை அழைத்து வருவதற்கு
சுதந்திர போராட்டம் நடத்தியது எதற்கு?
கேட்டுப் பாருங்கள்..
பயங்கரவாதிகளுக்கு பதில் சொல்லிப் பழக்கமில்லை…
படையோடு வருகிறார்கள்.
சத்தீஸ்கர், ஒரிசாவிற்கு ஒரு லட்சம் ராணுவம்…
சற்றே காத்திருங்கள் நாடு முழுக்க முப்படையும்…

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு
பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன்
பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால்
நீங்கள் ஏமாந்து போவீர்கள்

அதோ பாருங்கள்…
பளிச்சென வெண்ணிற உடை…
பார்த்ததும் புன்முறுவல்..
கொலைக்குறிப்புகள் தெரியாத
குளிரூட்டும் பார்வை…
கண்ணக் கதுப்பில் வழியும்
காதிகிராப்ட் காந்திய வெண்ணெய்
தளுக்கான பேச்சில் வழுக்கும் உதடுகள்….
தாய்நாட்டுப் பற்றுக்காகவே வாழ்வது போல
தயங்காமல் பேசும் தோரணை…

இவைகள்தான்… இவைகள்தான்…
உண்மையான பயங்கரவாதியின்
மென்மையான அடையாளங்கள்

இன்னும் குழப்பமா
எதற்கு இத்தனை அடையாளம்
பழுத்த, கனிந்த, தேசவிரோத பயங்கரவாதியை
நீங்கள் பார்க்க வேண்டுமா?

அதோ.. ப.சிதம்பரத்தைப் பாருங்கள்!

தாயின் மார்பை அறுத்து
பிஞ்சுக் குழந்தையின் விரலை ஒடித்து
பழங்குடிப் பெண்களின் உடலைக் குதறி

அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் காசு பார்க்க
தன் அடிமைப் பிழைப்பில் ருசி பார்க்க
தாய்மண்ணின் தாதுக்களையே வெட்டிக் கொடுக்கும்
கேடுகெட்ட, கீழ்த்தரமான, தேசத்துரோக பயங்கரவாதி
ப.சிதம்பரத்தை அதோ பாருங்கள்..

- துரை.சண்முகம்

Last Updated on Friday, 19 February 2010 07:15