Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் நபர்களுடன் நாம் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஒன்றுபட முடியும்

நபர்களுடன் நாம் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஒன்றுபட முடியும்

  • PDF

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.

இலங்கையின் தேர்தலைச் சுற்றி நடந்த பாசிசமயமாக்கலை எதிர்த்து, எந்த திடீர் "புரட்சி"யாளனும் மக்களுக்கு சொல்ல எதுவும் இருக்கவில்லை. அதைத்தான் எம்மைச் சுற்றிய நிகழ்வுகள் காட்டுகின்றது. புலியெதிர்ப்பு அணி பாசிசமயமாக்கலை ஆதரித்து அதற்கு  சித்தாந்தத்தை அள்ளி வழங்கும் துடிப்பு, புலி தன் மீள் பாசிச மயமாக்கலுக்கு இதைப் பயன்படுத்தி கட்டமைக்கும் சிந்தாந்த வேகத்தின் முன், திடீர் புரட்சி பேசியவர்கள் தங்கள் மௌனம் மற்றும் எம்மை மறுத்ததன் மூலம் உதவுகின்றனர். அவர்களுக்கு உதவ, எம்மை மறுத்தவர்கள், எம்மை போராட்ட வழிகளில் அங்கீகரித்து எம்முடன் சேர்ந்து போராட அவர்கள் தயாராக இருக்கவில்லை. நாம் கம்யூனிஸ்ட்டுகள் என்பதால், அவர்கள் எம்மைத் தூற்றுகின்றனர். கள்ள மௌனம் சாதித்தபடி, பாசிட்டுகளுடன் சேர்ந்து குழிபறிக்கின்றனர். 

 

இவர்கள் கள்ள மௌனம் சாதித்து பாதுகாக்கும் பாசிச தேர்தல் கட்டமைக்கும், பாசிச அரசியற் போக்கை நாம் பார்ப்போம்.    

   

வாக்குரிமையை முன்னிறுத்திய "ஜனநாயகமும்", அதை மோசடி செய்யும் "ஜனநாயகமும்"

 

மக்களின் சுதந்திரமான வாக்குகள் மூலம் தான் "ஜனநாயகம்" மிளிர்வதாக கூறுகின்றன ஆளும் வர்க்கங்கள். பரந்துபட்ட மக்கள் முதல் இதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோர் வரை,  அனைவரும் இதைத்தான் "ஜனநாயகம்" என்று நம்புகின்றனர்.

 

தேர்தல் மேல் நம்பிக்கை வைத்து, தேர்தலை பகிஸ்கரிக்க கோருவோர் கூட வாக்கை செல்லுபடியற்றதாக்கக் கோருகின்றனர். கள்ளவாக்கு போடுவதைத் தடுக்க என்று இதற்கு சித்தாந்த விளக்கம் கூறி, வாக்கை செல்லுபடியற்றதாக்கக் கோருகின்றனர். சிலர் ஆளைக்காட்டி, போடக் கோருகின்றனர். இப்படியெல்லாம் இந்த மக்கள் விரோதமான சமூக அமைப்பை பாதுகாக்க பல வேசங்கள். வாக்கின் பலத்தையும், இதன் மகிமையையும், இதன் அற்புதங்களையும் போற்றி, அதை எப்படி பயன்படுத்துவது என்று ஆளுக்காள் அரசியல் சித்தாந்த விளக்கங்கள்.

 

மக்களை சுரண்டியும் ஒடுக்கியும் வாழும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க,  வாக்கைப் பயன்படுத்துவது பற்றி கூறுகின்றனர். இதையே தங்கள் அயோக்கித்தனமான அரசியலாக்கியவர்கள், இந்த வாக்குக்கு என்ன நடந்தது? நடக்கின்றது என்ன? என்பதைப் பற்றி பேசுவது கிடையாது. கள்ளர் குகைக்கு முன் உட்கார்ந்து இருந்து, காவல் காக்கின்றனர்.

 

கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் நேராவது போல் தான், ஆளும் வர்க்க "ஜனநாயகமும்" வாக்குப் பற்றிய இரண்டு ஒழுக்கக்கேட்டின் மூலம் நேராகின்றது.

 

இதுதான் உன் விடுதலைக்குரிய அரசியல் மார்க்கம் என்று நம்பவைத்து, வாக்கை மோசடி செய்து வாக்களிக்க வைக்கின்றனர். போட்ட வாக்கை மோசடி செய்து, அதிகாரத்தை பெறுகின்ற "ஜனநாயக" இழிகேட்டை நடத்துகின்றனர். இப்படி பல. இங்கு இந்த இரு "ஜனநாயக" ஒழுக்கக்கேடான செயல்களை கொண்டு, ஆளும் வர்க்க பிரதிநிதிகள் தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதுதான் "ஜனநாயகம்".

 

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பகுதியை வாக்களிக்க விடாமல் தடுத்தவர்கள், போட்ட வாக்கை மோசடித்தனமான எண்ணிக்கை மூலம் அதை நேராக்கி தம்மை வென்றவராக அறிவிக்கின்றனர். இப்படி இந்த வாக்குரிமை என்பது, எவ்வளவு போலியானது என்பதும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்தின் தூண்டில் என்பதும் வெளிப்டையான ஒரு உண்மையாகி இன்று அம்மணமாகிக் கிடக்கின்றது.

 

கள்ள வாக்கை போடாமல் தடுக்க வாக்கை சரியாக எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும், வாக்கை செயலற்றதாக்குவது எப்படி என்பது பற்றியும், அதை செயலுள்ள வகையில் போட்டு பயன்படுத்துவது பற்றியும் கருத்துரைத்து மக்களை பிழையாக ஆளும் வர்க்கத்தின் பின் செல்ல வழிகாட்டியவர்கள், தங்கள் வாக்குக்கு என்ன நடந்தது என்பது பற்றி வாய் திறக்கவில்லை.

 

தேர்தல் ஆணையாளரின் தனிப்பட்ட மனச்சாட்சி தான், வாக்குக்கு என்ன நடந்தது என்ற உண்மைகளை வெளியுலகின் முன் அம்பலமாக்கி விடுகின்றது. அவர் தன் மீதான கொலை அச்சுறுத்தலையும் மீறி, அதை வெளிக்கொண்டு வந்தார். இந்த ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த  அதிகார வர்க்க பிரதிநிதியின் தனிப்பட்ட மனச்சாட்சி, நேர்மை உணர்வு கூட, இடதுசாரியம் பேசி திடீர் புரட்சி பேசும் மரமண்டைகளுக்கு கிடையாது.

 

ஆளும் வர்க்கமும், எதிர்க் கட்சியும் உடனுக்குடன் கட்டமைக்கும் பிரச்சாரத்தின் முன், "புரட்சி" பேசும் இடதுசாரியமும், திடீர் புரட்சிவாதிகளும் வாலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கிடக்கின்றது, கிடக்கின்றனர். தட்டுத்தடுமாறி எழும்பி குலைத்தால் நாறும்.

 

மக்களுக்கு எதிரான, மக்களை அடிமைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடித்து, மக்களை உடனுக்குடன் தெளிவுபடுத்தி வழிகாட்ட வக்கற்றவர்கள் தான் "புரட்சியாளர்கள்".  மக்கள் இதன் பின் சென்று மந்தைகளாகியபின், ஒரு திடீர் விமர்சனத்தை செய்வார்கள். நாங்கள் இதை எதிர்த்துப் போராடியவர்கள் என்று, புரட்சியின் பெயரால் கூறிப் பிழைக்கும் அரசியல் நக்குண்ணித்தனம் தான், இன்று அரசியலாக மாறி அது தனக்கு ஓளிவட்டம் கட்ட முனைகின்றது.

 

யுத்த காலத்திலும் சரி, அதற்கு முன்னும் புலிகளையும், இந்த அரசையும் விமர்சித்து மக்களை வழிகாட்ட முன் வராதவர்கள், மே 18 இன் பின்  திடீரென வந்தார்கள். வந்தவர்கள் போராடிய எங்களை மறுத்து அதைக் கொச்சைப்படுத்திய படி,  மக்களை வழிகாட்டப் போவதாக கூறி களமிறங்கினர். வெட்கக்கேடு என்னவென்றால், தேர்தலை தவறாக வழிகாட்டியவர்கள், தேர்தலின் பின் நடந்த கூத்துகளை அம்பலப்படுத்தி மக்களை புரட்சியின் பக்கம் வழிகாட்ட முடியாமல் போனது தான். இனி ஆவி தன்னுள் இறங்கும் வரை, இதை அம்பலப்படுத்திப் போராட முன்வர மாட்டார்கள். 

 

இவர்கள் நாம் மக்களை நெறிப்படுத்தும் போராட்டத்தை தடுத்து நிறுத்த முனைகின்றனர். அதை பல வழிகளில் திணிக்கின்றனர். அவர்களின் பின் நின்று நக்க அல்லது அவர்களுடன் கூடிப் பிணையக் கோருகின்றனர். அவர்கள் உண்ணி எம்மை கடித்தால் பரவாயில்லை என்கின்றனர்.

 

மக்கள் இன்று குழம்பிப் போய் நிற்கின்ற நிலையில், தம்மைச் சுற்றி நடக்கின்ற விடையங்களை புரிந்து கொள்ளமுடியாது தவிக்கின்ற நிலையில்; உள்ளனர்.  இந்த நிலையில் மக்களைச் சார்ந்து வழிகாட்ட முடியாதவர்கள், அதற்காக செயற்பட முடியாதவர்கள் தான், நாளைய அரசியலை வழிநடத்தப் போவதாக கூறுகின்றனர்.

 

மே18 இன் பின் அவசரமாக கோவணத்தை இழுத்துக் கட்டியபடி அரசியலுக்கு ஓடி வந்தவர்கள், மக்கள் முன் இன்று நிர்வாணமாக கோமணத்தை கழற்றி எறிந்து விட்டு நிற்கின்றனர். மக்களை உடனுக்குடன் வழிகாட்ட வக்கற்றவர்கள், மக்களை வழிகாட்ட முனைந்தவர்களின் இன்றைய கருத்தை நாளை திருடி, தமக்கு ஏற்ப அதைத் திரித்து முகம் காட்டுவது தான் இவர்கள் திடீர் நடைமுறையாகும்.

 

இது இன்று இலங்கை அரச பாசிசம் கட்டமைக்கும் போக்கை, அம்பலப்படுத்தி போராடாது பாதுகாக்கும் குறுக்கு வழி அரசியல் வழிமுறையாகும். மே 18 வரை வாலை ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தவர்கள், மே 18 பின் வாலை கிழப்பிக் கொண்டு திடீர் "புரட்சி" பேசி கடைவிரித்த அதே அரசியல் உள்ளடக்கம் தான். இன்று தேர்தல் முறைகேட்டை கூட பாசிசமயமாக்கி நியாயப்படுத்தும் சிந்தாந்த நிலையில், இதற்கு எதிராக போராடதவர்களுடன் நாம் எப்படித்தான் ஒரு இணக்கமாக அரசியல் இணக்கப்பாட்டை இனம் காணமுடியும். மகிந்தாவின் குடும்பம் நடத்தும் பாசிச இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து இயங்காத சந்தர்ப்பவாதத்துடன் எப்படித்தான் இணங்கி நிற்க முடியும்;. இதற்கு எதிராக இன்று நடைமுறையில் வழிகாட்ட வக்கற்றவர்கள் உடன், எப்படி எங்கே நாம் எந்தப் புள்ளியில் ஓன்றுபட முடியும். நாங்கள் நபர்களுடன் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஓன்றுபட முடியும். அது உங்களிடம் இல்லை. போராடுவதற்கான குறைந்தபட்ச தேர்வு எங்களுடைய பொதுக் கருத்துகளுடன், எங்கள் செயல்களுடன் ஒன்றுபட்டு நின்று போராடுவது தான்  வேறெந்த தேர்வு மக்களுக்கானதான இருக்க முடியும்? எதுவும் உங்கள் முன் கிடையாது. 

 

பி.இரயாகரன்
31.01.2010                       

 

 

     

Last Updated on Friday, 05 February 2010 11:28