Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தேர்தலை நிராகரி! புரட்சி செய்!

தேர்தலை நிராகரி! புரட்சி செய்!

  • PDF

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

மக்களை அச்சுறுத்துவதற்கு மக்கள் விரோதிகள், புரட்சி என்றால் அது "ஆயுதப் போராட்டம்" என்கின்றனர். இப்படி மக்களை அச்சுறுத்தி, மக்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர்.

 

தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்றால், தேர்தல் பற்றிய அறிவை விருத்தி செய் என்று அர்த்தம். இங்கு புரட்சி என்பது மனிதன் தன் வாழ்வையும், தன்னைச் சுற்றிய நிகழ்வையும்  புரிந்து கொள்ளும் பகுத்தறிவு சார்ந்தது. இந்த பகுத்தறிவு புரட்சிகரமான சிந்தனை முறையாக, அதுவே வாழ்வியல் நடைமுறையாக, சமூகம் சார்ந்த செயல்முறையாக மாறுவது தான், புரட்சியின் உள்ளடக்கம்.

 

இந்த வகையில் சிந்திப்பது, செயல்படுவது தான் சரியான ஒரு அரசியல் நடைமுறை. இன்று இலங்கையில் இதை செய்யும் வகையில் புரட்சிகர கட்சியோ, உதிரி நபர்களையோ இனம் காண முடியாது உள்ளது. தமிழ் சமூகத்திடம் இந்த சாபக்கேடு என்றால், சிங்கள சமூகத்திலும்  தான் இந்த அவலம்;. இலங்கை தழுவிய அளவில் தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்ற கோசத்தை முன்வைத்த ஒரு செயல்முறை ஒரு தொடர்ச்சியான தன் அரசியல் செயல் போக்கில் கிடையாது. தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்ற கோசத்தை கருத்துத் தளத்தில் நாம் மட்டும் முன்வைக்கின்றோம். இது கருத்துத் தளத்தில் மட்டும், குறிப்பாக முன்னேறிய பிரிவினரை மட்டும், அரசியல் ரீதியாக இதை நோக்கி சிந்திக்கவைக்கவும், செயல்பட வைக்கும் அரசியல் எல்லைக்கு உட்பட்ட ஒன்றாக, தேர்தலை நிராகரி! புரட்சி செய்! கருத்து உள்ளது.  

 

இதற்கு வெளியில் தேர்தல் நடக்கின்றது.

 

1.பொதுவான கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பின் வாக்களிப்பது. கட்சி உறுப்பினர்கள் முதல் பொறுக்கித் தின்னும் கூட்டம் வரை அடங்கும். 
 
2.மக்கள் தங்கள் வாழ்வுசார்ந்து தாம் காணும் எதிரியை எதிர்த்து வாக்களித்தல். தம் அதிருப்தியை  வெளிப்படுத்தல். பொதுவாக எதிர்க் கட்சிகள் இப்படித்தான் தாம் வெல்வதற்கான வாக்கை, மேலதிகமாக பெறுகின்றது.

 

3.வாக்கை செல்லுபடியற்றதாக்குவது. கள்ளவாக்கு போடுவார்கள் என்று கூற, கள்ள வாக்கை தவிர்க்க "வாக்கை செல்லுபடியற்றதாக்கு" என்று கூறி போடுவது, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி தாறுமாறாக போடுவது,.. இப்படிப் பல.   

   

4.தேர்தல் நிராகரிப்பு 

 

இப்படி நான்கு தளத்தில் தேர்தல் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றது. இதற்குள் அரசியல் முன்வைக்கப்படுகின்றது.  

 

இதில் தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்ற தேர்தல் நிராகரிப்பு அரசியல், நோக்கி செயல்படுவது தான,; அரசியல் ரீதியாக மக்களை சிந்திக்கும் எவரும் கையாளும் வழிமுறையாகும்;. இதற்கு இருக்கின்ற கட்சிகளை இதை நோக்கி வரும் வண்ணம் செய்தல்.  அது சாத்தியமற்ற அல்லது அதை நோக்கி முன்னேற முடியாத நிலையில் புதிய செயல் தளத்தை உருவாக்குதல். இதுவே புரட்சியை நேசிக்கும் அனைவரினதும் நிகழ்ச்சி நிரல்.   

 

வாக்கு என்றால் என்ன?  தேர்தல் என்றால் என்ன? 

 

உனது வாக்கு, உனது தெரிவு என்பது, செக்கு இழுக்கும் மாடுகளின் அதே நிலைதான். சுத்தி சுத்தி செக்கை இழுக்க வேண்டியதுதான். இந்த தேர்தல் முறை மூலம் நாங்கள் "விடுதலை அடையமுடியும்" என்று சொல்லித்தந்த கூட்டம் தான், இதை மக்களின் "ஜனநாயக" உரிமை என்கின்றது.

 

இந்த "ஜனநாயக" உரிமையைக் கொண்டு தமிழ்மக்கள் தங்கள் உரிமையைத்தான் பெற முடியுமா!? இல்லை. மக்கள் தங்களுடைய எந்த உரிமையையும் பெறமுடியாது.  உண்மையில் உங்கள் வாக்கு மூலம் தரப்படும் "ஜனநாயகம்", உங்களை யார் எப்படி அடக்கியொடுக்குவது என்ற தெரிவைத்தான் தருகின்றது. இதற்கு வெளியில் எதையும் தருவதில்லை.

 

மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதன் மூலம்தான், உண்மையான தெரிவு அடங்கியிருக்கின்;றது. மக்கள் போராடுவதன் மூலம்தான், புரட்சி செய்வதன் மூலம் தான், மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியும். வாக்கு போடுவதன் மூலம், இந்த உரிமைகளைப் பெற முடியாது. இது காலாகாலமாக உலகம் தழுவிய அளவில் காணப்படும் உண்மை.

 

இன்று இந்த சமூகக் கட்டமைப்பில் வாக்கு போடுவதும், போடக் கோருவதும் கூட மக்கள் தங்கள் உரிமைக்காக போராடக் கூடாது என்ற அரசியல் உள்ளடக்கத்திலானது. ஒரு புரட்சிகரமான அரசியல் வழிகாட்டலற்ற நிலையில், தேர்தல்கள் மூலம் மாற்றம் வரும் என்று வழிகாட்டுகின்றனர்.

 

ஒரு புரட்சிகரமான அரசியல் அற்ற வெற்றிடத்தில் தான், மக்கள் மந்தைகளாக வாக்குப் போட்டு மாற்றம் வரும் என்று நம்பவைத்து மேய்க்கப்படுகின்றனர். இதன் போது தங்களை ஒடுக்கி வாழும் ஆளும் வர்க்க பிரிவுக்கு எதிராக மக்கள் வாக்கு அளிக்கின்றனர்.

 

இதைக்காட்டி மக்கள் "ஜனநாயகம்" மிகப் பலம் வாய்ந்ததாக மீளவும் நம்பவைக்கின்றனர். ஆனால் மக்கள் தமக்கு எதிரான இந்த ஒடுக்குமுறை அரச வடிவத்தில் இருந்து என்று மீள்வதில்லை.

 

மக்களை எப்படி வாழ்வது என்பதை தீர்மானிப்பது மூலதனம் தான். அதை பாதுகாத்து ஆள்வது அதிகார வர்க்கம் தான். இதை மேய்ப்பது யார் என்பதை தேர்ந்தெடுக்கின்ற உரிமைதான் உனக்கு அவர்கள் தரும் "ஜனநாயகம்". தொடர்ந்து யார் உன்னை ஒடுக்குவது என்பதைத் தவிர, நீ எதையும் மாற்ற முடியாது. அதாவது மக்களை சுரண்டிவாழும் மூலதனத்தையும், அதை கண்காணித்து நடைமுறைப் படுத்தி பாதுகாக்கும் அதிகார வர்க்கத்தை, உன் வாக்கு முலம் மாற்றிவிட முடியாது.

 

மக்களைச் சுரண்டியும், ஒடுக்கியும் வாழும் மூலதனத்தின் இருப்பு, உலகம் தழுவியது. இதை நீ வாக்கு போட்டு மாற்ற முடியாது. மாறாக நீ புரட்சி செய்ய வேண்டும்.

 

வாக்குப் போட்டு உன்னை ஒடுக்க நீ தெரிவு செய்பவர்கள், எப்படி தெரிவு செய்யப்படுகின்றனர். இனவாதம் மூலம், சாதி மூலம், ஆணாதிக்கம் மூலம், பணத்தின் மூலம், மதத்தின் மூலம், பொய் வாக்குறுதிகள் மூலம், பொய்கள் மூலம், உண்மைகளைக் குழி தோண்டி புதைப்பதன் மூலம், ஊடகப் பிரச்சாரம் மூலம், விளம்பரங்கள் மூலம், நிர்ப்பந்தம் மூலம், கள்ள வோட்டு மூலம் என்று சகல மக்கள் விரோத இழி நடத்தைகள் மூலம் தான், தேர்தல் மூலம் உன்னை ஆள்வோரை நீ தெரிவு செய்வது நடக்கின்றது. உன் வாக்கைப் பெற முன்னம், உண்மையில் உன்னை அறிவிழக்கப் பண்ணி விடுகின்றனர். மனிதத் தன்மை இழந்த காட்டுமிராண்டி நிலைக்கு, அதாவது மற்றைய மனிதனுக்கு எதிராக என் உணர்வை, உணர்ச்சியை, சிந்தனைத் திறனை தரம் தாழ்த்தித்தான் உன் வாக்கை தமக்கு போட வைக்கின்றனர்.

 

இதற்கு வெளியில் உன் வாக்கு மூலம் எந்தத் தேர்வும் அமைவதில்லை. உனக்கான உன் தேர்வு, ஒரு புரட்சிக்கு வெளியில் கிடையாது. நீ அதைச் செய்ய வேண்டும். தேர்தல்  மூலம் எந்த மாற்றமும் நடக்காது என்ற தெரிவை, அரசியல் ரீதியாக நீ புரிந்து கொள்வது கூட புரட்சிதான். அதை மற்றவனுக்கு விளக்குவது கூட புரட்சிதான். மக்களின் அறிவு சார்ந்த அரசியல் தெளிவு தான் புரட்சி.

 

இதை மறுத்து வாக்கு போடுவது, வாக்கை செல்லுபடியாற்றதாக்குவது வாக்கை பெற்று மலத்தை துடைப்பது எல்லாம், வாக்கு என்ற மாயையை ஏற்படுத்தி மக்களை மந்தையாக மேய்ப்பது தான்.
       
தேர்தல் பற்றி இனியொருவின் அறிவியல் நிலைபற்றி பார்ப்போம்.

 

"இன்றைய இலங்கைத் தேர்தல் என்பதன் அடிப்படையே கேள்விக்குரியதாகும்" என்று இனயொருவில் நாவலன் கூறுவதும் அபத்தம். இது இந்தத் தேர்தலை மட்டும் மறுக்கின்றது. இது இலங்கைக்கு மட்டும், அதுவும் இன்று மட்டும் அதைக் கோரி பொருத்துகின்றது. இங்கு தேர்தலை பகிஸ்கரிக்க கோருகின்றது, தேர்தலை நிராகரிக்க கோரவில்லை. தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்பதை, இது தெளிவாக அரசியல் ரீதியாக மறுக்கின்றது. புலிகள் ஒரு கும்பல் அறிவித்த துக்கதினம் போல் இதுவும் ஒன்று. இவர்கள் வைத்த அதே காரணத்தை முன்வைத்துதான், அதைக் கூறுகின்றனர்.

 

ஏன் இதை பகிஸ்கரிக்க வேண்டும் என்று நாவலன் கூறுவதைப் பார்ப்போம்;. "முள்ளி வாய்க்கால் வரை அழைத்துச் செல்லப்பட்டு சாரி சாரியாகக் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் இரத்தம் இன்னும் உறைந்துபோக முன்னர் அவரசர அவசரமாக நிகழ்த்தப்படும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை எந்த அர்த்தமும் அற்றது." என்கின்றார். மற்றும்படி அர்த்தம் உள்ளது. இதே காரணத்தைக் கூறி துக்கதினத்தை புலி கோருகின்றது. 

 

சிறுபான்மையினருக்கு அர்த்தமற்றது என்றால்!?; பெரும்பான்மைக்கு அர்த்தமுள்ளதா!? சிறுபான்மை பகிஸ்கரிக்கவேண்டும் என்றால், பெரும்பான்மை அதை செய்யத் தேவையில்லையா?

 

அவர் மேலும் கூறுகின்றார் "நாங்கள் சாகடிக்கப்பட்ட மக்களின் பிணங்களின் மேல் நடத்தப்படுகின்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை". "இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் நடத்தப்படும் இந்த நாடகத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்று மற்றவர்கள் கூற்றை எடுத்துக் கூறி, இதனால் தேர்தலை பகிஸ்கரிக்க கோருகின்றார். இதற்கு வெளியில் அல்ல. அதாவது தேர்தலை நிராகரி என்று கூறவில்லை. புரட்சி செய் என்று கூறவில்லை. "பிணங்களின் மேல் நடத்தப்படுகின்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றால், பிணமற்ற தேர்தலை ஏற்றுக் கொள்ளலாம்.  "இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் நடத்தப்படும் இந்த நாடகத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்றால், இதுவல்லாத நிலையில் இது நாடகமல்ல. இப்படி மார்க்சிய அரசியல். 

 

சரி எதற்காக பகிஸ்கரிக்க கோருகின்றார். "நாம் சார்ந்த உலகத்திற்குக் கூற வேண்டும். தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் வாழுகின்ற அனைத்துப் பிரதேசங்களும் ஒருமித்து தேர்தலைப் புறக்கணித்து, அனைத்தும் செயலிழந்து, தேர்தல் நாளில் தெருக்களும் வெறிச்சோடியிருக்குமானால் நாங்கள் உலகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லலாம்." ஆக உலகத்துக்குச் சொல்ல பகிஸ்கரிப்பு. மக்களை அரசியல் மயப்;படுத்தவல்ல, புரட்சியைச் செய்யவல்ல. "உலகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தியைச்" சொல்ல, பகிஸ்கரிப்பைக் கோருகின்றார். இப்படி தேர்தல் மேலான மாயையையும், தேர்தல்  மூலமான மோசடியையும், பகிஸ்கரிப்பைக் கோருவதன் மூலமும் செய்யலாம்.

 

இதற்கு வெளியில் தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்ற கோசத்தின கீழ் சிந்திக்கவும்,  செயல்படவும் கோருகின்றோம்;. இதனுடாக அரசியலை புரிந்து கொண்டு சிந்திக்கவும் செயலாற்றவும் கோருகின்றோம்.    

 

பி.இரயாகரன்
25.01.2010

 

 

 

Last Updated on Monday, 25 January 2010 08:58