Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!

மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!

  • PDF

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !! –பாகம் – 2

“ஒவ்வொரு பேரழிவுமே ஒரு வரப்பிரசாதம்.” ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்து வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்திய விவசாயிகளை தற்கொலை விளிம்புக்குத் தள்ளிய மோசடி விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஈழத்தில் தனது தொழில் முதலீடுகளுக்காக சென்ற போது சொன்ன வரிகள்தான் இவை.

ஆனால் ஸ்வாமிநாதனின் இந்த வரிகள் அவரது கடந்த கால அனுபவங்களில் இருந்து விளைந்தது. உலக முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் அழிவை ஆதாயமாக மாற்றவல்ல யுத்தியை கற்றுக் கொடுத்தது  சுனாமியில்தான்.

வன்னிப் படுகொலைகளுக்கு முன்னர் நாம் சந்தித்த மிகப் பெரிய மனிதப் பேரவலம் சுனாமிதானே. இந்தியா காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளில்  மெல்ல தன்னார்வக் குழுக்கள் இந்தியாவுக்கு ஊடுறுவி வந்தன.ஆனாலும் துல்லியமாக மக்களை நேரடியாக அணுகக் கிடைத்த வாய்ப்புதான் சுனாமி. சுமார் ஏழாயிரம் கோடிகள், 600 தன்னார்வக்குழுக்கள் என்று தென் கிழக்கு கரையோர நாடுகளை குறிவைத்து இறங்கின  இந்த கொள்ளை நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள் செய்த முதல் வேலை மீனவ மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்ததுதான். கடல், நீர், நிலம், மலை என எல்லாமே தனியாருக்குத்தான் என்கிறார்கள் இல்லையா? இந்த நிலங்கள் சார்ந்து என்ன பேரழிவு நடந்தாலும் அங்கே தன்னார்வக்குழுக்கள் உடனே களமிறக்கப்படுவார்கள். காரணம் அந்த மக்களிடம் இருக்கும் அரசியல் ரீதியாக, சிவில் உரிமைகள் தொடர்பாக இருக்கும் கோபங்கள் அரசுக்கு எதிராக திருப்பி விடாமல் பார்த்துக் கொள்வதுதான் இவர்கள் வேலை.

எண்பதுகளில் நான் சிறுவனாக இருந்த போது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு தென் தமிழக கடலோரங்களில் தீவிரமாக இருந்தது. கிறிஸ்தவ பாதிரிகள் இப்போராட்டங்களில் அக்கறை காட்டினார்கள். கடைசியில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏராளமான மீனவ கிராம மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்றி வந்தமர்ந்திருக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையம். அப்படியானால் எண்பதுகளில் நடந்த போராட்டம்? அதுதான் தன்னார்வக் குழுக்களின் வேலைத் திட்டம். எதிர்ப்பில்லா எதிர்ப்புகளை உருவாக்கி ஏகாதிபத்திய நிறுவனங்கள் செய்ய நினைப்பதை தடையின்றி கொண்டு வந்து விட்டு சென்று விடுவார்கள். ஆபத்து வந்து நிற்கிறதே என்று போராடிய தன்னார்வக் குழுக்களைத் தேடினால் அவர்களை இப்போது காண முடியவில்லை. நிதி (ஃபண்ட்) இல்லை அதனால் போராட்டமும் இல்லை என்று போய் விடுவார்கள்.

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள இந்திய தீபகற்பத்தைச் சுற்றி மூன்று பக்கமும் 8.118 கி.மீ நீளத்துக்கு கடல் உள்ளது. 3,300 கிராமங்களில் 3.5 மில்லியன் மக்கள் குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை பாரம்பரிய மீனவர்களாக வாழ்கிறார்கள்.ஆண்டொன்றுக்கு 30,000 கோடி ரூபாய் கடற்தொழிலில் இருந்து வருமானம் வருகிறது. பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதும் மீன்பிடித்தொழில்தான். பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்ட கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. இந்த கடற்கரையை தனியார்கள் சூறையாடத் தடையாக இருந்தது மீனவ குடியிருப்புகள். சுனாமி வருவதற்கு முன்பே மீனவ மக்களை எப்படியாவது கடலோரங்களை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்ச்சி மத்திய மாநில அரசுகளிடம் இருந்தது.

சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவ மக்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்போது அதே கடற்கரையில் பட்டினப்பாக்கத்தைப் போய் பார்த்தால் ஏதோ சிங்கப்பூருக்கு வந்த மாதிரி இருக்கிறது. பிரமாண்டமான அதி நவீன ஷாப்பிங் மால்களும், பிரமாண்டக் கட்டிடங்களுமாக உயர்ந்து நிற்கிறது.  கேட்டால் செட்டிநாட்டரசரர் எம்.ஏ. எம் மிற்குச் சொந்தமானது என்கிறார்கள். அலைவாய்க்கரையில் இருந்து ஐநூறு மீட்டர்களுக்கு அப்பால் மீனவர்களை துரத்தி விடுகிற அரசு. செட்டிநாட்டரசருக்கு மட்டும் இந்த இடத்தை ஏன் கொடுத்தது? அல்லது அவரும் இந்த அலைவாய்கரையிலேயே பிறந்த மீனவர்தானோ….?

பட்டினப்பாக்கத்தில் கண்ணுக்குத் தெரிகிற செட்டிநாட்டரசரின் கோட்டை இந்தியக் கடலோரங்கள் முழுக்க கண்ணுக்குத் தெரியாத பன்னாட்டு கோட்டைகளாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது. சுனாமிக்கு முன்னரே திட்டமிட்டு சுனாமியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டதுதான், கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம். ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஒட்டு மொத்த கடலோரத்தையும் தொழில் சார் மண்டலங்களாக மாற்றுகிறது இந்த திட்டம். ஒட்டு மொத்த மீனவ மக்களையும் அப்புறப்படுத்தத்தான் இந்த கடற்கரை மேலாண்மை திட்டம் என்றும் கதறுகிறார்கள் மீனவ மக்கள்.

மீனவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாரம்பரிய மீனவர்கள்.இன்னொன்று தொழிலுக்காக மட்டுமே கடலோரங்களில் வாழ்வோர். பாரம்பரிய மீனவர்களுக்கு கடல் கடற்கரை இதைத் தவிர வேறு போக்கிடம் கிடையாது. கடலின் கரையோரத்தில் இருக்கும் தனது குடிசைக்கு முன்னால் வைத்திருக்கும் கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு போய் தொழில் செய்து விட்டு மீண்டும் கரைக்கு வந்து குடிசையில் ஒண்டிக் கொள்கிற மீனவர்கள்தான் இவர்கள். தங்களின் குடிசைக்கு முன்னால் பரந்து கிடக்கிற கடல் அந்த கிராம மீனவர்களின் பொதுச் சொத்தாக இருக்கிறது. எப்போதும் அவர்கள் கடலுக்கு தீங்கு செய்யவோ மாசு படுத்தவோ மாட்டார்கள்.

ஆனால் கடற்கரையை ஒழுங்கு படுத்துகிறோம் என்று சொல்லி எம்.எஸ் சுவாமிநாதானின் குழு மத்திய அரசுக்கு கண்டு பிடித்துக் கொடுத்திருக்கும் இந்த கடற்கரை மண்டல் மேலாண்மை அறிவிப்பாணை கடலை தனியாருக்கு தாரை வார்க்கிறது. வசிப்பிடம் சார்ந்து கடற்தொழில் செய்யும் மக்களை துறைமுகம் சார்ந்து மீன் பிடிக்க நிர்பந்தித்து அவர்களை துறைமுக நகரங்கள் நோக்கி துரத்தி விட்டு விட்டு பின்னர் அவர்களின் வசிப்பிடங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் இந்த மேலாண்மைத்திட்டம். 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை  மீனவ மக்களின் குறைந்த பட்ச உரிமையையாவது பாதுகாத்தது. ஆனால் அதை பல முறை திருத்திய மத்திய அரசு கடைசியாக இந்த எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

1991- ல் கொண்டு வரப்பட்ட கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் எதை எல்லாம் தவறு, கடற்கரையில் செய்யக் கூடாது என்று சொன்னதோ அதை எல்லாம் சட்ட பூர்வமாக செய்ய அனுமதிப்பதுதான் இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டம்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மீனவ மக்களிடம் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து  இந்த திட்டத்திற்கு மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்து குமரி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நடத்தினார்கள். அதிலும் மீனவ மக்கள் தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் காட்டினார்கள். ஆனாலும் இந்த எதிர்ப்பையும் மீறி உலக வங்கியின் நிர்பந்தத்திற்க்குப் பணிந்து இந்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் தீவீரமாக இருக்கிறது. தமிழ் நாடு அரசும் இந்த திட்டத்துக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடல், காலம் காலமாக வாழ்ந்த மீனவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு தனியார் முதலாளிகள் கையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? கடலில் மீன் வளம் குறைகிறது, கடல் மாசுபடுகிறது, என்பதெல்லாம் இந்த மேதாவிகள் கண்டு பிடித்த உண்மை. ஆனால் மீன் வளம் குறைவதற்கும், கடல் மாசுபடுவதற்கும் காரணமானவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்து இந்த படித்த சிகப்புத்தோல் ஸ்வாமிநாதன் கண்டிபிடித்தார். கடைசியில் சொன்னார் இதற்கெல்லாம் காரணம் மீனவர்கள். அதாவது மீனவர்களுக்கு மீன் பிடிக்கத் தெரியவில்லை. அவர்கள் கடலோரங்களை மாசு படுத்துகிறார்கள். கடலில் மீன் வளம் குறைகிறதே என்ன செய்யலாம் என்று கேட்டால் மீன் பிடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் மீன் வளம் பெருகும் என்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துச் சொல்கிறார்கள் இந்த கடல் விஞ்ஞானிகள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மீனவன் மீன் பிடிக்கிறான். அப்போதெல்லாம் அழியாத மீனினம் ஏன் இப்போது அழிகிறது என்றால் பன்னாட்டு கப்பல்கள் கடலை கபளீகரம் செய்வதும் ரசாயனக் கழிவுகளைக் கொண்டு போய் கடலில் கொட்டுவதும்தான் மீன் வளம் குறையக் காரணம். இந்நிலையில் இந்த மேலாண்மைத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மொத்தமாக கடலும் மீனவனும் வாழ்விழந்து போவான். இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு வகுத்துக் கொடுத்திருக்கும் எம்.எஸ் சுவாமிநாதன் யார் என்ற கேள்வியும் எழுகிறது. கடலுக்கும் மீனவ மக்களுக்கும் இந்த வெள்ளைத் தோல் மனிதருக்கும் என்ன சம்பந்தம்? மீனவ மக்களின் வாழ்க்கையைத் தீர்ப்பிடுகிற உரிமையையும் அவர்களின் வசிப்பிடங்களை விட்டு துரத்துகிற உரிமையையும் யார் இவருக்குக் கொடுத்தது?

படிப்பறிவில்லாத மீனவ மக்களின் வாழ்க்கைச் சூழலை பயன் படுத்திக் கொண்டு இவர்கள், கடலோரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். இது மீனவ மக்களின் வாழ்வுரிமையை மட்டுமல்ல மாநில அரசுகளின் கடலுரிமையையும் இந்த திட்டம் பறித்து  மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும் ஆபத்தும் உண்டு உள்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக புதிய அமைச்சகம் தேவை என்கிறார் சிதம்பரம். அதாவது மக்களிடம் நிலவும் வறுமையும், வேலையிழப்பும் பிராந்திய உணர்வாக வெடிப்பதைக் கூட அனுமதிக்காத சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் மத்திய அரசு கடல் பற்றிய ஆராய்ச்சிக்கான பொறுப்பாக நியமிப்பது வனத்துறையை. இது எவ்வளவு பெரிய மோசடி?

காலம் தோறும் புதிய வடிவங்களை எடுக்கும் இச்சட்டம்  பேரழிவுகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி ,மேலும் மேலும் மீனவ மக்களின் மூச்சை இறுக்குகிறது. இந்த மேலாண்மை சட்டத்தை மேலும் கொடிய சட்டமாக மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு. அதாவது கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் கிளர்ந்தால் அங்கும் இச்சட்டத்தைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு விசாரணையே இல்லாமல் ஆறாண்டுகாலம் சிறைத்தண்டனை, ஒன்பது லட்ச ரூபாய் வரை அபராதம். சுட்டுக் கொல்கிறவனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று என்று அரசிடம் கோரினால் அரசோ  ””நீ ஏன் எல்லை தாண்டுகிறாய், உன்னைத்தான் கடற்கரையில் இருந்து போகச் சொல்கிறோமே, நீ ஏன் இங்கு வந்து மீன் பிடிக்கிறாய்? “ என்கிறது மத்திய அரசு.

ஆனால் எல்லை தாண்டுவதோ, சிறையோ எதுவும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்குக் கிடையாது. அவர்கள் கட்டற்று வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பிடித்தது போக மிச்சம் மீதி இருக்கிற குஞ்சு குருமாக்களைக் கூட இந்த உள்ளூர் மீனவர் பிடிக்க முடியாதபடி சட்டம் போட்டு மீனவனை அழிக்கிறது அரசு. ஐநூறு மீட்டருக்கு அப்பால் என்பது இந்த பண முதலைகளுக்கு கிடையாதா? காலம் காலமாக கடலோரங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் சுவாமிநாதன் குழுவுக்கு இந்த கோடீஸ்வர ஆகரமிப்பாளர்களை கண்ணுக்குத் தெரியவில்லையா?கடற்கரையில் சில தன்னார்வக் குழுக்கள் மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுறா வேட்டையில் ஆவேசமாக ஈடுபடும் மீனவனுக்கு மீன்பிடிக்க தன்னார்வக் குழுக்கள் கற்றுக் கொடுப்பது மாதிரி வேடிக்கை வேறு ஏதாவது உண்டா?

ஆக நான் என்ன சொல்கிறேன் என்றால் மீனவ மக்கள் பற்றிய உண்மையான அக்கறை இந்த மேலாண்மைத் திட்டத்துக்கும் கிடையாது இதை கொண்டு வந்தவர்களுக்கும் கிடையாது. தன்னார்வக் குழுக்கள் என்று சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் முதலாளிகளிடமும் நிதி பெற்று இயங்கும் குழுக்கள் ஒவ்வொரு முறையும் மத்திய மாநில பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வர நினைக்கிற சட்டத்திற்கு எதிராகப் பேசுவார்கள். மக்கள் விழிப்படைவதற்கு முன்னரே என்.ஜி.ஓக்கள் மக்களுக்காக போராடுவது மாதிரி போராடுவார்கள். ஆனால் எவ்வித இடைஞ்சலும் இன்றி மக்கள் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தமர்ந்து விடும். இவர்கள் அவர்களிடமே நிதி வாங்கி போராடி விட்டு அவர்களையும் அழகாக கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்று விடுவார்கள். எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அவர்கள் வருவதற்கு முன்னர் முதன் முதலாக வந்து மக்களை அரசியல் நீக்கம் செய்து தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்க மக்களை தயார் படுத்துவதுதான் இந்த தன்னார்வக்குழுக்களின் நோக்கம்…

தொடரும்…..

அடுத்த பாகத்தில் “கிறிஸ்தவமும் மீனவ மக்களும்”

http://www.vinavu.com/2010/01/18/privatization-of-nature-2/

Last Updated on Monday, 18 January 2010 06:59