Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் முன்னாள் "இடது புலிக்கு" வாக்குப் போடக் கோருகின்றனர், "மே18" என்ற "இடது" புலிக் கும்பல்

முன்னாள் "இடது புலிக்கு" வாக்குப் போடக் கோருகின்றனர், "மே18" என்ற "இடது" புலிக் கும்பல்

  • PDF

"இது முடிவல்ல, புதிய தொடக்கம்" என்று கூறி, பன்றித் தொழுவத்துக்கு வழிகாட்டுகின்றனர்.  மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால், கள்ள வாக்கு போடுவார்களாம்! தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்குமாம்! ஆகவே மக்களே தேர்தலை பகிஸ்கரிக்காதீர்கள். மக்களே வாக்கு போட்டு எங்கள் பெட்டியை நிரப்புங்கள்! என்கின்றனர்.

தேர்தலில் வாக்குப் போட்டால் தேர்தல் மோசடிகளும், கள்ளவோட்டு போடுவதும் நடைபெறாதாம். இதனால் நாம் இந்த பன்றித்  தொழுவத்தில் நிற்கும் பன்றிகளுக்கு வாக்குப் போட்டு, இந்தப் போலி ஜனநாயக மோசடியை தேர்தல் மோசடியின்றியும் கள்ளவோட்டின்றியும் பாதுகாக்க வேண்டுமாம்!  

 

இதை "மார்க்சியத்தை"யும் பேசிக்கொண்டு, மக்களின் காதுக்கு பூ வைக்கின்றது "மே18" என்ற புலிக் கும்பல் சொல்லுகிறது. புலித்தேசியத்தை அரசியலாக கொண்ட கும்பல் "மார்க்சியம்" பேசிக்கொண்டு, இன்று தேர்தல் கடையையும் விரிக்கின்றனர். கடந்த காலத்தில் புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததுடன், கேசவனை நேரடியாக காட்டிக் கொடுத்து  கொன்றவர்கள் இவர்கள். இன்றும் அதே சதி அரசியல். இவர்களின் கடந்தகால அரசியல் புலியுடன் நடந்தது. நிகழ்கால அரசியல் இன்று வாக்கு போடக் கோருகின்ற அளவுக்கு, அது " கள்ள வாக்கு" ஊடாக தன்னை நியாயம் கற்பிக்கின்றது.  

 

இவர்களால் நீண்டகால தங்கள் "முற்போக்கு முன்னேறிய" முகமூடியை பாதுகாக்க முடியவில்லை. ஒரு புரட்சிகரமான அரசியல் உள்ளடக்கத்தில், அவர்கள் எதையும் அரசியல் ரீதியாக முன்வைக்க முடியவில்லை. தேர்தலை பகிஸ்கரிக்க கோரும் புரட்சிகர அரசியல் கோசத்தை மறுத்து, அதைப் பகிஸ்கரிக்க கூடாது என்கின்றனர். இந்த அரசியல் மூலம், பன்றித் தொழுவத்தை மக்களுக்கு திறந்து காட்டுகின்றனர்.

 

இதை நியாயப்படுத்த ".. வாக்களிக்காமல் விடுவது என்பது கள்ள வாக்களிப்புக்களுக்கும் மற்றும் பலவித தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதால், தேர்தலில் வாக்களிக்குமாறும் நாம் தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்கின்றனர். ஆகாகா நல்ல வேடிக்கையான உலகறிந்த அரசியல் பித்தலாட்டம். ஜனநாயகப் புரட்சி நடைபெறாத மூன்றாம் உலக நாடுகள் எங்கும் இந்த வழியில்தான், அதாவது "கள்ள வாக்களிப்பும்" மற்றும் "பலவித தேர்தல் மோசடிகளும்" கொண்டதுதான் தேர்தல் முறையே. போலி ஜனநாயகத்தை ஆதாரமாக் கொண்டது. இப்படியிருக்க இவர்கள் தாம் இன்று பிழைத்துக்கொள்ள முன்வைக்கும் அரசியல் வழி, உலகளாவில் தேர்தல் பகிஸ்கரிப்பே தவறானதாக மாறிவிடுகின்றது. அதாவது தவறானதாக காட்டிவிடுகின்றனர். "கள்ள வாக்களிப்பும்" மற்றும் "பலவித தேர்தல் மோசடிகளும்" தவிர்க்கப:படுவதற்கு வாக்களிப்பு அவசியம் என்ற பித்தலாட்ட அரசியலும், இங்கு இது இல்லை என்றால் பகிஸ்கரிக்கலாம் என்றும் வக்கரிக்கின்றனர்.

 

இப்படித் தலைகீழாக தங்கள் புலிப் பித்தலாட்ட அரசியலை தூக்கி முன்னிறுத்துகின்றனர். ஒரு பெண்; தன் மீதான பாலியல வல்லுறவை தடுக்க, ஆணாதிக்கம் கூறுவது போல் அடக்கவொடுக்கமாக உடுப்பை அணியக் கோருவது போன்றது இந்த அரசியல் மோசடி. பாலியல் வல்லுறவு நடந்தால், அதற்கு இந்த உடுப்புத்தான் காரணம் என்று குற்றம்சாட்டும் அரசியல் பரம்பரைதான் "கள்ள வாக்களிப்பையும்" மற்றும் "பலவித தேர்தல் மோசடிகளையும்" தவிர்க்க பகிஸ்கரிக்காது வாக்கு போடக் கோருகின்றனர். 

 

இந்த "மே18" கும்பல் தன் அரசியல் மூலம் "தன்னியல்புவாதம்" தான் கடந்தகால தமிழ்தேசிய தோல்விக்கு காரணம் என்கின்றனர். அதன் வர்க்க அடிப்படையல்ல என்கின்றனர். இப்படித்தான், வாக்கு போட தமிழ்மக்களை கோருகின்றனர். இதன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பன்றித்தொழுவத்துக்கான தேர்தலில் களமிறங்கி, வோட்டு கேட்பார்கள் என்பது இதன் மூலம் எமக்கு தெரியவருகின்றது.

 

சரி இவர்கள் யாருக்கு வோட்டு கோருகின்றனர். தங்கள் முன்னாள் கூட்டாளிக்குத்தான். "தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் கடந்த காலத்தில் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாம் அறிவோம். … அதே வேளை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இன அழிப்பு யுத்தத்தை நடத்தியவர்களுடன் கைகோர்த்து நிற்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்." இப்படிக் கூறி, தங்கள் முன்னாள் புலிக் கூட்டாளிக்கு வோட்டு கேட்கின்றனர். தாங்கள் புலியில் உள்ள இடதுசாரி பிரிவைச் சேர்ந்தவர்களாக காட்டி, மக்களை முட்டாளாக்க முனைகின்றனர்.  

 

மிக நுட்பமாக பார்த்தால் ஒரேயொரு உண்மையான புலி வேட்பாளர் "தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன" மட்டும்தான் இன்று களத்தில் நிற்கின்றார். இதனால் தான்; "மே18" கும்பல், அவருக்கு வோட்டு கோருகின்றது. "புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாம் அறிவோம்" என்று கூறுவதன் மூலம், அவர் எங்கடை ஆள் தான் என்பதால் வாக்கை பகிஸ்கரிக்காது மறைமுகமாக போடக்கோருகின்றனர்.   

 

"முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல, புதிய தொடக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது வாக்களிப்பு அமையட்டும்" என்று கூறி, புலியின் தொடர்ச்சியில் தம்மை புலி இடதுசாரியாக காட்டி கொக்கரிக்க முனைகின்றனர். இதனால் தான் முள்ளிவாய்க்கால்கள் முடிவை "தன்னியல்புவாத்தின்" விளைவு என்கின்றனர். இது அதன் வர்க்க அரசியலின் விளைவு அல்ல என்கின்றனர். இந்த வலதுசாரிய அரசியலை நிலைநாட்ட, அதன் "ஏக போகத்தை" அதாவது அதில் "தன்னியல்பு" உள்ளடக்கத்தை நீக்க, தமக்கு வாக்களிப்பது அவசியமென்கின்றனர். இதைத்தான் "தமிழ் வலதுசாரி தலைமைகளின் ஏகபோகத்திற்கு முடிவு கட்டுவோம்" என்று கூறி, இது முடிவல்ல, புதிய தொடக்கம் என்கின்றனர்.

 

"கள்ள வாக்களிப்பும்" மற்றும் "பலவித தேர்தல் மோசடிகளும்" தவிர்க்க வாக்கு போட்டு பெட்டியை நிரப்புங்கள் என்கின்றனர். எந்தப் பெட்டி என்பதை மட்டும், வரலாறு தெளிவாக சொல்லும். 

 

பி.இரயாகரன்
15.01.2010

 

Last Updated on Friday, 15 January 2010 13:47