Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை!

இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை!

  • PDF

இம்மாதத் தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் வரையான யாழ் மாவட்ட மக்கள் மீள் குடியேற்றத்துக்கு வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதம் 5ம் திகதியில் இருந்து யாழுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் (03.நவம் 09)அன்று 47,042 பேராக உள்ளது. அன்று இரவு 289 குடும்பங்கனைச் சேர்ந்த 894 பேர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வைத்து, அவர்களது உறவினர்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள் சண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்தவர்களாகும். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவை கைக்குள் வைத்து, இரண்டு கிழமைக்கான அரிசி பருப்பு கருவாட்டுடன்: நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சாய்த்து விடப்பட்டுள்ளனர். இவ்வாறு துரையப்பா விளையாட்டு அரங்கிலும் வைத்து பலர் ‘சாயத்;து’ விடப்பட்டுள்ளனர். இதுதான் இக் குடியேற்றத்தின் திருவிளையாடல்!

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து, தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதாக விண்ணப்பித்த 2139 பேர்வரை (02.நவம் 09)ல் யாழுக்கு அனுப்பப்பட்டனர். இதில் 132 குடும்பத்தைச் சேர்ந்த, 466 தீவக மக்கள் சாவகச்சேரியிலிருந்து – அவர்களது பகுதிக்குச் ‘சாய்க்கப்’ பட்டனர். மற்றும் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேரை கரவெட்டி விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் வைத்துச் ‘சாய்க்கப்’பட்டுள்ளனர.;
.

கடந்த பத்து மாதங்களாக வன்னியிலிந்து வந்தவர்களுக்காக அகதிகள் முகாமாக இயங்கிவந்த, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் வந்து தங்கிய 352 பேரில், 284 பேர் அவர்களது உறவினர்களுடன் சாய்க்;கப்பட்டிருந்தனர். மிகுதி 68 பேர் கொடிகாமம் இராமாவில் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு சாய்த்து விடப்பட்டவர்கள் போக மீதமானவர்களை சில முகாம்களுக்குள் நிரப்பி, முகாம்களைக் குறைத்து விட்டதாகவும் ஏனையவரைக் குடியேற்றி விட்டதாகவும் நல்லபிள்ளை வேடம் போடுகிறது அரசு.

இன்று வரை 1இலட்சத்து 19 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரசு எடுத்து விடுகிறது. இன்னும் 1 இலட்சத்து 61 ஆயிரம் போர் வவுனியா போன்ற நலன்புரி நிலையங்களில் எஞ்சியிருப்பதாக அது கூறுகிறது. சராசரி 3ஆயிரம் தொடக்கம் 3ஆயிரத்து ஐநூறு மக்களை தாம் தினமும் குடியேற்றி வருவதாகவும், இந்தச் சமன்பாட்டின் படி: தேர்தலுக்கு முன்னர் (ஜனவரி 2010?) அனைவரையும் மீள் குடியேற்றம் செய்து விட முடியுமென ‘பிரயோக கணிதத்தை’ மகிந்தா அரசு முன் வைக்கிறது.

முகாமில் எஞ்சியிருக்கும் 1 இலட்சத்து 61 ஆயிரம் பேரில், ஆகக்குறைந்தது 61 ஆயிரம் பேரை பருவமழைக்கு முன் அகற்ற வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது! இதன் பிரகாரம், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இளமருதம் குளம், கனகராயம் குளம், கள்ளிக்குளம், பூவரசங்குளம், கல்மடு, புளியங்குளம், ஆகிய 6 பிரதேசங்களை விடுவித்துள்ளது அரசு. இவ் 6 பிரதேசத்திலும் சுமார் 65 ஆயிரம் பேரை குடியமர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது…..

மீள் குடியேற்றமும் வீதிக்கு வரும் நீண்டகால அகதிகளும்…

இவ்வாறான யாழ்.குடியேற்ற நிலைமையில் புதிய பிரச்சனைகள் மேலேழுந்துள்ளது!

யாழுக்கு, வன்னியிலிருந்து திரும்பி வரும் குடியேற்ற வாசிகளின் குடியிருப்பில்: ஏற்கனவே அகதிகள் குடியிருந்து வருகின்றனர்…

அரசினால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட, மக்களின் நிலங்களான இராணுவ நிலைய விஸ்தரிப்புக்கான கையாடல், மற்றும் உயர் பாதுகாப்பு வலையாமாகக் கையாடல் செய்யப்பட்ட நிலங்களில், பரம்பரையாகக் குடியிருந்தவர்களே: யாழிலிருந்து வன்னிக்கு புலிகளுடன் வெளியேறியவர்களின் நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் போன்ற இடத்தில் பரம்பரையாக வாழ்ந்தவர்கள் கூட, இவ்வாறான நிலங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.

2006ம் ஆண்டிலிருந்து யாழில் தங்கி வாழ்ந்த அல்லைப்பிட்டி, மண்கும்பான் மக்கள் நவம்பர் முதல் வாரத்தில் யாழ் மத்திய கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். வன்னியில் இருந்து மண்கும்பானுக்கு குடியேறும் மக்களுடன் முதல் தடவையாக, யாழில் குடியேறிய மண்கும்பான் மக்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இவ் அவசர அழைப்பானது: வன்னியில் இருந்து யாழில் ‘சாய்த்து விடப்படும்’ மக்கள் தாமே தமது நிலத்தில் குடியேற வேண்டியிருப்பதால், யுத்தத்தின் நிமிர்த்தம் தற்காலிகமாகக் குடியேறிய பலர் யாழிலிருந்து வெளியேற வேண்டிய – வெளியேற்றப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

மண்கும்பான் ‘பிள்ளையார் கோவில் மண்டபத்தில்’ கடற்படையினரின் பரிசோதனையின் பின்னர்  இவர்கள் தமது இருப்பிடத்தை கண்ணால் கண்டனர்! ஒரே ஒரு பவுசர் வேலணைக்கு வந்து சேர்ந்துள்ளது!! மேலும் இரண்டு வருவதாகக் கூறப்படுகிறது. குடாநாட்டுக்குள் உள்ள, இராணுவ விஸ்தரிப்பு, உயர் பாதுகாப்பு மற்றும் அரச தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள்: இதுவரை இன்றைய வன்னி அகதிகளின் வீடுகளில் வாழ்ந்து வந்ததால், இன்று இவர்கள் நடுவீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் தங்கியுள்ளோரின் நிலங்களில் தற்காலிகமாகக் குடியிருப்பவர்கள் (நிலங்களுக்காகச் ‘சாட்டுக்காகக்’ குடியிருக்க வெளிநாட்டிலிருந்து அவர்கள், நாட்டுக்கு வரும்போது) இவர்கள் வீதிக்கு வரும் அவலநிலைக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

இவர்களின் குடியேற்றத்துக்கு திட்டமும் தீர்வும் என்ன? சிந்தியுங்கள்!
(இப்போதைக்கு ‘முகாம் அரசியல்’ முடிந்துவிட்டதாம்! – மகிந்தா சொல்கிறார்)

குடியேற்றமும், பெருகிவரும் நிலக் கையாடலும்…

கிழக்கிலே குடியமர்த்தப்பட்டவர்களில், ஏற்கனவே அரச தேவைகளுக்காக தமது நிலங்களை இழந்து விட்டவர்கள்: பிரதியீடாக 2 பேச்சஸ் நிலம் மட்டுமே இவர்களுக்குக் கொடுக்க முடியுமென அரசு தீர்மானிக்கிறது. இந்தத் துண்டு நிலங்கூட அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உகந்ததா? என்று கருசனை காட்டவும் அது மறுத்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் இறுதி 3 வருடகாலத்தில் 51 ஆயிரத்து 130 திட்டங்கள், தேசிய அபிவிருத்திக்காக முன்னெடுப்பதாக அரசு தெரிவிக்கிறது. இதற்காக 75 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டடுள்ளதாகவும் அது பட்டியலிடுகிறது. ஒதுவில் துறைமுகத்துக்காக 700 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், இப்பணிகள் 2010 க்குள் பூர்த்தியாகும் எனவும் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

நோர்வேயின் Pure Nature Limited  நிறுவனம் இலங்கையில் பயிரிடுவதற்கு, இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி அளித்துள்ளது. 75 மில்லியன் ரூபா முதலீட்டுடன் மொனறாகல காவம்பிட்டிய பிரதேசத்தில் ஆரம்பமாகிறது பழத்தோட்டம் (பழ உற்பத்தி). அம்பாறையில் சராசரி அரசின் 51 தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்துக்குச் சமமாக, இந்த நிறுவனம் ஒரு முதலீட்டைத் தொடங்குகிறது. இது நாளடைவில் 200 மில்லியனாக தனது முதலீட்டை அதிகரித்து, 1000 பேருக்கு வேலை கொடுப்பதாக ஆர்வமும் ஆசையும் காட்டுகிறது. இப்படிப் பன்நாட்டு நிறுவனங்களுக்கு பாத்தும் பார்க்காமலும் பெருமளவு நிலங்களைத் தாரைவார்க்க அரசு தயங்காமல் இருக்கிறது.

அம்பாறை மாவட்டத்து எல்லைப்புறத்து அரச காணிகள் அத்துமீறி அபகரிக்கப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. கெவிலியாமடு கிராமத்தில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் உட்பட பல அரச காணிகளில் இவ் அத்துமீறிய குடியேற்றம் நடத்தப்படுகிறது. இப்பிரதேசத்தில் பல பாதுகாப்புக் காவல் அரண்கள் உள்ளதோடு, இங்கு 170 சட்டவிரோதக் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நிரந்தரக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டும் வருகின்றன என்ற செய்திகளை அரசும், அரசுசார்பு கிழக்கு நிர்வாகமும் மறுத்துவிட்டன. இது உண்மைக்குப் புறம்பான செய்தி என்றும் கூறியுள்ளது.

பளை மற்றும் முல்லைத்தீவை மையமாகக் கொண்டு, 5 ஆயிரம் ஏக்கரில் தெங்கு உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது அரசு. இதற்காக 100 தென்னங்கன்று உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றிலிருந்து பெறும் பயனுக்காக 10 தேங்காய் எண்ணை உற்பத்தி ஆலைகளும் உருவாக்கப்படவுள்ளன. இவற்றுக்காக 302 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருப்பதாகத் தெரிய வருகிறது..

………………

இவ்வாறு அரச தரகு உற்பத்திக்கும், பன்நாட்டுத் தேவைகளுக்கும் ஏராளமான நிலங்களிருக்கும் இலங்கையில்: சாதாரண மக்களுக்கோ, குடிலுமில்லை குந்துவதற்கு நிலமுமில்லையாம்! நிஜத்தில் அகதிகளாகவே யுத்தக் காலத்தின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை அகதிகள் நாடு பூராக இருந்து வருகின்றனர். (இராணுவ ஆக்கிரமிப்பாலும், புலிகளின் ஆக்கிரமிப்பாலும்) ஆனால், முன்னரே யுத்தம் முடிந்த பகுதிகளிலும் சரி, வன்னி இறுதியுத்த முடிவின் பின்னரும் சரி, சரிவர மீள் குடியேற்றமோ அல்லது இதனூடு அவர்களின் வாழ்வாதாரங்களோ இன்றுவரை செப்பனிடப்படவில்லை!

சும்மா ”மக்கள் மக்களென்று” குத்தி முறிகிறார்களே தவிர, இவர்களுக்காக நடைமுறையில் உழைப்பதற்கு எந்தத் தமிழ் கட்சிகளும் தயாராகவில்லை! என்பது வருத்தத்துக்குரியது. காசு சம்பாதிப்பதில் ‘கொள்ளிக் கண்ணாக’ இருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் தம்மை சீரமைத்துக் கொள்ள வேண்டுமென்று தமிழ் மக்களுக்காக தாழ்மையாகக் கேட்பதைத் தவிர இன்று வேறு வழியில்லை, என்று பலர் ஆறுதல் கூறுகின்றனர்.

கடந்த காலத்தில் ‘புனித நகர்’ (சேருவிலை, திரியாய்)திட்டங்கள் ஊடாக தமிழர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இதற்கு எதிராக போராடுவதை, பவுத்த மதத்திற்கு எதிரான போராட்டமாகத் திருப்பிக் காட்டி இனவாதத்தை வளர்த்தன அரசுகள். இதேபோல மீனவர் குடியேற்றங்களை உருவாக்குகிறோம் என்று சொல்லி: மன்னார், முல்லைத்தீவு, கொக்குளாய, புன்னைக்குடா, நாயாறு மற்றும் அண்டிய கரையோரரப் பகுதிகளில் கடல்வளத்தையும் அபகரித்தது.

தொழிற்சாலைகளை நிறுவுகிறோம் என்று சொல்லி: ‘பிறிமா’ ஆலையை திருகோணமலையில் நிறுவும் நோக்கில், சிங்களக் குடியேற்றத்தை அன்று செய்தது. மன்னாரில் கொண்டாச்சி மற்றும் இதர பகுதிகளில் முந்திரித் தோட்டங்களை உருவாக்குகிறோம் என்று சொல்லி, எத்தனை சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது இவ் அரசுகள். போதாக்குறைக்கு கல்லோயா, அல்லை, கந்தளாய் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இனரீதியாகத் திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசத்தைப் பறித்தது. இக்குடியேற்றங்களில் தமிழ்ப் பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகள் கூட, சிங்களப் பகுதிக்கூடாகச் செல்வதாகவே வடிவமைக்கப்பட்டன.

இவ் அபிவிருத்தி, குடியேற்றத் திட்டங்கள் எல்லாம் புதிய தேர்தல் தொகுதிகளைக் கணக்கிட்டும், பல அங்கத்தவர் தொகுதிகளை அவதானித்தும் நடத்தப்பட்டன. 1976ல் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது, ‘சேருவலை தேர்தல் தொகுதி’ (திருகோணமலை) பெரும்பான்மை மக்களுக்காக உருவாக்கப்பட்டதை நீங்கள் வரலாற்றில் காணலாம்.

இவ்வாறுதான் வன்னியில் புதிய மீள்குடியேற்றமும் நடத்தப்படும். சில (புதிய) தேர்தல் தொகுதிகளை வேறு சில மாவட்டங்களுடன் இணைப்பதற்கு வசதியாகவும் இத் திட்டங்கள் உருவாக்கப்படும். உலகசந்தைக்கான விளைநிலமாக இலங்கை மாற்றப்படுவதோடு, இதற்கிணையாக (வகுப்புவாத அரசியல் வாதிகளின் தொழிற்சாலையின் உற்பத்திக்கு) இசைவாகவும் இவ் மீள் குடியேற்றம் வடிவமைக்கப்படும்!

……………………………………

1993ம் ஆண்டு, (911,000,000) சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில், 53 அமைச்சர்களும், 540 அங்கத்தினரும் இருந்தனர். (126,000,000) சனத்தொகையைக் கொண்ட பாக்கிஸ்தானில், 16 அமைச்சர்களும், 217 அங்கத்தினரும் இருந்தனர். வெறும்(17,000,000) சனத்தொகையைக் கொண்ட இலங்கையில், 91 அமைச்சர்களும், 225 அங்கத்தினரும் இருந்தனர். இது ஒரு கின்னஸ் சாதனையுமாகும்! 4 மந்திரிசபையில் ( ராஜாங்க மந்திரி, மந்திரிசபை, திட்டமிடல் மந்திரி, ஒரு அமைச்சு) கடைமையாற்றிய 91 அமைச்சருக்கான வருடாந்த செலவு 4,777,000,000 இலங்கை ரூபாவாகும் (நன்றி:- ‘மலையகத் தமிழரும் அரசியலும்’ .கீதா பொன்கலன் 95 )

இத்தொழிற்சாலையில் 93ல் உற்பத்தி செய்யப்பட்ட, வகுப்புவாத அங்கத்தினரின் தொகை எவ்வளவு தெரியுமா? நம்பமாட்டீர்கள்! 5 ஆயிரத்து 10 பேர்)இவர்களுக்கான செலவும் வெளிநாட்டுக் கடனில் இருந்தே கட்டப்பட்டது. இலங்கையில் வாழ்ந்து வரும் சாதாரண 5 பேர் கொண்ட குடும்பம் 1988 முதல் 1993 வரையிலான ( 6 வருடத்தில்) , வெளிநாட்டுக் கடனுக்காக வட்டியும் முதலுமாகச் செலுத்திய உழைப்போ: 25, 000 இலங்கை ரூபாவாகும்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறது எமது நாடு!

இந்த வகுப்புவாதத் தொழிற்சாலை – மற்றும் இதன் உற்பத்தியை இன்னும் என்ன செய்வதாய் உத்தேசம்?

சுதேகு
நவம்பர் 2009

http://www.psminaiyam.com/?p=838

Last Updated on Monday, 11 January 2010 20:39