Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தேர்தல் திருவிழா : கூட்டமைப்பும், புலிகளும் வானத்தையே வில்லாக வளைத்துக் காட்டுகின்றனர்

தேர்தல் திருவிழா : கூட்டமைப்பும், புலிகளும் வானத்தையே வில்லாக வளைத்துக் காட்டுகின்றனர்

  • PDF

கடந்த 60 வருடமாகவும், அதே நேரம் ஆயுதமேந்தி 30 வருடமாகவும், தமிழ் தேசியத்தின் பெயரில் அவர்கள் வழிகாட்டியது என்ன என்பதை, வரலாறு காட்டி நிற்கின்றது. ஒரு இனத்தையே தேசியத்தின் பெயரில் பலியிட்டதற்;கு அப்பால், இவர்கள் எதையும் வழிகாட்டவில்லை. மக்களுக்காக போராட முனைந்தவர்களை  தங்கள் குறுகிய நலனுக்கு பலியிட்டதுடன், தாம் அல்லாத அனைவரையும் கொன்று குவித்தனர். இதுவே எம் கடந்தகால தமிழ் தேசிய வரலாறு. 

தமிழ் தேசிய இனமே அழிந்து போகும் வண்ணம், அனைத்து செயல்பாடுகளும் அமைந்து இருந்தது. இன்று தேர்தல் கூத்தில் கூட்டமைப்பும், புலிகளும் தமிழினத்தை வழிகாட்ட புறப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு புதைகுழியை வெட்டி வைத்துக்கொண்டு, அதற்குள் தள்ளிவிட முனைகின்றனர்.

 

சரத்பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், மகிந்தாவை தோற்கடிப்பதன் மூலம் தமிழினத்தின் நலன்களைப் பெறமுடியும் என்கின்றனர். இப்படி ஆயிரம் முடிவுகளை முன்பு கூறி எடுத்தவர்கள் தான் இவர்கள். இது தமிழினத்தின் அவலமாக இன்று மாறிநிற்கின்றது. இவர்களின் கடந்த கால முடிவுகளால் தமிழினம் அழிந்ததுடன், மேலும் தனிமைப்பட்டு தன் தலைவிதியைக் கூட தீர்மானிக்க முடியாத நட்டாற்றில் தவிக்கின்றது.

 

மீண்டும் அதே பாணியில் தமிழ்தேசிய புதைகுழியை கிண்டி வைத்துக் கொண்டு, வா வா என்று மக்களை அழைகின்றது. மகிந்தாவை தோற்கடிக்க கூட்டமைப்பு மட்டுமின்றி, புலிகளின் முன்னாள் பிரமுகர்களும் கூட சரத்பொன்சேகாவை ஆதரித்து கூட்டங்களையும் கருத்துகளையும் முன்வைக்கின்றனர். வேடிக்கையான இழிவான அதே புதைகுழி அரசியல். 

 

இன்று இலங்கையில் நிலவும் பாசிசமும், அதை நிர்வகிக்கும் குடும்ப சர்வாதிகாரத்தையும் தோற்கடித்தல் என்பதும், இதற்கு ஏற்ப, நிலவும் இறுக்கமான புலனாய்வு கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்ட  அமைப்புமுறையை சிதறடித்தல் என்பது, மகிந்தாவின் தோல்வியுடன் தொடர்புடையது தான். இதனால் தான் மகிந்தாவை தோற்கடித்தல் என்ற, அரசியல் முடிவை இவர்கள் எடுக்கவில்லை. அப்படி ஒரு அரசியலை முன்வைத்து, ஒரு அரசியலை முன்மொழியவில்லை.

 

மாறாக ஆட்சி மாற்றத்தைக் கோருகின்றனர். தாங்களும் பிழைத்துக்கொள்ளக் கூடிய மற்றொரு ஆளும் வர்க்க சர்வாதிகாரியை மீண்டும் கோருகின்றனர். அற்ப சலுகைகளை பெற்றுக்கொண்டு, தாங்களும் பிழைக்க வழிதேடுகின்றனர். கடந்த 60 வருடமாக தமிழ் மக்களின் பெயரில் அவர்கள் செய்ததை, மீண்டும் முன் மொழிந்துள்ளனர்.

 

தமிழ் மக்கள் என்ன செய்வது?

 

இப்படி கேட்பதன் மூலம் தாம் புத்திசாலித்தனமாக, மகிந்தா அல்லது சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்கு போடும் நிலைக்குள் வழிகாட்டுகின்றனர். சரி இதன் மூலம் தமிழ்மக்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டால், எந்தப் பதிலும் கிடையாது. விதண்டாவாதம் செய்கின்றனர். இப்படி வாக்கு போட்டுத்தான், எதையாவது பெறமுடியும் என்கின்றனர்.

 

மக்கள் மேல் நம்பிக்கையற்ற, மக்கள் சக்திதான் வரலாற்றை தீர்மானிக்கின்றது என்ற உண்மையை மறுத்த, கூட்டத்தின் கடந்தகால நிகழ்கால அரசியல் இது. 1977 இல் கூட்டணி பாரிய தேர்தல் மூலம் பெற்ற வெற்றி முதல் புலிகள் ஆயுத மலைக்குள்ளும் பண குவியலுக்கு பின்னும் பதுங்கியிருந்தது வரை, மக்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள் என்பதை எப்போதும் மறுத்து வந்தவர்கள். இதுதான் மீண்டும் மீண்டும் தமிழ் தேசியத்தின் தோல்வியாகியது.

 

மக்களைச் சார்ந்து நின்று, அவர்கள் மேலான அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் பொருளாதார ஒடுக்குமுறைகளையும் களையாத எந்தப் போராட்டமும் தோல்வி பெறும். இதுதான் வரலாற்றின் நியதி.

 

இந்தத் தேர்தலில் மக்கள் என்னசெய்வது? மக்களின் சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளை களையும் வண்ணம், தேர்தலை புரிந்து கொள்ளவேண்டும். இதற்கமைய தேர்தலை பகுத்தாய்வதுடன், அதை புரிந்து கொண்டு விளக்க வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்குப் போடாது பகிஸ்கரித்தல் என்பது கூட, புலிகள் தங்கள் துப்பாக்கிகளை கொண்டு பகிஸ்கரிக்க கோரியது போன்று கோருவதல்ல. மாறாக இந்த சமூகப் பொருளாதார அமைப்பு எப்போதும் மக்களுக்கு எதிரானது என்பதையும், அது சமூக ஒடுக்குமுறையையும், பொருளாதார சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு பகிஸ்கரிக்கவேண்டும். இந்த வகையில் விளக்கி கோரவேண்டும்.

 

இந்தத் தேர்தல் மூலம் கட்டமைத்துக் காட்டும் ஜனநாயகம் என்பதும், வாக்குப் போடுவது என்பதும், தங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் புல்லுருவிக் கூட்டத்தை நாமே தெரிவு செய்யக் கோருவது தான் என்ற தெளிவும் இருக்கவேண்டும்.

 

இந்த வகையில் தேர்தலை புரிந்து கொண்டே, பகிஸ்கரிப்பையும் அரசியல் ரீதியாக செய்யவேண்டும்;. இல்லாது, ஆளும் வர்க்கக்தின் நலனுக்கு ஏற்ப பகிஸ்கரிப்பது கூட, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கும் தேவைக்கும்  உட்பட்டதுதான்.

 

"மா.லெ.மாவோ சிந்தனை" பெயரில் இலங்கை புதியஜனநாயக கட்சி கூறுவது போல் பகிஸ்கரிப்பதல்ல. அவர்கள் தேர்தல் வழிக்குள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி புகுந்து விளையாடுவதன் மூலம் "அரசியல் யாப்பு நெருக்கடியை" கொண்டு வந்து "அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்திக்கவும் முடியும்" என்கின்றனர். இதற்கமைய மூன்றாவது பொது வேட்பாளார் இல்லாததால் "பகிஸ்கரிக்க கோரும்" ஆளும் வர்க்க அரசியலையே, இவர்கள் முன்தள்ளுகின்றனர். இந்த முறையில் பகிஸ்கரிப்பது, ஆளும் வர்க்க நலனுக்கு உட்பட்டது தான். அவர்கள் கூறுகின்றனர் "தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும்" என்று, வாக்குச் சீட்டு மகிமையை மறைமுகமாக தக்;கவைத்து, அதை பீற்றிக்கொண்டு பகிஸ்கரிப்பைக் கோருகின்றனர்.

 

இது "மா.லெ.மா சிந்தனை" முறையேயல்ல. ஆளும் வர்க்கத்தை யார் தலைமை தாங்குவது என்பதை தேர்ந்து எடுப்பதுதான் இந்தத் தேர்தல் என்பதை புரிந்துகொண்டும், இந்த தேர்தலில் வாக்கு போடுவதன் மூலம் சமூக பொருளாதார ஒடுக்குமுறை மாறிவிடாது என்பதை புரிந்து கொண்டு, பகிஸ்கரிப்பை அரசியல் ரீதியாக முன்னிறுத்த கோருகின்றோம்.

 

மக்கள் தமக்காக தாம் தம் சொந்த தலைமையில் போராடுவதன் மூலம் தான், சமூக பொருளாதார ஒடுக்குமுறையையும், தம்மை ஒடுக்கி வாழும் ஆளும் வர்க்கத்தையும் தூக்கி எறிய முடியும் என்ற தெளிவுடன், இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்க கோருகின்றோம். இதுவல்லாத அனைத்தும் மக்களை ஏமாற்றி ஓடுக்கும், ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்ட அரசியல் வழிமுறைகளாகும்.  

 

பி.இரயாகரன்
06.01.2010
     

 

Last Updated on Wednesday, 06 January 2010 11:20