Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)

சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)

  • PDF

நிகழ்காலத்தில் அரசியலில் ஈடுபடுபவர்கள், கடந்தகாலத்தை மிகத் தெளிவாக விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் யார்? கடந்தகாலத்தின் எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை, நிகழ்காலத்திற்கு மூடிமறைக்க விரும்பும் சந்தர்ப்பவாதிகள் தான். குறிப்பாக மாற்று அரசியலின் பெயரில் நிகழ்ந்த பலமுகம் கொண்ட எதிர்ப்புரட்சி அரசியலை பற்றிப் பேசாத, ஒரு "மார்க்சியத்தை" "முற்போக்கை" இன்று கதைக்கவும் முன்வைக்கவும் முனைகின்றனர். இதைத்தான் சமகால அரசியலாக, புது வேசத்துடன்  முன்தள்ளுகின்றனர். கடந்த வரலாற்று இயங்கியல் போக்கை நிராகரித்த "மார்க்சியம்" என்பது, மக்களுக்கு எதிரானதை கடந்தகாலத்தில் இருந்து மீள ஏமாற்றித் திணிப்பதுதான்.

   

பாசிசத்துக்கு எதிராக கடந்தகாலத்தில் மக்களைச் சார்ந்து நின்று எதிர்வினையாற்றாத சந்தர்ப்பவாதிகள், இன்று "மார்க்சியத்தின்;" பெயரில் கும்மியடிக்க முனைகின்றனர். இவர்களுடன் கடந்தகாலத்தில் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரத்தை ஆற்றியவர்கள் கூடி, மார்க்சியம் பற்றி குசு குசுக்கின்றனர்.

 

"வட்டுக்கோட்டை தீர்மானம்", "நாடு கடந்த தமிழீழம்", "மே 18 இயக்கம்" .. என்று புலிகள்,  தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து எப்படி நிகழ்கால அரசியலை செய்ய முனைகின்றனரோ, அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். மொத்தத்தில் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை "புரட்சிகரமானதாக" காட்டமுனைகின்றனர்.

 

கடந்தகாலத்தில் இவர்களின்; இந்த எதிர்ப்புரட்சி அரசியலை மறுத்து போராடியவர்களையும், போராடி மரணித்தவர்களையும் அரசியல் ரீதியாக அர்த்தமற்றதாக்க முனைகின்றனர். இந்த எதிர்ப்புரட்சியை மூடிமறைக்க, தங்கள் "தோழர்" என்று அவர்களின் தோளில் கையை போடுகின்றனர். இதன் மூலம் அவர்களின் அரசியல் இலட்சியங்களையே, தமக்கு கீழானதாக  சிறுமைப்படுத்துகின்றனர். தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்பவர்களை அரசியல் ரீதியாக மறுக்கின்றனர். வரலாற்றில் இருந்து அவர்களை மறைக்க முனைகின்றனர். தொடர்ச்சியாக மக்களுக்கான ஒரு போராட்ட மரபை மறுத்து நிற்பதும், அந்த தியாகத்தையே ஏதுமற்றதாக நிகழ்காலத்துக்கு காட்டுவதே, இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலின் மையமான அரசியல் அடிப்படையாகும். இதையே பண்பு கொண்ட, ஐக்கியத்துக்கான "மார்க்சியம்" என்று பேசமுனைகின்றனர்.

 

எதிர்ப்புரட்சிக்கு எதிரான கடந்தகால தியாகங்கள், போராட்டங்கள் என அனைத்தையும், தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலுக்கு கீழ்ப்பட்டதாக காட்ட முனைகின்றனர். இதன் மூலம் தங்கள் எதிர்ப்புரட்சி அரசியல் எல்லைக்குள், புரட்சிகரமானது என எதுவும் இருக்கவில்லை என்று வரலாற்றை திரித்து மாற்றமுனைகின்றனர்.

 

இந்த வகையில் அசோக் "தோழர்" விமலேஸ்வரன் என்று கூறுகின்றார். அவனுக்கு எதிரான உங்கள் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பிக் பாருங்கள். நீங்கள் அவனைப் போன்றவர்களை கொன்று குவித்துக் கொண்டு இருந்த காலத்தில், அவனும் உங்கள் துணைவியாக வர இருந்த செல்வி உட்பட பலர், உங்கள் அமைப்பைவிட்டு விலகியிருந்தனர். விமலேஸ் எமது மாணவ அமைப்பில் இணைந்து போராடிய காலத்தில் தான், புலிகளால் அவன் படுகொலை செய்யப்பட்டான். இப்படி உங்களுக்கு எதிராக போராடியவனை, தோழன் என்று அழைக்க எந்த அரசியல் அருகதையும் உங்களுக்கு கிடையாது. நீங்கள் அக்காலத்தில் புளட் இயக்கத்தின் அனைத்து மக்கள் விரோத போக்குக்கும் தலைமை தாங்கி வழி நடத்திக்கொண்டு இருந்தீர்கள். அதை என்றும் நீங்கள் சுயவிமர்சனம், விமர்சனம் செய்து, அந்த அரசியலுக்கு எதிராக தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி போராடியது கிடையாது. புளட் உங்களைப் போன்றவர்களின் துணையில் தான், இன்றுவரை தன்னை மூடிமறைத்துக் கொண்டு நீடிக்கின்றது. இதனால் தான் அவர்கள் உங்களுடன் நட்பான அரசியல் உறவை பேணமுடிகின்றது. இங்கு மூடிமறைக்கப்பட்ட உங்கள் அரசியல் நயவஞ்சகம், இன்று விமலேஸ்வரனைக் கூட தோழனாக்குகின்றது.

 

இது பிழைப்பு அரசியலாகும். புளட் உட்படுகொலைகள் முதல் அதன் மக்கள் விரோத அரசியலுக்கு தலைமை தாங்கியவர்கள், அதை இன்றுவரை மூடிமறைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர். அசோக் போன்றவர்கள் இந்த வகையில் தான், "மக்கள்" அரசியல் செய்கின்றனர். புளட் தளத்தில் நடத்திய படுகொலைகள் பலவிதமானது. சமூக விரோதிகள்  என்றும், அரச உளவாளிகள் என்றும், தமிழப்; பகுதி எங்கும் மின்கம்பங்களை நிரப்பியவர்கள் தான் புளாட். அது மட்டுமா மாற்று இயக்க படுகொலைகள், உள்ளியக்க படுகொலைகள் எல்லாம் சர்வசாதாரணமாக நடந்தது. கைது, சித்திரவதை, கடத்தல், கப்பம் என்று பவவற்றை புளாட் செய்தது. இந்த நிலையில் மத்திய குழுவைச் சேர்ந்த மும் மூர்த்திகளில் (அசோக், குமரன், ஈஸ்வரன்) ஒருவராகவும் இருந்த அசோக் போன்றவர்களின் தலைமையில் தான், இவை அனைத்தும் நடைபெற்றது. தளத்தில் நடந்தவைகள் முதல் அதை நடத்தியவர்கள் யார் என அனைத்தும், இவர்கள் அறிந்ததே. இதற்கு எதிராகவில்லாமல், மக்களுக்கு எதிரான இந்த வரலாற்றை மூடிமறைப்பதில் இருந்துதான், இன்றுவரை இவர்களின் அரசியல் அரங்கேறுகின்றது. புளட் அமைப்பின் இரண்டாவது தலைவரும், அமைப்பின் அரசியலுக்கு வழிகாட்டிய சந்ததியாரின் கண்ணை தோண்டிக் கொல்லும் அளவுக்கு, அந்த அமைப்பில் மக்கள் விரோத தன்மை பல தளத்தில் தலைவிரித்தாடியது.

 

மக்கள் விரோதிகள் பக்கத்தில் நின்ற அசோக், இன்று வரை மக்களுக்கு எதிரான புளட்டின் அரசியல் மற்றும் நடத்தைகளை மக்கள் முன்கொண்டு வந்தது கிடையாது. அந்த எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைப்பதுடன், அதில் தன் அரசியல் பங்கை ஏதுமற்றதாக காட்டி, இதுவரை காலமும் ஒரு எதிர்ப்புரட்சி அரசியல் நடத்துகின்றார். எதிர்ப்புரட்சி வரலாற்றை மறைப்பது போல், மாற்று அரசியல் தளத்திலும் நடத்தி எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து, அதை "புரட்சிகரமானதாக" காட்ட முனைகின்றனர். சமாந்தரமான புரட்சிகரமான அரசியல் போக்கை மறுத்து, தங்கள் எதிர்ப்புரட்சியை புரட்சி அரசியலாக நிலைநாட்ட முனைகின்றனர்.     

 

அதற்காக நீங்கள் (அசோக்) "காடுகள் என்றும் மேடுகள் என்றும் அலைந்தோம்" என்று கூறுவதை நாம் மறுக்கவில்லை. உங்களைப் போல் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களும் யுவதிகளும் காடுகள், மேடுகள், கடல்கள் என்று அலைந்தனர். சில பத்தாயிரம் பேர் மரணித்தனர் என்பது, எம்மைச் சுற்றிய வரலாறு. காடுகள் என்றும் மேடுகள் என்றும் பாராது, மக்களையே இந்தப் போராட்டம் துரத்தியது கூட இங்கு வரலாறுதான். எதைப் போராட்டம் என்றீர்களோ, அதுவே மக்களை அடக்கியொடுக்கி அடிமைப்படுத்தியது.

 

நீங்கள் புளட்டின் சார்பாக பொறுப்பாக இருந்த காலத்தில், புளட் மனித குலத்துக்கு எதிராக நடத்திய பாரிய குற்றங்களை மூடிமறைத்துக் கொண்டுதான், இன்றுவரை அரசியலை (புனைபெயர்  பின்னோட்ட அரசியல், தொலைபேசி அரசியல், ஆள்;பிடிப்பு அரசியல் ….)  தொடர்கின்றீர்கள். 

 

இந்தக் கொலைகார புளட் அமைப்பு, புலியெதிர்ப்பு அடிப்படையில் அரசுடன் சேர்ந்து தன்னை "முற்போக்காக காட்ட", அதை மூடிமறைத்து "மாற்றுக் கருத்து" கூட்டம் அவர்களுடன் கூடிக் கூத்தாடியது. இதில் அசோக் முதன்மையானவர். இதை தாங்கள் சமூகம் பற்றிய அக்கறையுடன் தான், அவர்களுடன் கூடி விவாதிப்பதாக கூறி, இதை "மார்க்சியம்" என்று பேசுகின்றீர்கள். இப்படி ஈ.பி.டி.பி டக்கிளஸ் வரை அரசியல் கொண்டாட்டம் நடத்தியவர்கள் தான், புதிய ஜனநாயகக் கட்சி செந்தில், தம்பையா வரை ஓடிப்பிடித்து விளையாடிவர்கள், இன்று "மார்க்சியத்துடன்" விளையாட முனைகின்றீர்கள். 

 

இப்படி கடந்தகாலத்தை குறுக்கு நெடுக்காக பிளந்தால், கடந்தகால புலம்பெயர் மாற்று அரசியல் இதற்குள் தான் புழுத்தது. இந்த நாற்றத்தை சகிக்க முடியாத பலர், அதை விட்டு ஓதுங்கினர். சிறியளவில் மக்களுக்காக தம் எல்லைக்குள் இயங்கினர் அல்லது இயங்க முனைந்தனர். இதுவே கடந்தகால மாற்று இயக்க வரலாறு.

 

புலிக்கு நிகராகவும், புலி எதிர்ப்பு பேசிய அரசுசார்பு குழுக்களுக்கு நிகராகவும், மாற்றுக் கருத்துத்தளம் ஒரு எதிர்ப்புரட்சி அரசியல் அடித்தளத்தையே அரசியலாகக் கொண்டிருந்தது. இதை மீறி மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசியலை, அது சார்ந்த கருத்துத் தளத்தை எதார்த்தத்தில் நீங்கள் கொண்டிருக்கவில்லை. இதுவே கடந்தகால அரசியல் எதார்த்தமாக, இது வரலாறாகிவிட்டது. நாம் மட்டும் இதை எதிர்த்துப் போராடியது, வரலாறாகிவிட்டது.  

 

இந்தக் காலகட்டத்தில் ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை, சமூகத்துக்கு விதைத்தவர்கள் தான் இன்று புரட்சி மார்க்சியம் என்று திடீர் மக்கள் அரசியல் பேசுகின்றனர். இப்படிப்பட்டவரில் ஒருவரான  அசோக், தன் கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலை மார்க்சிய அரசியலாக இனியொருவில் காட்ட முனைகின்றார். இதற்கு துணையாகவே நாவலனையும் கூட்டுச் சேர்த்துள்ளார். அரசியல் வியாபாரத்துக்கு ஏற்ற நல்ல கூட்டு. இது எப்படிப்பட்ட அரசியல் கூட்டு.

 

தொடரும்

 

பி.இரயாகரன்
15.12.2009 

 

Last Updated on Tuesday, 15 December 2009 10:28