Sidebar

Language
20
தி, மே

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது. ஆறாவது அறிவை இழந்த மந்தைகளாக, ஒருவரை ஒருவர் கண்காணித்து சாய்க்க, ஒரு தேர்தல் திருவிழா அரசியல் கூத்தாகின்றது.

அவரவரின் அறியாமைக்குள் கிணற்றுத் தவளையாக நின்று பெருமை பேச, வம்பளக்க, பொழுதுபோக்க வட்டுக்கோட்டை மாபியாத் தேர்தல் உதவுகின்றது. இவர்களைத் தலைமை தாங்கும் மாபியாக் கும்பல், மக்களின் பொது நிதியை சூறையாடியதையிட்டு வாய்திறக்க முடியாதவர்களைக் கொண்டு, அவர்கள் தமக்கு வாக்குப் போடவைக்கின்றனர்.

 

புலி மாபியாத்தனம் மூலம் கட்டமைத்த மாபியா வடிவங்கள் முதல் சடங்குத்தனமான மொய் எழுதும் சமூக வடிவங்கள் மூலம் தமக்கு வாக்கு போடவைக்கப்பட்டது.

 

புலிகளின் தலைமையைக் கொன்றவர்கள், பினாமிச் சொத்துகளை அபகரித்தவர்கள், நடத்தும் அரசியல் சடங்குகள் இவை. உள்ளுர் சொத்துக்களை தமதாக்கி தக்க வைத்துள்ள மாபியாக்கள், சர்வதேச சொத்தை வைத்துள்ள மாபியாக்களிடம் இருந்து சொத்தை தக்கவைக்கவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னிறுத்தி நிற்கின்றனர்.

 

சர்வதேச மாபியாக்கள் நடத்தும் நாடு கடந்த தமிழீழத்துக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. இப்படி அவர்களுக்கு இடையிலான போட்டி, மோதல் மேலெழுந்து வருகின்றது.

 

தமிழ் மக்களிடம் கடந்த காலத்தில் ஏமாற்றி பெற்ற பணத்தை கோடி கோடியாக தனிநபர்கள் அபகரித்து வைத்துக் கொண்டு இதை நடத்துகின்றனர். தங்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்று எதுவும் தெரியாத சூனியத்தை மக்களுக்கு விதைத்துக் கொண்டு, தங்கள் இயக்கம் எப்படி காயடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது என்ற உண்மைகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டு, வட்டுக்கோட்டைக்கு வாக்கு போடக் கோருகின்றனர்.

 

இந்தளவுக்கு வட்டுக்கோட்டை தீர்மானம் தான் என்னவென்று, வாக்குப் போட்ட மந்தைகளுக்கு தெரியாது. வாக்குப் போடுவதை, மொய் போடுவது போன்று சடங்கின் எல்லைக்குள் வைத்து தேர்தல் திருவிழாவாக இது நடத்தப்படுகின்றது.

 

புலித் தலைவரையும், புலிகளையும் அழித்த தங்கள் கோசங்களுடன் மந்தைக் கூட்டங்களாக வீதியில் மக்களை இறக்கிய அதே கூட்டம்தான், தமக்குள் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டைக்கு வழிகாட்ட போவதாக கூறி நிற்கின்றது. மந்தைகளாக வாக்குப்போட்டது போன்றுதான், தங்கள் சொந்த மக்களையும் தங்கள் தலைவரையும் கொல்லும் கோசங்களுடன் வீதிகளில் இறங்கியதை, நாம் மீண்டும் இங்கு பொருத்திப் பார்க்கமுடியும்.

 

மந்தையாக மக்கள் வாக்கு போடுவதையும், போடாமல் விடுவதையும் கண்காணிக்கும் வண்ணம், சமூகம் பாசிசமயமாகியுள்ளது.  "நீ வாக்கு போட்டாயா", "ஏன் நீ இன்னமும் போடவில்லை" … என்று பரஸ்;பர கண்காணிப்பின் ஒரு எல்லைக்குள், வாக்கு போட வைக்கப்படுகின்றது. போடாவிட்டால் தமிழ் சமூகத்தில் நீ வாழ்ந்து விட முடியாது என்ற சமூக பாசிசமயமாக்கல் எல்லைக்குள், சமூகம் கண்காணிக்கப்பட்டு வாக்கு போட வைக்கப்படுகின்றது.

 

எதற்கு "சோலி" என்ற அடிப்படையில், வாக்கு போட்டுவிட்டால் பிரச்சனையில்லை என்ற சடங்குத்தனத்துடன் தான் மந்தைகள் வாக்கை போடுகின்றனர். வாக்குப்போட்ட மந்தைகளுக்கு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி, எந்த சுயஅறிவும் சுயசிந்தனையும் கூட கிடையாது.

 

இப்படி வாக்குப் போடவைத்து, உள்ளுர் மாபியாக்கள் தங்கள் பின்னுள்ள சொத்தை தமதாக்கி அனுபவிக்கின்றனர். மக்களை மந்தைகளாக்கி, அவர்கள் மேல் அதிகாரத்தை தொடர்ந்தும் செலுத்த முனைகின்றனர். தொடர்ந்தும் பணவேட்டை நடத்தும் குறுக்கு வழிகளை, இதன் மூலம் தேடுகின்றனர்.

 

இப்படி வட்டுக்கோட்டை தீர்மானமும், அதன் பெயரில் நடக்கும் கூத்துகளும், மக்களை மந்தைகளாக்கி தின்னும் கூட்டமும், தொடர்ந்து மக்களின் உழைப்பை ஏமாற்றி தின்னவே வழிதேடுகின்றது.

 

தேசியத்தின் பெயரில் கடந்த காலத்தில் மக்களை கொன்று குவித்த கூட்டம், எந்த நிலையிலும் அதற்காக மனம் வருந்தியது கூட கிடையாது. மக்களை தொடர்ந்து ஏமாற்றி, எப்படி தின்னலாம் என்பதே அதன் அரசியல் தாகமாக, அதுவே இலட்சியமாகிவிட்டது.

 

இதன் பின் மக்கள் தங்கள் சடங்குத்தனமான வாழ்வியல் முறையின் ஊடாக, மந்தைத்தனத்துடன் அணுகுகின்றனர். ஏனோதானோ என்று, எந்த அரசியல் அக்கறையுமற்ற, மந்தைகளாக மேய்கின்றனர்.

 

மண்ணில் மக்கள் பற்றி அக்கறையற்ற மந்தைத்தனத்தை இது தன்னுள் கொண்டுள்ளது.  புலம்பெயர் சமூகம் விழிப்புறுதல் என்பது, பல சமூகத் தடைகளை தாண்டியாகவேண்டியுள்ளது.

 

பி.இரயாகரன்
14.12.2009