Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  • PDF

கடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் "இடதுசாரிய" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடிமறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.

மக்களுக்கு எதிரான கடந்த வரலாற்றைப் பற்றியும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும், எந்த அபிப்பிராயமுமற்ற சிலர் "மார்க்சிய" ஆய்வாளர்களாக நீடிக்கின்றனர். பொதுவில் இறுகக் கண்ணை மூடிக்கொண்டு இருக்க பலர் முனைகின்றனர். மறுபக்கத்தில் "இடதுசாரியம";, "மார்க்சியம்" என்று, அரசியல் வித்தை காட்ட முனைகின்றனர்.

 

சமூகத்தை இருட்டில் நிறுத்தி வைத்து, மார்க்சிய போதனை பற்றி ஆருடம் கூறுகின்றனர். இதற்கமைய மார்க்சிய வித்தை காட்ட கோஸ்;டி சேருகின்றனர். கடந்தகாலத்தில் நாம் எதை செய்தோம், அதை எப்படிச் செய்தோம் என்பதை கேள்விக்குள்ளாக்காத "மார்க்சியம்" பற்றி மட்டும், எம்மையும் பேசக் கோருகின்றனர்.

 

இப்படிப்பட்ட நிலையில், இதை அம்பலப்படுத்துவது அவசியமானது. மக்களை வரலாற்று அறிவற்றவராக வைத்திருக்கவே திடீர் மார்க்சியம் பேசுவோர் முனைகின்றனர். தொடர்ச்சியான எந்த வரலாற்று மார்க்சிய இயங்கியல் போக்கற்றவர்கள், கடந்தகாலத்தை எதிர் போராட்டமற்ற ஒரு வரலாற்றுச் சமூகமாகவே இட்டுக்காட்ட முனைகின்றனர். தம்மைப் போல், தம் "மார்க்சியம்" போல், போராட்டமற்ற, ஒரு மக்களின் இருண்ட வரலாறாக கடந்தகாலத்தை இட்டுக்கட்ட முனைகின்றனர். தாமே இன்று, கடந்தகால அவலங்களுக்கு எல்லாம் ஒளி கொடுக்க முனைவதாக புதிதாக கிளம்பியுள்ளனர். இதை சர்வதேசியம் வரை சோடித்துக் காட்ட, சிவப்பு குல்லா அணிந்து பவனிவருகின்றனர். 

 

மக்கள் தமக்கு நடந்தது என்னவென்பது தெரியாத வண்ணம், "மார்க்சியத்தின்" பெயரில் மக்களை மீளவும் மந்தைகளாக்க முனைகின்றனர். கடந்த எதிர்ப்புரட்சி வரலாறுகள், புலி மற்றும் அரசுக்கு வெளியில் இல்லை என்று அடித்துக் கூறுவதுதான், இவர்களின் "மார்க்சிய" அடிப்படையாக உள்ளது.

 

இதில் இருந்துதான், இதை விவாதிப்பது அவசியமா? என்ற கேள்வியின் அரசியல் சாரம் வெளிப்படுகின்றது.  இது "இடதுசாரியத்தை" பலவீனப்படுத்தாதா? என்று இதை தடுத்து நிறுத்த முனைகின்றனர். இந்த விவாதத் தொடர் மீது பல கேள்விகளை முன்வைக்கின்றனர்.

 

இப்படி முன்வைப்பவர்கள் முன், சமூகத்தை அடிமைப்படுத்தி ஓடுக்கிய எம் வரலாறு பலதளத்தில் இருண்டு கிடக்கின்றது. இந்த மனித அவலத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை மறுத்து, வரலாற்றை திரித்து அதை "மார்க்சியமாக" சொல்ல முனைகின்றனர். இதில் கடந்தகாலத்தில் செயலற்றுக் கிடந்தவர்கள், மனித அவலத்துக்கு துணை நின்றவர்கள், இன்று புது வேசம் போட்டுக்கொண்டு மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்குகின்றனர்.

 

சில வரலாற்றைச் சொன்ன "புதியதோர் உலகம்;", "முறிந்த பனைகள்" இவர்களுக்கு எதிராக, இவர்களின் சுத்துமாத்துக்கு எதிரான வலுவான ஒரு ஆயுதமாக இன்று மாறி நிற்கின்றது. இந்த வகையில், கடந்த வரலாற்றை ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நாம் எழுதியாக வேண்டும்;. அதில் மனித விரோதிகளையும், அதற்கெதிரான போராட்டத்தையும் பதிவு செய்தேயாக வேண்டும். வரலாறு என்பது, ஒடுக்கியவன் எமக்கு சொல்லும் ஒரு வரலாறாக, வரலாற்றில் நாம் இனியும் விட்டுச்செல்ல முடியாது. இது மனித குலத்துக்கு நாம் செய்த துரோகமாகவே இருக்கும். மக்களை ஒடுக்கியவர்களும், அதற்கு துணை நின்றவர்களும், சொல்லும் ஒரு வரலாறு தான் இன்று உள்ளது. ஒடுக்கப்பட்டவர்களும், அவர்களுக்காக போராடியவர்களும் வரலாறு சொன்னது கிடையாது.

 

அதைச் சொல்வது இன்று அரசியல் ரீதியாக முக்கியமானது. இதற்கு சமாந்தரமாக, தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்று அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் போக்கை உருவாக்கவேண்டும். கடந்த காலத்தை மறந்தும், மறுத்தும் பேசும் அரசியல் என்பது, அனுபவத்தை நிராகரித்தலாகும்.

 

எம்மைச் சுற்றி கடந்த காலத்தில் என்ன நடந்தது? யாருக்கு என்னதான் தெரியும். வரண்ட, வற்றிப்போன லும்பன் உலகில், சமூக உணர்வுடன் எம் வரலாற்றை தெரிந்து கொள்ள வைத்தலே, இன்றைய அரசியல் கல்வியில் முதன்மையானது.

 

"இடதுசாரியத்தை" இது பலவீனப்படுத்தும் என்பது, தேசியத்தை விமர்சித்தால் அதை  பலவீனப்படுத்தும் என்று இயக்கங்கள் சொன்ன அதே அரசியல் அடிப்படையை உள்ளடக்கமாகக் கொண்டது. இடதுசாரியம் பேசியபடிதான் தேசியம், பாசிசமாக வளர்ந்தது. இடதுசாரியம் பேசுவதாலேயே, அது இடதுசாரியமாக எப்போதும் இருப்பதில்லை.

 

கடந்து போன வரலாற்றை திரித்து அதை மூடிமறைப்பது வரையான "மார்க்சிய" அரசியல், எப்படி நேர்மையான ஒரு இடதுசாரிமாக இருக்கமுடியும். இதை இந்த விவாதத்தில் நாம் இனம் காணமுடியும். வரலாற்றை மூடிமறைத்து, தம்மைத்தான் புனிதப்படுத்தி காட்டும் "நேர்மை" மிக அபாயகரமான சந்தர்ப்பவாதமாகும்.

 

இதுவே எதிர்காலத்தை வழிகாட்டும் என்று தன்னை முன்னிறுத்தும் போது, இதை அம்பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதன் போது எமது தொடர்ச்சியான அரசியல், அடிசறுக்க வைக்கின்றது. இந்த நிலையில் தனிமனிதர்கள் வரலாற்றில் ஆற்றிய பங்கு முதன்மை பெற்று நிற்பதால், தனிமனிதர்களை தாக்குவதன் மூலம் அதை சேறடிக்க முனைகின்றனர்.

 

இந்த வகையில் 1. எனது மொழி 2. தனிமனிதனான என்னைச் சுற்றிய நிகழ்வுகள் 3. நான் சார்ந்து இருந்த அமைப்பு நடத்திய வங்கிக் கொள்ளை பணத்தை பற்றியதாக 4. தனிமனித தாக்குதல் என்று, திசைதிரும்பும்  ஒரு புரட்டை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதற்கு அவர்கள் பல புனை பெயரில் போடும் பின்னோட்டம் முதல் முதுக்குபின்னான அவதூறுகள் வரை, எமது அரசியலை மறுக்க உதவுகின்றது.

 

இந்த வகையான உத்தியின் பின்னால், அவர்கள் ஒரு அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்த வரலாற்றைத் திரித்தும், மறுத்தும், அதை மூடிமறைத்துக் கொண்டும் கட்டமைக்கும் புதிய எதிர்ப்புரட்சி அரசியலாக அது வெளிவருகின்றது. இதை தோலுரிக்கும் அரசியல் பணியை, முதலில் நாம் தொடங்கியுள்ளோம்;.

 

1. எனது மொழி

2. தனிமனிதனான என்னைச் சுற்றிய நிகழ்வுகள்

3. நான் சார்ந்து இருந்த அமைப்பு நடத்திய வங்கி கொள்ளை பணத்தை பற்றியதாக 4. தனிமனித தாக்குதல்

 

என்று, அரசியலை இட்டுக்கட்டுவதன் மூலம் அவர்கள் கட்டமைக்கும் அரசியலை தகர்க்கும் அதே தளத்தில், இவற்றைப் பற்றி இந்த தொடரில் விரிவாக விவாதிக்க உள்ளோம். குறிப்பாக கற்றன் வங்கி பற்றி, திட்டமிட்டு புனையும் புரட்டுகளைப்பற்றி விரிவாக பேச உள்ளோம். அறிவும் நேர்மையும் நாணயமும் உள்ள ஒவ்வொருவரின் முன்னும், இவர்கள் கட்டிய பொய்யும் புரட்டுக்கும் அது சவால்விடும்.

 

என்னைப் பற்றி இவர்கள் கட்டமைத்து காட்டும் அரசியல் அசிங்கத்துக்கு அப்பால், நாங்கள் வைத்து வந்த அரசியல் பற்றி இவர்களின் அரசியல் என்ன? இவர்கள் அக்காலத்தில் வைத்த அரசியல் என்ன? இதை பற்றி தெளிவை உருவாக்கி போராடுமாறு அழைக்கின்றோம்.

 

இதற்கு வெளியில் என்னைப்பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும், இந்தத் தொடர் மூலம் நான் பதிலளிக்க உள்ளேன். இவர்களின் அரசியல் வாழ்வே, இதற்குள் தான் நீடிக்கின்றது.  இதைச் சொல்லி நீடிக்கின்றது என்பதால், இதன் மேலான விளக்கம் அவர்களை அரசியல் ரீதியாக மேலும் ஒருபடி அம்பலப்படுத்தும்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்
12.11.2009

 

Last Updated on Saturday, 12 December 2009 07:16