Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)

சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)

  • PDF

ஒரு இனத்துக்கு எதிராக, தங்களுடன் போராட வந்த இளைஞர்களுக்கு எதிராகவும்,  புளாட்டும் ஈ.என்.டி.எல்.எவ். வும் பாரிய மனிதக் குற்றத்தை இழைத்தது. அதன் மத்திய குழு உறுப்பினராக இருந்த அசோக், அது பற்றி எதையும் மக்களுக்கு இன்றுவரை சொன்னது கிடையாது.

அந்த குற்றக் கும்பலுடன் தான் தொடர்ந்து கூடி அரசியல் செய்தவர். இது போன்று மற்றைய இயக்கங்களுடன் கூட, இதே அரசியல் தான். மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மக்கள் முன் கொண்டு வராது சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்து அவர்களுடன் கூடிக் குலாவியவர். இந்த நிலையில் தன்னை அரசியலில் நிலை நிறுத்த, வேறு சிலரின் துணையுடன் இடதுசாரிகளை இறக்குமதி செய்தவர். அப்படி இடதுசாரிகளை இறக்க உதவியவர்கள், இவரின் டக்ளஸ் வரையான இடதுசாரிய அரசியல் பம்மாத்துகளை உறவுகளையும் புரிந்து கொண்ட யாரும் அவரோடில்லை. 

 

இப்படிப்பட்ட இவர், அன்று காடு மேடு எல்லாம் தேடி பிடித்துவந்தவர்களைக் கொன்று புதைத்த போது, அதை தட்டிக்கேட்க அக்கறையற்று அதற்கு துணை நின்றவர்தான் இந்த "இனியொரு" அசோக். சரி அந்த இயக்கத்தை விட்டு வெளிவந்த பின், அதை மக்கள் முன் சொன்னது கிடையாது. ஆனால் 20 வருடமாக "இடதுசாரி" அரசியல் வியாபாரம் மட்டும் செய்கின்றார்.

 

இப்படிப்பட்ட நீங்கள், புளாட் மத்திய குழு உறுப்பிராக இருந்து அந்த இயக்கத்தை வழிநடத்தினீர்கள். அதை, அதன் சீரழிவு மிக எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றது. நீங்களா மீண்டும் புதிய சமூகத்தை வழிநடத்தப் போகின்றீர்கள். தாங்கள் பிடித்து சென்றவர்களை பற்றி, அவர்களை யார் கொன்றது என்பது பற்றி, இன்று வரை எந்த அக்கறையும் கிடையாது. எங்களுக்கு மட்டும் அது உண்டு. இவ்வளவு காலமும் அந்தக் கொலைகாரர்களுடன் கூடி விவாதித்தவர்கள் தான், இன்று புதுக் கூட்டாளிகளுடன் திடீர் மார்க்சியம் பேசுகின்றனர். அவர்கள் இவ்வளவு காலம் எங்கே இருந்தனர், என்ன செய்தனர் என்று தேடினால், நாற்றம் மூக்கை துளைக்கின்றது.

 

உங்கள் புதுக் கூட்டாளியும், திடீர் மார்க்சியவாதியாக இனியொருவில் திடீர் அரசியல் பேசும் நாவலன், உங்களைப் பாதுகாக்க புனைபெயரில் இனியொரு பின்னூட்டத்தில் படுத்துக் கிடந்து பின்னோட்டங்கள் போடுகின்றார். எல்லாம் சரி, உங்களுக்கும் நாவலனுக்கும் உள்ள அந்த அரசியல் உறவுதான் என்ன? இது இரண்டு பேரும்;, தத்தம் சந்தர்ப்பவாத அரசியலை அடிப்படையாக கொண்ட ஒரு தற்காலிகக் கூட்டு.

 

அசோக், நீங்கள் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையில் கூறுகின்றீர்கள்

 

"பிரான்சில் சோபாசக்தி, சுகன், ஞானம் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை தோலில் சுமந்து திரிந்தகாலம் அது.

அ.மார்க்ஸ் இன்றுபோல் அன்றும் இவர்களை ஞானத் தந்தையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். இவர்களின் அரசியலுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட எண்ணி கலந்தாலோசித்து உங்கள் பெயரோடும் என் பெயரோடும் உங்களால் எழுதப் பட்டு வெளியிடப்பட்டது."

 

என்று வீரமாக, சோபாசக்தி, சுகன், ஞானத்துக்கு எதிராக எழுதுகின்றீர்கள். சரி உங்கள் இனியொரு நாவலன் அ.மார்க்ஸ் முன்னுரையுடன் "மார்க்சிய" நூலை வெளியிட்டாரே. அது எந்தக் கணக்கு. அதற்கு எதிராக எழுத மாட்டீர்களோ? இதை எழுதாமல் விடுவது, இன்றைய மார்க்சிய அரசியலில் கையாளவேண்டிய சந்தர்ப்பவாத  ராஜதந்திரமோ!? இதற்குள் அரசியல் இல்லையோ!? நாவலனின் திடீர் அரசியல் மீள் வருகை மூலம் தன்னை பிரபல்யமாக்க, அ.மார்க்ஸ்லின் முன்னுரை தேவைப்பட்டது. தன் திடீர் மார்க்சியத்தை விதைக்க, மருதையன் வரை தூண்டில் வீசித் திரிகின்றார். இப்படிப்பட்ட இவருடன் நீங்கள். நல்ல வியாபாரக் கூட்டாளிகள் தான். எத்தனை நாளுக்கு தான், இந்தக் கூத்தை நடத்துகின்றீர்கள் என்று பார்ப்போம்.

   
 
அரசியல் வியாபாரத்துக்கு ஏற்றவர்தான் நீங்கள். அதை புளாட்டின் மத்தியகுழுவிலும் நடத்தி முடித்தவர்கள் நீங்கள். தீப்பொறி வெளியிட்ட

 

"புதியதோர் உலகம்"

 

என்ற வரலாற்று நாவல், அதை மிக அழகாகவே அம்பலப்படுத்துகின்றது.

 

அதைப் பார்ப்போம். (இங்கு அடைப்புக் குறியில் உள்ளது நாம்)

 

"..தளத்திலிருந்து உறுப்பினர்கள் வந்து சேர்ந்த பின்பு மத்திய குழுக் கூட்டம் நடத்த நாள் தீர்மானிக்கப்பட்டது. தளத்தில் உளவுப்படையோடு இராணுவத்தில் சிலரும் சேர்ந்து ... இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேரை கொலை செய்தமைக்கு ஆதாரபூர்வமான உண்மைகளோடு வந்த மத்திய குழு உறுப்பினர்கள் விக்கித்து நின்றார்கள். அவர்களுக்கு அந்தப் பிரச்சினையை மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறந்து போயிற்று.

தமிழகத்தின் அராஜக நிலைமையையும், கோபாலனுக்கு (டொமினிக், ஜீவன், கேசவன், கோவிந்தன் என்று புனை பெயரில் அழைக்கப்படும் நூல் ஆசிரியர்) சிறையில் நடந்த சித்திரவதைகளையும் கேட்டதும் அவர்கள் விழிபிதுங்கி மௌனமாக முடங்கிக் கிடந்தார்கள். கோபாலன் (கேசவன்) தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை எல்லா மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் விபரித்துக் கூறினார். அவர்கள் மெய்சிலிர்க்க யாவற்றையும் கேட்டுவிட்டு அச்சத்தோடு திரும்பத் திரும்ப அதையே வலியுறுத்திக் கூறினார்கள், "இந்த விசயத்தை நீங்கள் மத்திய குழுவில் எடுக்க வேண்டாம். அவர்கள் எதையாவது செய்துவிட்டுப் போகட்டும். இல்லாவிட்டால் நாம் எல்லோரும் கலாதரனின் (சந்ததியார்) ஆள் என்று கூறிக்கொண்டு எல்லோரையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலைசெய்து விடுவார்கள்" யாருக்கும் அதை தட்டிக் கேட்க துணிவு வரவில்லை. தளத்திலிருந்து வந்த இளம் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் (அசோக்) இரகசியமாக அழுதுகொண்டே எல்லோரிடமும் கூறினார்,

முகாமில் நடக்கும் சித்திரவதைகளைப் பாருங்கள். அவர்கள் எங்களைக் கண்டு பேசவே பயப்படுகிறார்கள். என் மருமகன் ஒருவரையும் கொலைசெய்து விட்டார்கள். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. என்னை யாரும் கேட்டால் என்ன பதில் சொல்வது. அதேபோல் என் மைத்துனனும் பல்கலைக் கழகப் படிப்பை விட்டு இங்கு வந்தவன். அவனையும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். நான் மத்திய குழுவில் எதுவும் பேச மாட்டேன். ஒருவாறு தமிழீழத்திற்குப் போன பின்பு வெளிநாடு போயிடுவேன். நான் கழகத்தில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் வேற்று இயக்கத் தோழர் ஒருவர் என்னை கடுமையாக எச்சரித்தார். "அராஜகம் நிறைந்த இயக்கத்தில் சேர்ந்ததற்கு பின்பு ஒருநாள் வருந்துவீர். வெளியேற முடியாமல் தவிப்பீர்| என்ற அவர் எச்சரிக்கையை நான் பொருட்படுத்தாமல் விட்டது எவ்வளவு பெரிய பிழை என்பதை இப்போது உணர்கிறேன்" என்று தலையிலடித்துக் கொண்டார்."

 

இதுதான் அசோக்.

 

தீப்பொறியைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் போராட, அதை பேசுவதையே மறுத்தவர் அசோக். காடு மேடுகளில் பிடித்த இளைஞர்களைப் பற்றி அக்கறையற்று, நாட்டைவிட்டு ஓடுவது பற்றிய கருத்தையே அவர்களுக்கும் ஒரு தீர்வாக அதில் முன்வைத்தார்.   

 

இப்படி குறுகிய சந்தர்ப்பவாத நலனுடன் அணுகி, போராடுபவர்களில் இருந்து விலகி, சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்தார். காடு மேடெல்லாம் பிடித்து சென்று கொல்ல கொடுத்த அசோக், அதில் வெளிநாட்டுக்கு ஓடுவதைப் பற்றி தான் பேசமுடிந்தது. மத்திய குழுவில் தான் எந்தப் பக்கம் என்ற அரசியல் வேசம் கலைந்துவிடக் கூடாது என்று "நேர்மையான" அக்கறை, "மத்திய குழுவில் எதுவும் பேச மாட்டேன்" என்கின்றது. அதாவது நான் உங்களுடன் (தீப்பொறியுடன்) இல்லை என்ற உண்மையை போட்டு உடைக்கமாட்டேன் என்கின்றார். அசோக் அப்படி நடத்ததுடன், தீப்பொறி வெளியேறிய பின், கொலைகாரப் புளாட்டுடன் ஓட்டிக் கொண்டு அரசியல் நடத்தினார். இங்கு அரசியல் என்பது தொடர்ந்து கொலைகள் செய்வதுதான். அண்ணளவாக இரண்டு வருடத்தின் பின், ஈ.என்.டி.எல்.எவ். என்ற அமைப்பை றோ கொலைகாரர்களைக் கொண்டு உருவாக்கிய போது, அதன் மத்திய குழுவில் ஒட்டிக்கொண்டு கொலுவேற்று இருந்தார். (பார்க்க அந்த கூட்டுக் களவாணி பயல்களை, இந்த ஆவணத்தில்) அந்த மத்திய குழுவில் இருந்த ஒருவர் றோவைச் சேர்ந்த ஒரு இந்தியர். அதை அடுத்த அத்தியாயத்தில் நாம் பார்போம்.

 

இப்படிப்பட்ட அசோக் தொடர்ந்தும் புளாட்டில் இருந்தது மட்டுமல்ல, இதை முன்வைத்தவர்களை கொல்லவும் துணை நின்றனர். இதைக் கேசவன் அன்று புதியதோர் உலகத்தில் தன் முன்னுரையில்

 

"அவர்கள் ஒருவேளை எம்மைக் கொலை செய்வதில் வெற்றி பெறலாம்"

 

என்று எழுதுகின்றார். உங்கள் கொலைகார கூட்டத்தைப் பற்றி அவர் எழுதும் போது

 

"எமது வெளியேற்றத்தை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய பின்பு எம்மைக் கொன்றொழிப்பதற்காக சென்னை நகரம் எங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். …எம்மைக் கொன்றொழிப்பதற்கு பேயாக அலைந்தார்கள்"

 

என்று எழுதுகின்றார்.


நீங்கள் உங்கள் மத்திய குழுவோடு சேர்ந்து பேயாக அவர்களை கொல்ல அலைந்த போது, அவர்களை என்;.எல்.எவ்.ரி பாதுகாத்தது.
 
இந்த தேன்நிலவின் பின் தான், அண்ணளவாக 15 மாதங்களின் பின், ஈ.என்.டி.எல்.எவ் என்ற கொலைகாரக் கும்பலுடன் கூடிக் குலாவி நின்றதை, நாம் வெளியிட்ட ஆவணம் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. இந்தப் படுகொலை வரலாற்றை மூடிமறைத்து யாருக்கு, அரசியல் செய்கின்றீர்கள். அதைச் சொல்லுங்கள்.

 

நீங்கள் உங்கள் மத்திய குழுவோடு சேர்ந்து நின்று மறுத்ததை, கேசவன் நூலின் முன்னுரையில் தன்

 

"விடுதலைப் போராட்டத்தில் என்றும் மனிதாபிமானமும், மானுட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவற்றை இழந்து செல்லுமாயின் அது இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்குமான வழியாகவே அமைந்து விடும்.

அந்தக் கொலைவெறியர்கள் யார் என்பதை நாம் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நாம் எப்படி அவர்களுடன் முரண்பட்டு நின்றோம்? என்பதை வெளிப்படுத்துவதற்கு இந் நாவலைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

இந் நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் மூலம் உருவாக்கப்பட்ட கூட்டுப் படைப்பே இது."

 

என்றார்.

 

இது உங்களை உள்ளடக்கியதல்ல. வரலாறு அப்படித்தான் உங்களை இனம் காண்கின்றது. 

   

அந்தக் கேசவன் உங்களில் இருந்து எப்படி வேறுபட்டவர் என்பதையும், எந்த இலட்சியத்துடன்  உங்களில் இருந்து வேறுபட வாழ்ந்தான் என்பதையும், அவரின் இந்தக் கூற்று எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றது. அவர் எழுதுகின்றார்.

 

"ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வது எவ்வளவு புனிதமானது தெரியுமா. வெறுமனே கட்சி அங்கத்தவனாகிற பெருமை மட்டும் போதாது. மார்க்சியம் ஒரு வாழ்க்கை முறை. உயிரோட்டமான வாழ்க்கை அது. ஆனால் எங்கடை கட்சியில் பலர் அதை உணரத் தவறிவிட்டாங்கள். தமது சொந்த நலனுக்காக, ஒரு நாள் மகிழ்ச்சிக்காக, சில பத்து ரூபா லாபத்திற்காக எல்லாம்கூட தங்கள் ஆன்மாவைக் கொன்றழிச்சாங்கள். ஒரு மார்க்சியவாதிக்கு சுயநலமும் சோம்பேறித்தனமும் கட்டோடு இருக்கப்படாது. அவனுக்கென்று இருக்கும் ஆசாபாசம் எல்லாமே ஒரு இலட்சிய வாழ்வுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். காதல், திருமணம் இவற்றிலெல்லாம் இது மிகமிக முக்கியம்"

 

என்றார்.

 

இதை மறுத்தவர்கள் நீங்கள். இது உங்களுக்குப் பொருந்தாது. நாங்கள் அவரைப் போல், அவரின் இலட்சியத்துடன் போராட முனைகின்றோம். அவர்களின் இலட்சியத்தை போற்றி வாழ்கின்றோம். மானிட விடுதலைக்காக போராடிய போது, 17.05.1991 புலிப்பாசிட்டுகள் கடத்திச் சென்றதுடன் அவரைக் கொன்றனர். ஆனால் அவரின் இலட்சியத்தை யாரும் கொல்ல முடியாது. உங்களால், உங்கள் திடீர் மார்க்சியத்தால் அதைப் புதைக்கவும் முடியாது. 

 

முன்னைய கட்டுரைகள்

 

  1.  

  2.  

  3.  

  4.  

  5.  

  6. பிரபாகரனின் சகாப்தத்தின் முடிவின் மேல், அரச பாசிசமும் புலியெதிர்ப்பு அரசியலும்

 

தொடரும்

பி.இரயாகரன்
06.12.2009;

 

Last Updated on Sunday, 06 December 2009 12:02