நான் -------------லத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கும் மாணவன்.
89 இல் மாலை 3 மணியளவில் -----------கல்லூரி ஒழுங்கையால் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்ப் பக்கத்திலிருந்து அதே ஒழுங்கையில் சுமார் 10 இந்திய இராணுவத்தினரும் சுமார் 5 இளைஞர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.
நான் அவர்களைக் கடந்து போகும்போது இந்திய இராணுவத்தினர் எனது தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு என்னிடம் திருப்பித் தந்தனர். சில நிமிடங்களின் பின் 2 இளைஞர்கள் என்னிடம் வந்து மறுபடி தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு திருப்பித் தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். பின்னர் தங்களைத் தொடர்ந்து வரும்படி என்னைப் பணித்தனர்.
அவர்கள் உத்தரவிட்டபடி நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அவர்களுடன் இருந்த இந்திய இராணுவத்தினர் நான் அவர்களுடன் வருவது பற்றி எதுவும் கதைக்கவில்லை.
இருட்டும் நேரம் நாங்கள் ------------த்திலுள்ள ஈ. என். டி. எல். எவ் முகாமை வந்தடைந்தோம்.
இம் முகாமுக்குள் வந்ததும் ஒரு பாயில் இருக்குமாறு நான் பணிக்கப் பட்டேன். எனக்கு பிளேன்ரீ குடிக்கத் தந்தார்கள். இதன் பின்னர் அங்கு வைத்து நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.
மறுநாள் காலை சுமார் 10 மணியளவில் ஈ. என். டி. எல். எவ் வைச் சேர்ந்த 4 பேர் வந்து வயர், பெல்ற் போன்றவற்றால் என்னைத் தாக்க ஆரம்பித்தார்கள். இது பிற்பகல் சுமார் 2 மணிவரை நீடித்தது.
ஏதாவது இயக்கத்தில் நான் இருக்கிறேனா என்று கேட்டார்கள். நான் ஒரு மாணவன், எந்த ஓர் இயக்கத்துடனும் எனக்குச் சம்பந்தமில்லை என்று பதிலளித்தேன். அவர்கள் எனது பதிலை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் நான் எல். ரி. ரி. ஈ யைச் சேர்ந்தவன் என்று கூறினார்கள்.
தொடர்ந்தும் நான் இரும்புப் பைப்பால் தாக்கப்பட்டேன்.
மூச்சுத் திணறும்படி தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். இந்த நேரத்தில் பயங்கரமான காயங்கள் என் உடம்பில் இருந்தன. என் கைகள் பின் பக்கமாகக் கயிற்றினால் கட்டப்பட்டு இருந்தன.
எனது சேட்டையும், காற்சட்டையையும் அகற்றினார்கள். பின்னர் துணிக் குவியலை எனது வாய்க்குள் ஓட்டித் திணித்தார்கள். முகம் முழுவதும் மிளகாய்த் தூளை பூசினார்கள்.
பிறகு முகம் குப்புற தரையில் கிடக்குமாறு சொன்னார்கள். அப்படியே செய்தேன்.
அதன் பின் தண்ணீர் நிரப்பப்பட்ட பன்ராப் போத்தலை எனது மலவாசலுக்குள் செருக முயற்சித்தார்கள். அவர்களால் முடியவில்லை. மறுபடியும் மிகுந்த பலத்துடன் மலவாசலுக்குள் ஓட்டி வயிற்றுப் பக்கத்திற்குள் ஊடுருவிப் போகக் கூடியதாகச் செலுத்தி விட்டார்கள். நான் பயங்கரமான வேதனையை அனுபவித்தேன்.
இதன் பின்னர் சுமார் 6 வான் ரயர்களை எனது பின் பகுதியில் அடுக்கினார்கள். அடுக்கிய ரயர்களின் மேல் சீமெந்துப் பைகளை ஏற்றி வைத்தார்கள்.
நான் வலியால் துடித்துக் கொண்டிருந்த போது சுமார் 8 யார் தள்ளி 22 வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் என்னைப் போலவே முகம் குப்புறப் படுக்க வைக்கப்பட்டு அவன் மேல் கொன்கிரீட் கல்லுகள் அடுக்கப் பட்டிருப்பதைக் கண்டேன்.
அரை மணித்தியாலமாக நான் இதே நிலைமையிலேயே இருந்தேன்.
பின்னர் சீமெந்துப் பைகளையும் ரயர்களையும் அகற்றினார்கள்.
சில நிமிடங்களின் பின் நான் எழுந்திருக்கும்படி கேட்கப்பட்டேன். சாப்பிட 1 கிலோ வாழைப்பழமும், 1 கிளாஸ் பாலும் தந்தார்கள். நான் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தபோது பலவந்தமாக ஊட்டினார்கள்.
பின்னர் மலசலகூடத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டு முகம் மேலே பார்த்திருக்கத் தக்கதாக படுக்க வைக்கப்பட்டேன். அவர்களில் ஒருவன் எனது வயிற்றில் ஏறித் தொங்கித் தொங்கிக் குதித்தான். சுமார் 15 நிமிடங்கள் இப்படி வயிற்றில் ஏறி நின்று குதித்தான்.
பின்னர் என்னை குளியலறைக்குக் கூட்டிச் சென்று என்மீது தண்ணீர் பாய்ச்சினார்கள். இவ்வளவும் செய்து முடிந்த பின் நான் முன்பு போட்டிருந்த காற்சட்டையையும், வேறு ஒரு சேட்டையும் தந்து அணிந்து கொள்ளச் சொன்னார்கள். நான் அணிந்து கொண்டேன். சித்திரவதை செய்யப்பட்ட இடத்தில் நான் உட்கார வைக்கப்பட்டேன்.
அதேநாள் சுமார் 6 மணிக்கு இந்திய இராணுவத்தினர் சிலர் வந்து எனது வயிற்றில் இருந்த போத்தலை எடுக்க முயற்சி செய்தனர். அவர்களால் முடியாமல் போகவே, என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்படி ஈ. என். டி. எல். எவ்வைச் சேர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரில் ஒருவன் கூறினான்.
அவர்கள் என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரும் போது, எனக்குச் செய்த சித்திரவதைகளை யாருக்காவது சொன்னால் என்னைக் கொல்வதுடன், எனது முழுக் குடும்பத்தையும் அழிப்போம் என மிரட்டினார்கள்.
கை ஏஸ் வான் ஒன்றில் ஏற்றப்பட்டு நான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டேன்.
ஆஸ்பத்திரியில் யாரிடமும் அவர்கள் என்னை ஒப்படைக்கவில்லை. பதிலாக என்னை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி முகப்பு வாசலுக்குத் தள்ளிவிட்டு மறைந்துவிட்டார்கள்.
என்னைக் கண்ட ஒருவர் வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்றார்.
நான் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன். அறுவைச் சிகிச்சையின் பின் எனது வயிற்றில் இருந்த போத்தல் எடுக்கப்பட்டது.
சிகிச்சைக்காக நான் சுமார் ஒன்றரை மாதங்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன்.
ஆஸ்பத்திரியில் என்னுடன் எனது தந்தை தங்கியிருந்தார். ஒரு நாள் நடுச்சாமம் அளவில் 15 இந்திய இராணுவத்தினர் வந்து எனது தந்தையைக் கூட்டிச் சென்றார்கள்.
அவர் 4 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது எனக்கு நடந்த சித்திரவதைகளைப் பற்றி யாருக்காவது சொன்னாரா? என்று கேட்கப்பட்டார்.
19 வயது இளைஞன் ஒருவனுக்கு ஈ.என்.டி.எல்.எவ் பாசிசக் கும்பல் செய்த மிருகத்தனமான சித்திரவதைகள் பற்றி அவ் இளைஞனால் அளிக்கப்பட்ட வாக்குமூலத்திலிருந்து சேகரித்தவைகளைத் தொகுத்திருக்கிறோம். அந்த இளைஞன், அவனின் குடும்பத்தினர் பாதுகாப்புக் கருதி இளைஞனின் பெயர், கொண்டு செல்லப்பட்ட இடம், சிகிச்சையளிக்கப்பட்ட இடங்கள் போன்ற விபரங்களைத் தவிர்துள்ளோம்.
இப்படியான சித்திரவதைகள் இக் கும்பலினால் மட்டுமல்ல இங்குள்ள அனைத்துப் பாசிச இயக்கங்களினாலும் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தப் பாசிசவாதிகளின் மிருகத்தனங்களுக்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கொரூர நிலையைப் புரிந்து கொண்டு இவற்றுக் கெதிராகச் செயற்பட வேண்டுமென மனிதாபிமானிகள் அனைவரையும் கேட்கிறோம்.
இலங்கையிலிருந்து.....
- நமது நிருபர்கள் -
நன்றி:- தூண்டில் 23 (1989).
(பக்கங்கள் 2-3-4 தொடச்சி 10)