Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!

  • PDF

அவர்கள்  வண்டிகளில் வந்து இறங்கினார்கள். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறி ஓடிய மக்களில் 12 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

 

 

 

அவர்கள் படகுகளில் வந்தனர். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறிய ஓடிய மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களில் ஒன்று நடந்தது ஒரிஸ்ஸாவின் கலிங்கா நகர். ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் நிறைந்த நிலங்களை போஸ்கோ என்ற பன்னாட்டு இரும்பு உருக்கு ஆலைக்கு கொடுப்பதை எதிர்த்துப் போராடிய கலிங்கா நகர் மக்கள் மீது காக்கி சீருடை அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

இரண்டாவது சம்பவம் நவம்பர் 26 மும்பை ரயில் நிலையத்தில் பல வண்ண ஆடைகள் அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

தற்போது, 11/26 இந்தியாவின் ஊடக-அரசியல் திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டதை சில வாரங்களாகப் பார்க்கிறோம்.
நவம்பர் 26 ன் போது அந்த பக்கமாக குப்பை பெருக்கிக் கொண்டிருந்தவர் முதற்கொண்டு பேட்டியெடுத்து போட்டு அமளி கிளப்பிக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸின் பினாமி தொலைக்காட்சியான NDTVயினர்.

'மக்கள் பாதுகாப்பாக இல்லை'
'மும்பை மக்கள் கோபத்தில் உள்ளனர்'

இப்படி மக்களுக்கே தெரியாதவற்றையெல்லாம் கண்டுபிடித்து சுய அரிப்பை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். நவ 26 அன்று, மும்பை ரயில் நிலையத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒரு சடங்கு போல காட்டி முகம் திருப்பிக் கொண்டன இந்த ஊடகங்கள். ஆனால், இதே நேரத்தில் தமது வர்க்கத்தினர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டலைத்தான் முழுவதும் தொலைக்காட்சியில் ஒலி ஒளி பரப்பினர். மக்களும் சரி, மும்பை ரயில் நிலையமும் சரி நவம்பர் 26க்கு அடுத்த நாட்களிலேயே சகஜ நிலைக்கு திரும்பி விட்டிருந்தனர் எனும் போது, இன்றைக்கு ஒரு வருடம் கழித்து அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், இதே நேரத்தில் காக்கி உடை பயங்கரவாதிகளையும், அவர்களை ஏவிவிட்ட கதர், காவி, சிவப்பு ஆடை அரசியல்வாதி-பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் எல்லை கடந்த பயங்கரவாத பன்னாட்டு கம்பனிகளையும் எதிர்த்து இன்று வரை கலிங்காநகர், நந்திகிராம், லால்கர் என மக்கள் போராடி வருகிறார்கள். அது குறித்து இந்த ஊடகங்கள் வாய் திறந்து பேசுவதில்லை.

பொய்யான உணர்வுகளை ஊதிப் பெருக்கி உண்மை என நிறுவுவதும், அன்றாட வழமையாகிப் போன ஒடுக்குமுறைகளை இல்லாதவொன்றாக சித்தரிக்க எண்ணி மறைப்பதும்தான் உலகமய காலகட்டத்தின் ஊடக தர்மமாகிப்(வியாபாரம், சுய அரசியல்) போனது.

நவம்பர் 26ன் நாய'கரா'க, பா. சிதம்பரத்தை நடுநாய'கமா'க நிறுத்தி(உட்கார) வைத்து சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் 'இந்தியா அண்டர் அட்டாக்' என்ற பொய்யான வருவித்துக் கொண்ட உணர்வுடன் கேள்விகளை விளாசிக் கொண்டிருந்தனர் NDTVயில். அது பார்ப்பதற்கு மூல வியாதி வந்தவனின் முக்கிய அவஸ்தைகளை எனது மனத்திரையில் விரித்தது.

என்னவொரு பதைபதைப்பு, ஆக்ரோசம்? சல்வாஜூடம் என்ற கூலிப் படையின் மூலம் ஒரு மாநிலமே எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்காகி பல நூறு பேர்களின் உயிரையும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் கபளீகரம் செய்து வருவது குறித்து இந்த ஆவேசமும், ஆக்ரோசமும் இவர்களுக்கு வருவதில்லையே?

இதைத்தான், இந்தியாவின் இதயத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தனது கட்டுரையிலும் அருந்ததிராய் எழுதியிருந்தார். (The Heart Of India Is Under Attack, By Arundhati Roy - 31 October, 2009, Guardian.co.uk.) இந்தியா அண்டர் அட்டாக் என்பதை விடுங்கள், இந்தியாவின் இதயமே அட்டாக் ஆகி உள்ளதே என்ன செய்யப் போகிறீர்கள் என்று எவனும் கேள்வி கேட்கவில்லை.

நவ 26 எனது உணர்ச்சிகளை முடக்கிப் போட்டதாக சொல்கிறார் தெண்டுல்கர். இன்றைய நிலவரப்படி இந்தியாவின் தலை சிறந்த தேச பக்தராக முன்னிறுத்தப்படுபவர் இவர்தான். ஆயினும் இவரால் மும்பை தாக்குதல்களுக்கு மட்டும்தான் இவ்வாறு முடங்கியிருக்க முடிந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் - சட்டீஸ்கர், கர்நாடகா, மஹாராட்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பீஹார் - பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களுக்காகவும், தமது கொழுத்த லாப வேட்டைக்காகவும் நடத்தி வரும் அரசு பயங்கரவாத தாக்குதல்கள் இவர்களை பாதிக்கவில்லை. பாதிக்கப் போவதுமில்லை.


நவம்பர் 26 தாக்குதலின் போது கூட தெளிவாக தாஜ் ஹோட்டலை கட்டியழுதவர்கள், இன்றுவரை அழுது கொண்டிருப்பவர்கள்தான் இவர்கள். அவர்கள் யார் என்பதில் அவர்கள் வெகு தெளிவாக உள்ளனர்.

அப்படியென்றால் நாம் யார்? எது தேச பக்தி? எது எல்லை தாண்டிய பயங்கரவாதம்? எனது இந்தியா எது? எந்த இந்தியா யாரால் தாக்கப்படுகிறது? இந்த கேள்விகளில் அடங்கியுள்ளது யார் நான் என்பதற்கான பதில்கள். விடை தெரியும் போது மிகப் பெரும் உள்நாட்டு அபாயமாக நீங்களே சித்தரிக்கப்படும் அபாயமும் நிகழலாம்.

அசுரன்

Last Updated on Thursday, 26 November 2009 16:17