Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

  • PDF

வெறிநாய் போலீசை ஏவிவிட்டு
மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு!

கடற்கரை அழகைப் பதம்பார்க்கும்
போலீசின் கதை நமக்குத் தெரியாதா?

காற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை
அறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால்
அவன் மஃப்டியில் இருக்கும் போலீசு!

கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை
பாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால்
அவன் டூட்டியில் இருக்கும் போலீசு!

உழைக்கும் மக்களின் அனுபவத்தில்
சமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் கடற்கரையில் குவித்து
’அழகை’ பாதுகாக்குதாம் அரசு! எதற்கு?

கொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க…
ஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க…
இந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வரும் நாயும்
கொஞ்ச தூரம் நடந்தாலே இரைக்க… வழியில் குறுக்கிட்டு
இடையூறாய் இருக்குதாம்
குப்பத்துப் பிள்ளைகள் விளையாடும் கிரிக்கெட்டு!
விளையாடும் இடத்தில் உனக்கென்ன வேலை?
வேறு இடத்துக்கு நடையைக் கட்டு

மெரினா: விளையாட்டை வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!நடைபழக இடமா இல்லை? போய் கோவிலைச் சுற்று.. இல்லை,
கோட்டையைச் சுற்று! வண்டலூர் பூங்காவில் போய் வசதியாய் நட, கிட!
மீனவர் வளர்த்த கடற்கரையிது, ஒண்ட வந்த பிடாரிகளா நமது உரிமைகளைப் பறிப்பது?

ஏழைகளுக்கு எதையும் மிச்சம் வைக்காமல் தின்று தீர்ப்பது..
ஏறிய தொப்பையை இறக்கி வைக்கவும்..
எங்கள் இடத்தையா நடந்து தீர்ப்பது?
கொஞ்சம் பூங்காவா கொழுப்பர்களுக்கு.. நடைபாதை பூங்கா எத்தனையோ!

அசதியாய் உழைக்கும் மக்கள் இளைப்பாற போனாலும்.. அங்கேயும்
குறுக்கே வந்து பூங்காவை சொந்தம் கொண்டாடும் உங்கள் தொந்தியை விட
எங்கள் அயோத்திக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர் குப்பத்துப் பிள்ளைகள்
விளையாடும் பந்து என்ன நகரின் அழகுக்கு ஆபத்தா?

பணக்கார கும்பலுக்கு கடற்கரையை பட்டா போட்டது பத்தாதா?
கோல்டன் பீச் என்ன வி.ஜி.பி. பெத்து எடுத்ததா? அரசு கொட்டிக் கொடுத்ததா!
கிழக்கு கடற்கரை  ரிசார்டுகள்… கேவலமான நடத்தைகளுக்கு
நீங்கள் கடல் கொண்ட ’கொள்ளை அழகு’ போதாதா!
மூச்சடக்கி முத்தெடுத்து சத்தான மீனெடுத்து சகலருக்கும் கொடுத்து
கடல் சீற்றம், சூறாவளி, சுனாமியில் உறவுகளை பலிகொடுத்து
மீண்டும் கடல்காக்கும் மீனவருக்கே கடற்கரையில் முழு உரிமை உண்டு!

விளையாடத்தடை என்பது வெறும் சாக்கு… படிப்படியாய்
உழைக்கும் மக்கள், மீனவரின் பாரம்பரிய உரிமையை அழிப்பதே அரசின் உள்நோக்கு!

’’பாருங்கள்.. பலகோடியில் அழகுபடுத்தி பசும்புற்களை
உங்கள் பார்வைக்காக வைக்கிறோம்..
அதில் பந்து விழுந்தால் வீணாகாதா?’’ எனப் பசப்புகிற அரசுதான்

பன்னாட்டு தண்ணீர் கம்பெனிகளையும், கார் கம்பெனிகளையும் இறக்கிவிட்டு
இந்நாட்டு பச்சைவயல்களையெல்லாம் கருக்கிவிட்டு
கடற்கரையின் செயற்கைப் புல்லுக்கு இரக்கப்படுகிறதாம்..
அரசாங்கப் பொய்களின் அழுத்தம் தாங்காமல் காறித்துப்புது கடல்

கட்டுமரங்களை உடைத்து, கண்ட துண்டமாய் வலைகளை அறுத்து
இறால்களை கொள்ளையடித்து, மீனவர் கையும் காலையும் உடைத்து
நட்டநடுக் கடலில் சுட்டுத் தள்ளுது சிங்களக் கடற்படை!
கட்டுமரங்களை நகர்த்தச் சொல்லி, காயும் வலைகளை அகற்றச் சொல்லி
மீனவப் பிள்ளைகள் விளையாட்டை நிறுத்தச் சொல்லி
கரையில் நெட்டித் தள்ளுது அரசின் கொலைப்படை ! அழகின் பயங்கரம் பார்த்தாயா!

உழைக்கும் மக்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
கரையிலும், கடலிலும் அழகேது?
இலக்கியமெங்கும் நெய்தல் நிலத்தின் கருப்பொருளும், உரிப்பொருளும்
பரதவர் வாழ்வின் பரம்பரை அழகை, உரிமையைச் சொல்லும்!

திமிறும் கடலை இரைக்க வைத்து
உப்புக் காற்றை உலர வைத்து
தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து
களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி
கட்டுமரங்கள் முன்னேறும்.
பரதவர் உழைப்புக்கு
ஈடுகொடுக்க முடியாமல்
நுரை தள்ளும் கடல்புறத்தைக்
காணும் யார்க்கும்
அது வலைகளில் பின்னிய கவிதைகள்!

மீண்டும் மீண்டும் விழிகளை ஆழம்பார்த்து
வெறுங்காலில் மணல் நடந்து
சளைக்காமல் வந்து வந்து கேட்கும்
சுண்டல் விற்கும் பையனின் சுறுசுறுப்பின் அழகைப் பார்த்து
கூசிப் பின்வாங்கும் கடல்.
கணப்பொழுதில் பத்து இருபது பலூன்களை ஊதி
திரையில் பொருத்தும் பெண் உழைப்பாளியின்
பெரும்மூச்சின் வேகம்பார்த்து வியந்து விசிலடிக்கும் கடல்காற்று

அருமைக் குழந்தைகள் குலுங்கிச் சிரிக்க
அலையோடு விளையாடி மக்கள் அங்குமிங்கும் ஓட
யார்மீதும் மோதாமல் அந்த உழைப்பாளிச் சிறுவன்
குதிரையைச் செலுத்தும் அழகின் லாவகம் பார்த்து
கடல்நண்டு உடல் சிலிர்க்கும்

வறுகடலை சட்டியை ஒரு தட்டுதட்டி
கடலைவண்டிக்காரர் எழுப்பும் கடற்கரை ஓசை..
ஈரமணலோரம் கடலின் இரைச்சலைத் தாண்டி
நம் இதயத்தை இசைக்கும் புல்லாங்குழல் வியாபாரியின் இசை..

இன்னும் எத்தனையோ.. உழைப்பின் ஓசைகளால்
மெருகேறிய மெரினாவின் அழகு

மெல்ல மெல்ல உழைப்பாளர் ஓசைகளையும்
உழைக்கும் மீனவர் உரிமைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு
அங்கே உலகமயத்தின் ’கண்ணைப் பறிக்கும் அழகை’
கட்டியெழுப்பப் போகிறதாம் அரசு!

வாசலில் உழைப்பாளர் சிலை
உள்ளுக்குள் உழைக்கும் வர்க்கத்துக்குத் தடை
மெரினா கடற்கரை ’’உருவாக்கிய வர்க்கத்திற்கா!
பணக்கார உதவாக்கரை வர்க்கத்திற்கா?’’

இது விளையாட்டு விசயமல்ல.. விட்டுவிடாதே
விளையாட்டை வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!

-          துரை. சண்முகம்

Last Updated on Tuesday, 10 November 2009 08:23