Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் எமது "சந்திப்பு வறுமை"யும் அச்சுவலை(NGO)ச்சந்திப்பும்

எமது "சந்திப்பு வறுமை"யும் அச்சுவலை(NGO)ச்சந்திப்பும்

  • PDF

 இன்றைக்குச சாந்தி சச்சிதானந்தம் தவிசாளராக இருக்கும் விழுது நிறுவனத்தின் வெளியீடான இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அச்சு ஊடகங்களும் வலைப்பதிவாளர்களும் சந்திப்பதற்கென ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "அச்சுவலைச்சந்திப்பு"க்கு போகக்கிடைத்தது.

எந்தவிதமான நிகழ்ச்சிநிரலும் அழைப்பிதழோடு எமக்கு அறியத்தரப்பட்டிருக்கவில்லை.

இதற்குமுன் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்துமுடிந்த பதிவர் சந்திப்புத் தந்த உற்சாகத்தில் தான் உண்மையிலேயே இந்தச்சந்திப்புக்கு ஆர்வத்துடன் நான் போனேன். பலரும் அப்படித்தான் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அச்சூடகங்களும் ஒலி ஒளி ஊடகங்களும் வலைப்பதிவர்களும் சந்தித்து உரையாடுவதற்கான ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றினை நிகழ்த்தி அதனூடாகப் புரிந்துணர்வையும் நட்புறவுகளையும் உருவாக்கிக்கொள்வதற்கான கூட்டம் ஒன்று தேவை என்பது மறுக்க முடியாதது.


அது மிகச்சிறப்பான எண்ணக்கருவும் கூட.

(நேர்மையீனங்கள் எப்போதும் மிகச்சிறப்பான எண்ணக்கருக்களையே தமது 'போஸ்டர்களில்' எழுதிக்கொள்கின்றன.)

பொதுவாக எல்லாரும் அறிவதும் பொதுவாக அங்கீகாரம் பெற்றிருப்பதும் அச்சு ஊடகக்காரர்களும், அதன் எழுத்தாளர்களும் ஒலி ஒளி ஊடகக்காரர்களும் தான்.

இப்போது புதிய தலைமுறையாய் வேகத்தோடு எழுந்துவரும் இணைய எழுத்தாளர்கள் இந்த அங்கீகாரத்தை வெகுமக்களிடம் இன்னும் பெறவில்லை.

இங்கே மரபான ஊடகங்களுக்கும் மரபான எழுத்தாளர்களுக்கும் இணைய ஊடகங்களையும் எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி இணைய எழுத்தாளர்களுக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக்கொடுப்பதே இந்தச்சந்திப்பின் நோக்கமாக இந்த "போஸ்டரை" பார்த்ததும் விளங்கிக்கொள்ளப்படமுடியும்.

ஆனால் நடந்தது தலைகீழானதே.

அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் நேரிலும் இணையம் மூலமும் உரையாற்ற, பாவப்பட்ட வலைப்பதிவர்கள் தமது பெருமை அறியாது அங்குமிங்கும் நின்றுகொண்டு உரைகேட்டுக்கொண்டிருந்தார்கள்.

தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்ச்சிக்கு நேரமாகி நான் வெளியேறிப்போகும் வரை நடந்தது இதுதான்.

அதற்குப்பிறகும் இதுதான் நடந்ததென்று கேள்விப்பட்டேன்.

மொத்தத்தில் இந்தச்சந்திப்பின் வெளிப்படையாய்த்தெரிந்த தன்மையும் நோக்கமும் என்ன என்றால், வலைப்பதிவர்களைக்கூப்பிட்டு "தண்ணி" கொடுத்துக் குளிர்வித்து ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற மீடியாக்காரர்களும் எழுத்தாளர்களும் விழுது அமைப்பும் தம்மை வலைப்பதிவர்கள் அறியாமலிருந்துவிடும் அபாயத்தை அஞ்சித் தம்மைத்தாமே அறிமுகம் செய்து இணைய எழுத்து உலகத்திலும் தமக்கான அங்கீகாரத்தை கோரிக்கொண்டனர் என்பதுதான்.

மீடியாவிலும் வலைப்பதிவிலுமாக இருக்கும் நண்பர்கள் இதற்காக நன்றாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டனர்.


இந்தச்சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டதன் மற்றுமொரு வெளிப்படையாய்த் தெரியும் முக்கிய நோக்கம் "இருக்கிறம்" சஞ்சிகை தன்னை "இணையப்பிரபலம் பெற்ற" இதழாக மாற்றிக்கொள்ளும் சந்தைப்படுத்தல் தேவை.

அரசியல்வாதிகளும் பெரியபெரிய நிறுவனங்களும் இதே பாணியிலான சந்திப்புக்களை ஒழுங்குசெய்து நிறையத் "தண்ணி" பாய்ச்சி மீடியாக்காரர்களை குளிர்வித்து தமது "மீடியா நலன்களைக்" காப்பாற்றிக்கொள்ளும் உத்தியின் இன்னொருவடிவம்தான் இது.

முன்னே சொன்ன பாணியை நன்கு கற்றறிந்துவைத்திருக்கும் Corporate NGO வும் மீடியாக்காரர்களும் புது வேகத்தோடு சுதந்திரமாக எழுதத்தலைப்படும் வலைப்பதிவர்களைக் குளிர்வித்திருக்கிறார்கள்.

இங்கே வலைப்பதிவர்கள் ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக்கொண்டு வந்துவிட்டது. இன்றைக்கு இணைய எழுத்தாளர்களுக்கு ஊடக அங்கீகாரம் கிடைப்பதை விட ஊடகக்காரர்களுக்கு இணைய அங்கீகாரம் கிடைப்பதே அவசியமாக ஆகிக்கொண்டு வருகிறது.

இணைய வலையமைப்புக்களில் தம் பெயரைப்பேணிக்கொள்ளாமல் இன்று ஊடகங்கள் நகரங்களில் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது. முக்கியமாக அச்சு ஊடகங்கள்.

இதே இருக்கிறம் சஞ்சிகை தன்னை மிகவும் சீரிய வழியில் இணையப்பிரபலம் பெற்ற சஞ்சிகையாக மாற்றிக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருந்தது. இருக்கிறது. அச்சஞ்சிகை மீதான் அந்த நம்பிக்கயே அதன் வளர்ச்சி குறித்த என் இது வரை கால அக்கறைக்குக் காரணமாக அமைந்தது. இந்த விமர்சனம் கூட அந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்கானதல்ல.

தன்னை மலினமான வழிகளில் சந்தைப்படுத்தும் உத்திகளிலிருந்து இனியாகிலும் அது காத்துக்கொள்ள வேண்டும்.


இலங்கை வலைப்பதிவர்களான எங்களுக்குப் பெரிய "சந்திப்பு வறுமை" இருக்கிறது. சந்திக்கவும் கலந்துரையாடவும் வாய்ப்பில்லாத வறுமை.

வலைப்பதிவர் சந்திப்பு என்ற மந்திர வார்த்தையால் இலகுவாக எமது கூட்டத்தைச்சேர்த்துவிட முடிகிறது.

விழுது என்கிற பணக்கார NGO இந்தச் சந்திப்பு வறுமையை நன்கு பயன்படுத்திக்கொண்டுள்ளது. தனது அமைப்புக்குணமான "எல்லாவற்றையும் தனக்குள் இழுக்கும்" உத்தியை வலைப்பதிவர்களிடமும் காண்பிக்க முயன்றிருக்கிறது.

ஏதோ தாம் வலைப்பதிவர்களுக்கு நன்மைசெய்து விட்டதாக அவர்கள் பிரசாரம் செய்யலாம். ஆனால் அங்கு நடந்த அனைத்தும் எமக்கு உண்மை சொல்லும்.

அத்தனை வலைப்பதிவாளர்களையும் வைத்துக்கொண்டு சாந்தியும், ஊடக, அச்சு ஜாம்பவான்களும் அரைத்த அரைப்பில் யார் யாரைப் பயன்படுத்தியது என்பது தெளிவாகவே தெரியும்.

இருக்கிறம் பதாகைகள் தொங்கின என்பதற்காக மிக இலகுவாக இருக்கிறம் சஞ்சிகைமீது எல்லாக்குற்றத்தையும் போட்டுவிட்டுப்போவோமானால், அடிப்படையான தவற்றை நாம் தவறவிடும் அபாயம் நேரும்.

வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிவராக சஞ்சித் சிக்கவைக்கப்பட்டுள்ளார். விழுது இங்கே பதில் சொல்லப்போவதில்லை. சொன்னாலும் இந்தச்சந்திப்பு முழுக்க முழுக்க இருக்கிறம் Team ஒழுங்குபடுத்தியது. இதற்கும் விழுதுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை என்பார்கள்.

இருக்கிறம் மீதான காழ்ப்புணர்வினால் பொறாமையினால் இப்படியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக யாரும் சொல்லவெளிக்கிடலாம். அப்படி ஒரு பொறாமையும் காழ்ப்புணர்வும் இருக்குமென்றால், இந்தக்கூட்டத்துக்கு அவ்வளவு ஆர்வத்தோடு போய் நான் கலந்துகொண்டும் இருக்கத்தேவையில்லை; இருக்கிறத்தில் எழுதுவதை தேவையானதாகக் கருதவும் வேண்டியதில்லை.

அடிப்படைப்பிரச்சினை "விழுது" அமைப்பில் இருக்கிறது. அதன் NGO தன்மையும் Corporate தன்மையும் இயற்கையாய் இணையும் புள்ளியில் இருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டாமல் இன்றைய சந்திப்பினை விமர்சிக்க என்னால் முடியாது.


கூட்டத்தில் இணையம் வழியாக தயானந்தா பேசினார். "என் பேச்சு முடியும் போது அதைக்கேட்கும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ தெரியாது, அதற்கான ஆயத்தங்களை செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்"

எனக்கிது தசாவதாரம் படத்தில் வின்சென்ட் பூவாரகனைக் கூட்டிக்கொண்டுபோய் பீ. வாசு "உன் தோழர்கள் என்ன செய்கிறார்கள் பார்" என்று தொலைக்காட்சித்திரையில் காட்டும் காட்சியை நினைவுபடுத்தியது.

ஆட்கள் குடித்துவிட்டு சத்தம் போடத்தொடங்கியபோது அது பேசிக்கொண்டிருந்த சுடரொளி வித்தியாதரனுக்கு இடைஞ்சலாய்ப்போய்விட்டது. உடனே சாந்தி வந்து குடித்துவிட்டுச்சத்தம் போடுபவர்களை நோக்கி டீச்சர் கணக்கில் வாயில் சுட்டு விரல் வைத்து உஷ்... எல்லாம் சொன்னபோது படு கேவலமாய் இருந்தது.

நிகழ்ச்சி சீரியசாய் இருக்க வேண்டுமானால் யாராவது மூளையை போதையிலாழ்த்தும் பானங்கள் குடிக்கக்கொடுப்பார்களா? கொடுத்துவிட்டு என்ன உஷ்? உங்கள் கூட்டத்தின் ஒரு பிரதிநிதி பேசும்போது இடைஞ்சல் வந்ததாலா?

இன்றைக்கு ஒரு முழுமதி நாள். பவுத்தத்தின் அடிப்படையில் வந்த ஒரு ஒழுங்காக இன்று மதுபானம் விற்பது தடைசெய்யப்பட்ட நாள். நாட்டின் சட்டம் அது. இன்றைக்கு மதுபானம் வழங்கிக் கொண்டாடும் உங்கள் சட்டமறுப்புப் புரட்சியையோ, மதுபானம் என்றாலே கேவலமாகக்கருதும் மரபுச்சிந்தனைகளைத்தகர்த்தெறியும் உங்கள் கட்டுடைப்பையோ நான் இங்கே பிழை என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.

இந்த மதுபான விருந்தில் நீங்கள் காட்டியுள்ள உங்கள் முகம் எப்படியானது என்பதை மட்டும் சொல்கிறேன்.

இலங்கையில் பெரும்பாலான மின்னியல் ஊடகக்காரர்கள் "பிரபல" மனிதர்கள். பொதுவாகத் தம்மைச்சுற்றி தாமே ஒளிவட்டங்கள் கட்டிக்கொண்டு உலா வருபவர்கள். பெருவணிக நிறுவனங்களுக்கும் காசுக்காரர்களுக்கும் மிகவும் வேண்டியவர்கள். அதனால் இவர்களைப்பிரபலமாயே வைத்திருக்க காசுக்காரர்களும் விரும்புகிறார்கள். இந்தக்கூட்டத்தின் சடங்குகளில் ஒன்றுதான் இந்த மதுவிருந்து. Corporate NGO க்களினது சடங்கும்தான் இது.

இந்தக்கூட்டத்துக்குள் இப்போது புதிதாக வேகத்தோடு எழும் இணையத்தலைமுறையை கூட்டிக்கொண்டு வந்து உங்கள் ஒளிவட்டங்களைக் காட்டி இருக்கிறீர்கள். உங்கள் ஒளிவட்டங்களுக்குப்பின்னால் எடுபட்டு இழுபடுத்திரியும் சில வலைப்பதிவர்களை இதற்கு நன்கு பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

என்ன, மழை வந்து உங்கள் ஆர்ப்பாட்டங்களுக்குக் கொஞ்சமாவது ஆப்பு வைத்துவிட்டது.

இலங்கை வலைப்பதிவர்களே,

உங்களை நசித்து அப்படியே வைத்துக்கொண்டு இந்த பகட்டுக் கலாசாரத்துக்குள் மூழ்கவைத்து நன்கு பயன்படுத்திக்கொள்ளும் போக்கு தொடங்கிவிட்டது.

வலைபதியும் பலருக்கு இது உவப்பானதே. அவர்கள் அவர்கள் விருப்பப்படியே இருக்கட்டும்.
ஏனையவகள், சந்திப்பு வறுமை தொடக்கம், என்னைப்போன்ற ஆர்வக்கோளாறு பிரச்சினை வரையான காரணங்களால் இனியும் ஏமாற்றப்படக்கூடாது.

இன்று உங்களுக்குப்பின்னால், உங்களைத்தேடி வர வேண்டிய நிலையில் ஊடகங்கள் இருக்கின்றன. உங்கள் பெருமையை மறுதலையாக விளங்கிக்கொள்ள வேண்டாம்.


நீங்கள் ஒழுங்குபடுத்திய முதல் பதிவர்சந்திப்பு ஒரு சாதனை. பெருவெற்றி. இப்போது அந்த வெற்றி அடிவாங்கி விழுது அலுவலக முன்றலில் அவமானப்பட்டுக்கிடக்கிறது.

இணையத்தமிழ் சூழலில் இணைந்திருக்கிற நாங்கள், பயனுள்ள வழிகளில் அடுத்தடுத்து என்ன செய்ய முடியும் என்பது பற்றி, எப்படி உழைப்பைச்செலுத்த முடியும் என்பதுபற்றி சிந்திக்க வேண்டும்.

மற்றவருக்குப்பயன்படும்படி ஏதாவது கூடிச்செய்ய வெளிக்கிட வேண்டும். அவ்வாறு கூடிச்செய்யும்போது ஆயிரம் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்குமான அவசியம் வரும்.

மறுபடி மறுபடி இப்படிக்கூடிச் 'சில' மீடியாப் பன்னாடைகளின் ஒளிவட்டங்களுக்கு ஆலவட்டம் பிடித்து அண்ணாந்து பார்த்துக்கொண்டு பம்பலடித்து தண்ணியடிப்பதை மட்டும்தான் நாம் செய்து உய்யப்போகிறோம் என்பவர்கள் இருக்க, பயனுள்ள வழியில் கூட்டுழைப்பினைச்செலுத்தி பயனுள்ள வேலைகளை இணையத்தில் செய்கிற தேவைக்காக கூடிக்கலந்துரையாடும் ஆரோக்கியமான வலைப்பதிவர் குழுவொன்று மேலெழுந்து வரத்தான் போகிறது.

அந்தச் சமூக அக்கறை கொண்ட வலைப்பதிவர்களை வாழ்த்தி நிற்கிறேன்.



==வேறு==

(கொஞ்சம் திறந்த மனத்தோடு யோசிப்போமே என்று NGO க்களின் நல்ல பக்கங்கள் பற்றி சிந்திக்கத்தலைப்படும் போதெல்லாம் ஏதாவதொரு NGO என்னை அழைத்து, அப்படியல்ல மகனே சும்மா ஏமாறாதே, நாங்கள் இப்படித்தான் இருப்போம்; எம்மால் இப்படித்தான் இருக்கமுடியும் என்று போதித்து அனுப்புகிறது)

நேற்றிரவு போட்ட என்னுடைய மூன்று tweets:

இருக்கிறம் சஞ்சிகையும் சாந்தி சச்சிதானந்தமும் நடத்திய இன்றைய #அச்சுவலைச்சந்திப்பு குறித்து எழுதும் நோக்கம் இதுவரை இல்லை

 

#அச்சுவலைச்சந்திப்பு பற்றி எழுதத்தயங்குவதற்கு தனிப்பட்ட நட்புக்களும், அதற்கான சுயதணிக்கைகளும் காரணமாக அமைகின்றதை நினைத்து வெட்கப்படுகிறேன்

 

எப்படி இவ்வளவு பலவீனனாய் ஆகிப்போனேன்? சரியெனப்பட்டதை எந்த உறவையும் கணக்கெடுக்காமல் துணிந்து உரக்கச்சொல்லும் நேர்மை நாளை காலை கிட்டுமா?

http://mauran.blogspot.com/2009/11/ngo.html

Last Updated on Tuesday, 03 November 2009 07:35