Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

  • PDF

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர்களுக்கான விருது போட்டிகளை தமிழ்மணம் அறிவித்திருக்கிறது. கடந்த முறை முதல் சுற்றில் பதிவர்கள் மட்டும் வாக்களித்து சிறந்த இடுகைகளை எழுதிய பதிவர்களை தெரிவு செய்தார்கள். இரண்டாம் சுற்றில் பதிவர்கள் அல்லாத பொதுவாசகர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு, ஈழத்தின் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக ஈடேறவில்லை. இறுதியில் பதிவர்களின் வாக்களிப்பை வைத்தே விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வினவு துவங்குவதற்கு முன்னர் பல தோழர்கள் தமிழ்மணம் பற்றியும், படிக்கவேண்டிய பதிவர்கள் மற்றும்  தோழர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதன்முறையாக தமிழ்மணத்தை பார்த்த போது பிரமிப்பாக – ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை பார்த்தது போல – இருந்தது. பொதுவில் முற்போக்கு விசயங்களை எழுதும் பதிவர்களை மட்டும் படித்து விட்டு செல்வது என்ற எல்லையைத் தாண்டி பதிவுலகின் பலவிதமான பரிமாணங்களை தமிழ்மணத்தின் மூலமே அறிந்து கொண்டோம். ஆன்மீகம், பகுத்தறிவு, தமிழ்தேசியம், தி.மு.க, அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ், கவிதை, சிறுகதை, செய்திகள், பரபரப்பு செய்திகள், கம்யூனிசம், ரசனையாளர்கள், சினிமா பதிவர்கள், ஈழம், சொந்த வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை அனுபவம், பெண்கள், உபதேசங்கள், தொழில்நுட்பம், முக்கியமாக நமது மொக்கைகள்…  என வலை உலகு முழுவதையும் தமிழ்மணம் பிரதிபலித்தது.

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!தமிழ்மணத்தின் செயல்முறையைப் புரிந்து கொள்ளவே சிலமாதங்கள் ஆகின. பலநாட்கள் வாக்களிக்கும் பட்டை ஏன்,எதற்கு என்பதே தெரியாது. தமிழ் தட்டச்சு தெரிந்திருந்தாலும் பின்னூட்டம் போடும் முறை கூட எமக்குத்தெரிந்திருக்கவில்லை. வினவை ஆரம்பித்தவுடன்,  கில்லி சொந்த முறையில் பலவற்றை அறிந்து கொண்டு கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் வேர்ட்பிரஸ்ஸில் தமிழ்மணத்தின் வாக்களிக்கும் பட்டையை சேர்க்க முடியாது என்பதால் தனி உரல் கொடுத்து வாக்களிக்கும் முறையை, எதிர் வாக்குகளுக்கும் சேர்த்து அவரே அறிமுகம் செய்தார். பின்பு பல வேர்ட்பிரஸ் பதிவர்களும் பிளாக்கர்களும் கூட அதை பயன்படுத்திக் கொண்டனர்.

இப்படித்தான் சூடான இடுகை, வாசகர்பரிந்துரை, மறுமொழி திரட்டி எல்லாம் அறிந்தோம். தமிழ்மணத்தில் இடுகையை சேர்த்து விட்டு முகப்பில் பெயர் வருவதை பார்த்து குழந்தைத்தனமாக உற்சாகம் அடைந்திருக்கிறோம். இது பல பதிவர்களுக்கும் பொருந்தக்கூடியதே, குறிப்பாக புதிய பதிவர்களுக்கு. புதிய பதிவர்களுக்கு வாசகர்கள், பதிவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நுழைவாயிலாக தமிழ்மணமே விளங்குகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உண்மைகளை பேசுவதற்கு வாய்ப்பளிக்கும் இணையம் என்ற நவீன தொழில்நுட்பத்தில், தமிழ் உலகைப் பொறுத்தவரை தமிழ்மணமே முன்னணியில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஈழப் போர் உச்சத்தில் இருந்த மாதங்களில், போரை நிறுத்த வேண்டுமென்ற கருத்தை பதிவர்கள் மூலம் தமிழ் இணைய உலகம் முழுதும் கொண்டு சென்றதை தமிழ்மணத்தின் சாதனையாக சொல்லலாம்.

எதிர்காலத்தில்  ஊடகமுதலாளிகளின் பிடிக்குத் தப்பி இந்த ஊடகம் எஞ்சி  நிற்குமா? தெரியவில்லை.  பயோ மெட்ரிக் கார்டுகளில் மக்களின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்கும் நந்தன் நீலேகனிகள், பதிவர்களின் ரேகைப்பதிவையும் கேட்கக் கூடும். அந்த வகையில் மூச்சு விடக் கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில், தமிழ்மணத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அங்கீகரிக்கவேண்டும்.

பொதுவில் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழு முற்போக்கு கருத்துக்களுக்கு (அவர்களது பின்னூட்டங்கள், மற்றும் பதிவுகளை வைத்து) ஆதரவாக இருப்பது தமிழ்பதிவுலகிற்கு மிகப்பெரும் வலிமை. பதிவுலகில் கணிசமான அளவில் இருக்கும் பிற்போக்கு முகாமிற்கு இது உவப்பானதில்லை.  இப்படி ஒரு பின்னணியும் அனுபவமும் கொண்ட தமிழ்மணம், பதிவுலகு எனும் புதிய ஊடகத்தை வளர்த்தெடுக்கும் கடமையினை தொடர்ந்து செய்யும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்.

நாங்கள் ‘வினவு’ துவங்கிய  காலத்தில் இருந்த பதிவர்களின் எண்ணிக்கை இப்போது ஏறக்கூறய இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள், இரண்டாயிரத்து சொச்சம் பின்னூட்டங்களை திரட்டும் அளவிற்கு தமிழ்மணம் ஒரு ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. மேலும் தமிழறிந்த எல்லா நாடுகளையும் சேர்ந்த தமிழ்மக்களை இணைக்கும் பாலமாகவும் தமிழ்மணம் விரிந்து செயல்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் வாசகர்கள் தமது சொந்த மண்ணை  தமிழ்மணம் வாயிலாகவே நுகர்கிறார்கள். அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எட்ட முடியாத புலன் இது.

விரைந்து வளரும் பதிவுலகை மேலாண்மை செய்யும் பணி மிகவும் கடினமானது என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். நிர்வாகப் பணியைச் சுமக்கிற தமிழ்மணம் குழுவினர், பதிவுலகிற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள ஏற்றுக்கொண்டுதான் நாம் செயல்படமுடியும். சிலபதிவர்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை மட்டும் வைத்து, ” இந்த கட்டுப்பாடுகள் சுதந்திரத்திற்கு எதிரானவை” என தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். நோக்கமென்று ஒன்று இருப்பவர்கள் கட்டுப்பாடு என்பதையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.  அன்றாட வாழ்க்கையில் கூட அப்படிப்பட்ட விதிமுறைகளை நாம் பற்றியொழுகியே வாழ்ந்துவருகிறோம். பதிவுலகிலும் அதை ஏற்கத்தான் வேண்டும்.

” குமதம்: பத்து ரூபாயில் ஒரு பலான அனுபவம்” என்ற கட்டுரையை தமிழ்மணத்தில் நாங்கள் இணைத்தபோது ‘பலான’ என்ற வார்த்தை வரவில்லை. மின்னஞ்சல் அனுப்பி கேட்டபோது இத்தகைய தலைப்புகள் தமிழ்மணத்தில் வராதபடி ஏற்பாடு செய்திருப்பதாக தமிழ்மணம் தெரிவித்தது. நாங்கள் வெளியிட்ட கட்டுரை  பலான வியாபாரத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் என்ற போதிலும் இந்தக் கட்டுப்பாடை ஏற்றுக்கொண்டோம். இனி தலைப்பு வைக்கும் போது இதைக் கணக்கில் கொள்வோம் என பதிலளித்தோம். இதனைக் கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அடி என தவறாக புரிந்து கொள்ளவில்லை.

பதிவர்களே படைப்பாளிகளாவும், வாசகர்களாவும் செயல்பட வாய்ப்பளிக்கும் இந்த ஊடகம் உரிய முறையில் பதிவர்களால் பயன்படுத்தப்படுகிறாதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். விசயமே இல்லாத அக்கப்போர்களே பல பதிவுகளாக வெளியிடப்படுகின்றன.அதிலும் சினிமாவைக் கலந்து எழுதும் பதிவுகளே அதிகம் படிக்கப்படுகின்றன. இணையத்தை அரட்டை அரங்கமாக மாற்றும் போக்கிற்கு எதிராகத்தான் வினவை நிறுத்துவதற்கே நாங்கள் போராடி வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம்.  சமூக அக்கறைக்குரிய விசயங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எங்களுக்குள் விதைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு வழியமைத்து கொடுத்து புதிய வாசகர்கள், பதிவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்மணம்தான்.

தமிழ்மணத்தோடு எமது பதிவை இணைப்பதைத் தவிர வேறு எந்தவகை நேரடியான தொடர்போ, அறிமுகமோ இல்லாத போதிலும், வினவு ஆரம்பித்த சில மாதங்களிலேயே நட்சத்திரப் பதிவராகும் வாய்ப்பினைப் பெற்றோம். அதன் மூலம் தமிழ்ப் பதிவுலகில் ஒரு இடத்தை எங்களுக்கு தமிழ்மணம் வழங்கியது. இத்தனைக்கும் எல்லோரையும் விமரிசனக் கண்ணோட்டத்தோடு அணுகும் எமது பார்வை, எம்மீது குத்தப்பட்ட’கம்யூனிச தீவிரவாதிகள்’ என்ற முத்திரை போன்றவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, சமூக அக்கறைக்குரிய கட்டுரைகளை வெளியிடும் பதிவர் என்ற முறையில் தமிழ்மணம் எங்களை தெரிவு செய்திருக்க கூடும். நட்சத்திரப் பதிவர்களில் பல வகையினரும் இருந்தாலும் எங்களைப் போன்றவர்களை நட்சத்திரமாக்குவதற்கு ஒரு நேர்மையும் தைரியமும் வேண்டும். அது தமிழ்மணத்திடம் நிறையவே இருக்கிறது. அந்த அஞ்சாமைக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். எங்களுக்கு முன்னால் எங்களது தோழர் அசுரனும் இப்படித்தான் நட்சத்திரமானார். அப்போது நாங்கள் பதிவுலகில் இல்லை.

சென்ற ஆண்டு  அறிவிக்கப்பட்ட தமிழ்மணம் விருது போட்டிகளிலும், சமூக அக்கறைக்குரிய அங்கீகாரம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காகவே கலந்து கொண்டு இரண்டு தலைப்புக்களில் முதலிடத்தை வென்றோம். பதிவுலகம் முற்போக்கு கருத்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது உண்மையில் மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

சென்ற ஆண்டு தமிழ்மணம் 12 தலைப்புகளில் சிறந்த முதலிரண்டு இடுகைகளை பதிவர்களின் வாக்குகளை வைத்து தெரிவு செய்தது. இந்த ஆண்டு பதிவர்கள் அல்லாத வாசகர்களும் வாக்களிக்கும் இரண்டாவது சுற்று இருக்கும் என நம்புகிறோம். இந்த முறை சிறப்பாகத்தான் உள்ளது.

விருது தொடர்பாக வினவின் ஆலோசனைகள்!

1, பன்னிரண்டு பிரிவுகளின் அதிக பட்சம் மூன்று தலைப்புகளுக்கு மட்டும் ஒரு பதிவர் போட்டியிடலாம் என்பதை ஒன்றாக குறைக்கலாம். இதன் மூலம் மொத்தம் 24 பதிவர்கள் விருதினைப் பெறுவார்கள். ஒரு பதிவரே மூன்று விருதுகளையும் பெற்றால் மற்றவர்கள் வாய்ப்புகளை இழப்பார்கள். மேலும் ஒரு பதிவர் போட்டிக்கான தனது தலைப்பை விட்டுவிட்டு பதினொரு தலைப்புகளுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல குழுக்களாக பிரிந்திருக்கும் பதிவுலகம் தெரிவு எனும் ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம்.

2. போட்டிக்கான தலைப்புக்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம். கதை, கவிதை, குறும்படம், ஆவணப்படம், கேலிச்சித்திரம், தலித் பிரச்சினைகள், பெண்கள் பிரச்சினைகள், சினிமா விமரிசனம், தமிழ் கணினி தொழில்நுட்பம், மதவெறி,  முதலியவற்றை தனித்தனி தலைப்புக்களில் வைக்கலாம். மொத்தத்தில் இருபது தலைப்புக்கள் வைத்தால் நாற்பது பதிவர்கள் விருதுகள் பெறுவார்கள். இது உற்சாகத்தின் அளவை விரிந்த அளவில் கொண்டு செல்லும். எல்லா முக்கியமான தலைப்புக்களையும் போட்டிக்கு கொண்டு வரமுடியும்.

3. ஒவ்வொரு ஆண்டும் சேரும் புதிய பதிவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக இந்த ஆண்டின் சிறந்த புதிய பதிவர் எனும் விருதினை புதிதாக ஏற்படுத்தலாம். அதற்கு அவர் எழுதிய இடுகைகளில் ஐந்து சிறந்த இடுகைகளை சமர்ப்பிக்க வேண்டும் என வைக்கலாம். இதனால் பதிவுலகின் மத்தியில் புதிய பதிவர்கள் பரவலான கவனத்தை பெறுவார்கள்.

4. அதே போல சிறந்த பெண் பதிவர் எனும் விருதினை ஏற்படுத்தி முன்னர் கூறியது போல ஐந்து இடுகைகளை சமர்ப்பிக்குமாறு வைக்கலாம். பொதுவில் பதிவுலகில் சிறுபான்மையினராகவும், தனி அணியாகவும் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், பொது அரங்கில் அவர்களுக்கென்று தனி விருதை தருவது ஆரோக்கியமாகவும் இருக்கும். புதிதாக பெண்பதிவர்கள் வருவதையும் இது ஊக்குவிக்கும். மற்றபடி மற்ற தலைப்புக்களிலும் பெண்கள் போட்டியிடலாம். அதாவது ஒரு தலைப்பு, பெண்பதிவருக்கான போட்டி என்று இரண்டு தலைப்புகளில் அவர்கள் போட்டியட வைக்கலாம். புதிய பதிவர்களுக்கும் இதே சலுகையை அளிக்கலாம்.

5. இதே போல இந்த ஆண்டின் சிறந்த பதிவர் என்ற விருதினையும் வைக்கலாம் என்றாலும் இதில் நிறைய அரசியல் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கிறது. எந்த அளவுகோலின்படி ஒருவரை சிறந்த பதிவர் என்று தெரிவு செய்வது கடினம். அந்த ஆண்டின் சிறந்த பத்து இடுகைகளை அவர் அளிக்கவேண்டுமென்று வைத்தாலும் தொழில்நுட்ப ரீதியாகவும், போட்டியை நடத்துவதற்கும் இதை பெரும் சுமையாகவும் இருக்கும் என்பதால் இதை மிகுந்த தயக்கத்தோடு சொல்கிறோம். ஏனெனில் இந்தப்பிரிவில் எல்லோரும் போட்டியிடுவார்கள் என்பதால் நிர்வகிப்பது மிகவும் சிரமம்.

6. போட்டிக்கென்று தமிழ்மணம் சென்ற ஆண்டு அறிவித்திருந்த முதல்பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.250 என்பது மிகவும் குறைவு என்று பலர் கருதுகிறார்கள். வினவு அப்படி கருதவில்லை. விருதின் மதிப்பு பணத்தை வைத்து மதிப்படிக்கூடாது என்பதால் இந்த தொகைகளே தொடரலாம் என்பது எங்கள் கோரிக்கை. அதுவும் புத்தகங்களாக அளிப்பது என்பதும் பாராட்டத்தக்க ஒன்று. இதனால் விருது என்பது அறிவை விசாலமாக்கும் நடவடிக்கைக்கு இட்டுச் செல்கிறது. பொதுவில் போட்டிகள் என்றால் அவைகளின் பணமதிப்பை வைத்து அளவிடும் யதார்த்தத்தை நாம் இப்படித்தான் மாற்ற முடியும் என்று வினவு கருதுகிறது.

7. வாய்ப்பு, வசதி, நேரம் இருக்கும் பட்சத்தில் வெற்றிபெறும் பதிவர்களின் கட்டுரைகளை தமிழ்மணத்தின் தொகுப்பில் தனிநூலாக வெளியிடலாம். இதன்மூலம் இணையமில்லாத வாசகர்களின் மத்தியில் பதிவுலகை அறிமுகம் செய்யலாம்.

8. இப்போது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிவர்கள் அதிகமிருக்கும் (என்று நினைக்கிறோம்) சென்னை மாநகரத்தில் விருது வழங்கும் விழாவினை நடத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கொரு முறை பதிவர்கள், பதிவுலகின் வாசகர்கள் சந்திப்பை சாத்தியப்படுத்தலாம்.

9. சென்றமுறை அறிவித்திருந்தது போல முதல் சுற்றில் பதிவர்களும், இரண்டாவது சுற்றில் வாசகர்களும் வாக்களிப்பதை இம்முறையும் தொடரலாம். வாக்களிப்பதில் கள்ள ஓட்டு பிரச்சினையும் இருக்கிறது. இதை தமிழ்மணம் எப்படி தொழில்நுட்பரீதியாக சமாளிக்கும் என்பது சவாலான ஒன்று. இரகசிய வாக்களிப்பை பகிரங்கமான வாக்களிப்பு என்று மாற்றினால் இதை தவிர்க்கலாமோ என்று தெரியவில்லை. ஆனால் ஜனநாயகத்தில் இரகசிய வாக்கெடுப்புதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகவே பதிவர்கள், வாசகர்களே உறுதி எடுத்துக்கொண்டால் இந்தப்பிரச்சினையை அதாவது கள்ளவோட்டுக்களை தவிர்க்கலாம்.

10.பதிவுலகத்தை மட்டும் வேலையாக வைத்திருக்கும், விசயத்தோடு எழுதும் பதிவர்களை தன்னார்வத்தொண்டர்களாக கோரிப்பெற்று நின்றுபோன பூங்கா வார இதழை மீண்டும் நடத்தலாம். இதன் மூலம் காத்திரமான கருத்துக்களை எழுதும் பதிவர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலமே தமிழ்மணம் தனது அடுத்த கட்ட வளர்ச்சியை சாத்தியப்படுத்த இயலும் என நினைக்கிறோம்.

11. பதிவர்களை இப்படி நேரம், பணம் ஒதுக்கி ஒரு குழுவாக உற்சாகப்படுத்தும் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் பதிலுக்கு என்ன விருது கொடுக்க முடியும்?

தமிழ்மணம் அறிவித்திருக்கும் விருது போட்டிகளை புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த தங்களது ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் தமிழ்மணம் குழுவினருக்கு உதவியாய் இருக்கும். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு நாமும் இத்தகைய பங்களிப்பை அளிக்க வேண்டியிருக்கிறது. 

http://www.vinavu.com/2009/11/03/tamil-manam-awards/

Last Updated on Tuesday, 03 November 2009 07:35