Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)

நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)

  • PDF

தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இன்று இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகதோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் நியாயமான உரிமைக்கான போராட்டம் குறித்தான ஆரோக்கியமான விமர்சனங்கள் எதும் எழாமலும்,இலங்கைத் தமிழரின் எதிர்காலம் குறித்துபரந்துபட்ட ஆய்வுகளுக்கும் விமர்சனங்களுக்குமான சுதந்திர தளம் எழாமையும் எதிர்காலம் குறித்த ஒரு புதியபாதைக்கு தகுந்த அடிப்படையின்மையையும் வெறுமையும் இன்னும்தொடர்கிறது.

இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் தமது கடந்த கால அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகள் குறித்து எந்தவொருவிமர்சனங்களையும் முன்வைக்காததும், தமது கடந்தகால வரலாற்று தவறுகள் குறித்து மௌனம்சாதித்து வருவதும் ஒரு ஆரோக்கியமான தளத்திற்கு எம்மை இட்டுச் செல்லாது.

 விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் இன்றைய தோல்விக்கு வெறுமனமே புலிகளைமட்டுமேகுற்றம்சாட்டிநகரும்போக்கேதொடருகிறது.இதுவும்எம்மைஎந்தவொரு நிலைக்கும் கொண்டுவந்துவிடப்போவதில்லை. கடந்த 36 ஆண்டு காலமாக போராடிய விடுதலைப்புலிகள் எமது கடந்தகாலபோராட்டத்தில் கணிசமான பங்களிப்பை செய்தவர்கள் என்ற வகையில் எமது போராட்டத்தின்பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்வதும், விமர்சனங்களுக்கான சுதந்திரதளத்தைஉருவாக்குவதும் அவர்களது வரலாற்றுக் கடமையாகும். குறிப்பாக விடுதலைப் புலிகள்சுயவிமர்சனங்களை முன்வைக்காது பரந்துபட்ட ஐக்கியத்தை வேண்டி நிற்பது என்பது அவர்களில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. விடுதலைப் புலிகள் சுயவிமர்சனத்தை முன்வைப்பது ஒன்றேஅவர்கள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன் பன்முகத் தன்மையுடன்கூடியஐக்கியத்தை கட்டியெழுப்ப உதவியாகவிருக்கும்.

tamilelaarasu-logo

விடுதலைப் புலிகளின் தோல்வியை வெறுமனமே புலிகளின் தோல்வியாக மட்டுமே கருதமுடியாது.இத் தோல்வி ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியே. தமிழ் மக்களின் மத்தியில் ஆதிக்கம்செழுத்தி வந்த தமிரசுக்கட்சி-கூட்டணி அரசியலின் தொடர்ச்சியாகவே விடுதலைப்புலிகளும்உருவாகினார்கள். விடுதலைப் புலிகள் ஒரு ஆயுதம் தாங்கிய கூட்டணியே. ஏதோவொருவகையில் ஈழத்தமிழர்கள் இத்தகையை குறுந்தேசியவாத போக்கை தமது பிரதான அரசியாலாக கொண்டிருந்தனர். மாற்றுக் கருத்தியலாக சோசலிச தத்துவார்த்த அமைப்புகளின் தோல்விகளும்குறுந்தேசியவாத அமைப்புகளுக்கு உந்துசக்தியாக அமைந்தன. தமிழ் மக்களின் நியாயஉரிமைக்காய் ஒரு பொது வேலைத்திட்டத்தை வகுக்க முடியாமைக்கு போனமைக்கு அனைத்துவிடுதலை அமைப்புகளும் பொறுப்பேற்கவேண்டும்.

விடுதலைப் புலிகளின் இராணுவஒடுக்குமுறையால் தம்மை தக்கவைக்க முடியாத அமைப்புகள் இலங்கை அரசிடம் தஞ்சமடைந்துதமது இருப்பை தக்கவைக்க தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை இரண்டாம் பட்சமாக்கியமை விடுதலைப் புலிகளின் குறும்தேசியவாத போக்குக்கு ஒத்துழைப்பையே செய்தது. குறுந்தேசியவாதபோக்கை நிராகரித்து புதிய போக்கை பின்பற்றிய பல அமைப்புகள், குழுக்கள் புலிகளினால் அழிக்கப்பட்டமையும், அவர்களில் ஒருசாரார் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும்,இன்னுமொரு சாரார் புலி விரோதிகளாகவும், இன்னுமொரு சாரார் மௌனிகளாகவும் ஆனார்கள்.


இந்த ஓட்டத்திலிருந்து சற்று விலகி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காய் போராட்ட அரசியல்-இராணுவ நடவடிக்கை குறித்த சாதக பாதக விமர்சனங்களோடு தமிழ் மக்களுக்காய் தொடர்ந்தும் தேடகம் குரல் கொடுத்து வந்தது. ஆனாலும் இன்றைய தோல்வியில் நாமும் ஒரு பங்காளிகள்என்பதற்கு மறப்பேதுமில்லை. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினையை முன்வைத்துபரந்துபட்ட ஒரு மூன்றாவது அணியொன்றை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களாகிய எமக்கு முடிந்திருக்கும். ஆனால் அதற்கான முன்னெடுப்பை தேடகம் போன்ற அமைப்புகள்
முன்னெடுக்காதமை இன்றைய தோல்வியில் நாமும் பங்காளிகள் ஆகவேண்டியே உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் கணிசமான அளவு ஆதிக்கம் செழுத்தும் விடுதலைப் புலி அரசியலும்அதன் பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களை மீண்டும் ஒரு பிழையான பாதைக்குள் இட்டுச்செல்லுத்தும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகின்றன.

இன்று விடுதலைப் புலிகள் புதிய“நாடு கடந்த அரசு” குழுவை தெரிவு செய்துள்ள நிலையில் அவர்களது கடந்த காலம் குறித்தசாதக-பாதக நிலைகள் குறித்து தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய தேவை புதிய“நாடு கடந்த அரசு” குழுவுக்கு உள்ளது. “நாடு கடந்த அரசு” தங்களது கடந்த அரசியல்,இராணுவ வேலைத் திட்டங்கள் குறித்த விமர்சனங்களை முற்வைக்கவேண்டும். கடந்தகாலபேச்சுவார்ததைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்குதரப்படவேண்டும். விடுதலைப் புலிகள் தங்கள் சம்பந்தமான ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படையாக கோரவேண்டும். இதற்காக அவர்களின் பிரச்சார ஊடகங்களை பாவிக்கவேண்டும். எந்தவொரு புதிய முன்னெடுப்புகளுக்கு முன்பாகவும் விடுதலைப் புலிகள்அடிப்படையில் பல மாற்றங்களை செய்யவேண்டிய தேவையுள்ளது. அந்த மாற்றங்கள் இல்லாதவரைக்கும் “தேசிய தலைவரின் வழியில்” என்ற அடைமொழி அச்சமான, ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையே எம் முன் நிறுத்தியுள்ளது. புலிகளின் கடந்த காலம் குறித்த ஆரோக்கியமானஆய்வுகள் இல்லாத வரையும், அதன் கடந்த கால அராஜக அரசியல் மீது கட்டப்படும் புதியமுன்னெடுப்புகள் அனைத்தும் வலிமை இழந்தவையே.வெறுமனமே ஒற்றைத் தன்மையுடன் இருக்காமல் கௌரவமான ஏனைய தீர்வுகள் குறித்தும் தமிழ்மக்கள் மத்தியில் விரிவான விவாதங்களை தோற்றுவிப்பதற்கான தேவையாயுள்ளது.

ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புகளும், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதற்கானமுன்னெடுப்புகளும் அவசியமாகிறது. சிங்கள மக்களுக்கிடையில் எமது போராட்டம் குறித்த நியாயத்தன்மையை கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்காமையும், சிங்கள அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களும் எம்மை இன்றைய நிலைக்கு தள்ளியமைக்கு முக்கியகாரணங்களில் சில. சிங்கள அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட அனைத்து வன்முறைத்தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் பொறுபேற்றக வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளை பகை முரண்பாடாக்கி முஸ்லிம் மக்கள் மீதானஅடக்குமுறையும், பலவந்த வெளியேற்றமும், முஸ்லிம் மக்களின் படுகொலையும் இன்னமும் இருஇனங்களுக்கிடையேயான பகை நிலையை பேணியே வருகிறது. தமிழ்-முஸ்லிம்இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கு மிக முக்கியமாக விடுதலைப் புலிகள்தமது தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

இன்று விடுதலைப் புலிகளின் தலைமைஅழிக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட “நாடு கடந்த அரசு” குழுபுலிகளின் கடந்த கால தவறுகளுக்கு இவற்றுக்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

முன்னர் எப்போதும் இல்லாத அளவில் ஈழத் தமிழ் மக்கள் மிக மோசமான அடக்குமுறையைஎதிர் நோக்கி வருகிறார்கள். தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக, மனித உரிமைகள்மறுக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்காய் போராடவும், குரல் கொடுக்கவும் வேண்டிய தேவை இன்னமும் விலகிவிடவில்லை.

முழு இலங்கையின் ஜனநாயகமும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. நாடுதழுவிய ஐக்கியத்திற்கூடாக அனைத்து மக்களின் அடிப்படை சுதந்திரத்தைவென்றெடுக்கவேண்டிய சூழ் நிலை இன்றுள்ளது. இனங்களுக்கிடையேயான ஐக்கியம், சமத்துவம் என்பது பௌத்த சிங்கள இனவாத போக்கால் மிக மோசமான நிலையில் உள்ளது. இலங்கைஅரசியலில் இந்த இனவாத போக்கை நிராகரித்து சமத்துவத்தை வென்றெடுக்கவேண்டிய தேவைஇலங்கையில் நிரந்தர சமாதானத்தை வேண்டி நிற்கும் எல்லோருக்கும் உண்டு.

இலங்கைபேரினவாத போக்கு மாறாத வரையிலும் சிறுபான்மை இனங்கள் தொடர்ச்சியான ஒடுக்குமுறையைஎதிர்நோக்கியபடியே இருக்கப் போகிறார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும்தொடர்ந்த வண்ணமே இருக்கப்போகிறது.தமது அடிப்படை உரிமைக்கான போராட்டம் குறித்து தமிழ் மக்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கவும் போராடவுமான சூழல் ஒன்று உருவாக்கப்படவேண்டும். எமது போராட்டம்அடிப்படையில் மனித உரிமைக்கான போராட்டம். எனவே மனித உரிமை என்பது எமது போராட்ட வடிவத்தின் அடிப்படையாக அமையவேண்டும். இது குறித்து நாம் கடந்த காலங்களிலும் குரல்கொடுத்து வந்திருக்கின்றோம்.

கருத்துக்களை கருத்துக்களால் முகம் கொடுக்கும் அரசியல்கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். வன்முறையால் அரசியலை குழிதோண்டிப் புதைத்தகடந்தகாலங்கள் எமக்கு இனித் தேவையில்லை.எமக்கு, அடிப்படை மனித உரிமைகளை நிலை நாட்டும் அரசியல் தேவைப்படுகிறது. யாரோஒருவர் வழி நடாத்தும் மந்தைகளாக தமிழ் மக்கள் இனியும் தொடரும் நிலை எமக்கு தேவையில்லை. அனைத்தும் மக்களுக்கும் தங்களது எதிர்காலம் குறித்து பேசவும், எழுதவும்,வாதிடவும், போரிடவும் உரிமைவேண்டும். அத்தகைய நிலையில் புதிய தேடல்களும்,விவாதங்களும் தொடரட்டும். புதிய சிந்தனையும், பாதையும் இன்று எமக்கு அவசியமாகிறது. அதுதமிழரசு – தமிழர் கூட்டணி – விடுதலைப் புலிகள் என்பனவற்றின் அரசியல் தொடர்ச்சியாக இருக்க முடியாது. மானிடத்தின் மேன்மைக்காய் சிந்திக்கும் மக்களின் சக்தி தலைப்படவேண்டும்.அதை உருவாக்கும் வேலையே இன்று எம்முன்னுள்ள தேவை.

தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ, கனடா
11.10.2009

Last Updated on Thursday, 15 October 2009 06:12