Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஈராக் நாகரிகம் அன்பினால் நிரப்பப்பட்டிருந்தது! : அல் முப்தி, அல்-கெடெய்ரி

ஈராக் நாகரிகம் அன்பினால் நிரப்பப்பட்டிருந்தது! : அல் முப்தி, அல்-கெடெய்ரி

  • PDF

பேசுபவர்கள்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பெண்கள்

இவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் முன்பு தங்கள் நிலைபற்றிக் கூறி, தங்களுக்கு நடக்கின்ற அநீதி குறித்துக் கேள்வி எழுப்புமாறு அவர்களிடம் வேண்டுதல் விடுக்கிறார்கள்.

ஒவ்வொரு தடவையும் அவர்களுடைய கேள்விகள் வெறுமனே அமெரிக்கவாழ் மக்களை நோக்கியதானதாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாதுள்ளது. எந்த அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்ட எந்த இனமும் எந்த நாட்டு மக்களும் ஆக்கிரமிப்பாளர்களையும் ஒடுக்குபவர்களையும் நோக்கி கேட்கக்கூடிய கேள்விகள்தான்.

நாங்கள் ஒரு இனமாக ஒடுக்கப்படலாம். ஒரு நாடாக ஆக்கிரமிக்கப்படலாம்.

--------------------------------------------


அமல் அல்கெடெய்ரியும் நேர்மின் அல்முப்தியும் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தபோது ஈராக்கின்மீதான அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அங்குள்ள ஆண்கள் பெண்கள்மீது ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் பற்றிப் பேசினார்கள்.

கெடெய்ரி சபையோரை நோக்கிப் பேசுவதற்கு ஆரம்பித்தபோது அவருடைய உரை இப்படி அமைந்தது. "நான் இங்கு காண்பது உங்களுடைய நேர்த்தியான பல்கலைக்கழகங்களை. ஆனால் எங்களுடைய பல்கலைக்கழகங்களை உங்களுடைய அரசு ஏன் அழித்தது?"

அமலும் நேர்மினும் ஈராக்கிய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதியினால் ஆத்திரமடைந்திருந்தார்கள். அதனால் அவர்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தைரியமாக ஒளிவுமறைவின்றிப் பேசுவதற்குத் தீர்மானித்தார்கள். ஈராக்கின்மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்கள். தங்களுடைய நாட்டைப் புனரமைப்பதில் சர்வதேச சமூகம் தன்னுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். "இது ஒரு யுத்தமல்ல. ஒரு பலாத்காரம். எங்களுடைய நாட்டின் மோசமான அழிவு. எங்களுடைய மக்களினது" என்று நேர்மின் கூறுகின்றார்.


அமல் அல்-கெடெய்ரி, ‘ஈராக் மன்று’ என்றழைக்கப்படும் பாக்தாத்தில் அமைந்த ஒரு கலை, கலாச்சார மையத்தின் நிர்வாகியும் நிறுவனருமாவார். அவர் இதனை 1988ம் ஆண்டு திறந்து வைத்தார். இவர் ஈராக்கிய வரலாறு, பிரதேச கலாச்சாரம், கலை, புதைபொருளியல் மற்றும் இசைபற்றி விரிவான தேடல் கொண்டவர். இவர் அரபு மொழியுடன் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளிலும் புலமை பெற்றவர்.

அல்-முப்தி சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறியப்பட்ட பத்திரிகையாளர். பத்திரிகைத்துறையில் விசேட புலமை பெற்றவர். ஹங்கேரி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சர்வதேச ஊடக முகவர் நிலையங்களில் ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். இந்த ஆண்டு வரையிலும் இவர், ஈராக்கிய வாரப் பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராக இருந்தவர். இவர் ஊழல், பாலினம், சுற்றுச்சூழல், சமகால இலக்கியங்கள், மனித உரிமைகள், கல்வி, வியாதிகள், சத்துணவுகள் என்பவைகள் தொடர்பான விடயங்கள்பற்றி தனது பத்தி எழுத்துக்களில் பேசி வந்தார். கெய்ரோவில் இருந்து வெளிவருகின்ற வாரப் பத்திரிகையான அல்-அஹ்ராமில், யுத்தம், வரலாறு, மற்றும் தண்டனைகள் பற்றி தனது ஈராக் பற்றிய சமூக பொருளாதார சரித்திரம் பற்றிய விரிவான தேடல்களின் வெளிப்பாடுகளாக எழுதி வருகின்றார். இவர் தன்னுடைய நாட்டின் புதைபொருள் ஆராய்ச்சி மற்றும் கலை வடிவங்கள் தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர்.

-------------------


கேள்வி: நீங்கள் ஏன் அமெரிக்காவிற்கு இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டீர்கள்? உங்களுடைய நோக்கம் என்ன? இந்தப் பயணத்தினால் நீங்கள் எதை அடையலாம் என்று நினைக்கின்றீர்கள்? இவைகள்பற்றி எங்களுக்கு விளக்கிக் கூறமுடியுமா?

அல்-கெடெய்ரி: நாங்கள் ஈராக்கியப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல. நாங்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பைப் பார்த்த சாட்சியங்களான பெண்கள். நாங்கள் எங்கள் பக்கத்துக் கதையைச் சொல்வதற்காக இங்கு வந்திருக்கிறோம். ஈராக்கிய மக்கள் எவ்வாறு மிகமோசமான தடைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்கள் என்பதுபற்றி மட்டுமல்ல, இன்றும் மீண்டும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் எவ்வாறு துயருறுகினறார்கள் என்பது பற்றியும் பொதுமக்கள் அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். எங்களுடைய உள்கட்டுமானங்களான பாடசாலைகள், பாலங்கள், மருத்துவ மனைகள், கழிவுநீர் அகற்றும் பொறிமுறைகள் மற்றும் நீர் வழங்கும் பொறிமுறைகள் எல்லாமே நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. எண்ணெய் வள அமைச்சு மட்டும்தான் காப்பாற்றப்பட்டுள்ளது. சதாம் ஹுசைனைத் தேடுகிறோம் என்ற போர்வையில் எங்கள் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் அனைவருமே தொடர்ந்த இடைநிறுத்தப்படாத குண்டு வீச்சுகளிற்குள் இருக்கின்றார்கள். இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்று நாங்கள் எங்களைக் கேட்கின்றோம்.

ஈராக் நாடு கலிபோர்னியா மாநிலத்தைவிட அளவில் சிறியது. சதாம் ஹுசைனைத் தேடுதல், பேரழிவு ஆயுதங்களைத் தேடி அழித்தல் என்னும் போர்வையின் கீழ் இத்தனை அழிப்புகளும் நடந்தேறின. அமெரிக்க நிர்வாகம் முழு ஈராக்கையுமே கவிழ்த்தது. வீடுகளை அழித்தது. மக்களின் உயிரை எடுத்தது.


அல் முப்தி: ஈராக்கில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது பற்றிய பிரக்ஞை நிலையை இங்கு உருவாக்குவதற்குத்தான் நாங்கள் இங்குள்ளோம். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகத்தான் இருக்கின்றோம். ஈராக்கிலும் ஈராக்கை விட்டு வெளியேறி புகலிடத்திலும் இருக்கும் அரசுக்கு எதிரான சக்திகள் அமெரிக்க நிர்வாகத்திற்குக் கொடுத்த பொய்யான தகவல்களின் அடிப்படையிலான ததாவேஜுக்கள் காரணமாகத்தான் எங்களை அமெரிக்கா ஆக்கிரமிப்புச் செய்தது. ஈராக்கியர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் கொல்லப்படுகிறார்கள். - பாக்தாத்தில் மாத்திரமல்ல. அமெரிக்க இராணுவம் எந்த ஒரு ஈராக்கியரையும் கொல்வதற்குத் தயாராக இருக்கின்றது. அதேவேளையில் அவர்களும் கொல்லப்படுகின்றார்கள்.

நாங்கள் இங்கு சொல்வது என்னவென்றால், இந்த ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, அமெரிக்கப் படைகள் எல்லாவற்றையும் எவ்வளவு விரைவில் வெளியேற்ற முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியேற்ற வேண்டும். அது ஈராக்கிய மக்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, இளம் அமெரிக்கர்களையும் பாதுகாப்பதற்குத்தான். மேலும் இப்போது 13 வருடங்களாக, 26 மில்லியன் ஈராக்கியர்களும் மேற்கத்தைய ஊடகங்களினால் மிகவும் அசிங்கமான ஒரு விதத்தில, ஏதோ நாங்கள் மனிதப் பிறவிகளே அல்லாதது போன்று சித்தரிக்கப்படுகிறார்கள். ஏதோ நாங்கள் ஒரு செழுமையான சரித்திரத்தைக் கொண்ட அதே ஈராக்கியர்கள் அல்லாதவர்கள் போன்றும், கணிதவியலின் அடிப்படையை அறிமுகம் செய்து வைத்த அதே ஈராக்கியர்கள் அல்லாதவர்கள் போன்றும்.....

எனவே, நாங்கள் இங்குள்ள எங்கள் அமெரிக்க நண்பர்களைச் சந்தித்துக் கைகுலுக்கி அங்கு என்ன நடக்கின்றதென்பதைச் சொல்வதற்கான ஒரு இலகுவான வழியாக இதைக் காண்கிறேன்.


கேள்வி: ஈராக் கலாச்சாரரீதியாகச் செழுமை வாய்ந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஈராக்கின் கலாச்சாரம் அதன் மக்கள் பற்றி நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? இந்த யுத்தமானது அவற்றின்மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.?


அல் முப்தி: (கண்ணீர் வழிகின்றது) எங்களுடைய நுhதனசாலைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது மூன்று நாட்கள்வரை நான் அழுதுகொண்டிருந்தேன்;;. அது ஈராக்கினது சரித்திரம் மட்டுமல்ல. இது உலகத்தினது சரித்திரமும்தான். அந்தப் புராதன ஈராக்கியச் சிலைகளை நீங்கள் இனி எப்போதும் கண்டுபிடிக்க முடியாது. அந்த நுhதன சாலைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் எல்லாமே பெரும்பாலாக, ஆண் பெண் இவர்களுக்கிடையில் ஒரு குழந்தை அல்லது குழந்தைகள். இப்படித்தான் இருக்கும். அவற்றில் 20 ஆயிரம் வருடங்கள் பழமையானவையும் உண்டு. ஈராக் நாகரிகம் அன்பினால் நிரப்பப்பட்டிருந்தது என்பதனை இது நிரூபிக்கின்றது. புராதன நாகரிகமானது ஒரு சந்ததியில் இருந்து மறு சந்தத்திக்குக் கடத்தப்பட்ட ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந்தோம்.

முதலாவது பாவத்திற்குப் பிற்பாடு அல்லா, ஆதாமைத் துரத்தியது உங்களுக்குத் தெரியுமா? ஆதாம் சொர்க்கம் போன்ற இன்னொரு இடத்தைத் தேடியபடி வருடக் கணக்காக அழுது கொண்டிருந்தான். அந்த இடம் தெற்கு ஈராக்கில் இருந்தது. அது அல்-குர்னா. அங்குதான் ஆதாமும் ஏவாளும் பூமியில் சந்தித்தார்கள்;. எனவே முதன்முதலாக அவர்கள் காதல் செய்தது ஈராக்கில்தான். அந்தச் செயல்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் பிறப்புக்கு வழிவகுத்தது.

எனவேதான் நான் சொல்கிறேன், அப்படிப்பட்ட ஒரு சரித்திரம எப்படித் தொலையமுடியும்? கிழக்குத் தொடக்கம் மேற்குவரை வடக்குத் தொடக்கம் தெற்கு வரை நாங்கள் ஒரு இலட்சத்து 40ஆயிரம் வரலாற்றுத் தலங்களைக் கொண்டிருந்தோம். இவைகள் இப்போது தோண்டப்பட்டுள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டுகளிற்கும் மேற்பட்ட அசலான கலைப்பொருட்கள் யாவும் களவாடப்பட்டுவிட்டன. அசல்கள் மட்டும் களவாடப்பட்டு, நகல்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. எல்லாமே அமெரிக்க இராணுவம் காவலில் இருந்தபோது நடந்தவைதான். கடைசி நுhறு வருடங்களிற்கான முக்கியமான ஆவணங்கள் (காணி உறுதிகள், பிறப்புச் சாட்சிப் பத்திரங்கள் போன்றன) காணாமற் போய்விட்டன. கொள்ளையர்கள் பல்கலைக்கழக நுhலகத்திற்கும், பொதுநுhலகத்திற்கும் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இரண்டரை மில்லியன் நுhல்கள் தொலைந்து போயின. அபாசிட் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘ஞானமனை’ என்றழைக்கப்பட்ட மாளிகை முற்றாகக் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுhல்கள் ஒரு டொலருக்கு 10 நுhல்கள் வீதம் தெருவோரங்களில் விற்கப்பட்டதை எனது கண்களால் பார்த்தேன்.

இது ஒரு வரலாற்று விபத்தல்ல. இது மிகவும் திட்டவட்டமான கணிப்பீடுகளின் அடிப்படையில் நன்கு திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கை. நீங்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அமெரிக்கர்கள் ஈராக்கினுள் நுழைவதற்கு முன்பாகவே, ஹங்கேரியில் இருந்த 1000 சுயாதீன ஈராக்கிய படைவீரர்களுக்கு விசேட பயிற்சியளித்தனர். ஈராக்கின் சரித்திரம், இறைமை என்பவற்றின் அத்திவாரத்தையும் அதன் பெருமை எல்லாவற்றையும் துடைத்தெறிவதற்கான கணிப்பிடப்பட்ட அழிப்பு இது என்பதனைப் பலவிடயங்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.


கேள்வி: அமெரிக்க இராணுவம் ஈராக்கை முற்றுகையிட்டபோது எழுந்த கலவரங்களின்போதுதான் ஈராக் கலை கலாச்சார மையம் கொள்ளையடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது என்று பரவலாக செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. இது ஏன் நடந்ததென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? இது அமெரிக்கப் படைகளினால் தடைசெய்யப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறீர்களா?

அல்-கெடெய்ரி: இது ஒரு கலாச்சாரத்தையும் அதனோடிணைந்த வாழ்வின் சகல அம்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான வழிமுறை. இந்தக் கலாச்சார மையமானது என்னுடைய இருப்பிடம் மட்டுமல்ல. அங்கு பல பெண்கள் வேலை செய்தார்கள். அங்கு உருவாக்கும் கலைப் பொருட்களை விற்று அவர்கள் ஊதியம் பெற்றதுடன் தங்கள் குடும்பங்களிற்கும் உதவியாக இருந்தார்கள்;. அவர்கள் இந்தக் கலாச்சார மையம் அழிக்கப்பட்டதனால் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறார்கள்.

ஆனால் ஈராக் முழுவதுமே அழிப்பு நடந்து கொண்டிருந்தது. முற்றுகை ஆரம்பித்து இரண்டாம்நாள் பாக்தாத் நகரின் காட்சியைப் பார்ப்பதற்காக ஒரு பாலத்தின்மீது சென்று நின்றேன். பாக்தாத் நகரத்தைப் பாரத்தபோது அதுதான் எந்த ஒரு நகரத்திற்கும் நடக்கக்கூடிய மிகமோசமான துன்பியல் நிகழ்வாக இருக்கமுடியும் என்று நான் உணர்ந்தேன். சீனா தொடக்கம் ஸ்பெயின்வரை 600 வருடங்கள் ஆண்ட அபரிட் சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஒரு தடவை பாக்தாத் இருந்திருக்கின்றது. அரபு உலகத்தினதும் மத்திய கிழக்கினதும் முதற் சுதந்திரம் பெற்ற நாடு ஈராக்தான். உங்களைச் சுற்றி எல்லாமே தீயில் எரிந்து கொண்டிருக்கும்போது தருகின்ற வலி வேதனையானது. இது எங்களுடைய நாடடினதும் சமூகத்தினதும் மீதான கிரமமான முறையிலான அழிப்பின் ஒரு பகுதி என்றுதான் நான் இதனைக் கருதுகிறேன்.

இந்தப் பயணத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, எங்கள் கலாச்சார மையத்தின் இடிந்துபோய்க்கிடந்த சிதறல்களுக்குள் நாங்கள் கிளறித் தேடினோம். அங்கு கைவினைத் தறிகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. அவர்கள் ஏன் அவற்றை உடைத்தார்கள்? அவர்கள் தறிகளைத் திருடி இருந்தால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும், அது சனங்களுக்குத் தேவையாக இருந்திருக்கின்றதென்று. அவர்கள் அங்கிருந்த எல்லாவற்றையுமே சிதைத்திருந்தார்கள். அழித்திருந்தார்கள். இன்னும் ஒரு உதாரணம், நுhதனசாலை. இது ஒரு வெட்ட வெளிச்சமான உதாரணம். சரவதேசரீதியில் நிகழும் கிரமமான நடைமுறை. இந்த மாதிரியான நடவடிக்கைகளின்போது கொள்ளையர்கள் அசல்களை மட்டும் எடுத்தக்கொண்டு ஏன் நகல்களை விட்டுச் சென்றார்கள்? இது கொள்ளையர்களுக்கு எப்படித் தெரியும்? ஏன் கொள்ளையடிக்கும்போது இராணுவம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது? இதனை அவர்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். வெளியை நோக்கிய எச்சரிக்கை வேட்டுகள் தீர்க்கப்பட்டிருந்தாலேயே கொள்ளையர்களை விரட்டியிருக்க முடியும். ஆனால் இது நடைபெறவில்லை.


கேள்வி: இந்த யுத்தகாலச் சூழலில், பொதுவாக ஈராக்கிய மக்களின், குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை விபரிக்க முடியுமா? முதலில் ஈரான்-ஈராக் யுத்தம், பிறகு வளைகுடா யுத்தம், சர்வதேச தடைச் சட்டங்கள், இப்போது அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்பு....


அல் முப்தி: ஒரு ஈராக்கியப் பெண்ணாக, என்னுடைய வாழ்க்கையில் இது என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதை நான் சொல்கிறேன். ஈரான்-ஈராக் யுத்தம் ஆரம்பித்தபோது எனக்கு 20 வயதுதான் ஆகி இருந்தது. அந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்தேன். எனவே அவன் அந்த யுத்தகாலத்தில் ஒரு குழந்தையாக இருந்தான். 1994ம் ஆண்டு யுத்தத்தின்போது அவன் சிறுவனாக ஆனான். பாரதூரமான தடைச்சட்டங்களின் காலத்தில் அவன் பால்யப்பருவத்தில் இருந்தான். அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின்போது ஒரு இளம் ஆணாக இருக்கின்றான். கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். எனக்கு நிதியுதவி செய்வதற்கு எனக்கு ஒரு நல்ல தாயார் இருக்கிறாள். அவர் நான் எனது மகனை வளர்ப்பதற்கு உதவினார். நான் ஒரு பத்திரிகையாளராக வருவதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கினார். ஆனால் மற்றைய பெண்களுக்கு இப்படியான சந்தர்ப்பங்கள், தேர்வுகள் இல்லை. 1979இல் ஈராக் யுனெஸ்கோ விருது பெற்றது. ஏனெனில் அப்போது அங்கு கல்விபெற்ற ஆண்களும் பெண்களும் நிறைய இருந்தார்கள். யுத்தங்களும் தொடர்ந்த தடைச்சட்டங்களிற்கும் பின் 15 வயதிற்குட்பட்ட இளம் சந்ததியில் 45வீதமானவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இப்போது இருக்கின்றார்கள். ஈராக்கில் மிகச் சிறந்த கல்விமுறைகள், இலவச மருத்துவ முறைகள், மிகச் சிறந்த சமூக சேவைகள் என்பன இருந்தன. இப்போது எங்களுக்கு ஒன்றுமே இல்லை.

என்ன இருந்தாலும், நாங்கள் இழந்ததில் மிகவும் முக்கியமானது எங்களுடைய விழுமிய அளவுகோல். எங்களுடைய விழுமியங்கள் இப்போது தலைகீழாக உள்ளன. தடைச்சட்டங்களின் காலகட்டத்தில் அநேகமானவர்கள் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருந்தார்கள். பணத்தைச் சம்பாதிப்பதற்காக நியாயத்திற்குப் புறம்பான செயற்பாடுகளில் இறங்கினார்கள். அவ்வாறான செயற்பாடுகளினூடாக, அவர்கள் குறிப்பிட்ட செல்வத்தைச் சம்பாதித்தார்கள். இவை பொதுவான இடத்தைப் பிடித்திருந்ததால் அவைகள் எல்லாம் சேர்ந்து இன்றைக்கு எங்களுடைய சமூகத்தின் செல்வாக்கான நியாயமான விழுமியங்களைப் பாதிக்கின்றன. 20 வருடங்களிற்குள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அதிக அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் 14ம் இடத்தில் இருந்த ஈராக் இன்று 156ம் இடத்திற்குச் சென்றுள்ளது. 7 மில்லியன் ஈராக்கியர்கள் இன்று வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர். யுத்தகாலத்திலும் தடைச்சட்டகாலத்திலும் கணவன்களையும் மகன்களையும் இழந்த தனியான பெண்கள் 3 மில்லியன்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பாதிப்புகளினால் பாலியல் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. 1991ம் ஆண்டுக்கு முன்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருந்தது. கடைசி 10 வருடங்களாக, பாலியல் தொழில் செய்பவர்களின்வீதம் ரொக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. அநேகமான ஆண்கள் யுத்தத்தில் இறந்துபோனார்கள். தடைச்சட்டங்கள் பெண்களை நிதி நெருக்கடிக்குள் தள்ளியது. அதிகமதிகமான பெண்களும் சிறுவர்களும் தங்களது வாழ்க்கையை ஓட்டுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். நான் வேலைத்திட்டம் ஒன்றிற்காக 10-12வயதான சிறுவர்களுடன் வேலை செய்தேன். அவர்கள் இன்னும் பாலயப் பருவத்தைக்கூட எட்டாதவர்கள்; இவர்கள் பாலியல் தொழிலுக்குள் சிக்கி இருக்கின்றார்கள்.


கேள்வி: மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையொன்றில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகமும் ஈராக் நிர்வாகமும் பொதுமக்களிற்கான பாதுகாப்பினை வழங்கத் தவறியமையினால், பாலியல் பலாத்காரங்களும், பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளன என்று கூறுகின்றது. இதுபற்றி உங்கள் கருத்தைக் கூறமுடியுமா?

அல் முப்தி: பெண்கள்மீதான பலாத்காரம் தொடர்பான நிறையச் சம்பவங்களை நான் அண்மையில் பார்த்திருக்கிறேன். இவற்றுள் மிக முக்கியமாக எனக்குள் துருத்தி நிற்பது பின்வரும் சம்பவமாகும். ஒன்பது வயதான சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 10 நாட்களாக இரத்தம் வழிந்தோடிக் கொண்டே இருந்தது. அவளுடைய உடல் ஊமைக்காயங்களால் புதைந்திருந்தது. அந்தக் காட்சி ஒருவர் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாதது. நான் என்ன நடந்ததென்று அவளிடம் கேட்டபொழுது அதனை விளக்கமாகச் சொல்லக்கூட அந்தப் பாலகிக்குத் தெரிந்திருக்கவில்லை.


கேள்வி: பெண்களுக்கான ஐ.நா. அபிவிருத்தி நிதியத்தின் நிறைவேற்று நிர்வாகி நொயலின் ஹீசர், அங்குள்ள பாதுகாப்பற்ற சூழலானது பெண்கள் புனரமைப்பு வேலைகளிற்கான பொறுப்புகளை எடுப்பதற்குத் தடையாக உள்ளது என்று சொன்னார். இது குறித்த உங்கள் அபிப்பிராயங்கள் என்ன? யுத்தத்திற்குப் பின்பான சமூகத்தில் என்ன விதமான பாத்திரங்களைப் பெண்கள் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அல் கெடெய்ரி: ஓம். இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதிகரித்துவரும் கடத்தல்கள, பாலியல் பலாத்காரங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிரான ஏனைய குற்றச் செயல்கள் போன்றவற்றினால் அநேகமான பெண்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வருவதற்குப் பயப்படுகின்றார்கள். ஈராக் இப்போது சட்டங்கள் அமுலில் இல்லாத ஒரு நாடு. எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி சிலர் இருக்கிறார்கள். அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவோம் என்ற பயமின்றி வீட்டைவிட்டு வெளியேற முடியாதிருக்கும் இப் பெண்கள் எப்படி ஒரு நாட்டைப் புனரமைக்கும் பணியில் பங்கு கொள்ள முடியும். ஈரான்-ஈராக் யுத்தத்திற்குப் பின்னால் எப்படி இருந்தார்களோ அவ்வாறே பெண்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்த வளைகுடா யுத்தம், தடைச்சட்டங்கள் மற்றும் இன்றைய ஆக்கிரமிப்பு இவைகள் எல்லாவற்றிற்கும் முன்பு பெணகள் சமூகத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்திருக்கின்றார்கள்.


கேள்வி: ஈராக்கின்மீதான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு தீவிரவாதக் குழுக்களை வளர்ப்பதற்கு உந்துதலாக இருக்கின்றது என்று கூறும் எண்ணற்ற அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இவற்றினால் பெண்கள் முகத்திரை அணியும்படி வெருட்டி நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இது குறித்து ஏதாவது கருத்து?

அல் முப்தி: யுத்தத்திற்கு முன்பு சில மதத் தீவிரவாதிகள் தெருவில் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு எதிராகப் பேசினார்கள். அப்படி இருந்தும், ஷரியா சட்டமன்றம் பெண்களுக்குச் சாதகமான ஒரு அற்புதமான ஆணையைக் கொண்டு வந்தது. எந்த ஒரு பெண்ணையும் ஹிஜாப் அணியும்படி வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று ஆணை பிறப்பிருந்தது. ஈராக்கில் மிக அரிதாகவே பெண்கள் முக்காடு அணிகிறார்கள்;. எனினும் இது பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகின்றது. எப்படி இருப்பினும் இப்பொழுது நாட்டிலுள்ள குழப்பமான நிலைமையினால் பலாத்காரம், பாலியல் நிர்ப்பந்திப்பு, பாலியல் பலாத்காரம் என்பன அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. பலாத்காரங்களிற்குப் பயத்தினால் குறைவான பெண்களே தெருவில் நடமாடுகின்றார்கள். இது அமெரிக்க ஆக்கிரமிப்புடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால் ஒரு வேளை அந்நிய பிரசன்னம் அதனோடிணைந்து வரும் கடத்தல்கள், பாலியல் பலாத்காரம், என்பன அதிகரித்திருப்பதனால் எங்கள் பெண்களுக்கான பாதுகாப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது.


கேள்வி: ஈராக் நாட்டைப் புனரமைப்பதில் புகலிட ஈராக்கியர்கள் என்ன பங்கினை வகிக்க முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

அல் முப்தி: ஈராக்கினை மீளக் கட்டுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும். அது ஈராக்கியர்களுக்க மட்டுமல்ல. ஏனெனில் அங்கு நடந்த அழிவுக்கு அனைவரும் பொறுப்பு. சர்வதேச நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் (தங்கள் நாடுகளில் தட்டிக் கழிக்க முடியாத சவால்களை எதிர்கொண்டு அவற்றுடன் புழங்கிய நெல்சன் மண்டலா போன்றவர்கள்) முக்கிய குரலாக இருக்க முடியும். ஐக்கிய நாடுகளுக்கு என்ன நடந்தது? ஈராக் நிர்மூலமாக்கப்பட்டபோது ஐ.நா.சபை போன்ற நிறுவனங்கள் எங்கே இருந்தன?


கேள்வி: அமெரிக்கப் பொதுமக்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பகிறீர்களா?

அல் கெடெய்ரி: மக்கள் ஊடகங்களினால் ஏமாற்றப்படக்கூடாது. அமெரிக்கப் பொதுமக்கள் எங்களை வெறும் பண்டங்களாக பாரக்காது, மனிதப் பிறவிகளாகப் பார்க்வேண்டும். எங்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது என்பதையும் எங்கள் சிறுவர்களும் இங்குள்ள சிறுவர்களைப் போல கல்வியூட்டப்படவேண்டும் என்பதை எண்ணிப் பார்க்வேண்டும். உங்களுடைய சர்வகலாசாலைகள் இவ்வளவுதூரம் பேணிப் பாதுகாக்கப்படும்பொழுது எங்களுடைய கலாசாலைகள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டன? எங்கள் நுhதன சாலைகள், எங்கள் வாழ்வின் சகல வரலாற்றுரீதியான கலாச்சாரரீதியான அம்சங்கள் எல்லாமே நிர்மூலமாக்கப்பட.டுவிட்டன. ஏன் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் இதைச் செய்தார்கள்? ஏன் இந்த யுத்தத்திற்கு ஊதியம் வழங்கினார்கள் என்று இவர்கள் தங்களைக் கேட்கவேண்டும். இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டதல்ல. இது முற்றுமுழுதான தேசம் சம்பந்தப்பட்டது. ஏனெனில் ஒரு தனிமனிதன் தன்னுடைய விருப்பத்திற்கு ஊதியம் வழங்கி ஒரு யுத்தத்தைச் செய்யமுடியாது. இங்கு யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்ததென்பது எனக்குத் தெரியும்;. ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக நாடாக இருப்பதற்கு, ஒவ்வொரு முடிவும் எடுப்பதற்கு, ஒன்றிற்கு மேற்பட்ட குரல்கள் இருக்க வேண்டும். அதுவும் ஒரு நாட்டின்மீது போர் தொடுப்பதற்கு. இது ஒரு யுத்தமல்ல. இது ஒரு பலாத்காரமான ஆக்கிரமிப்பு. இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மனித உரிமைகளிற்கும் ஒட்டுமொத்த மனிதத்திற்கும் எதிரான பலாத்காரம். சர்வதேசத்தினதும் கண்களின் முன்னால் எங்கள் வீடுகள் பலாத்காரத்திற்குள்ளாகின. எங்கள் வீடுகளின் யன்னற் கதவுகள் பிடுங்கப்பட்டன. சதாம் ஹுசைனைத் தேடுகின்றோம் என்ற போர்வையின் கீழ் எங்களை நிர்மூலமாக்கினார்கள்.

நாங்கள் இங்கு வந்து உங்களுடைய நாட்டில் இப்படி ஒரு பலாத்காரத்தைச் செய்வதை உங்களால் கற்பனை செய்து பாரக்கமுடியுமா? 

 மத்தியகிழக்கின் பெண்கள் கற்கைநெறி விமர்சனச் சஞ்சிகையில் 2004ம் ஆண்டில் வெளியாகிய ஒரு நேர்காணலின் தமிழாக்கம்.

 

தமிழாக்கம் : புகலி (www.puhali.com)

காலம்: 2004ம் ஆண்டு

 

 

 

 

Last Updated on Friday, 18 September 2009 15:23