Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இளித்தவாய் சுயநலவான்கள்!

இளித்தவாய் சுயநலவான்கள்!

  • PDF

இந்தியாவில் வறட்சியே இல்லாத ஒரு விசயமென்னவென்றால் தகுதி தராதரத்துக்கேற்ப ஏமாறுவது. ஆயிரம் பெறாத மெத்தையை காந்தப் படுக்கை என இரண்டு இலட்சத்திற்கு வாங்கியவர்களும், அனுபவ் தேக்குமரத்தின் இலாபத்தை பளபளப்பு காகிதத்தில் பார்த்து இலட்சக்கணக்கில் ஏமாந்தவர்களும், பாலுஜூவல்லர்ஸ் துவங்கி ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்ட் வரை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு

 

 

ஓய்வூதியத்தை பறிகொடுத்துவிட்டு பனகல் பார்க்கில் ஞாயிறு தோறும் சந்தித்து பொறுமுவர்களும், வளைகுடாவிற்கும், மலேசியாவிற்கும் பசையான வேலை கிடைக்குமென கந்து வட்டிக்கு கடன்வாங்கி பரிதாபமாக திரும்பி வருபவர்களும், குழந்தையின்மைப் பிரச்சனையை சிட்டுக் குருவி லேகியம் தீர்க்குமென சில ஆயிரங்களை விட்டெறிந்துவிட்டு பேந்தப் பேந்த விழிப்பவர்களும், மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் மனக் கோட்டை கட்டி பின்பு மண்கோட்டையென முழிப்பவர்களும் இப்படி முடிவேயில்லாத வழிகளில் ஏமாந்தவர்களை பட்டியலிட்டு மாளாது.

இந்த ஏமாறுதலில் கோடிசுவரன் முதல் தெருக்கோடி பாமரன் வரைக்கும் வேறுபாடில்லை. முந்தியவன் பங்கு சந்தையில் விட்டால் பிந்தியவன் மூனூ சீட்டில் விடுவான். விரலுக்கேற்ற வீக்கம், காசுக்கேற்ற தோசை!

இளித்தவாய் சுயநலவான்கள்! 

 

பாண்டிச்சேரியில்  ராமலிங்கம் என்ற மெக்கானிக், வீரமணி என்ற பொதுப்பணித்துறை மஸ்தூர், மற்றும் முருகன் என்ற புரோக்கர் பேர்வழியும் இன்னும் வழக்கில் சிக்காத சில சிகாமணிகளும் சேர்ந்து புதுவை முழுக்க மூன்று வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக 80,000 முதல் 2.00.000 வரை பல இளைஞர்களிடம் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு அரசு லெட்டர்பேடில் வேலை கிடைத்தது போன்ற போலி சான்றிதழ் கூட வழங்கியிருக்கிறார்கள். எல்லாருக்கும் கிடைத்த வேலை என்னவென்றால் பொதுப்பணித்துறை நீர் ஊழியர், (public water workers) என்பதாகும். மேலும் இவர்கள் புறநகரில் உள்ள நீர் தொட்டிகளை பராமரிக்க வேண்டுமென்றும், தற்போது அங்கு செல்ல வேண்டாமென்றும், ஆனால் அவர்கள் அங்கு வேலை பார்ப்பதாக சோதித்தறியும் அரசு ரிஜிஸ்டரில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.

சிகாமணிகள் இத்தோடு விடவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் தலா 3,300ரூபாய் தினசரி 110 வீதம் என சம்பளமும் கொடுத்து அதற்கு அரசுச்சான்றிதழ் போல ஒன்றில் கையொப்பமும் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் எங்கு வைத்து நடந்தது என்றால் காந்தி சிலை அருகேயோ இல்லை கடற்கரையிலோ கன ஜோராக நடந்திருக்கிறது. பணத்தை கொடுத்த அறிவாளிகள் எவருக்கும் இப்படி அரசு அலுவலகம் தெருவும் திண்ணையுமாக நடக்கிறதே, வேலையே இல்லாமல் சம்பளம் வருகிறதே என்றெல்லாம் யோசிக்கவில்லை.

என்ன இருந்தாலும் அரசு வேலையென்றால் இன்னமும் ஒரு மதிப்பிருக்கிறதல்லவா? குறைந்த பட்சம் செமத்தியான வரதட்சணையுடன் பெண் கிடைத்து பேஷாக திருமணத்துடன் வாழ்வில் செட்டிலாகிவிடலாமே?

தலைக்கு இரண்டு இலட்சத்தை சுருட்டியவர்கள் அதில் சில ஆயிரங்களை விட்டெறிந்து விட்டு அப்புறம் கமுக்கமாக மறைய ஆரம்பித்தார்கள். பணத்தை அழுத கனவான்களோ நமக்காக எப்படியெல்லாம் இந்த சிகாமணிகள் கஷ்டப்படுகிறார்கள் எப்படியும் நமக்கு புதுவை அரசில் நிரந்தர வேலை கிடைக்கும் என விட்டுப் பார்த்திருக்கிறார்கள். வாழ்வை பாசிட்டாவாக பார்க்க வேண்டுமென அப்துல்கலாம் முதல் தலப்பாகட்டு தாடி ஜக்கி வாசுதேவ் வரை உபதேசத்தை யானைச்சாணி போல டன்கணக்கில் கழிக்கும் மண்ணில் இந்த இளைஞர்களும் நல்லதே நடக்கும் என நம்பியதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஆயிற்று. ஒரு மாதம் இரண்டு நான்கு என பெருக்கல் வீதத்தில் சம்பளம் வராமல் இருக்க ஒரு வழியாக கனவான்களுக்கு கனவில் சுருக்கென்று கும்மாங்குத்து குடைய ஆரம்பித்திருக்கிறது. இரண்டு இலட்சத்தை அரசு பதவிக்காக எப்படியெல்லாம் புரட்டியிருப்பார்களோ “அது போல நாமும் ஏமாற்றப்பட்டிருப்போமோ” என்று யதார்த்தம் வயிற்றைப் புரட்ட ஆரம்பித்திருக்கிறது. இப்படி அக்மார்க் பச்சையாக ஏமாந்ததை எப்படி வெளியில் விடுவது என்று குழப்பம். இறுதியில் பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டுமென சில ஏமாளிகள் வேறுவழியின்றி போலீசுக்கு போக அப்புறம் தைரியம் பெற்ற மற்ற சுண்டெலிகள் வரிசையாக புகார் தர காவல்நிலையத்திற்கு படை எடுத்திருக்கிறார்கள். இதுவரை 150 பேர் இந்த அரசு வேலை மோசடியில் பலியாகியிருப்பதாக தினசரிகள் குறிப்பிடுகின்றன.

மோசடிக் கும்பலில் ராமலிங்கம் மட்டும் தலைமறைவாக மற்ற இருவரும் போலீசிடம் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் பல சிகாமணிகள் இருக்கலாம் என விசாரணை தொடர்கிறது. மொத்தத்தில் இரண்டு கோடி ரூபாயை இந்த சிகாமணிகள் சுருட்டியிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

நமது மக்களை ஏமாற்ற ரூம் போட்டெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை போலும். சும்மா டாஸ்மார்க்கில் ஒரு குவார்ட்டரை நீர் கலந்து அடிக்கும் நேரத்தில் யோசித்தால் போதுமானது. அடுத்த நாளே பேஷாக அரங்கேற்றலாம். ஏமாறுவதற்கு குறைவில்லாத நாடிது. டாஸ்மார்க் என்றதும் கொசுறு செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பீர் 70 ரூபாயாம். புதுவையில் அதுவே 40 ரூபாய்க்கு விற்கிறதாம். தற்போது ஐந்து ரூபாய் விலையேறி 45க்கு கிடைக்கப் போகிறதென குடிமகன்களுக்கு கவலை தரும் செய்தியையும் இதே நாளேடுகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. ஆக ஊரை மலிவான மதுவில் மூழ்கி ஏமாற்றுவதற்கு பாண்டிச்சேரிக்கு ஒரு நடை போய்வந்தால் இத்தகைய சிகாமணிகள் விதம் விதமாக ஏமாற்றலாம்.

இன்றைய கல்வி முறையும், சமூக அமைப்பும், காரியவாதம் மேலோங்கி இருக்கும் தனிநபர்வாதமும் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இப்படி குறுக்குப் பாதையில் முன்னேறுவதற்கு வழி சமைக்கிறது. உண்மையான அரசு வேலையே இலட்சங்களில் பேசப்பட்டே கிடைக்கும் போது அதாவது “எழுத்து தேர்வு வரை உங்கள் சாமர்த்தியம், நேர்காணலில் வெல்ல வேண்டுமென்றால் அது பணம்தான் தீர்மானிக்கும்” என்ற நிலையில் இந்த இளைஞர்கள் ஏமாந்தது பெரிய விசயமே இல்லை. ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு எம்.எல்.ஏக்களின் அல்லக் கைகளுக்கு பணத்தை அளித்து விட்டு காத்திருக்கும் பட்டியலில் எப்போது நம் பெயர் வருமென்று எத்தனை ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்? இந்த ஏமாறுதலில் ஏதோ தமிழ்நாடு மட்டும்தான் என்றில்லை. அறிவாளிகளுக்கு பெயர்போன அமெரிக்காவிலேயே சமீபத்தில் ஒரு பிளேடு பக்கிரி முதலீடு செய்த பணத்தை குறுகிய நாட்களில் மும்மடங்காக தருவதாக மில்லியன் டாலர் சேர்த்து விட்டு இப்போது கம்பி எண்ணுகிறான். அது கூடப் பரவாயில்லை, சிறையில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த போது “இப்படியெல்லாம் மக்கள் ஏமாறுவார்கள் என நான் முதலில் நம்பவில்லை, எப்போதோ பிடிபட்டிருப்பேன் இவ்வளவு தாமதம் ஏனென்று தெரியவில்லை” என தெனாவெட்டாக பேட்டி கூட அளித்திருக்கிறான். அந்த கஸ்மாலத்தின் பெயர் நினைவில் இல்லை. முடிந்தால் பின்னூட்டத்தில் அவனது ஜாதகத்தை தருகிறோம். இது போக பல அமெரிக்க நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கள்ளக் கணக்கு காண்பித்து அது முடியாத போது திவாலென அறிவித்து விட்டு எஸ்ஸானது பெரிய கதை.

தான் மட்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று அதையே தன்னம்பிக்கை நெறியாக கொண்டிருப்பதே இன்றைய சமூகத்தின் உணர்வாக இருக்கும்போது இத்தகைய சுயநல இளித்தவாய கனவான்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். இனி அடுத்த சிகாமணிகளிடம் சிக்கும் சுயநல கனவான்கள் யார் என்ற செய்திக்கு நாம் காத்திருப்போம். இதில் மட்டும் நாம் ஏமாறப்போவதில்லை.

 

http://www.vinavu.com/2009/09/14/selfish-idiots/

Last Updated on Monday, 14 September 2009 07:34