Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வினவில் இடானியாவின் கடிதத்துடன் சனிக்கிழமை வாசகர் கவிதைகள்!

வினவில் இடானியாவின் கடிதத்துடன் சனிக்கிழமை வாசகர் கவிதைகள்!

  • PDF

வினவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாசகர் கவிதைகளை வெளியிடலாமென்று ஒரு யோசனை! பொதுவில் தமிழ்க்கவிதை உலகம் வாரமலர் வகையில் அரட்டையாகவும், வைரமுத்து வகையில் இரவில் பிறந்தோம் இன்னும் விடியவே இல்லை என்று வார்த்தை அலங்காரமாகவும், சிறுபத்திரிகை வகையில் போலி மன அவஸ்தை புலம்பலாகவும்,

 

பெண்ணிய வகையில் ஈராக் மீதான அமெரிக்காவின் போர்கூட பெண்ணுடல் மீது ஆண் கொண்ட உரிமையென்ற உளறலாகவும், த.மு.எ.ச வகையில் பழங்கஞ்சி ஞாபகமாகவும் சலிப்பூட்டுகிறது. புரட்சி குறித்த விருப்பார்வம் கொண்ட பல கவிதைகளும் கூட முழக்கங்களாகவோ பிரகடனங்களாகவோ சுருங்கி விடுகின்றன. மொத்தத்தில் கவி உலகம் தனித்துவமான ஆழ்ந்த சமூக அனுபவக் கிளறலின்றி அழுது வடிந்து கொண்டிருக்கிறது.

புழங்கும் எல்லா கலைகளிலும் கவிதை எழுதுவது மிகவும் சுலபமாகிவிட்டது. ஒரு பேப்பரும், பேனாவும், மழைக்காலம் போன்ற குதூகலமான காலநிலையும், மனைவி தரும் சரியான காப்பித் தண்ணியும், இருந்தால் பத்துவரியில் ஒரு ஆண் கவிதை தயார். உரையாடலையும், பொருளையும், வார்த்தை சேர்க்கைகளையும் மாற்றிப்போட்டால் கவிதை சுலபமாக யாருக்கும் வந்து விடுகிறது. இதன் காரணமாகவே கவிதை மட்டும் எழுதுவோர் மீது எமக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. கவிமணிகள் சண்டைக்கு வரவேண்டாம்.

ஒரு அழுத்தமான கவிதை ஒரு தாயின் பிரசவ வேதனையைக் கொண்டிருக்க வேண்டும். பல மணிநேர அவஸ்தைகளுக்கு ஈடுகொடுத்து அதை வெடிக்க வைக்கும் தருணத்தில் கச்சிதமான வார்த்தைகளையும், படிமங்களையும் அழுந்தக் கோர்த்து எழுதிப் பார்க்க வேண்டும். படிப்பவர்களின் இதயத்தை அசைத்து மூளையில் ஒரு புதிய அனுபவத்தை, “நாமோடு” முரண்படும் “நானின்” சுயவிமர்சனத்தை, மனதில் கரையாமல் தங்கி வினையாற்றும் வகையில் வேதியியல் சேர்க்கையை கவிதை கொண்டிருக்க வேண்டும்.

நல்ல கவிதைகள் படித்து நாளாயிற்று என்று புலம்பிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. வினவின் வாசகர்களிடமிருந்து நல்ல கவிதைகள் வரக்கூடும் என்ற நம்பிக்கையிலிருந்தே இந்த யோசனை!

எழுதுங்கள். முழக்கங்களை கவிதைகளாக்கும் முயற்சி வேண்டாம். சமூக, பண்பாட்டுக் கவிதைகளில் தேறும் போதே நல்ல அரசியல் கவிதைகள் பிறக்கும். மற்றவருக்கு உபதேசம் செய்யும் வகையில் எழுதுவதைத் தவிர்த்து நாம் ஏன் அப்படி இல்லை, அல்லது அப்படி இருக்கிறோம் என்ற சுயவிமர்சனத்தை கவிதை அனுபவமாக எழுதுங்கள். உங்கள் வேலை, குடும்பம், நட்பு, பிரிவு, தோழமை இதன் கள, காட்சி, இயக்க, நினைவு முரண்பாடுகளை கவிதையாக்குங்கள்.

வினவில் சனிக்கிழமை தோறும் கவிதைகள் வெளியிடுவோம். மற்றபடி ஒரு கவிதை ஏன் பிரசுரமானது, ஏன் பிரசுரமாகவில்லை என்று நீங்கள் கேட்பதும் நாங்கள் அதற்கு பதில் சொல்வதும் சாத்தியமில்லை. இதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். கூடவே புதிய கலாச்சாரத்தில் வந்த மற்றும் சில மொழிபெயர்ப்பு கவிதைகளையும் இத்துடன் இணைத்து வெளியிடுகிறோம். அவை கற்றுக் கொள்வதற்கு பயன்படும். எந்த அளவுக்கு நாம் ஏராளமான நல்ல கவிதைகளை படிக்கிறோமோ அந்த அளவு நாம் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வி, தயக்கத்திலிருந்து நல்ல கவிதைகள் பிறக்கும்.

விரைவில் வினவின் வாசகர்களில் சிலர் நல்ல கவிஞர்களாக உருவாவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

*************

இந்த அறிவிப்பை ஒரு நல்ல கவிதையுடன் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் இங்கே ஒரு கவிதை!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26

தோழர் இடானியா மற்றும் அவரது மகள் - 1976

தோழர் இடானியா  – 1976


இடானியாவின் கடிதம்!

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!

  • இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

(”சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.) – புதிய கலாச்சாரம், ஜனவரி’ 2000

இருபத்தி ஆறு வயது போராளி இடானியா தனது மகளுக்கு எழுதிய கடிதம்தான் இது. கடிதத்தை கவிதை வடிவில் மாற்றியிருக்கிறோம். வாழ்வின் முழுமை பற்றியும், கடமை பற்றியும், தனிப்பட்ட நேசத்தைக் கூட சமூக உறவின் வெளிச்சத்தில் நேசிக்கும் இந்த இளம் போராளியின் வார்த்தைகளும், வரிகளும் செயலற்றவர்களின் பாதுகாப்பான இதயத்தை உலுக்குகிறது. அவளது சிறிய குண்டுப் பெண்ணுடன் கிடார் வாசித்து புரட்சியின் கடமைகளை நிறைவேற்ற நினைக்கும் எதிர்பார்ப்பு கண்ணீரை வரவழைக்கிறது. ஆம். நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.

http://www.vinavu.com/2009/08/22/poems-intro/

Last Updated on Saturday, 22 August 2009 07:21