Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்

புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்

  • PDF

இக் கைது புலித் தலைமையின் அழிப்பின் பின் உருவான மற்றொரு அதிர்ச்சி தான். பெரும்பான்மை தமிழர்கள் வைக்கும் நம்பி;க்கைகள் மீதான, மற்றொரு அரசியல் அடிதான். பேரினவாதம் தமிழினம் மீதான ஒடுக்குமுறையை கையாள்வதில், மேலும் ஒருபடி இதன் மூலம் முன்னேறுகின்றது.

பேரினவாதம் தன் பாசிசம் மூலமான கொடூரமான ஒடுக்குமுறையை, தமிழினத்தின் மேல் மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை. இலங்கை மக்கள் மேலான சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையாகவே, புலியழிப்பை தன் வெற்றியாக்கி அதை ஏவி வருகின்றது. இந்த வகையில் கே.பி கைது, அதற்கு மேலும் உதவுகின்றது. இந்த வகையில் இந்த பாசிச அரசின் கொடுமையான கொடூரமான மக்கள் விரோத ஆட்சியை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மாபியா கே.பியின் கைதையும், நாடு கடத்தலையும், இதன் பின்னான  சித்திரவதையையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதை அம்பலப்படுத்தி போராட வேண்டியுள்ளது.

 

மறுதளத்தில் கே.பி என்ற புலி மாபியா தலைவர் அரசியல் ரீதியாக இருத்தல், தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்கே எதிரானது. தமிழ்மக்களின் மீட்சிக்கு எதிரானது. புலிப்பினாமிகளின் அரசியல் இருப்புத்தான், இன்னமும் தமிழினம் சுயமாக தங்கள் சொந்த நலனுடன் சிந்திக்கவும் செயல்படவும் தடையாக உள்ளது. மண்ணில் மக்கள் முதன்முறையாக புலிக்கு வெளியில் இன்று சிந்திக்கின்றனர், செயல்படத் தொடங்குகின்றனர். பேரினவாதத்தின் கொடுமைகளை மட்டுமல்ல, அவர்களின் கூலிக் குழுக்களையும், புலிகளையும் கூட மக்கள் தங்கள் சுயமான பார்வை ஊடாக பார்க்கத் தொடங்குகின்றனர்.

 

இந்த நிலைமை புலத்தில் ஏற்படா வண்ணம், பினாமிப் புலிகள் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு தடுக்கின்றனர். மக்கள் தங்களாக இலங்கை அரசை சுயமாக எதிர்கொள்ளாத வரை, தங்களுக்கான ஒரு விடுதலையை ஒருநாளும் பெறமுடியாது. புலிகள் கடந்த காலத்தில் மக்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை. இனியும் எதையும் அவர்களால் செய்யமுடியாது. அதற்கான அரசியல் அவர்களிடம் இருந்ததில்லை. புலிகளின் அரசியல் ரீதியான முழுமையான அழிவு பின்பு தான், மக்கள் தமக்கான புதிய ஒரு போராட்டத்தை இனம் கண்டு உருவாக்க முடியும். புலிகள் ஊடான எந்தப் போராட்டமும், எதிர்காலத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. இதை கடந்த எம் வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

 

நாடு கடந்த தமிழீழம், புதிய புலித் தலைமை, மீண்டும் புலி என்ற கட்டமைப்புக்கு பின்னால், இருந்தது என்ன? மாபியாத்தனமும், இதன் மூலம் பினாமிச் சொத்தை சிலர் தம் வசப்படுத்துவதும் தான். பினாமிச் சொத்தாக உள்ள மக்கள் பணத்தை, தமிழ் மக்களுக்கான பொது நிதியமாக மாற்ற முற்படவில்லை.

 

தமிழ் மக்களின் விடுதலைக்கான, நலனுக்கான எந்த ஒரு அரசியலும் இதன் பின் இருக்கவில்லை. புலிகளின் கடந்த வரலாற்றில் கூட, இது இருக்கவில்லை. கே.பி மாபியாவாக இருந்து, ஆயுதக் கடத்தல் தொழிலை புலிக்காக நடத்தியவன். ஆயுதமே, போராட்டமாக புலிகள் கருதினர். இதனால் இந்த மாபியாவான கேபி யை, புலியின் தலைமைக்குரிய ஒரு தகுதியாக்கியது. அதாவது புலியின் தேவையை ப+ர்த்திசெய்த மாபியாத்தனம், கேபி புலியாக இருக்கும் தகுதியை வழங்கியது. இதன் மூலம் புலத்து நிதிவளத்தையே, இந்த மாபியாத்தனம் முழுமையாக தனக்குக் கீழ் கட்டுப்படுத்தியது.

 

புலித்தலைமை இந்த மாபியாக்களிள் துணையுடன் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், கே.பி என்ற மாபியா தன்னைத்தான் புலியின் புதிய தலைவராக்கிக் கொண்டார். இவர்களுக்கு இடையில் பினாமிச் சொத்து சார்ந்து உருவான உள் முரண்பாடுகள், குழிபறிப்புகள், ஆளுக்காள் செய்த அவதூறுகள், ஆளையாள் காட்டிக் கொடுக்கும் ஆள்காட்டித்தனமாக மாறியது. மறுபக்கத்தில் மண்ணின் புலித் தலைமையை அழிக்க, இந்த புலத்து மாபியாக்களுடன் தொடர்பை பேணிய சர்வதேச உளவு அமைப்புகள், தொடர்ந்தும்  இவர்களின் நம்பிக்கைக்குரியவராகவே தொடர்ந்தனர்.

 

இவர்கள் மூலம் தமிழ் மக்களை தாம் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்று நம்பினர். மண்ணின் தலைமையை அழிக்க திட்டமிட்டு வழிகாட்டிய சர்வதேசக் கூட்டாளிகளை, தமிழ் மக்களுக்கு அவர்களை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் வண்ணம் தொடர்ந்து கேபி வழிநடத்தப்பட்டார். வன்னியில் என்ன நடந்தது என்பதை, மக்களுக்கு கேபி இதன் மூலம் மூடிமறைத்தார்.

 

இந்த தகவல் முழுமையாக மக்கள் முன் வெளிவராமல் இருக்கும் வண்ணம், இவரை வழிகாட்டியவர்களே இவரின் கைதுக்கும் கம்பளம் விரித்தனர். இதற்கு கேபியின் மாபியாத்தனமும், புலிப்பினாமிகள் நடத்திய சொத்துக்கான முரண்பாடுகளும், கேபியின் கைதுக்கு அடிப்படையாகவும் துணையாகவும் மாறியது. இதற்கமையவே பேரினவாதப் பாசிசத்துக்கு, உலக நாடுகளின் துணை இருந்துள்ளது.

 

சர்வதேச ரீதியாக புலிகள் தங்கள் பாசிச மற்றும் மாபியாத்தனத்தால் தனிமைப்பட்டு அம்பலமாகி, கேட்பாரின்றி நிற்கின்றது. இது பேரினவாத அரச பாசிசம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரச பயங்கரவாதத்துக்கு துணையாக, மாறி நிற்கின்றது.

 

இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் புலிக்கு பின் நின்று, அந்த சிந்தனை முறைக்குள் நின்று, ஒருக்காலும் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கவும் போராடவும் முடியாது. அதை உலகம் காது கொடுத்து  கேட்காது. ஏன், புலிகளும் கூட மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

 

நீங்கள் மக்களுக்காக புலிக்கு வெளியில் சுயமாக சொந்தக் காலில் நின்று போராட முனையுங்கள், சிந்தியுங்கள். புலிப்பினாமிகள் பின்னுள்ள உங்கள் பணத்தை, தமிழருக்கான ஒரு பொது நிதியமாக்க குரல் கொடுங்கள். தமிழ் மக்களுக்காக, இலங்கை வாழும் அனைத்து மக்களுக்காக, பேரினவாத சிறைக் கொட்டகைளில் நடக்கும் சித்திரவதைக்கு எதிராக, சுயமாக சொந்தக் காலில் நின்று குரல்கொடுக்க முனையுங்கள். புலிக்கு பின் நின்று இதை நீங்கள் செய்யவும் முடியாது, ஏன் அதை உலகம் கேட்கவும் மாட்டாது. உடனடித் தேவை உங்கள் சிந்தனையில், நடத்தையில் ஒரு மாற்றம். இதுதான் மக்களுக்கு உதவும்.

 

பி.இரயாகரன்
08.08.2009       

Last Updated on Monday, 10 August 2009 08:41