Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்

சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்

  • PDF

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

 

கேரளத்தின் கடற்கரையோர மீனவ கிராமமான மராத்தில், கடந்த 2002இன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இந்து இளைஞருக்கும், அதனை தட்டிக்கேட்ட முஸ்லீம் இளைஞருக்கும் மோதல் உருவானது. இம்மோதல் பின்னர் மதக்கலவரமாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.

 

ஜனவரி 2002இல் நடந்த இந்த கலவரத்தில் இரு மதத்தையும் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், முஸ்லீம்களின் வீடுகளும், சொத்துக்களும் சூறையாடப்பட்டன. கொல்லப்பட்டவர்களுக்காக சவக்குழி வெட்டிக் கொண்டிருந்த முஸ்லீம் பெரியவர் அபுபக்கர் என்பவரைக் கூட விட்டு வைக்காமல், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர்.

 

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரசு அரசு நழுவிக் கொண்டது. தங்களுக்கு நீதி கிடைக்காத ஆத்திரத்தில், அபுபக்கரின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் 8 பேரை மே மாதம் 2003இல் அபுபக்கரின் உறவினர்கள் படுகொலை செய்தனர். கொலையானவர்களில் புஷ்பராஜ் என்ற உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர், அபுபக்கர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.

 

அபுபக்கரைக் கொன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, இம்முறை உடனடியாக நூறுக்கும் மேலான முஸ்லீம்களைக் கைது செய்தது. ஊடகங்களும், அரசும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு குறித்து மயிர் பிளக்க விவாதம் செய்தன. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான பல விதமான பொய்ச் செய்திகளை அதிகாரப் பூர்வமாகவே பரப்பினர். இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துவதற்கு பதில், அவற்றுக்கு விளக்கம் கொடுத்து லாவணி பாடிக் கொண்டிருந்தன சி.பி.எம்.மும், காங்கிரசும்.

 

இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தாக்குதலின் காரணமாக, ஏறக்குறைய 500 முஸ்லீம் குடும்பங்கள் ஊரைக் காலி செய்து கொண்டு நிவாரண முகாம்களுக்கும், வேறு ஊர்களுக்கும் சென்றனர். காலியாய்க் கிடந்த முஸ்லீம்களின் வீடுகளை "மதச்சார்பற்ற' காங்கிரசு அரசின் காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையடித்து சூறையாடினர் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள். அந்த பகுதியே முற்றிலுமாக ஆர்.எஸ்.எஸ்இன் ஆட்சிப் பிரதேசமாக மாறிவிட்டிருந்தது.

 

மராத் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழைவதை ஆர்.எஸ்.எஸ் தடை செய்திருந்தது. அன்றைய முதலமைச்சர் காங்கிரசின் அந்தோணியே கூட இந்து பயங்கரவாதிகளின் நிபந்தனைகளின்படி நடந்து கொண்ட பின்னர்தான் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தனர். கிராமத்திற்குள் மிகச் சுதந்திரமாக நுழைந்து வெறியேற்றிக் கொண்டிருந்தான், இந்து மதவெறி பயங்கரவாதியான பிரவீன் தொகாடியா.

 

1970களில் இருந்து இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது ""ஷாகா''க்களை நடத்தி மதவெறியை ஊட்டி வளர்த்து வந்துள்ளது. 2002 மராத் கலவரத்திற்கு முன்னும், பின்னும் காங்கிரசும், சி.பி.எம்முமே கேரளாவை ஆண்டுள்ளன. ஆனால், இவர்கள் இந்து மதவெறியைத் தூண்டி கலவரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களே மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர்.

 

2002 மதக் கலவரத்தின் போது அரசு பாராமுகமாக நடந்து கொண்டதன் மூலம் கலவரத்தில் மிக முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. பயங்கரவாதிகளைக் காப்பாற்றியது. அந்தக் கலவரத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த 392 பேரில் 213 பேர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்யைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கு முற்றிலும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான இந்து பயங்கரவாதிகள் உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் முழுமூச்சில் மதவெறி பிரச்சாரத்தில் இறங்கினர். இன்று வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், 2003இல் கைது செய்யப்பட்ட 138 முஸ்லீம்களுக்கும் வழக்கம் போல பிணை மறுக்கப்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

2002இல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால், 2003இல் நடந்த பழிவாங்கும் படுகொலையில், கொலை செய்யப்பட்ட இந்துவெறியர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும் வழங்கியது "மதச்சார்பற்ற' காங்கிரசு அரசு. இதுவரை இந்தியாவில் நடந்த எந்த மதக் கலவரத்திலும் இந்தளவுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில்லை.

 

2002இல் நடந்த கலவரத்தின் போது உடனடியாக பெரிய அளவில் போலீசு படைகளை இறக்கி பாதுகாப்பை வழங்கிய அரசு, 2003இல் நடந்த படுகொலைக்குப் பிறகு அந்த பகுதியின் பாதுகாப்பை முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளிடம் விட்டது. 2003இல் நடந்த படுகொலைகளை, பழிவாங்கும் நடவடிக்கை என்று டி.ஜி.பி. கே.ஜெ.ஜோசப் கூறினார். ஆனால், அரசும், ஊடகங்களும் இந்த சம்பவத்தை மத அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட சதியாகச் சித்தரித்தன. சி.பி.எம். ஆட்சியின் போது வெளியிடப்பட்ட நீதிமன்ற விசாரணை அறிக்கை இதையே வாந்தியெடுத்திருந்தது.

 

அந்த அறிக்கையில், 2002இல் நடந்த கலவரத்திற்கும் 2003இல் நடந்த படுகொலைகளுக்கும் தொடர்பே இல்லாதது போல குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.க்கும் இந்த மதக் கலவரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது. முஸ்லீம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் இவையனைத்திற்கும் காரணம் என்றும், அவர்கள்தான் மதவெறி பிரச்சாரம் செய்தனர் என்றும் குறிப்பிடும் அறிக்கை, மராத் கிராமம் முழுவதையும் இந்து மதவெறியூட்டி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பங்கை மறைத்தது.

 

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருப்பது குறித்தோ அல்லது போலீசு துணையுடன் முஸ்லீம்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்தோ அறிக்கையில் மூச்சு கூட விடப்படவில்லை . மராத் பகுதியே இந்துத்துவ பயங்கரவாதிகளின் விடுதலைப் பிரதேசமாக இருப்பது குறித்தும் எதுவும் பேசப்படவில்லை . இதைத்தான் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டது "முற்போக்கு', "மதச்சார்பற்ற' சி.பி.எம். அரசு.

 

முஸ்லீம்களாக பிறந்த ஒரே பாவத்தைச் செய்த மராத் மீனவ மக்களின் மீதான இந்துத்துவ அரசு பயங்கரவாதம் இத்துடன் நிற்கவில்லை. 2003இல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வழக்கில் 67பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜனவரி 2009இல் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், 2002 கலவரம் குறித்த வழக்கோ இன்று வரை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

 

இந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் பிணை கிடைக்காமல் சிறையிலிருந்த 78 முஸ்லீம்கள் இன்று வாழ்க்கையைத் தொலைத்த விரக்தியில் பேசுகின்றனர். சிறையில் காவல்துறையின் சித்திரவதைகளினால் உடல் நைந்து துவண்டு போயுள்ளனர். அவர்களது குடும்பங்கள் காப்பாற்ற ஆளின்றி பஞ்சை பாராரிகளாக சீரழிந்துவிட்டன. அவர்களது வீடுகளும், மீன்பிடி படகுகளும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. 2003க்குப் பிறகு மராத்துக்கு திரும்பிய முஸ்லீம் குடும்பங்களோ சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு யாதொரு நிவாரணம் வழங்கப்படவில்லை.

 

2003இல் மராத் சென்ற ஒரு நிருபரிடம் இந்துத்துவ பயங்கரவாதிகள் பின்வருமாறு கூறினர்: ""இங்கு இன்னொரு குஜராத்தை நடத்தினால்தான் முஸ்லீம்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.'' அவ்வாறே, இன்னொரு குஜராத்தை கேரளாவில் நடத்திக் காட்டியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள். 2002இல் மோடி அரசு குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், இந்து பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாகவும் எப்படி செயல்பட்டதோ, அதே போலத்தான் கேரளாவில் சி.பி.எம். மற்றும் காங்கிரசு அரசுகளும் செயல்பட்டுள்ளன. கோத்ராவில் கொல்லப்பட்டவர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே குஜராத் கலவரம் நடந்தது என்று சொன்ன குஜராத் அரசுக்கும், 2003இல் நடந்த படுகொலைகள் மதக் கலவரங்களை தூண்டும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் சதி என்ற கேரள சி.பி.எம்.காங்கிரசு அரசுகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

 

தனபால்

 

 

Last Updated on Monday, 10 August 2009 10:28