Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

எம் மக்களுக்கு நடந்த அனைத்து மனிதவிரோதங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், கடைந்தெடுத்த சமூக விரோதிகள்

  • PDF

இவர்கள் எந்த வேஷமும் போட முடியாது. மூடிமறைத்து, சமூக விரோத வேஷம் மட்டும்தான் போட முடியும். புலிகள் முதல் அரசு வரை மனித விரோதங்களை விதைத்தது. மனித அவலங்களையே தங்கள், அரசியல் விளைவாக்கியவர்கள்.

இதுவோ இன்று மக்கள் முன், எங்கும் நிறைந்த அனைத்தும் தழுவிய உண்மையாக உள்ளது. மக்கள் அனைவருக்கும், இவை தெரிந்த உண்மைகள். வாழ்வு சார்ந்த அனுபவத்துடன் கூடிய எதார்த்தம். இதுவோர்  உண்மை. இன்று இதை ஏற்க மறுப்பவர்கள், சமூக விரோதிகள்தான். அதைப் பற்றிப் பேசாது, அதை கவனமாக தவிர்த்து, மனித அவலங்கள் பற்றி பேசி நடிப்பவர்கள் பக்கா மோசடிப் பேர்வழிகள்.

 

எங்கும் நிறைந்த உண்மை இப்படி இருக்க, அதை ஒரு தலைப்பட்சமாக ஒரு தரப்புக்கு எதிராக மட்டும் காட்டி நிற்பது பாசிசத்தின் இன்றைய அரசியல் உத்தியாகும். இதற்கு ஏற்ப மனித அவலத்தைக் காட்டி, அரசியல் செய்வது கடைந்தெடுத்த பாசிட்டுகளின் வக்கிர புத்தியாகும். இது மக்களை தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்க, பாசிசம் கையாண்ட கையாளுகின்ற உத்தியாகும். பாசிசமோ, இன்று இப்படி அப்பாவிகள் வேஷம் போட்டுக் கொண்டு வருகின்றது. அதாவது புலி பாசிசத்தைக் காட்டி "ஜனநாயகம்" வேஷம் போட்டது போன்று, அரச பாசிசத்தை காட்டி "மக்கள்" என்றும், தாம் "எதுவுமறியாத" அப்பாவிகள் என்றும் வேஷம் போடுகின்றனர்.

 

இதற்கு மாறாக சாதாரணமான பெரும்பான்மை மக்கள் தம் வாழ்வைச் சுற்றியும், தங்கள் சொந்த பந்தங்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து, புலிப் பாசிச அரசியலுக்கு முழுக்கு போடுகின்றனர். அவர்கள் இன்று கற்றுக் கொண்டதோ அதிகம். தாங்கள் விடுதலையின் பெயரில் ஏமாற்றப்பட்டதையும், தங்கள் அறியாமையை வைத்து சிலர் சம்பாதித்ததையும், தம்மைச் சுற்றிய வாழ்வின் எதார்த்தத்துடன் புரிந்து கொள்கின்றனர். இங்கு அவர்கள் உழைத்து வாழும் மக்களாக இருக்கின்றனர்.

 

இந்த மனித அவலத்துக்கு தங்கள் தரப்பில் புலிகள் தான் காரணம் என்பதை புரிந்து, அந்த புலி அரசியலுக்கு, அதன் பம்மாத்துக்கு முழுக்குப் போடுகின்றனர். இப்படி பெரும்பான்மை மக்கள் பாசிசத்தின் வீம்புகளை புரிந்து, அதன் மனித விரோத வக்கிரத்தை தம்மில் இருந்து துறக்கின்றனர்.

 

ஆனால் பாசிட்டுகள் அப்படியல்ல. இந்த நிலைமைக்கு புலிகளல்ல, மகிந்தாவும் சர்வதேச நாடுகளும் தான் காரணம் என்கின்றனர். இதன் மூலம் புலி பாசிசத்தை, சமூகத்தின் முன் மீண்டும் திணிக்க, அறிவு சார்ந்த பாசிசக் கும்பல் முனைகின்றது. இதற்கு அது "ஒன்றும் தெரியாத அப்பாவி" வேஷம் போடுகின்றது.

 

புலிகள் மண்ணில் இருந்த காலத்தில் பல வேஷம் போட்டவர்கள் இவர்கள்.  புலி வானொலிகளிலும், புலித் தொலைக் காட்சிகளிலும், புலி இணையங்களிலும் "மனிதத்தின்" பெயரில் குலைத்தவர்கள். பொதுவான மனித அவலத்தை தங்கள் பேசும் பொருளாக எடுத்துக்கொண்டு, பாசிசத்துக்கு கடைவிரித்தனர். பொதுவான மனித அவலத்துக்குள் தம்மை மூடி மறைத்துக் கொண்டு, அவை தமக்கு நடந்ததாக கூறியும், அழுதும் நடித்தும் பாசிசத்தை நிலைநாட்ட பல நாடகமாடினர்.

 

இப்படி தமிழன் பற்றி பொது உண்மைகளை, தங்கள் உண்மையாக காட்டியே பாசிட்டுகள் தமிழினத்தின் மேல் சவாரி செய்தனர். பாசிட்டுகள் பொய்களை மட்டுமல்;ல உண்மைகளையும் கூட, தங்கள்  மோசடிகள் மூலம்தான் மனித குலம் மீது திணித்தனர். இதன் மூலம் தமது தேவைக்கு ஏற்ப, பொதுவான மனித அவலத்தை முன்னிறுத்தி பாசிசத்தை அறுவடை செய்தனர். இதற்கு அவர்கள் நாய் வேஷம் வரை போட்டனர். அப்பாவி வேடம் போட்டனர். இதை தமது அறியாமையின் வெளிப்பாடாக காட்டினர். கடந்த காலத்தில், இப்படி புலிப் பாசிசத்தை சந்திக்காதவர்கள் கிடையாது. பாசிசப் படுகொலைகளின் போது கூட, இதே பாணியில்தான் அணுகி பலரைக் கொன்றவர்கள். பேச அழைத்துக் கொன்றனர். ஒன்றாக  உணவை உண்டபடி, பக்கத்துக் கோப்பையில் நஞ்சை வைத்துக் கொன்றனர். தன்னோடு படுத்தவனை படுத்தபாயில் வைத்து கொன்றனர். மார்க்சியம் பேசியபடி, தோழனாக தோளில் கையை போட்டு, கழுத்தை அறுத்துக் கொன்றனர். மகனைக் கொண்டு தாயை கொன்றனர். எப்படி எத்தனையோ சம்பவங்கள். இதற்கு ஏற்ப பாசிசம் எத்தனையோ வேஷங்கள், நடிப்புகள். மற்றவனை ஏமாற்றி மோசடி செய்வது எல்லாம், அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. இதைத்தான் புலிப்பாசிசம் அன்றும் கொண்டிருந்தது, இன்றும் கொண்டிருக்கின்றது.

 

புலிப் பாசிசத்தின் கடந்தகால அணுகுமுறை இதுதான். தங்கள் அரசியல் கருத்தை முன்வைத்து, அதன் மூலம் சமூகத்தை வெல்ல வக்கற்ற நிலையில் இருந்தனர். உண்மை, நேர்மை எதுவும் அதில் இருக்கவில்லை. மாறாக பொதுவான மனித அவலத்தை முன்வைத்து, மக்களை ஏமாற்றியது. இதன் மூலம் தன் பாசிசத்தை சமூகம் மீது திணித்தது.

 

இன்று நிலைமை என்ன? முதலில் இவர்கள் எந்த சுயவிமர்சனமும் செய்வது கிடையாது. பெரும்பான்மை மக்களோ, இந்த பாசிசத்தின் விளைவை தங்கள் சொந்த அனுபவத்தின் ஊடாக புரிந்து தெளிந்து வருகின்றனர். தமிழ் பாசிசம் ஏற்படுத்திய பல அவலக் கதைகளை, தமக்குள் முன்வைக்கின்றனர். ஆனால் இதில் இருந்து விலகி, எதுவும் நடவாதவர்கள் போல் பாசிட்டுகள் நடிக்கத் தொடங்குகின்றனர். மக்களின் பொது அவலங்களையும், அவர்களின் அகதி வாழ்வு சார்ந்த துயரங்களையும் முன்னிறுத்தி, அதனூடாக தங்கள் புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

 

இதற்கு தங்களை அப்பாவிகளாக காட்டிக்கொள்கின்றனர். அனாதையாக, பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொள்கின்றனர். உண்மையான அகதி வாழ்வையும், பாதிப்புகளையும் மோசடியாகவே தங்கள் பாசிசத்துக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். அப்பாவியான தங்களின் அறியாமையே, இதை புரிந்துகொள்ள முடியாத அனைத்துக்கும் காரணம் என்று பாவனை செய்கின்றனர். சிறந்த பக்கா நடிகர்களாக அரசியல் அரங்கில் நுழைகின்றனர்.

 

இவர்கள் அகதி வாழ்வு முதல் இந்தியா மற்றும் ஏகாதிபத்தியம் வரை, தம் பேசும் பொருளாக எடுக்கின்றனர். புலிகள் இந்தியா மற்றும் ஏகாதிபத்தியம் வரை நக்கியது எப்படி என்ற கதை விவாதத்துக்கு எடுப்பதில்லை. இதில் எதுவும் அறியாத அப்பாவிகள் வேஷம் போடுகின்றனர்.

 

ஆனால் புலிகளின் பாசிசமும் அது ஏற்படுத்திய மனித அவலமும், எங்கும் நிறைந்த பொது உண்மையாக உள்ளது. ஆனால் இந்த அப்பாவி வேஷம் போடும் நடிகர்களுக்கு மட்டும்,   இந்த உண்மைகள் தெரிவதில்லை.

 

அகதி வாழ்வு முதல் ஜ.நா வரை, அவை எப்படி மனிதர்களுக்கு எதிரானதாக உள்ளது என்று விபரங்கள் அடங்கிய தகவலை வைத்திருப்பார்கள், புலிகள் எப்படி மக்களுக்கு எதிராக செயல்பட்டனர் என்ற தகவலை மட்டும், இவர்கள் தெரிந்திருக்காத அப்பாவிகளாக வேஷம் போடுகின்றனர். இப்படி பாசிட்டுகள் நாய் வேஷம் வரை போட்டு நக்குவதும் அழுவதும், குலைப்பதும், குழைவது, கடிப்பது என்று, எல்லா வேஷமும் போடுவார்கள். இணையங்கள் முதல் தொலைக் காட்சி ஊடகங்கள் வரை, மக்களின் அவலத்தினை காட்சிப் பொருளாக்கியே,  புலிப் பாசிசம் தன்னை தக்கவைக்க முனைகின்றது. 

                            

பி.இரயாகரன்
16.07.2009

 

Last Updated on Thursday, 16 July 2009 19:07