Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் நேபாள புரட்சியும் சர்வதேச உறவுகளும்: ஜோன் மாக்

நேபாள புரட்சியும் சர்வதேச உறவுகளும்: ஜோன் மாக்

  • PDF

 நேபாளத்தின் புரட்சிகர உள்நாட்டு யுத்தமானது ஏப்பிரல் 2006 இல் மன்னர் கயேந்திரா மீதான மக்களது வெற்றியுடன் உண்மையிலேயே முடிவுக்கு வந்தது. 2006 நவம்பரில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் மூலமாக இந்த வெற்றியானது சட்டபூர்வ அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டது.

 இந்த உடன்படிக்கையானது தற்போது நேபாள இராணுவம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நேபாள அரச இராணுவம், நேபாள கொன்யூனிஸ்ட்டு கட்சி (மாவோ) யையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் தன்னை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் இது நடைபெறவில்லை. இந்த இராணுவமானது இப்போதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடிMaoist_wall_paintயினாலேயே தலைமை தாங்கப்படுகிறது. இந்த இராணுவமானது, அமெரிக்க “ ஆலோசகரின்” உதவியுடன், சட்டத்தையோ அல்லது அதன் தண்டனைகளையோ பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு யுத்தத்தை மூர்க்கத்தனமாக முன்னெடுத்தது. ஆயினும் இப்போது நேபாளத்தில் நடைபெறும் புரட்சிகர மாற்றங்கள் பற்றி குறைத்து மதிப்பிடாமல் இருப்பது முக்கியமானது. இன்று நேபாள இராணுவத்திற்கும், புரட்சிகர ஆயுத படைகள் (புரட்சிகர மக்கள் இராணுவம்) இற்கும் சமாதான உடன்படிக்கையின்படி சாராம்சத்தில் சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நேபாளியர்களே பேச்சுவார்த்தையின் மூலமாக உருவாக்கினார்கள். இது ஐ. நா வின் உதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது.

1996, பெப்ரவரி மாதம் 13ம் திகதி தலைமறைவாக இருந்த நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி (மாவோ)யினால் மக்கள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், 2000 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நேபாள அரச குடும்பம் படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான காலகட்டத்தில்தான் அது தீவிரம் பெற்றது. அதுவரையிலான காலமும் இந்த போராட்டமானது, பிராந்திய அளவில், உள்ளுர் கெரில்லா படைகளினால் பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களே நடத்தப்பட்டு வந்தன. நேபாள இராணுவம் மீது தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. மன்னர் குடும்பத்தில் படுகொலைகளை அடுத்து இந்த போராட்டமானது முழு அளவிலான புரட்சிகர உள்நாட்டு யுத்தமாக மாற்றம் பெற்றது. வெகுஜன அடித்தளத்தை கொண்ட புரட்சிகர படையானது கணிசமான பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் விடுதலை இராணுவத்தையும் கொண்டிருந்தது. மன்னரும் அவரது உடனடி குடும்பத்தவரும் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாளிய தேசிய இராணுவமானது புரட்சியாளர்களுக்கு எதிராக தாக்குதலில் இறக்கப்பட்டது. இப்போது ஒரு பிரச்சனை எழுகிறது. ‘போரிடும் இரண்டு பிரிவினரும் சர்வதேச சமூகத்தினால் சமநிலையில் வைத்துப்பார்க்கப்படுமா’ என்பதுதான் அதுவாகும்.

செப்ரெம்பர் பதினோராம் திகதி நிகழ்வுகளுக்குப் பின்பு அமெரிக்க அரசு நேபாளத்தில் இராணுவரீதியாக தலையிட்டு, புரட்சியாளர்களை “பயங்கரவாதிகளாக” முத்திரை குத்தி, அவர்களது போராட்டத்தின் நியாயாதிக்கத்தை மறுத்ததுடன், அமெரிக்கர்களது கண்ணோட்டத்தின் படி புரட்சியாளர்களை உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத மோதல்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களிலிருந்தும் ஒதுக்கிவைக்க முயற்சி செய்தது. 2004 ஆண்டிலிருந்து படிப்படியாக நேபாளத்தின் அண்டை நாடுகள் புரட்சியாளர்களது போராட்டத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள தொடங்கியதுடன், “பயங்கரவாதிகள்” என்ற பதத்தையும் சிறிது சிறிதாக கைவிடத் தொடங்கினார்கள். இப்போது நேபாள புரட்சியாளர்கள் நேபாள அரசாங்கத்திலேயே பங்கேற்கிறார்கள். அமெரிக்க அரசு மாத்திரமே புரட்சியாளர்களை இன்னமும் “பயங்கரவாதிகள்” என்று அழைத்து வருகிறது. இந்தவகையான தலையீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய ஆபத்துக்கள் பற்றி இப்போதே எதனையும் திட்டவட்டமாக கூற முடியாத போதிலும், இந்த நிகழ்வுகள் நேபாளத்தில் தொடர்ந்துவந்த அந்நிய தலையீடுகளின் மத்தியில் நேபாளத்தின் சுதந்திரத்தை மீளவும் மறுவுறுதி செய்து கொண்டதை குறிக்கிறது.

Nepal_between_India_and_Chinaநேபாள விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டின் ஆரம்பம்: திபெத்திய “கம்பா” கெரில்லாக்கள்.

மன்னர் பிருதிவி நாராயணன் ஷா ( 1723 – 1775) அவர்கள், நேபாள அரசை உருவாக்கி, அந்த நாட்டை தனது அதிகாரத்தின் கீழ் ஒன்றுபடுத்தினார். இவர் நேபாள நாட்டின் குறிப்பான புவிசார் அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பிடும் போது, “இரு பெரிய வல்லரசுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டு அவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் கத்தியின் மேல் நடப்பதைப் போன்றது” என்று குறிப்பிட்டார். உண்மையில் நேபாளத்தின் வரலாறானது, இப்படிப்பட்ட ஒரு கண்ணோட்டத்தை நியாயப்படுத்தக் கூடிய வகையிலேயே அமைந்துவிட்டுள்ளது. சீனா பலவீனமாக இருக்கும் வேளைகளில் நேபாளமானது இந்தியாவின் மிகப்பெரிய அளவிலான செல்வாக்கிற்கு உள்ளாகி, நேபாளத்தின் சுதந்திரம் என்பதே கேள்விக்குரிய விடயமாகிவிடும். சீனாவின் ஐக்கியமும், அதிகாரமும் சிதைவடைந்திருந்த 1842 தொடக்கம் 1945 வரையிலான ஒரு நூற்றாண்டின்போது நேபாளத்தின் சர்வதேச உறவுகள் முற்றிலும் இந்திய – ஆங்கிலேயரது கட்டுப்பாட்டினுள்ளேயே இருந்தது. இந்த காலத்தில் நேபாளத்தின் தலைநகரான காத்மண்டு நகரில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரேயொரு வெளிநாட்டுப் பிரதிநிதி ஒரு பிரித்தானிய குடியிருப்பாளராவார். இந்தியாவின் சுதந்திரத்தின் பின்பான காலத்தில், புதிய இந்திய அரசானது அதுவரையில் இருந்துவந்த இந்திய – ஆங்கிலேயரது மேலாதிக்கத்தையே நேபாளத்தின் மீது தொடர முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். 1950 இல் ஒரு அசமத்துவமான ஒரு ஒப்பந்தத்தை இந்தியாவானது நேபாளத்தின் மீது திணித்தது. அடுத்துவந்த ஆறு வருடங்கள் இந்தியாவின் இராணுவ படைப்பிரிவொன்று நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நிலைபெற்றிருந்தது. ஆனால் புரட்சிகர சீனாவின் பலம் பெருகும்போது நேபாளத்தின் முன்னெடுப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்தன. 1955 இல் நேபாள அரசானது சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதன் பின்பு ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்து கொண்டது. அமெரிக்க மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளுடனும் தனது இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.

1959 இல் சீனாவானது நேபாளத்தின் அயல் நாடான திபெத்தின் மீது தனது கட்டுப்பாட்டை மீளவும் நிலைநாட்டிக் கொண்டது. திபெத்திலிருந்து தப்பிச் சென்ற தலாய் லாமா அமெரிக்க சீ. ஐ. ஏ இனது ஆதரவுடன் இந்தியாவில் இயங்கிய நடவடிக்கைக்கான தளத்திற்கு இடம்பெயர்ந்தார்.

1960 இல் நேபாள மன்னராகிய மகேந்திரா (1955 – 1972) ஒரு சதிப்புரட்சியை மேற்கொண்டு, நேபாள கொங்கிரஸ் கட்சியின் தலைவரான D. P. கொய்ராலாவினால் தலைமை தாங்கப்பட்ட பாராளுமன்ற அரசாங்கத்தை கலைத்துவிட்டார். இதனை அடுத்து கட்சி சார்பில்லாத பஞ்சாயத்து முறையை மன்னரின் விசுவாசிகளைக் கொண்டு உருவாக்கினார். இந்திய அரசானது, நேபாளத்தில் பதவி நீக்கப்பட்ட நேபாள கொங்கிரசு தலைவர்களை தொடர்ந்தும் ஆதரித்து வந்தது. கூடவே, நேபாள மன்னர் காத்மண்டுவிற்கும் திபெத்திற்கும் இடையில் மோட்டார் வாகனங்கள் பயணிக்கக் கூடிய ஒரு சாலையை அமைக்கும் யோசனையை சீனாவிடம் முன்வைத்தபோது, அதனை இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது. 1962 ஆம் ஆண்டின் முதுவேனில் காலத்தில் நிலத்தினால் சூழப்பட்ட நேபாளத்தின் மீது இந்திய அரசு போக்குவரத்து தடையை (blockade) விதித்தது. விரைவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடங்கிய எல்லை யுத்தத்தில் சீனா வேகமாக வெற்றிகளை குவித்து வந்தது. இந்த நிலையில் நேபாளத்துடனும் சச்சரவுகளை தொடர விரும்பாத இந்திய அரசு இந்த தடையை முடிவுக்கு கொண்டு வந்தது. சீனாவுடனான இந்த மோதலானது முதன்மையான எதிரியான “சிவப்பு” சீனாவுக்கு எதிராக அமெரிக்காவிடம் உதவிகளை இந்தியா நாடச் செய்தது.

அமெரிக்காவானது நேபாளத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ள ஒரு நாடாகும்: இதற்கு நேபாளத்துடன் பெரிய அளவிலான வர்த்தக தொடர்புகள் கிடையாது. ஏனைய பல சிறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, மிகவும் குறைந்தளவு உல்லாச பயணிகளே நேபாளத்திற்கு செல்வதுண்டு. ஆயினும் தனது உலகலாவிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கத்தில், அமெரிக்காவானது நேபாளத்தின் உள்விவகாரங்களில் தலையிடும் முதன்மையான வெளிநாட்டுச் சக்தியாக ஆகியுள்ளது. நேபாளத்துடனான அமெரிக்காவின் முதலாவது இராஜதந்திர உறவானது, பிரித்தானியா இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்ட அதேகாலத்தில், 1947 இல் தொடங்கியது. அண்மையில் கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி இயக்குனரான ஜோசப் சட்டர்த்வைட் தலைமையிலா ஒரு குழு இதற்கான விஜயத்தை மேற்கொண்டது. தனது பயணம் பற்றி சட்டர்த்வைட் பின்னாளில் குறிப்பிடுகையில், “நேபாளம் மீதான பிரித்தானியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த நிகழ்வு” என்று குறிப்பிடுகிறார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த அதிகாரியான செஸ்டர் பௌல்ஸ் என்பவரின் தலைமையிலான இன்னொரு குழுவானது 1951 இல் கொரியன் யுத்தம் நடைபெற்றபோது நேபாளத்திற்கு விஜயம் செய்த போதிலும், 1959 இல் திபெத்திய பிரச்சனை வெடிக்கும் வரையில், நேபாளத்துடன் அமெரிக்காவானது நிலையான தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை.

சீனாவுடனான எல்லையுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, இந்தியா தனது எல்லைக்குள் இருந்து சீனாவுக்கு எதிராக செயற்படும் கெரில்லாக்களுக்கு தளவசதிகளை செய்து கொடுக்க துணியவில்லை. ஆனால், வறுமைப்பட்ட நிலைமை காரணமாகவும், நவீன ஆயுதங்களை கொண்டிராத ஒரு பலவீனமான இராணுவத்தை கொண்டிருந்ததுமான ஒரு நிலையில் நேபாள அரசானது, தனது பிரதேசத்தினுள் அமெரிக்கா எடுத்த சீன எதிர்ப்புச் செயற்பாடுகளை தடுக்க முடியவில்லை. சீ. ஐ. ஏ வினால் பயிற்றுவிக்கப்பட்டும், பணம் கொடுத்தும் ஆதரிக்கப்பட்டதான திபெத்திய சீன எதிர்ப்பு கெரில்லாக்களுக்கு நேபாத்தில் தளவசதிகளை அமெரிக்கா ஏற்படுத்திக் கொடுத்தது. 1960 களின் முற்பகுதியிலிருந்து 1973 வரையிலான காலப்பகுதியில், அமெரிக்காவும் அதன் சீ. ஐ. ஏ. யின் கூட்டாளிகளான “கம்பா” கெரில்லாக்களும் சீனாவுடனான எல்லைப் பிரதேச மாவட்டங்களான கிழக்கு நேபாளத்தைச் சார்ந்த வாலாசுங் - கோலா முற்றும் மேற்குப் பகுதியைச் சார்ந்த மாஸ்டுங் ஆகியவற்றை ஆக்கிரமித்து இருந்தார்கள். 1972 இல் அமெரிக்க அதிபர் நிக்சனின் விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசானது பல்வேறு சீன எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கும் வழங்கி வந்த ஆதரவை நிறுத்திக் கொண்டது. இதன் பின்புதான் தனது நாட்டினுள்; இருந்து செயற்பட்டுவந்த சீன எதிர்ப்பு கெரில்லா அமைப்புகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கும் துணிவு நேபாள அரசிற்கு வந்தது. இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட அத்தனை ஆயுதங்களும் அவற்றிற்கான வெடி பொருட்களும் அமெரிக்க தயாரிப்பாக இருந்தது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

King_Birendra_and_Familyமன்னர் பிரேந்திராவின் (1972 – 2001) வெளிநாட்டுக் கொள்கையும், மக்கள் யுத்தத்தின் ஆரம்பமும்

அமெரிக்க சார்பு “கம்பா” எதிர்புரட்சியாளர்கள் நசுக்கப்பட்டதும், மன்னர் பிரேந்திரா சீனாவுடன் தனிப்பட்டதும், நெருக்கமானதுமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். 1961 இல் மன்னரது தந்தையார் சீனாவுக்கு ஒரு இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டார். மன்னர் பிரேந்திராவும் சீனாவுக்கு பலதடவை பயணங்களை மேற்கொண்டார். முடிக்குரிய இளவரசராக இருக்கும்போது 1966 இலும், பின்னர் மன்னராக 1973, 1976, 1978, 1979, 1982, 1987, 1993, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் இவர் சீனாவுக்கு விஜயங்களை அடுத்து அடுத்து மேற்கொண்டார். இந்த விஜயங்களும் இரண்டு தடவைகள் அவர் திபெத்திற்கும் சென்றிருந்தார். இவரது கடைசி பயணம் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. மன்னரது இந்தியாவுடனான உறவோ இதற்கு எதிர்மாறாக, நெருக்கடியும் முறுகலும் மிக்கதாக அமைந்திருந்தது. 1989 இல் மன்னர் பிரேந்திரா, இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, சீனாவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது. இதன்படி நேபாள இராணுவத்திற்கு தேவையான இராணுவ தளபாடங்களை சீனாவிடம் இருந்து பெருவதற்கு ஏற்பாடானது. ‘தியனென்மன்’ பிரச்சனைகளைத் தொடர்ந்து சீனா ஸ்தம்பித்துப் போனதைப் பயன்படுத்தி, இந்தியாவானது நேபாளம் மீதான தனது பொருளாதாரத் தடைகளை பலப்படுத்தியதுடன், மன்னருக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு ஆதரவளித்தது. நேபாளத்தில் பெற்றோலிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் முற்றிய நிலையில், கிளர்ச்சி செய்யும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மன்னருக்கு உதவிசெய்வதான வாக்குறுதியுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் நேபாள தலைநகரான காத்மன்டுவிற்கு வந்து சேர்ந்தார். இதற்கு பிரதியுபகாரமாக இந்திய அரசானது, நேபாள அரசை தன்னுடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தை செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்தம் செய்தது. உண்மையிலேயே இந்த “நட்புறவு ஒப்பந்தமானது” ஒரு மானங்கெட்ட சரணாகதி சாசனமாகும். இந்தியாவிடம் சரணாகதி அடைவதற்கு பதிலாக, மன்னர் பிரேந்திரா ஜனநாய உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருந்த, நேபாள கொங்கிரஸ் மற்றும் கொம்யூனிஸ்ட்டு கட்சிகளால் தலைமை தாங்கப்பட்ட மக்கள்திரள் இயக்கத்திடம் தனது அதிகாரங்களை ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து உருவான 1991 ம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சாசனப்படி, நேபாள இராணுவத்தின் மீதான கட்டளை அதிகாரத்தையும், வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிப்பதில் முதன்மையான பாத்திரத்தையும் தன்னிடம் வைத்துக்கொண்ட மன்னர், உள்நாட்டு விவகாரங்களை நடத்துவதற்கான முழு அதிகாரததையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லும் பொறுப்புடைய அரசியல் கட்சிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். 1991 இன் பின்பு பதவிக்கு வந்தவர்கள் தமது பதவிகளை பாவித்து பணத்தை சுருட்டிக்கொள்வதில் பேரார்வம் காட்டியதனால் தம்மை நன்கு அம்பலப்படுத்திக் கொண்டார்கள். இதே சமயத்தில் போலிசாரும் எதிரணியினரை நசுக்குவதில் சற்றும் சளைக்கவில்லை என்பதை காட்டிக்கொண்டார்கள். போலிசாரின் நடவடிக்கையானது, அவர்கள் முன்பு “கட்சிசார்பற்ற பஞ்சாயத்து” ஆட்சி காலத்தில் நடந்தது போன்றே தொடர்ந்தது. புரட்சிகர சக்திகள் நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி ( மத்திய நிலையம் unity centre) யின் கீழ் அணிதிரண்டார்கள். ஐக்கிய மக்கள் முன்னணி என்ற அமைப்பின் மூலமாக இவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்கள். பாராளுமன்றத்தில் இவர்களது ஒன்பது பிரதிநிதிகள் இடம்பெற்றார்கள். மத்திய – மேற்கு நேபாளத்திலுள்ள இராப்தி பிரதேசத்திலுள்ள வறிய கிராமங்களில் மக்கள் முன்னணி தேர்தல்களில் வெற்றி பெற்றனர். ரோல்பா மாவட்டத்தின் அபிவிருத்தி வாரியத்தின் தலைவராக தேர்தலில் தேர்ந்தெடுக்ப்படட ஜக்கு பிரசாத் சுபேதி போன்ற தலைவர்கள் நேபாள கொங்கிரசினதும், முடியரசுவாதிகளதும் ஆதரவு பெற்ற குண்டர்களின் படுகொலை முயற்சிகளுக்கு இலக்கானார்கள். அரச எதிர்ப்பு கூட்டங்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு இலக்கானது. அவற்றில் உரையாற்றியவர்கள் சுடப்பட்டார்கள். அதிக அளவிலான கட்சி ஊழியர்கள் தலைமறைவாக நேர்ந்தது. சில சந்தர்ப்பங்களில் காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக பதிலடியும் வழங்கப்பட்டது.

Map_of_Nepal1995 இல் கொங்கிரசையும், முடியரசுவாதிகளையும் கொண்ட அரசாங்கமானது ரோல்பாவில் (Rolpa) “ஒபரேசன் ரோமியோ” என பெயரிடப்பட்ட காவல்துறை ஆக்கிரமிப்பை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளின் போது காவல்துறை நடத்திய அட்டூழியங்கள் கிராமப்புற மக்களை கொதித்தெழச் செய்தது. நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி (மத்திய நிலையம்) யின் அங்கத்தவர்களில் இருந்து 1996 பெப்ருவரி மாதம் 13ம் திகதி, நேபாள கொம்யூனிஸ்ட்டு கட்சி (மாவோ ) உருவானது. கட்சி முன்னெடுத்த மக்கள் யுத்த நடவடிக்கைகளுக்கு, மிகவும் மோசமாக நடந்துகொண்டு காவல்துறையின் தளங்கள் இலக்குகளாக அமைந்தன. அடுத்த வருடத்தில் ‘ரோல்பா’( Rolpa) மற்றும் ‘ருக்கும்’ (Rukum) ‘தயா’ மாவட்டங்களிலும் இருந்த காவல்துறையின் தளங்கள் அனைத்தும் கெரில்லா நடவடிக்கைகளில் மூலமாக அழித்தொழிக்கப்பட்டன. ஏனைய மாவட்டங்களிலும் இப்படியான தாக்குதல்கள் தொடர்ந்தன. 2000 ம் ஆண்டு செப்டம்பர் பிற்பகுதியில், நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய போராளிகள் ‘ருக்கும்’(Rukum) தளப்பிரதேசத்திலிருந்து புறப்பட்டு 13,000 அடி உயரமான மலைப்பகுதியில் உள்ள ஒற்றையடி பாதையினூடாக பயணித்து ‘டோல்பா’ (Dolpa)மாவட்ட மையமான ‘டுன்னாய்’ பகுதியிலுள்ள காவல் துறையின் அரணை தாக்குவதற்காக சென்றார்கள். இது பற்றி உள்ளுர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவில்லை. இந்த தாக்குதல் புரட்சியாளர்களுக்கு வெற்றியுடன் நிறைவேறியது. இந்த காவல் அரண் கைப்பற்றப்பட்டதுடன், அதிலிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில், ஆற்றிற்கு அப்புறமாக இருந்த மாவட்ட சிறைச்சாலையிலிருந்த அத்தனை அரசியல் கைதிகளும் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டார்கள்.

மன்னர் பிரேந்திராவினதும் அவரது குடும்பத்தினரதும் படுகொலைகள்

பிரேந்திரா இராணுவத்தை தாக்குதலில் ஈடுபடுத்தவில்லை. தாக்குதல் நடைபெற்ற டுன்னா பிரதேசத்தில், தாக்குதல் நடைபெற்ற காவல் அரணிலிருந்து சில மணித்தியாலம் நடைதூரத்தில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. ஆனால் இவர்கள் காவல்துறையினரின் உதவிக்கு வரவில்லை. ‘ருக்கும்’ மாவட்டம் மற்றும் அதன் அயல் மாவட்டங்களில் இருந்த கடைசி காவல்துறையின் காவல் அரண்களும் தாக்கி அழிக்கப்பட்ட நிலையில் மன்னர் பிரேந்திரா கடுமையான நெருக்குதலுக்கு உள்ளானார். மலைப்பிரதேசத்திலிருந்து செயற்படும் புரட்சிகர இளைஞர்களுக்கு எதிராக இராணுவத்தை தாக்குதலில் இறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. ஆனால் மன்னர் மறுத்துவிட்டார். மாறாக அவர் சீனாவுக்கு பயணமானார். அங்கு அவர் புரட்சியாளர்களுடன் இரகசியமாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. 2001 ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி, மன்னரும் அவரது உடனடி குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த குற்றச்செயல் தொடர்பாக எதனையுமே திட்டவட்டமாக கூறமுடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது. அதாவது, நேபாள அரசு கூறும் கதை – இளவரசர் திபேந்திரா, மது போதையில், தனது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை கோபத்தில் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் கதை – உண்மை என்று பெரும்பாலான நேபாளியர்கள் நம்பவில்லை. காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவரசரை சத்திரசிகிச்சை மூலமாக காப்பாற்ற முயன்று தோற்றுப்போன அறுவை சிகிச்சை நிபுணரின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் இளவரசரது இரத்தத்தில் மதுசாரமோ அலலது வேறு போதைப் பொருட்களோ காணப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அரண்மனையில் பணிபுரிந்த ஒரு பணிப்பெண், அண்மையில் முன்வந்து தனக்கு தெரிந்த விபரங்களை கூறினார். அவரது கூற்றுப்படி, அரண்மனையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இளவரசர் திபேந்திரா தலையிலும் பிடரியிலும் சுடப்பட்டதாக தெரிய வருகிறது.

இது தொடர்பாக சீனா தனது ஆழ்ந்த கரிசனையை உடனடியாக வெளியிட்டது. நேபாளதிலுள்ள “சீன கல்வி வட்டம்” உடைய தலைவரான மதன் ரெக்மி என்பவர், சீன அதிகாரிகளின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இவர் சம்பவம் நடந்த உடனேயே சீனாவுக்கு பயணமானார். அவர் தனது பயணம் முடிந்து நேபாளம் திரும்பியதும் 2001 ஜூலையில் பேட்டியளித்தார். தனது பேட்டியில் மன்னர் சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு காரணமாகவே சதி செய்து கொல்லப்பட்டதாக திரும்பத் திரும்ப தெரிவித்திருந்தார். இந்த தகவல்கள் உத்தியோக பூர்வமானவையல்ல எனக் குறிப்பிட்பார். அத்துடன் அவர் தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல் பற்றி கூறும்போது, இந்த சம்பவங்கள் நடைபெற்றவுடன், அவசரமாக சீன அரசு, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவானது இராணுவரீதியா தலையிடுவதற்கு எதிராக மறைமுகமாக எச்சரித்ததாக தெரிவித்தார்.

கயேந்திரா - இவர் துர்ப்பாக்கிய சம்பவங்கள் நடைபெற்ற போது தலைநகரில் இருக்கவில்லை - மன்னராக பதவியேற்று குறுகிய காலத்தினுள் ரோல்பா மாவட்டத்தின் மையமான ஹொல்லேரி என்ற இடத்திலிருந்த முக்கியமான காவல் அரணை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்: 71 பேரை வேறு சிறையெடுத்துச் சென்றனர். இதனை அடுத்து புதிய மன்னர் கயேந்திரா தனது பிரதம் மந்திரியான கிரிஜா கொய்ராலா மூலமாக முதன் முதலாக இராணுவத்தை நடவடிக்கையில் இறக்கினார். ஆனால் இராணுவத்தின் உள்ளூர் அதிகாரிகளும் புரட்சியாளர்களும் தமக்குள் பேசி இதற்கு ஒரு சுமுகமான தீர்வை கண்டார்கள். இதனை அடுத்து கிரிஜா கொய்ராலா இராஜிநாமா செய்தார். இவரது பதவி விலகலை அடுத்து, நேபாளி கொங்கிரஸ் கட்சியின் இன்னொரு தலைவரான சேர் பகதூர் தூபே என்பவர் புதிய பிரதம மந்திரியாக பதவியேற்றார். இவர் அமெரிக்க தூதரகத்திற்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டிருந்தவராவார். ஒரு போர் நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2001 செப்டம்பரில் புரட்சியாளர்கள் பெரிய அளவிலான பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றினூடாக தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தமது ஆட்சிக்கு முறைப்படி சட்ட வடிவம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மக்கள் விடுதலை இராணுவத்தின் முதலாவது மாநாடும் நடைபெற்றது. ஐக்கிய புரட்சிகர மக்கள் சபையின் தேசிய மாநாடு கூட்டப்பட்டது. இது காவல்துறையினரிடமிருந்த முற்றாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக எழுந்து வரும் மாற்று அரசாங்கத்திற்கான இணைப்பு மையமாக இது செயற்படடது.

கயேந்திராவால் புதிதாக அமைக்கப்பட்ட துபே தலைமையிலான அரசாங்கமானது, போர்நிறுத்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தயாரிப்புக்களை மேற்கொண்டது. இதனை அடுத்து புரட்சியாளர்கள் என அறியப்பட்டவர்கள் மற்றும் புரட்சியாளர்கள் என் சந்தேகிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கின. உள்ளூர் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மக்கள் விடுதலை இராணுவம் பதிற்தாக்குதல்களை தொடுத்தது. டாங் மாவட்டத்தின் மையமான கோராஹி என்ற இடத்திலுள்ள இராணுவ தலைமையகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது இராணுவத்தின் முக்கியமான ஆயுத தளபாடங்கள் புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டின் மற்றைய இரண்டு மாவட்டங்களில் அமைந்திருந்த இராணுவ தலைமையகங்களும் இவ்வாறே வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டன. 2001 ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் திகதி அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தை முழு அளவில் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலைமைகள புரட்சிகர போராட்டத்தின் பண்பு ரீதியான ஒரு உயர்ந்த கட்டத்தை
(புரட்சியாளர்களின் வார்த்தைகளில் கூறுவதானால் “கேந்திர சமநிலை” ) அடைந்ததை காட்டின. இந்த நிலையில், இரண்டு ஆட்சியாளர்கள், அவற்றின் இரண்டு இராணுவங்களுடன் நாடு தழுவிய அளவில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடுவதை இது குறித்தது.

அடுத்து வந்த 2002 ம் ஆண்டு பனிக்காலம் மற்றும் இளவேனில் காலங்களில் கயேந்திராவின் அரசானது அனைத்து சர்வதேச சக்திகளதும் உதவிகளை திரட்டிக்கொள்ள முடிந்தது. இந்திய பி. ஜே. பி. அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஜஸ்வன் சிங் அவர்கள் தனது நேபாள விஜயத்தின்போது முதன் முதலாக புரட்சியாளரை “பயங்கரவாதிகள்” என அழைத்தார். இதனைத் தொடர்ந்து நேபாளி கொங்கிரஸ் அரசாங்கமும் போராளிகளை “பயங்கரவாதிகள்” என்றே அழைக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசானது கணிசமான இராணுவ உதவிகளை நேபாளத்திற்கு அளித்தது. மன்னர் சீனாவுடனான உறவை சீர்திருத்துவதில் கவனத்தை செலுத்தினார். 2002 ம ஆண்டு ஜூலை மாதம் கயேந்திரா சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டது அதன் உச்ச கட்டமாக அமைந்தது. சீனாவின் நேபாள தூதுவரான வூ கொங்வொங் என்பவர் ஏற்கனவே புரட்சியாளர்களை “பயங்கரவாதிகள்” என அழைக்கத் தொடங்கியிருந்தார். இவர் 2002 ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி பேசும் போது, சீனா அரசாங்கமானது நேபாளிய புரட்சியாளர்கள் தம்மை “மாவோயிஸ்ட்டுகள்” என அழைப்பதை விரும்பவில்லை எனவும் “அரச எதிர்ப்பு குழு” என்று அழைப்பதையே விரும்புவதாகவும் குறிப்பிட்டார். சீனத்தூதுவர், தனது தூதரகத்தைச் சேர்ந்த இராணுவ நிபுணருடன் புரட்சி நடைபெறும் கோர்க்கா மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட போது, நேபாள இராணுவம் “நல்ல வேலை செய்து வருகிறது” என்று கூறினார். “தேவையான உதவிகளை” சீனா வழங்கும் என்றும் தெரிவித்தார். செப்டம்பர் 11ம் தின நிகழ்வுகளுக்கு பின்னான நிலைமைகளில், அமெரிக்க ஆட்சியாளர்கள் நேபாளத்தில் மும்முரமாக இறங்கி, ஆயுத மற்றும் ஆட்பல உதவிளை செய்யத் தொடங்கினார்கள். இந்த நிலையில் அமெரிக்க அரசுடன் சீன அரசு முரண்பட்டு நிற்கக் கூடாது என்பதில் அக்கறையாக இருந்தது.

Christina_Rocca_and_King_Gyeaneendraரொக்காவின் காலகட்டம் (2001 – 2004)

தென்னாசிய பிராந்தியத்திற்கான உதவி இராஜாங்க செயலாளராக கிறிஸ்ரீனா ரொக்கா என்பவர் 2001 ஏப்பிரல் மாதம் நியமிக்கப்பட்டதுடன், நேபாள விவகாரங்களில் அமெரிக்க அரசின் செயலூக்கமான இராணுவ தலையீட்டுக் கொள்கை ஆரம்பமாகிறது. அதிகாரபூர்வமான தகவல்களை ஆதாரமாக கொண்டு பார்க்கையில், திருமதி ரொக்கா அவர்கள் 1982 முதல் 1997 வரையான காலகட்டத்தில் சீ.ஐ.ஏ. இல் தீவிரமாக செயட்பட்ட ஒரு அதிகாரியாவார்: 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் தலையீட்டுக் எதிராக நடைபெற்ற சீ.ஐ.ஏ. இன் நடவடிக்கைகளின் போது அதில் நெருக்கமாக பணியாற்றியவராவார். ஆப்கானில் சோவியத் தலையீடு முடிவுக்கு வந்த போது, அதுவரையில் அமெரிக்க அரசாங்கம் ஆப்கான் போராளிகளுக்கு வழங்கிய, ஆனால் இன்னமும் பாவிக்கப்படாமல் மீதமான இருந்த ‘ஸ்டிங்கர்’ எனும் வகையைச் சேர்ந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள், வெளியாரின் கைகளுக்கு போய்ச் சேர்ந்துவிடமல் இருக்க வேண்டுமே என்ற கவலை அமெரிக்க அரசு வந்தது. அதனால் அவற்றை சோவியத் எதிர்ப்பு போராளிகளிடம் இருந்த பெருமளவு பணத்தை கொடுத்தாவது மீளப் பெற்றுக் கொள்வது அவசியம் என்ற நிலைமை அமெரிக்க அரசிற்கு உருவானது. இந்த நடவடிக்கைகளின் போது இதனை நேரடியாக கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர் இந்த ரொக்கா தான். பிற்காலத்தில் இவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தின் வலதுசாரி செனட்டரான பிறவுண்பெக் என்பவருக்கு ஆலோசகராக இருந்தார்: இந்த பிறவுண்பெக் அவர்கள் சீனாவுக்கு எதிரான தீவிரமான நிலைப்பாடு கொண்டவர்: திபெத்தின் சுதந்திரத்திற்காக ஆர்வத்துடன் செயற்படுபவர் என்று அறியப்பட்டவராவர். இந்தவிதமான தகவல்களை பின்புலமாக வைத்துக் கொண்டுதான் ரொக்காவின் காலகட்டத்தை (2001 – 2004) நாம் அணுக வேண்டும்: இந்த காலத்தில் நேபாளத்தில் நடைபெற்ற அமெரிக்க தலையீட்டிற்கும், இந்தியாவில் பதவியிலிருந்த பி.ஜே.பி அரசாங்கத்திற்கும் இடையில் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு நிலவியது.

2001 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மன்னர் பிரேந்திரா கொல்லப்பட்ட சில நாட்களே ஆன நிலையில், காத்மன்டுவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில், நேபாளத்துடனான “பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான அலுவலகம்” ஆரம்பிக்கப்பட்டது. 2001 ம் ஆண்டு ஜூலை மாதம் பிற்பகுதியில் கிரிஜா கொய்ராலா பிரதமர் பதவியிலிருந்த இராஜினாமா செய்த கையோடு, ரொக்கா அவர்கள் நேபாளம் வந்து சேர்ந்தார்: “பாதுகாப்பு” அதிகாரிகளுடனான கூட்டத்திற்காக வந்ததாக கூறப்பட்டது. ரொக்காவுடனான சந்திப்பை மேற்கொண்ட பொழுது துபே அவர்கள் நேபாள பிரதமர் பதவியில் அமர்ந்து சில நாட்களே ஆகியிருந்தன.

2002 ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜெனரல் கொலின் பௌல் நேபாளம் வந்து சேர்ந்த போது, நேபாளத்தில் அவசரகால நிலைமை பிரகடணப்படுத்தப்பட்டு, போர் நட்வடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை. இவருடன் கூடவே ரொக்கா மற்றும் அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்நிலை அதிகாரிகளின் குழுவொன்றும் ஒன்றும் வந்திருந்தது. இராஜாங்க செயலாளர் கொலின் பௌல் அவர்கள் மன்னர், பிரதம மந்திரி மற்றும் இராணுவ தலைமை தளபதி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து புஸ் நிர்வாகம் நேபாளத்திற்கு இருபது மில்லியன் டொலர் ஆரம்ப உதவியாக அறிவித்தது. அத்துடன் கூடவே அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்திய படைப்பிரிவிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட ஒரு இராணுவ ஆலோசகர்களது குழுவொன்றும் நேபாளத்திற்கு போய்ச்சேர்ந்தது. இதற்கு அடுத்ததாக, இராணுவ தந்திரோபாயங்களில் ஆலோசனை வழங்கவல்ல, நேபாள இராணுவத்துடன் களத்தில் நேரடியாக செயற்படக்கூடிய அமெரிக்க குழுவொன்றும் வந்து சேர்ந்தது. நீண்ட காலமாகவே நடைபெற்று வந்த நேபாள இராணு அதிகாரிகளை அமெரிக்க இராணுவ கல்லூரிகளுக்கு மேற்படிப்பு மற்றும் பயிற்சிக்காக வரவழைக்க வேலைத்திட்டங்களும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டன. அமெரிக்காவிலுள்ள இராணுவ கற்கை நெறிகளுக்காக நிலையங்களில் அதிகளவு நேபாள இராணுவ உயர் அதிகாரிகள் பயிற்றுவிக்கப்பட்டனர். நேபாள இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு பெருமளவில் உதவி வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு விஸ்தரித்தது. 2001 ம் ஆண்டிற்கு முன்பு வெறுமனே 35 ஆயிரம் எண்ணிக்கையான வீரர்களைக் கொண்டிருந்த நேபாள படையமைப்புகள், 2005 இல் ஒரு இலட்சத்தையும், 2008 இல் ஒன்றரை இலட்சத்தையும் எட்டியது.

அமெரிக்காவினால் கொட்டிக்கொடுக்கப்பட்ட வளங்களினால் புத்துணர்வு பெற்ற கயேந்திரா – துபே அரசாங்கம் நாட்டினுள் தோன்றி எதிர்ப்புணர்வுகள் பற்றி மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டது: அவசரகால சட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்களித்தபோது, இவர்கள் பாராளுமன்றத்தை கலைத்தார்கள். ஆனால், அமெரிக்க அரசுடன் இணைந்து உள்ளூரில் இராணுவமயப்படுத்தல் அவர்கள் விரும்பிய பலனை கொடுக்கவில்லை: மாறாக, புரட்சிகர இயக்கமானது முன்னர் அமைகியாக இருந்த மாவட்டங்களை நோக்கியும் பரவ ஆரம்பித்தது. இப்போது மன்னர் தனது பாதையை மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டது: அமெரிக்க ஆதரவு பெற்ற துபேயை பிரதமர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, முடியரசுவாதியான லோகேந்திர பகதூர் சாண்ட் என்பவரை புதிய பிரதமராக 2002 ஒக்டோபரில் நியமித்தார்: போராளிகளுடன் போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இவர் பணிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரொக்கா 2002 டிசம்பரில் நேபளம் வந்து சேர்ந்தார்: பேச்சுவார்த்தைய குழப்புவதற்கு அவர் முயன்றார். ஒரு பகிரங்க அறிக்கையில் அவர் புரட்சியாளர்களை “பயங்கரவாதிகள்” என்று வர்ணித்ததுடன், அவர்களை பொல்பொட் அமைப்பினருடன் ஒப்பிட்டார். ரொக்கா புறப்பட்டுச் சென்றவுடனே அமெரிக்க தூதராலயம் நேபாள புரட்சியாளர்களையும் தனது “பயங்கரவாத” பட்டியலில் சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கியது. இவற்றையெல்லாம் மீறி யுத்த நிறுத்தமானது 2003 ம் ஆண்டு ஜனவரி 29 ம் திகதி எட்டப்பட்டது. மூன்று நிபந்தனைகளுக்கு இணங்கியதன் மூலமாகவே மன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் கைகூட வழிவகுத்தார்: புரட்சியாளர்களை “பயங்கரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும்: தலைவர்களை கைது செய்வதற்கு அறிவிக்கப்பட்ட சன்மானத்தொகை சம்பந்தமான அறிவித்தலை இரத்து செய்ய வேண்டும்: தலைவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பிடியாணைகளை நீக்க வேண்டும்.

ஆரம்பம் முதலே அமெரிக்க அரசானது இந்த அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்து வந்ததுடன், உள்நாட்டு யுத்தத்ததை தூண்டிவிடுவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தது. 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம், சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாற்பத்து ஒன்பது பேரடங்கிய இராணுவ “நிபுணர்களது” குழுவானது, நேபாள அரச இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக வந்திறங்கியது: அத்துடன் அமெரிக்க இராணுவ உதவியான எட்டாயிரம் M-16 துப்பாக்கிகளின் முதல் தொகுதியும் வந்து சேர்ந்தது. பெப்ருவரி மாதம் 4ம் திகதி, ரொய்டர் செய்தி நிறுவனமானது, கிறிஸ்ரினா ரொக்கா அவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்த சமாதான ஒப்பந்தம் தொடர்பாக நம்பிக்கையீனத்துடன் வெளியிட்டிருந்த கருத்தை பின்வருமாறு தெரிவித்திருந்தது. “இது நம்பிக்கையூட்டும் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் உண்மை நிலைமை என்னவென்றால் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்பதுதான் …. நேபாளத்தின் நிலைமைகள் ஆரோக்கியமானவையாக தோன்றவில்லை.” மே மாதத்தில் புரட்சியாளர்களுக்கும், நேபாள அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகமானது புரட்சியாளர்களை அமெரிக்க அரசானது உத்தியோக பூர்வமாக “பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில்” சேர்த்துள்ளதாக அறிவித்தது. அமெரிக்க ஆலோசகர்களை பெருமளவில் கொண்டிருந்த நேபாள அரச இராணுவமானது, சமாதான பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வேலைகளைச் செய்தது. சமாதான உடன்படிக்கையில் எட்டப்பட்ட நிலைப்பாடான, “நேபாள அரச இராணுவமானது தனது பாசறைகளிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டாது” என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தது. அத்தோடு, சமாதான பேச்சுவார்த்தைகளின் மிகவும் முக்கியமான சுற்றானது ஆரம்பமான 2003, ஓகஸ்ட்டு மாதம் 17ம் திகதியன்று, இராமெசாப் மாவட்டத்தலுள்ள டோரம்பா கிராமத்தில் பதினெட்டு புரட்சியாளர்களை அரச இராணுவமானது படுகொலை செய்தது. அடுத்து வந்த விசாரணைகளின் போது, “சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அரசியல் கூட்ட மொன்றில் வைத்து கைது செய்யப்ட்டவர்கள்” என்பதும், “இவர்கள் தமது கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு சுடடுக் கொல்லப்பட்டார்கள்” என்பதும் நிரூபனமானது. அமெரிக்க ஆலோசனையின் பேரில் அரச படைகள் மேற்கொண்ட டொரம்பா படுகொலைகள் காரணமாக போர் நிறுத்தமானது முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து, அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான ரிச்சார்ட் ஆர்மிடாஜ் என்பவர், “நேபாள கொம்யூனிஸ்ட்டு கட்சியினர் (மாவோ) … அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் அதன் பொருளாதாரம் என்பவற்றிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆபத்துகள் அதிகளவில் இருப்பதாகவும், அதனால் அவர்களை அமெரிக்காவின் “பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில்” மிகவும் உயர்ந்த நிலையில வைக்கப்படுவதாகவும்” … தமது முடிவை வெளியிட்டார்.

2003 இன் முதுவேனிற் காலத்தில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் ஆரம்பமான போது, நேபாளத்தில் அமெரிக்க இராணுவ தலையீடானது அதன் உச்ச கட்டத்தை அடைந்தது. காத்மண்டுவில் நேபாள அரச படைகளின் தலைமையகத்திற்கு அருகாமையில், அமெரிக்க இராணுவ ஆலோசகர்களுக்கான விரிவான, நிரந்தரமான குடியிருப்பு மனைகள் கட்டப்பட்டன. தனது ‘சர்வதேச இராணுவ கல்வி மற்றும் பயிற்சிக்கான திட்டத்தினூடாக’ (IMET) அமெரிக்க அரசானது நேபாளத்தின் படைகளை ‘விசேட நடவடிக்கைகளில்’ பயிற்றுவித்தது. இதன் மூலமாக, அமெரிக்க அரசானது, “பெருமளவிலான சித்திரவதைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், மோசமான அதிகார துஸ்பிரயோகங்கள் என்பவற்றை உள்ளடக்கிய மக்கள் பெருமளவில் காணாமற் போதல் போன்றவற்றை செய்யும் கொள்கைகளுக்கு அரசின் உயர்மட்டங்களின் மௌனமான சம்மதத்தை பெற்றுக் கொடுப்பதை உத்தரவாதப்படுத்தியது. “ஊர்காவல் படைகளை” , இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட “கொலைகாரப் படைகளை” மாதிரியாகக் கொண்டு, அமைப்பதான அறிவிப்பை நேபாள அரசாங்கம் வெளியிட்டது. இதுவரை காலமும் அதிகரித்து வந்த அமெரிக்க தலையீடுகளை பகிரங்கமாக விமர்சிக்காமல் மௌனமாக பாத்துக் கொண்டிருந்த ஐரோப்பிய யூனியனின் தiமையகத்தின் நேபாள அலுவலகத்தின் தலைமை அதிகாரிக்கு இது வரம்புமீறும் நடவடிக்கையாகபட்டது. “இந்த விதமான நடவடிக்கைகள் ஏனைய நாடுகளில் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்திருப்பதாக” தனது விமர்சனங்களை முன்வைத்து எச்சரிக்கை செய்தார்.

கிறிஸ்ரினா ரொக்காவின் 2003ம் ஆண்டு டிசம்பர் மாத நேபாள விஜயமானது ஈராக்கிற்கு நேபாள படைகளை அனுப்பும் படி கேட்பதுடன் தொடர்புடையதாய் இருந்தது. இதனை நேபாள அரசாங்கம் நயமாக மறுத்துவிட்டது. இந்த விஜயத்தின் போது ரொக்கா அவர்கள் மன்னர் கயேந்திராவையும், அரச படைகளின் தளபதி ஜெனரல் பாயர் ஜூங தாப்பா அவர்களையும் சந்தித்தார். அரச படைத்தளபதியுடனான சந்திப்பின் போது தளபதியவர்கள், “ஊர்காவல் படை” மற்றும் அதனையொத்த “கொலைகாரப் படைகளை” அமைப்பது தொடர்பாகவும், இவற்றை இயக்குவதற்கு அவசியமாகும் மேலதிக யுத்த தளபாடங்கள் தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்தார். ஹெலிக்கொப்டர்கள், மற்றும் புரட்சியாளர்களின் தலைவர்களை கண்டறிந்து கொலை செய்ய உதவக்கூடிய கண்காணிப்பு கருவிகள் என்பவற்றுடன், எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்கு அவசியமான பயிற்சிகளை தொடந்தும் வழங்குவதன் அவசியம் குறித்தும் தளபதி கேட்டுக் கெண்டார். 2004 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் குழுவொன்று மீண்டும் நேபாளத்தை வந்தடைந்தது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் அதிகாரியொருவர் இந்த குழுவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் நேரடியாகவே நேபாளத்தின் மத்திய – மேற்கு பிரதேசத்தின் நேபாள அரச படைகளின் தலைமை அலுவலகத்தை சென்றடைந்தார்கள். ஏப்பிரல் மாதத்தில் இன்னோர் அமெரிக்க படை வீரர்களது குழுவொன்று நேபாளத்தை வந்தடைந்தது. நேபாள அரச படைகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட “விசேட படையணி” யான, ‘ரேஞ்சர் பட்டாலியனுடன்” கூட்டு படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவர்களது நோக்கமாக இருந்தது. இந்த சிறப்பு படையணியானது முழுக்க முழுக்க அமெரிக்க இராணுவ ஆலோசகர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட நோபாள படை வீரர்களினால் தலைமை தாங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பி. ஜே. பி. ஆட்சியில் இருந்த போது இந்திய தூதராக நேபாளத்தில் கடமையாற்றிய ஷயாம் சரண் என்பவர் நேபாளத்தில் அமெரிக்க தலையீடு தொடர்பாக இந்திய ஆட்சேபிப்பதற்கு எதுவுமில்லை எனற வகையில் கருத்து தெரிவித்தார். 1950 இல சமத்துவற்ற முறையில் இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையில் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தமானது நேபாள அரசானது ஏனைய அரசுகளிடம் இருந்து ஆயுத உதவிகளை பெறுவதை தடை செய்திருந்தது. ஆனால் புதிதாக உருவாகி வந்த அமெரிக்க - இந்திய கூட்டுறவானது இங்கு முதன்மை பெற்றது. இந்திய தூதர் சரண் 2003 ம் ஆண்டின் இறுதியில், இந்திய, அமெரிக்க அரசாங்கங்கள் ஒரே அலைவரிசையில் பேசுவதாக குறிப்பிட்டிருந்தார்.

James_Moriarty_US_Ambassador2004 ம் ஆண்டின் இளவேனில் காலத்தில் சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள்

2004 ம் ஆண்டு ஏப்பிரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு கொங்கிரஸ் கட்சியினால் தலைமை தாங்கப்பட்ட கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்த அரசாங்கமானது தனது பாராளுமன்ற பெரும்பான்மையை இடதுசாரி கட்சிகளுடன் சோந்தே நிலைநாட்டியாக வேண்டியிருந்தது. புதிய கூட்டரசாங்கமானது, ஆரம்பத்தில் முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாடான, அமெரிக்க கொள்கைகளுடன் ஒத்துழைப்பது என்பதையே தனது நிலைப்பாடாக கொண்டிருந்தது. இப்படிப்பட்ட ஒரு கொள்கையின் உருவாமாய்த் திகழ்ந்த தூதுவர் சரண் என்பவர் வெளிநாட்டு அமைச்சுக்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றார். வெளிநாட்டு அமைச்சின் மிக உயர்ந்த பதவியாகிய வெளிவிவகார செயலாளராக அவர் நியமனம் பெற்றார்.

2004 ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி ஆற்றிய உரையொன்றில் சீனத் தூதுவரான சன் ஹெப்பிங் என்பவர் சீனாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள் முக்கியமான மாற்றத்தை வெளிப்படுத்தினார். இவர் தனக்கு முன்பு நேபாளத்தில் சீனாவின் தூதுவராக இருந்த வூ கொங்வொங் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்த நிலைப்பாட்டை மறுத்துரைக்கலானார். மாவோயிச புரட்சியாளர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுவது சரியானது அல்ல என்பது அவரது வாதமாகும். புரட்சியாளர்களை அரச எதிர்ப்பாளர்கள் என அழைப்பததானது, இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் அழைக்க முனையும் பயங்கரவாதிகள் என்ற பதத்தில் நின்றும் வேறு பட்டது என்றார். அத்தோடு, நேபாளத்தில் இருந்து செயற்படும் திபெத்திய பிரவினைவாதிகளது சீன எதிர்ப்பு நடவடிக்கைகளே நேபாளம் தொடர்பான தமது முதன்மையான அக்கறைக்குரிய விடயம் என்பதையும் திட்டவட்டமாவே குறிப்பிட்டார்.

இந்த மாற்றமானது அமெரிக்க அரசின் இராஜதந்திர துறையிலான முக்கிய மாற்றங்களுடன் ஒத்திசைந்ததாக நடைபெற்றது. இதுவரை காலமும் நேபாளத்திற்கான அமெரிக்க தூதுவரான மைக்கல் மலினோவ்ஸ்கி என்பவர் மிகவும் குறைவான பாத்திரத்தையே ஆற்றி வந்தார். நேபாளம் தொடர்பான கொள்கைகள் வோஷிங்டனிலேயே மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படும் போதெல்லாம் கிறிஸ்ரினா ரொக்கா அவர்கள் காத்மண்டு செல்ல தயங்கியதேயில்லை. 2004 ம் ஆண்டு இளவேனில் காலத்தில், மலினோவ்ஸ்கி அவர்கள், தனது பணிக்காலம் முடிவடையும் முன்பாகவே திடீரென பதிவியிலிருந்து அகற்றப்பட்டார். இவருக்கு பதிலாக வந்த புதிய அமெரிக்க தூதரானவர் அரசியல்ரீதியில் மிகவும் பலமான ஜேம்ஸ் எப் மொரியார்ட்டி என்பவராவார். இவர் முன்பு சீனாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர். அத்துடன் அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய தலைவராக இருந்ததுடன், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட உதவியாளராகவும் இருந்தார். இவர் சீன அரசுடன் அமெரிக்க அரசானது நல்ல உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருபவராக இருந்தார். இவரைப் பொறுத்தவரையில் திபெத்திய போராளிகளை ஆதரிப்பது என்பது சீனாவுடன் அமெரிக்க அரசு பேரம் பேசுவதற்கான பொருட்களுள் ஒன்றாக மட்டுமே இருந்தது.

இந்த நிகழ்வுகளுடன் இணைந்ததாக இன்னொருவரது பணிமாற்றமும் நடந்தேறியது. இந்திய அரசின் உளவுப் பிரிவான ‘ரோ’ வில் தென் - கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களுள் ஒருவரான ரபீந்தர் சிங் என்பவர் 2004 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி திடீரென நேபாளம் போய்ச் சேர்ந்தார். அங்கு அவருக்கு அமெரிக்க கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டு, அவர் சீ. ஐ. ஏ. யின் பாதுகாப்புடன் அகதி அந்தஸ்த்து பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு பயணமானார். ‘ரோ’ அமைப்பில் இவர் நேபாள விவகாரங்களுக்கு பொறுப்பானவராக இருந்தார். இந்த திடீர் நிகழ்வுகளுடன்; ஒரு சகாப்தம் - இந்த சகாப்தமானது மன்னர் பிரேந்திராவின் கொலையுடன் தொடங்கி சீஐஏ யும் கிறிஸ்ரினா ரொக்காவும் இணைந்து இந்திய மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகளை கையாண்டு வந்த ஒரு காலகட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது - முடிவுக்கு வந்தது.

2003 ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து மன்னர் கயேந்திரா அவர்கள் அமெரிக்க செல்லப்பிள்ளையான துபே அவர்களை ஒரு போர்க்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த கட்டத்தில் அமெரிக்காவானது, டுபே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு கடுமையான அழுத்தங்களை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த கொம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு CPN (UML) கொடுத்தனர். மன்னரது ஆதரவாளர்களும், பலமான, முதன்மையான அரசியல் கட்சிகளும் இணைவதனால் மட்டுமே புரட்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என் அமெரிக்கா நம்பியது. 2004 ம் ஆண்டில் இந்த முயற்சி வெற்றியளித்தது போல தேன்றியது. பாராளுமன்றவாத கொம்யூனிஸ்ட்டுக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. ஆனால் இந்த முடிவானது பாராளுமன்றவாத கொம்யூஸ்ட்டுக் கட்சியினுள் பிளவுகளை ஏற்படுத்த காரணமாயிற்று. அமெரிக்காவுடனோ அல்லது அரசரடனோ எந்தவித தொடர்புகளையும் கொண்டிருப்பதை கொம்யூனிஸ்ட்டுக் கட்சியின் ஊழியர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. பாராளுமன்ற கட்சிகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கமானது, அமெரிக்க ஆலோசனையின் பேரில் இயங்கிய ஆயுத படைகளின் மேல் எந்தவிதமான உருப்படியான கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க முடியவில்லை. அத்துடன் அரசின் நிர்வாக அதிகாரிகளும் இந்தவிதமான ஊழல் படிந்த அரசியல்வாதிகளின் மீள் பிரவேசத்தை எதிர்த்து கடுமையாக போராடினார்கள்.

Nepal_Communist_Party_Supporter2005 ம் ஆண்டின் அரச சதிப்புரட்சி

புரட்சியாளர்கள் மிக விரைவில் ஒரு கடுமையான பிளவிற்கு ஆளாவார்கள் என்று அரச படைகளின் உளவுத்துறை கொடுத்த தகவல்களை உறுதியாக நம்பிய மன்னர் கயேந்திரா அவர்கள், இராணுவ அதிகாரிகளையும் முடியரசு விசுவாசிகளையும் கொண்டு ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கினார். அரசியல் கட்சித் தலைவர்கள், இவர்களில் சிலர் முன்னாள் அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தவர்கள், கைது செய்யப்பட்டாhகள். இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்டே, பிளவுறும் புரட்சியாளர்களின் ஏதாவது ஒரு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தலாம் என்ற நினைப்பில் மன்னர் இருந்தார். இவரது கணிப்புகள் தவறானவை என்பதை அடுத்து வந்த நிகழ்வுகள் நிரூபித்தன. புரட்சியாளர்கள் மத்தியில் பிளவுகள் போன்றவில்லை. இவர் எதிர்பார்த்து போலவே கொம்யூஸ்ட்டுக் கட்சியினுள் நடைபெற்ற கடுமையான விவாதங்களின் பின்பு, ஒற்றுமை, இன்னமும் உயர்ந்த மட்டத்தில், எட்டப்பட்டது. சமாதான பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகள் ஏளனத்துடன் நிராகரிக்கப்பட்டன. அதேவேளை இந்திய இடதுசாரி கட்சிகளின் கடுமையான நெருக்குதல்கள் காரணமாக இந்திய அரசானது நேபாள அரச உயர் குழாமிற்கு வழங்கி வந்த இராணுவ உதவிகளை நிறுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. இது நேபாள பாராளுமன்ற ஆட்சியாளர்களுக்கு இருந்து வந்த அற்ப சொற்ப நியாயாதிக்கத்தையும் இல்லாமற் செய்தது.

அமெரிக்க அரசில் நேபாள இராணுவத்தின் தலைமையும், நேபாள இராணுவத்தின் தலைமையில் மன்னரும் தங்கியிருந்த நிலைமையில், அமெரிக்க தூதுவர் மொரைரட்ற்றி தனக்கு அரண்மனைப் புரட்சி பற்றி தாம் எதுவுமே முன்னரே அறிந்திருக்கவில்லை என்ற கூற்றானது நம்பகதன்மையற்றதாகவே இருக்கிறது. மாறாக, மன்னருக்கு அமெரிக்க அரசு உதவி வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்ததாகவே படுகிறது. மாறாக, மன்னர் உள்ளூரிலும், இந்திய அரசினதும் ஆதரவை முற்றாக இழந்துவிட்டதை அறிந்த பின்பே அமெரிக்க அரசு மேற்கொண்டு உதவ மறுத்ததாக தெரிகிறது.

இப்போது மன்னர் கயேந்திரா சீனாவை நோக்கி உதவிக் கோரிக்கைகளை முன்வைத்தார். ஏற்கனவே 2005 ம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் மன்னரது சதிப்புரட்சியை, அது ஒரு உள்நாட்டு விவகாரம் என கண்டிக்க மறுத்திருந்து சீனா இப்போது மன்னருக்கு உதவ தயாராகவே இருந்தது. நேபாளத்தில் இந்த சதிப்புரட்சி நடப்பதற்கு சற்று முன்னதாக நேபாள அரசாங்கமானது காத்மன்டு நகரில் இருந்த திபெத்திய நலன்புரி அலுவகங்களை மூடியதன் மூலமாக சீனாவிற்கான தனது நல்லெண்ண சமிக்கைகளை ஏற்கனவே அனுப்பியிருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலைமையை அமெரிக்க தூதராக மொரியாற்றி வருவதற்கு முன்பிருந்த நிலைமைகளில் நினைத்தும் கூட பார்த்திருக்க முடியாததாகும். இதுவரையில் விடயங்களை மிகவும் வேறுபட்ட கோணத்தில் பார்த்துக் கொண்டிருந்த நேபாளத்தில் இந்தியாவின் தூதுவராக பணியாற்றிய அசியாம் சரண அவர்களை கோபமூட்டக்கூடிய விதத்தில், சீனாவானது நேபாளத்திற்கு உதவுவதற்கு முன்வந்தது. 2005 ம் ஆண்டு ஜூன் மாதம் சீனாவிலிருந்து ஐந்த கவச வாகனங்கள் நேபாளத்தை வந்து சேர்ந்தன. 2005 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனா 22 மில்லியன் அமெரிக்க டொலர் பெருமதியுள்ள ஆயுதங்களையும், அவற்றிற்கான வெடி மருந்துகளையும் கொடுக்க முன்வந்தாக தெரிவிக்கப்பட்டது. நொவம்பர் 18 ம் திகதியன்று இராணுவ ஆயுத தளவாடங்களை ஏற்றிக்கொண்டு இராணுவ கனரக வாகனங்கள் நேபாள – திபெத்திய எல்லையினூடாக வந்து சேர்ந்ததாக செய்தி வெளியானது.

இதேவேளை, நேபாள அரச இராணுவமானது தனது விசேட ‘கொலைகார படைகளை’ செயற்பட வைத்தது. 2005 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் தெராய் பிரதேசத்திலுள்ள கபிலவஸ்து எனும் பகுதியில் பல நிராயுதபாணிகளான “பகடி” எனப்படும் மலைவாழ் மக்களை கொன்றதுடன் 700 இற்கும் அதிகமான வீடுகளையும் எரித்தனர். இப்படியாக கொல்லப்பட்டவர்கள் புரட்சியாளர்கள் என இராணுவம் அறிவித்தது. இந்த இனப்படுகொலையை ஐரோப்பிய யூனியனின் “மனித உரிமைகளுக்கான” தூதுவர் உடனடியாகவே கண்டித்தார். அமெரிக்க தூதுவர் மொரையற்றரி அவர்கள் வாஷிங்டனுக்கு ஆலோசனைகளுக்காக உடனடியாக திருப்பி அழைக்கப்பட்டார். இவர் இந்த கொலைக்கார படையின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைமைகள் நம்பிக்கையளிப்பதாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 2005 ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் மொரையற்றரி நேபாளம் திரும்பி வந்த போது இந்த கருத்து பற்றி நேரடியாகவே கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கபிலவஸ்த்து படுகொலைகள் தொடர்பாக “பலதரப்பட்ட அபிப்பிராயங்கள்” நிலவுவதாக தெரிவித்தார். தனது கவலையெல்லாம் நேபாள படைகள் தமக்கு அவசியமான தேவைப்படும் வெடி பொருட்கள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர்பானதே என்றார். இந்திய மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவற்றிலிருந்து தனிமைப்பட்டிருந்த நேபாள அரசும் மற்றும் அதன் இராணுவமும் தொடர்பான கடுமையான அபிப்பிராயங்களை கொண்டிருந்த நிலையில், இந்தியா மற்றும ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன கடுமையாக முரண்பட விரும்பாத அமெரிக்க அரசானது, தனது வளர்ப்பு நாயான இஸ்ரேலின் உதவியை நாடியது. ஓகஸ்ட்டு மாதத்தில் இஸ்ரேல் அரசானது அமெரிக்க தயாரிப்பான ஆ – 16 துப்பாக்கிகளுக்கு அவசியமான 5.56 மிமீ ரவைகளை பெருந்தொகையில் நேபாள அரச படைகளுக்கு வழங்கியதாக செய்தி வெளியானது.

மொரையற்றரியைத் தொடர்ந்து நேபாளத்திற்கு சென்ற கிறிஸ்ரினா ரொக்கா அவர்கள் தமது பிரியாவிடை பெறுதலுக்காக போயிருந்ததாக கூறப்பட்டது. அப்போது ஒரு விமானம் நிறைய “உயிராபத்து விளைவிக்காத” இராணுவ உதவிகளை அவர் எடுத்துச் சென்றிருந்தார். ரொக்காவினால் முன்னெடுக்கப்பட்ட அமெரிக்க கொள்கையானது, மன்னர் மேல் அழுத்தத்தை பிரயோகித்து அவரை பாராளுமன்ற கட்சிகளுடன் ஒரு இணக்கத்திற்கு வரச் செய்வது: உள்நாட்டு யுத்தத்தை தீவிரப்படுத்துவது ஆகிய இரண்டு அம்சங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. திபெத்திய பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனாவின் மீது கோபங்கள் இருந்தாலும், நேபாள இராணுவத்தை ஆயுதமயப்படுத்தும் விடயத்தில் இந்த இரண்டு நாடுகளும் ஒரு புதிய கூட்டுறவை மேற்கொண்டனர். அமெரிக்காவும் அதன் எடுபிடியான பிரித்தானியாவும் நேபாள இராணுவத்திற்கு “உயிராபத்தை விளைவிக்காத” உதவிகளை வழங்குவது: சீனாவும் இஸ்ரேலும் “உயிராபத்து விளைவிக்கக்” கூடிய கருவிகளை வழங்குவது என்பதாக அது அமைந்திருந்தது.

ரபீந்தர் சிங்கின் தப்பியோட்டம் மற்றும் தூதுவர் மொரையாரிற்றியின் வருகை என்பவற்றுடன் ஏற்றபட்ட இந்திய – அமெரிக்க உறவின் விரிசலானது, இப்போது வெளிப்படையானதாக மாறிவிட்டிருந்தது. துபே தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் யாவரும் 2005 ம் ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள்: துபே மாத்திரம் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். மன்னரது ஆட்சியானது இராணுவத்தின் தலைமையைத் தவிர வேறு எந்த சமூக அடித்தளங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதை இந்திய உளவுத்துறையானது சரியாகவே நிலைமையை மதிப்பீடு செய்தது. இந்தியா இப்போது பாராளுமன்ற அரசியல்வாதிகளை மன்னருக்கு எதிரான நகர்ப்புற எழுச்சிகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தது. இந்தியாவின் மிகவும் பெருமதிமிக்க தொடர்புகளாக அமைந்தவர்கள் உட்பட முக்கிய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் நகர்ப்புற்ங்களில் மன்னருக்கு எதிரான எழுச்சிகளை தலைமை தாங்குவதினூடாக மட்டுமே தாம் மீண்டும் ஒரு ஆதிக்க சக்தியாக வரமுடியும் என்பதை புரிந்து கொண்டார்கள். இந்த கட்டத்தில் நகர்ப்புறங்களில் புரட்சியாளர்களது பிரசன்னம் மிகவும் சொற்பமானதாக இருந்தது: மாறாக பாராளுமன்றவாத கட்சிகள் இன்னமும் அதிகளவிலான கட்சி ஊழியர்களையும் செயலூக்கமான மாணவர் அமைப்புக்களையும் கொண்டிருந்தார்கள்.

ஆரம்பத்தில் பாராளுமன்றவாத கட்சிகளினால் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த எழுச்சிக்கான அறைகூவலுக்கான மக்களின் ஆதரவானது மிகவும் குறைந்த அளவினதாகவே இருந்தது. புரட்சியாளர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டாமல் இந்த எழுச்சியானது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானதென்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இவர்களை கையாண்டுகொண்டிருந்த இந்திய உளவுத்துறையினரும் உணர்ந்து கொண்டனர். “பயங்கரவாதிகள்” என்ற பதமானது இந்திய இராஜதந்திரிகளின் அகராதியிலிருந்து காணாமற்போனது. அந்த வருடத்திற்குள்ளேயே “புரட்சியாளர்கள் பயங்கரவாதிகள் அல்லர்” என இந்திய இராஜதந்திரிகள் பிரகடனப்படுத்தினர். 2005 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாராளுமன்றவாத அரசியல் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் கிராமப்புறங்களில் புரட்சியாளர்களுடன் வெளிப்படையாகவே ஒத்துழைக்கத் தொடங்கினார்கள். திடீரென நகர்ப்புறங்களில் மாணவர்களது எதிர்ப்பியக்கங்களில் பெரியளவில் மக்கள் திரளத் தொடங்கினர்.

New_World_Possibleமுடிவாக.

ஓகஸ்ட்டு மாதத்தில் களிகோட் மாவட்டத்திலுள்ள பிலி எனுமிடத்தில் மக்கள் விடுதலை இராணுவமானது அரச படைகளது நன்கு அரண்செய்யப்பட்ட முகாம்களை நேரடியாக தாக்கியழித்து வெற்றி பெற்றது. 2005 ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியின் (மாவோ) மத்திய குழுவானது விடுவிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ‘ருக்கும்’ மாவட்டத்தில் கூடி பாராளுமன்றவாத கட்சிகளுடனான உடன்படிக்கைக்கான நிபந்தனைகளை முன்வைத்தது. அத்துடன் மூன்று மாதங்கள் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பையும் மேற்கொண்டது. சமரச பேச்சாளர்களான CPN (UML) ஐச் சேர்ந்த பாம் தேவ் கௌதம் அவர்களும், CPN (Unity Centre/ Masal) அமைப்பைச் சேர்ந்த தோழர் பிரகாஷ் என்பவரும் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று முறைப்படியான உடன்படிக்கைக்கான ஆரம்ப பணிகளை மேற்கொண்டனர். இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரண்டு முக்கிய பாராளுமன்றவாத கட்சிகளின் தலைவர்களான நேபாளி கொங்கிரசின் தலைவர் கிரிஜா கொய்ராலா என்பவரும், UML கட்சியின் தலைவரான மகாதேவ் நேபாள் என்போரும் நேபாளத்தின் ஒரு விடுவிக்கப்பட்ட பகுதியான ரோல்பா மாவட்டத்திற்கு செல்ல மறுத்துவிட்டார்கள். ஆனால் ஒரு வெளியரங்கில் - இந்தியாவில் - சந்திப்பதை வலியுறுத்தினார்கள். இந்திய அரசின் ஒத்துழைப்புடன் புரட்சியாளர்களுக்கும் பாராளுமன்றவாத அரசியற் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுபெற்றது. கூட்டு எழுச்சிக்கான பாதை 2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் கைச்சாத்திட்ட பன்னிரண்டு அம்ச உடன்பாடு மூலமாக கைவரப் பெற்றது.

அமெரிக்க அரசானது மன்னரை வெளிப்படையாகவே ஆதரித்தது. புரட்சியாளர்கள் உடன்படிக்கையில் பங்கு கொள்வதற்கு அருகதை உடைய ஒரு சட்டபூர்வமான அமைப்பல்ல, என்று சாதித்தார்கள். ஆனால் விடயங்கள் இப்போது வேகமான நகரத் தொடங்கின. மன்னரும், அமெரிக்காவும் விரைவிலேயே ஓரங்கட்டப்பட்டார்கள். 2006 ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் அரசியல் கட்சிகளும் புரட்சியாளர்களும் ஒன்றிணைந்த நகர்ப்புற எழுச்சியை மேற்கொண்டனர். மன்னரின் அதிகாரத்தின் மிஞ்சியிருந்த படையினரை இவர்கள் தாக்கத் தொடங்கினார்கள். நீண்ட இழுபறியின் பின்பு படையின் தலைமையானது, தாம் மக்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக இல்லையென மன்னருக்கு தெரிவிக்க நேர்ந்தது. மன்னர் அதிகாரத்தை கைதுறந்தார்.

எழுச்சிக்கான கூட்டணியை பிளவுபடுத்தும் இறுதி முயற்சியில் மன்னர் 1999 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாண்டு அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தை கூட்டினார். இந்த பாராளுமன்றத்தில் புரட்சியாளர்கள் அங்கம் வகிக்கவில்லை. பாராளுமன்ற கட்சிகளினால் அமைக்கப்பட்ட கிரிஜா அரசாங்கமானது புரட்சியாளர்களுடன் ஒர் ஒப்பந்தத்திற்கு வருவது என்றும் அவர்களது கோரிக்கையான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான சட்டவாக்க சபையை கூட்டுவதற்கு ஆவன செய்வது என்றும் வரித்துக் கொண்டது. 2006 ம் ஆண்டு முதுவேனில் காலத்தில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் பகுதியளவிலான ஆயுதகளைவு செய்வது என்றும் இணங்கப்பட்டது. இந்த உடன்பாடானது நேபாள அரச இராணுவத்திற்கும், புரட்சியாளர்களது மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் சமத்துவமான அந்தஸ்த்தை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தை சர்வதேச சமூகமும் வரவேற்றது. அமெரிக்க தூதர் ஆரம்பத்தில் ஆத்திரப்பட்டு பேசினாலும், பின்பு அமைதியாகிவிட்டார். 2007 ம் ஆண்டின் ஆரம்பவாக்கில், யதார்த்த நிலைமையை புரிந்து கொண்டு சீன அரசாங்கமும் புரட்சியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. “மாவோயிஸ்ட்டு” என்ற பதம் புரட்சியாளர்களை குறிக்கும் விதத்தில் மீண்டும் சீன பத்திரிகைகளில் தோன்றியது. பிரித்தானியரும் கூட தமது கடும் போக்கை மாற்றிக் கொண்டு, புரட்சியாளரின் வெளிவிவகார பேச்சாளரான சந்திர பிரகாஷ் கஜூரெல் என்பவருக்கு 2007, மார்ச்சில் விசா வழங்கியது. 2007, ஏப்பிரலில் புரட்சியாளர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.

தற்போதைக்கு அமெரிக்காவின் பலமான தலையீடு தவிர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் அமெரிக்க அரசானது புரட்சியாளர்களை “பயங்கரவாதிகள்” என்றே அழைத்து வருகிறது. இன்னும் புரட்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது கடுமையான தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக பயமுறுத்தி வருகிறது. குறைந்தபட்சம் இந்த நடவடிக்ககைகள் அமெரிக்காவானது நேபாளத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிரூபிக்கிறது. இப்போதும் கூட நேபாள இராணுவமானது நோபாள அதிகாரிகளை விட அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது எனலாம். இதனால் உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கும் விதத்தில் இரகசியமான நடவடிக்கைகளில் அமெரிக்கா எதிர்காலத்தில் ஈடுபடும் என்பது நிச்சயமானது. ஆயினும் மோசமான ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவே தோன்றுகிறது. உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் பலம் குறைந்து கொண்டு செல்லும் அதேவேளை, சீனாவின் பலம் கூடிக்கொண்டு போகிறது. இன்னுமொரு புதிய இந்திய இராணுவ தலையீடும் கடினமாகதாகவே இருக்கும். மன்னர் பிதிதுவி நாராயணன் ஷா தனது இராச்சியத்தை தொடங்கிய போது புரிந்து கொண்டது போல, சீனா எவ்வளவிற்கு பலம் பொருகிறதோ, அந்தளவிற்கு நேபாளமானது இந்தியாவுக்கு குறைந்தளவிலேயே பயப்பட வேண்டியிருக்கும்.

2006 ஏப்பிரலில் நடைபெற்ற மக்களின் வெற்றியும் அதனைத் தொடர்ந்து வந்த சமாதான உடன்படிக்கையும் நோபாளியர்களாலேயே எட்டப்பட்டதாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளின் தொடரும் சதிமுயற்சிகளையும் மீறி, புரட்சியாளர்கள் இப்போத தற்போது மூச்சு விடுவதற்கான அவகாசத்தை பெற்றுள்ளார்கள். மிகவும் ஆபத்தான அந்நிய இராணுவ தலையீடுகளில் இருந்து விடுபட்டு, புதிய ஜனநாயக அமைப்பை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பாக இது அமைகிறத. தன்னளவில் இதுவோர் பெரிய சாதனையேயாகும்.

(Monthly Reviewஐச் சேர்ந்த ஜோன் மாக் அவர்களது இந்த கட்டுரையானது, 2007 மே 19ம் தேதியிட்ட இந்தியாவின் மும்பாயிலிருந்த வெளிவரும் Economy and Political Weekly சஞ்சிகையிலும் வெளிவந்தது.)

நன்றி - Monthly Review
தமிழாக்கம் - மனோ

http://thesamnet.co.uk/?p=13827

Last Updated on Tuesday, 14 July 2009 06:41