எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.
ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.
மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.
வேடிக்கை என்னவென்றால் யாருடன் சேர்ந்து தங்கள் தலைமையைக் காட்டிக் கொடுத்தனரோ, அவர்களுடன் சேர்ந்து நாடு கடந்த தமிழீழம் அமைப்பது பற்றி கூறுகின்றது, இந்த சதிகாரக் மாபியாக் கும்பல்.
பச்சைப் பொய்காரர்கள். புலுடாப் பேர்வழிகள். அறிவும் நாணயமுமற்ற, முடிச்சு மாற்றிகள். மக்கள் மேல் தொடந்து சவாரி விடமுனைகின்றனர்.
வழுதி கும்பல் தம்மை மூடிமறைக்க கூறுவது போல் "ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல" என்பது அப்பட்டமான பொய்.
மாறாக புலித்தலைமையை சரணடைய வைத்தவர்கள் இவர்கள். சர்வதேச சூழ்ச்சி மூலம் கொன்றவர்கள் இவர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் இதுவரை எதையும் மக்களுக்கு சொன்னது கிடையாது. கடைசி மணி நேரத்தில், பல மணி நேர உரையாடலை நடத்தியவர்கள் இந்த சதிகாரர்கள். எதைப்பற்றி என்று சொல்லவேயில்லை. துரோகத்தை எப்படி மக்களுக்கு சொல்ல முடியும். எதையும் மக்களுக்கு சொல்ல துணிவில்லை. தங்கள் சதியையும், சூழ்ச்சியையும், எப்படித்தான் மக்களுக்கு சொல்லமுடியும்.
வழுதி இதை மறுத்து தம்மை பாதுகாக்க விடையத்தை புரளியாக்கி கூறுவதைப் பாருங்கள். "தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது" இது பொய் என்கின்றார். சரி இது பொய் என்றால், இதைவிட என்னதான் நடந்தது. நீங்கள் என்னதான் நாட்கணக்காக கதைத்தீர்கள். அப்படி என்னதான் இருந்தது கதைக்க. யாரை ஏமாற்றுகின்றீர்கள்?
வழுதியின் அதே கட்டுரையில் இந்த சதிக்கு பதில் உண்டு. "போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை "மௌனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது." என்கின்றார். அப்படியாயின் எதன் அடிப்படையில்? எந்த நம்பிக்கையின் அடிப்படையில்? அதை உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? இதில் உங்கள் பங்கு என்ன?
இப்படி ”வழுதி கூட்டம்” நடத்திய அந்தச் சதியை "அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்கின்றார். சரி அந்த "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றால், அவர்கள் யார்? முதல் அதைச் சொல். "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்றது பொய்யல்ல, அது "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றதைத்தான் குறிக்கின்றது. "எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்றால், யாருடன் சேர்ந்து இந்த சதியைச் செய்தாய்? அதைச் சொல்.
"இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்." சரி என்ன நடவடிக்கை? யாருடன் சேர்ந்து? இப்படித்தான் "தமது பங்கு", "எனது பங்கு" என்பதன் மூலம் தான், அவர்கள் இறுதியில் அழிக்கப்பட்டார்கள். அதுதான் உண்மை.
"வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்." சரி அவர்கள் யார்? எப்படி? என்ன முயற்சி, யாருடன்? இங்குதான் சதி, சூழ்ச்சி என எல்லாம் அடங்கிக்கிடக்கின்றது.
"ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன." என்றால், காலம் கடக்காவிட்டால் அது என்ன? யாருடன் சேர்ந்த சதி.
இங்கு ஆயுதம் கைவிடப்பட்டு சரணடைவு உங்கள் ஓத்துழைப்புடன் மே 15 நடந்தது. அதுதான் உண்மை. என்ன நடந்தது, எப்படி நடந்தது, யாருடன் சோந்து நடந்தது என்று அனைத்தும், இந்த சதியில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்கு தெரியும். அதை மக்களுக்கு சொல்ல மறுப்பது சதி, சூழ்ச்சி.
இதையெல்லாம் மூடிமறைக்க, புலித் தலைவர் சரணடையவில்லை என்கின்றீர்கள்; சண்டையில் வீரமரணம் அடைந்தார் என்கின்றீர்கள். இப்படி சொல்லும் இவர்கள், நடந்த உண்மையை மறைத்து முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்க முனைகின்றனர். எப்படிப்பட்ட பொய்யர்கள், மோசடிக்காரர்கள் இவர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
1. நடேசன், புலித்தேவன் சரணடைந்தபோது தான் கொல்லப்பட்டனர் என்று கூறியவர்கள் இவர்கள். இதை பல்வேறு தகவல் உறுதிசெய்கின்றது.
கேள்வி: இந்த சரணடைவு எப்படி, ஏன் நடந்தது. இது எந்த அடிப்படையில் நடந்தது. புலிகள் இங்கு புலிகளாகவே சரணடைந்தது உண்மையாகின்றது. இந்த வகையில் புலித்தலைவர் பிரபாகரனின் சம்மதத்துடன் சரணடைவு நடந்தது தெளிவாகின்றது. அவர்கள் சரணடைந்து உண்மையென்றால், மற்றவர்களும் தான்.
நடேசனும், புலித்தேவனும் துரோகம் செய்வதற்காக சரணடையவில்லை என்றால், இதை தலைமை வழிநடத்தியது என்றால், மற்றவர்களும் அதே வகையில் தான் சரணடைந்தனர்.
2. புலிகள் அறிவித்த அடுத்த முக்கியமான தகவல், ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியது. இதை பத்மநாதன் அறிவித்திருந்தார். ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியது என்றால், அது ஒட்டுமொத்தமான சரணடைவுதான். ஆயுதப் பயன்பாட்டை நிறுத்திய பின், எப்படி வீரமரணம் அடைய முடியும். தலைவர் சண்டையில் வீரமரணம் அடையவில்லை. சரணடைந்த பின், மரணம் நிகழ்ந்தது.
இப்படி புலிகள் சரணடைந்தனர் என்பதை இந்த தகவல் தெளிவாக உறுதி செய்கின்றது. இதன் பின் தான் சித்திரவதை செய்யப்பட்டதும், அவர்கள் கோரமாக கொல்லப்பட்டதும் தெளிவாகின்றது. இந்த மரணத்தை ஓட்டி புலியல்லாத பல்வேறு தரவுகளும் இதை உறுதிசெய்கின்றது.
இப்படியிருக்க இதை மூடிமறைத்து, பிரபாகரனை அனாதையாக்கியே கொன்று போட்டவர்கள் இவர்கள். இன்று பொய்யும் புரட்டுகளுடன், நாடு கடந்த தமிழீழம் என்ற கூழ்முட்டையுடன் பவனி வருகின்றனர்.
இவர்கள் யார்? இந்த யுத்தத்தின் போக்கில் புலித்தலைமையை சுற்றிவளைத்து அழிப்பதற்கு ஏற்ற, சர்வதேச வலைப்பின்னலில் நின்று புலித் தலைமையை வழி நடத்தியவர்கள். இதற்காக நீண்ட பல காலமாக முயன்றவர்கள். அதை வழுதி "ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" என்கின்றார். யாரால்? ஏன்? அதில் உங்கள் பங்கு என்ன? இதற்கமைய நீங்கள், வேண்டுதல்காரருடன் எப்படி ஒத்துழைத்தீர்கள். நீங்கள் நடத்திய சதி, சூழ்ச்சிகள் தான் என்ன?
ஒரு விடுதலை இயக்கத்தை வழிநடத்த எந்த அறிவுமற்ற ஒரு மாபியாக் கும்பலின் தலைவரை, மாபியாப் பாணியில் அழித்தவர்கள் தான், இன்று நாடு கடந்த தமிழீழத்தை முன்வைக்கின்றனர்.
இந்த அழித்தொழிப்பில் இவர்களுடன் இலங்கை அரசு அல்லாத, சர்வதேச புலனாய்வு தரப்பு ஈடுபட்டது. தங்கள் நிலைமை பற்றி மக்களுடன் பேசாத புலித்தலைமை, இந்த சர்வதேச மாபியாக் கும்பலுடன் நாள் கணக்காக கதைத்துள்ளது. அவர்கள் என்ன கதைத்தனர், யாருடன் எதற்காக, ஏன் கதைத்தனர், என்று எதுவும் மக்களுக்கு தெரியாது.
புலத்து மண்ணில் பல பத்தாயிரம் மக்கள் வீதியில் நிற்கும் ஒரு பின்னணியில், இந்தச் சதி அரங்கேறியது. மக்களுக்கு எதுவும் தெரியாது, தெரியக் கூடாது என்பது, இந்த சதிகாரக் கும்பலின் நோக்கமாக இருந்தது. இந்த சதியில் ஈடுபட்டவர்கள், அதை மூடிமறைத்தபடி நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர் இந்த மர்மமான மாபியாக் கும்பல்.
"ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" இந்த அடிப்படையில் வழிநடத்தப்பட்ட போராட்டம், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்ற புலத்து புலித்தலைமையின் துரோகத்துடன் தான் முடிவுக்கு வந்தது.
பி.இரயாகரன்
03.07.2009