Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி! - தமிழ்நதி

ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி! - தமிழ்நதி

  • PDF
முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது.
 இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி விரிவாக நிதானமாக ஆற அமர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன். அதற்குள், அக்குறிப்பிட்ட சம்பவம் பற்றி எனக்குள் பொங்கும் ஆற்றாமையைப் பதிவாக்கியிருக்கிறேன். இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, ‘அந்தக் கூட்டமும் சொதப்பிட்டாம்ல’என்று கதைபரப்பிவிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நன்றாகவே நடந்தது.

‘நான் மநுவிரோதன்’என்ற நேர்காணல் தொகுப்பு வெளியீட்டின்போது முதன்முதலில் ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தேன். பரிச்சயம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனால் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘களரி’நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது பேசக்கூடியதாக இருந்தது. சேலம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சி ‘யுகமாயினி’ கூட்டத்தில் கலந்துகொள்ளவெனப் புறப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா இருவருடனும் நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்துகொண்டோம்.(சித்தனின் அழைப்பின்பேரில்) திருச்சி சென்ற வழி ஆரோக்கியமான உரையாடலில் கழிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளிலுள்ள அரசியல் எனக்குப் பிடிக்கும்.(புலியெதிர்ப்பு அரசியலை இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆதவன் தீட்சண்யா ஆசிரியராக இருக்கும்‘புது விசை’குறிப்பிடத்தக்க அளவில் அதிகார மையங்களின் மீது விமர்சனங்களை முன்வைப்பது, சாதி-மதம் போன்ற புனிதங்களின் மீது கேள்விகளை எழுப்புவதும் கண்டிப்பதுமான போக்கினால் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். மதமும் சாதியும் மக்களை எவ்விதம் அடிமைப்படுத்துகின்றன என்று குட்டி ரேவதியும் ஆதவனும் பிரபஞ்சன் அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அன்றைக்கு எனக்குள் ஆதவன் மீதான மதிப்பின் 'மீட்டர்' மேலும் எகிறியதைச் சொல்லியாக வேண்டும்.

ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது. 

நேற்றைய நிகழ்ச்சி முடிவில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில், சில எழுத்தாளர்களை அவர்களது படைப்பு மனோநிலை குறித்து வந்திருந்த ஏனைய எழுத்தாளர்களோடும் பார்வையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கப்பட்டது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சுரேஷ்குமார இந்திரஜித், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் இவர்களோடு எனது பெயரும் திடுமுட்டாக அறிவிக்கப்பட்டபோது, தயக்கத்தோடும் கொஞ்சம் பதட்டத்தோடும் முன்னால் சென்று அமர்ந்தேன். “இந்த ஜாம்பவான்களோடு என்னை ஏன் அழைத்தார்கள். இலக்கியத்தைப் பற்றி நான் என்னதான் பேசுவது?”என்று அருகிலிருந்த பிரபஞ்சன் அவர்களிடம் கேட்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் மதிப்பும் அன்பும் கலந்த ஒரு நல்லுறவு இருக்கிறது. தோழனைப்போலவும் தந்தையைப் போலவும் ஒரேசமயத்தில் இருக்கக்கூடிய எளிமையான மனிதர் அவர். “ஏதாவது பேசுங்கள்… இது கலந்துரையாடல்தானே… ஒன்றும் பேசமுடியாவிட்டால் ஆம் இல்லை என்று சமாளியுங்கள்”என்றார்.

எனது முறை வந்தபோது நான் என்ன பேசுவதென்று தீர்மானித்திருந்தேன். 

“பெரிய எழுத்தாளர்களெல்லாம் எழுதுவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுப்பும் கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அவற்றை, எழுத்துப் பயணத்தில் சிறு முயற்சிகள் என்றே சொல்வேன். எனவே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு ‘எழுதிய விடயங்களைத் தவிர்த்து, ஏன் எழுதப்படவில்லை?’என்பதைக் குறித்துப் பேசலாமென்று நினைக்கிறேன்.

சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன? நான் வாசித்தவரையில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்பவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு இருக்கவேண்டும். எனக்குத் தாங்கவியலாத வியப்பாக இருந்தது. இவர்களால் எப்படி இப்படி மௌனம் சாதிக்க முடிகிறது என்பது நெஞ்சை அறுக்கும் கேள்வியாக இருந்தது. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுத அதைப்பற்றி எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது என்று சொல்லி நீங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்? 

இங்கே இந்தக் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நாங்கள் பெண்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இப்படி மிகச்சில பேராக இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், இங்கே இந்தக் கூட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் எவ்வளவு? அவர்கள் ஏதோவொரு பிரச்சனையால் வரவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்ய, சமரசம் செய்ய, நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று இலக்கியச் சூழலில் இருக்கிறதா என்ன?

இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய சில தடாலடியான கருத்துக்களில்- எல்லோருக்கும் சரியென்று தோன்றுவதைத் தவறெனும் நிலைப்பாடுகளில், அரசியல் அதிரடிக் கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய புனைவுலகம் அழகியது. நாம் அவருடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா? தயவுசெய்து எனக்குப் பதில் சொல்லுங்கள்”

கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அதற்குப் பதிலளித்தார்கள். அவர்களது பதில் திருப்திகரமாக இருக்கவில்லை. “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்பது மாதிரியான பதில் ஏறத்தாழ முற்றுமுழுதாக எரிந்துமுடிந்து சாம்பலில் புகை அடங்காத ஒரு சமூகத்தைப் பார்த்துச் சொல்லக்கூடிய பதிலாக எனக்குத் தோன்றவில்லை.

அதையடுத்து ஆதவன் தீட்சண்யா ஒலிபெருக்கியை கையில் வாங்கிப் பேசத் தொடங்கினார்.

“நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்தார்.

‘அம்பாளா பேசுவது?’என்ற திக்பிரமை படர, அவருடைய அறிவார்த்தமான பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கவாரம்பித்தேன்.

“இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, வெள்ளைக்காரர்களால் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள், ஏற்கெனவே அங்கே இருந்த பூர்வீகத் தமிழர்களால், சாதித்தமிழர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘கள்ளத்தோணி’என்று அழைக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ் எம்.பிக்களில் சிலர்கூட ஆதரவாக வாக்களித்தார்கள். எங்கள் மக்கள் சாதித்தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா? 

எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் ஏன் உங்களுக்காகப் பேசவேண்டும்? எழுதவேண்டும்?”

ஒலிவாங்கியை என்னிடம் தரும்படி கேட்டு வாங்கினேன். அப்போது எனக்கு ஆதவன் தீட்சண்யா இதே சாயலுடைய கேள்வியை ஆனந்த விகடன் நேர்காணலில் கேட்டிருந்தது நினைவில் வந்தது.

“எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டுச் சிந்திக்கிறவர்கள். பெருந்தன்மையானவர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது இல்லையா? ஆக, மலையகத் தமிழர்களை நாங்கள் கேவலமாக நடத்தினோம் என்பதற்காக இப்போது நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்?”என்று கேட்டேன்.

ரி.கண்ணன் என்பவரும், ‘யாதுமாகி’யின் ஆசிரியர் லேனா குமாரும் எழுந்து வந்து “தமிழ்நதி! ஆதவன் தீட்சண்யா அப்படித்தான் பேசுவான். நீங்கள் அதை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆதவன் தீட்சண்யா என்ற தனியொருவனின் குரல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்கள். கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.

இதற்குள் பேராசிரியர் வீ.அரசு எழுந்து வந்து ஒலிவாங்கியை வாங்கினார்.

“தமிழ்நதி எழுப்பிய கேள்வி மிகச்சரியானது. அதற்கு ஆதவன் நீங்கள் பதிலளித்த விதம் சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழன், வன்னித் தமிழன், மட்டக்களப்புத் தமிழன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மட்டக்களப்புத் தமிழனை வவுனியாத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். வவுனியாத் தமிழனை யாழ்ப்பாணத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தச் சமயத்தில் ஆதவன் இப்படிப் பேசுவது தவறு. ஈழத்தமிழினம் பிணக்காடாகி எரிந்துகொண்டிருக்கிறது. பிணங்கள் குவிக்கப்பட்டிருக்கும் மேட்டிலே ஏறிநின்றுகொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது மனிதாபிமானமுடையதல்ல. எந்த நேரத்தில் என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? தவறான புரிதலோடு இருக்கிறீர்கள். மன்னிக்கவேண்டும் ஆதவன்”என்றார்.

அப்போது ஆதவன் எழுந்திருந்து, “நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் தவறாகப் பேசியிருக்கிறீர்கள்”என்றார்.

பேராசிரியர் அரசு போனவேகத்தில் கோபத்தோடு திரும்பிவந்தார்.

“நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. நீ இந்த விசயத்தில் தவறான புரிதலோடு இருக்கிறாய் என்பதை அப்படி வெளிப்படுத்தினேன். நானே தமிழாசிரியன். இந்த வார்த்தை விளையாட்டுக்களெல்லாம் என்னோடு வைத்துக்கொள்ளாதே. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாக ஈழத்தமிழர்களோடு பரிச்சயம் இருக்கிறது. அவர்களின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன். நீ புதிதாக ஒன்றும் சொல்லவராதே” என்றார் கடுமையாக.

இருவரும் ‘வாய்யா…போய்யா…’என்ற அளவுக்கு இறங்கினார்கள். ‘புதையல் எடுக்கப் போனால் பூதம் வருகிறதே’என்று நான் திகைப்போடு அமர்ந்திருந்தேன்.

இதற்குள் கவிஞர் விக்கிரமாதித்யன் வேட்டியைப் பிடித்துக்கொண்டு தடக்கித் தடக்கி எழுந்து வந்து ‘ஐம்பதினாயிரம் தமிழர்கள் செத்துப்போனாங்கய்யா… என்னய்யா பேச்சுப் பேசுற’என்றார். கவிஞர் தேவேந்திர பூபதி அவரைக் கொண்டுபோய் மறுபடியும் இருத்திவிட்டு வந்தார். கவிஞர் விக்கிரமாதித்யனோ ‘ஸ்பிரிங் பந்து’போல மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டேயிருந்தார். அவர் முன்னே வரும் ஒவ்வொரு தடவையும் இறந்துபோன ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

அருமையான ஒரு கூட்டத்தை ஆரவாரமாக முடித்துவைத்த பெருமை என்னைச் சேர்ந்தது.

இப்போது ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அவரிடமிருந்து அவற்றுக்கான பதிலை நான் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த ‘அறிவில்’நான் ஏற்கெனவே ஆடிப்போயிருக்கிறேன்.

என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த விதத்தை நான் எப்படிப் பார்த்தேனென்றால், “நீ அன்னிக்கு என் கோலிக்குண்டைக் கிணத்துல தூக்கிப் போட்டுட்டயில்ல… அதான் இன்னிக்கு உன் பொம்மை கால உடைச்சுப்புட்டேன்”என்ற குழந்தைக் கோபமாக அது இருந்தது. பெரியவர்களிடம் அன்றேல் நாங்கள் பெரியவர்களாக நினைத்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படியான பதில்கள் வருவது அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம்; இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்? 

சமூகத்திலுள்ள சாதி, மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.

எழுத்தாளன் என்பவன் சாதாரணர்களிலும் அல்லது வாசகர்களிலும் பெருந்தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் பரந்த மனப்பாங்கோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சிந்திக்கக்கூடியவன் அன்றேல் சிந்திக்க வேண்டியவன் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளே அல்ல என்பதே உங்கள் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படிச் சொல்லும் நீங்கள், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் என்பதையும் உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்க நேற்று உள்ளடக்கிப் பேசினீர்கள். ஆக, முஸ்லிம்களை விரட்டியடித்த விடுதலைப் புலிகளைத் தலைமையாகக் கொண்ட மக்களை நீங்கள் காப்பாற்ற விரும்பவில்லை என்றாகிறது அல்லவா? விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்றால், மிகுதித் தமிழர்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?

ஈழத்தின் தலித்துகளையும் மலையகத் தமிழரையும் மதிக்காத சாதித்தமிழர்கள் என்ற தொனியை நேற்றுக் கேட்க முடிந்தது. அப்படியானால் குண்டடிபட்டுச் செத்துப்போனவர்களும் இன்று அகதி முகாம்களில் இருப்பவர்களும் யாவரும் வெள்ளாளப் ‘பெருங்குடி’மக்களா? நீங்கள் தலித்துகளுக்காகவாவது பேசியிருக்கலாமே?

ஆக, உங்களது புரட்சிகர பரந்த அறிவு உங்கள் நாட்டிலுள்ள தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பேசும். சகோதரத்துவம், சமத்துவம், எல்லைகளற்ற அன்பு என்பதெல்லாம் சும்மா! ‘நியாயமாகப் பார்த்தால் கொல்லப்பட வேண்டியவர்களே’என்ற தொனி சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையை நடத்துகிற ஒருவரிடமிருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.

படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.

பார்த்துப் பழகிய ஆதவன் தீட்சண்யாவை இனிப் பார்க்க முடியாது. ‘எங்களை வருத்தினாய். நன்றாக அனுபவித்தாய் போ’என்ற முகத்தைப் பார்த்து பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “அவன் ஷோபா சக்தியின் குரலால் பேசுகிறான். பிரான்சிலிருந்தல்லவா அவன் குரல் ஒலிக்கிறது”என்றார் ஒருவர். அவரும் எழுத்தாளரே.

சத்தியக்கடதாசியில் ‘அமரந்தாவின் கடிதம்’என்ற பதிவில் ஷோபா சக்தி என்னைச் சாடியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். தேடினேன். கிடைக்கவில்லை. ‘தமிழ்நதி போன்ற புலிச்சார்புப் பொய்மையாளர்கள்’என்று எழுதியிருப்பதாகக் கேள்வி. மேலும், ஈழத்தமிழருக்காக அழுகிறார். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்கும் போகிறார் என்றும் எழுதியிருப்பதாகத் தகவல்.

நன்றாக இருக்கிறது உங்கள் ‘கட்டுடைப்பு’! தன் இனத்திற்காக அழுகிறவள் இலக்கியக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்ற ஒற்றைச்சாயலுள் நீங்கள் என்னை எப்படிப் பொருத்தலாம்? அங்கே கொத்துக்குண்டுகள் வீசப்பட்டபோதும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தோம். காலையில் எழுந்ததும் கக்கூசுக்குப் போகவும் தவறவில்லை. என்ன அனர்த்தம் ஆனாலும் எல்லாம் நடக்கிறபடி நடந்துகொண்டுதானிருக்கும். அங்கே பிணங்கள் விழுகிறதே என்ற துக்கம் இருக்கும். ஆனால், கூடலும் ஊடலும் தேடலும் எல்லாமும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். “அப்படி இல்லை. நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே அமர்ந்திருந்தேன்”என்று யாராகிலும் சொல்வார்களேயாகில், அது பொய்!

மேலும், நான் புலிகளை நேசிக்கிறேன்தான். அதற்காக நான் எழுதும் எல்லாவற்றுக்கும் நீங்கள் மஞ்சளும் கறுப்பும் கலந்து புலிச்சாயம் பூசவேண்டியதில்லை. என்னால் முன்வைக்கப்படும் கேள்விகளையெல்லாம் ‘நீ புலிக்குச் சார்பானவள். அப்படித்தான் பேசுவாய்’என்பதாக ஏன் அணுகுகிறீர்கள்? கேள்விகளிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். என்னையொரு சட்டகத்துள் அடைத்துப் பதில்சொல்ல விளையாதீர்கள்.

ஆதவன் தீட்சண்யாவும் ஷோபா சக்தியும் நண்பர்களா என்னவென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இருவரும் நண்பர்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

ஷோபா சக்தி! உங்கள் நண்பர் கேட்கிறார். “மலையகத் தமிழர்களை ஈழத்தின் சாதித்தமிழர்கள் மதிக்கவில்லை. அதனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை நாங்கள் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”என்று. நீங்கள் விடுதலைப் புலிகளது அராஜகங்களுக்கு எதிரானவர்தானே? ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்லவே? உங்கள் நண்பரின் கேள்விக்கான உங்களது பதில் என்னவாக இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள விடயங்களைக் கதையுங்கள். எனது வார்த்தைகள் எல்லாமே கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலும் கொண்டவையல்ல.

Last Updated on Monday, 29 June 2009 15:38